திசை காட்டியவனை நினைவூட்டிய திசைமுகம்

அ. குமரேசன்


தீக்கதிர் வண்ணக்கதிர், 24.2.2002


"கடவுளின் பேரால் நிலவும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், சாதியின் பேரால் நிலவும் அடிமைத்தனத்தை எதிர்த்தும், மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைச்சாடி, தன்மான உணர்வை ஊட்டியும், பெண் விடுதலை, இனவிடுதலைக்காக இயங்கியும் வாழ்ந்த மாபெரும் புரட்சியாளராக, தமிழர்களின் திசைமுகமாகத் திகழ்பவர் பெரியார். அம்முகத்தை ஓவியத்தில் பதிவு செய்வது எனது வரலாற்றுக் கடமை" என்ற அறிவிப்போடு ஓவியர் கு.புகழேந்தி சென்னையில் "திசைமுகம்" என்ற தனது ஓவியக் கண்காட்சியை அண்மையில் நடத்தினார்.

பெரியாரின் பன்முகத் தோற்றத்தைப் பதிவுசெய்த அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் கலைப்படைப்பு என்கிற முறையிலும், கருத்துப்பரவல் என்கிற முறையிலும் பார்வையாளர்களை ஈர்த்தன. குடந்தை ஓவியக் கல்லூரியில் படித்து தற்போது அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றி வரும் புகழேந்தி, ஏற்கனவே உறங்கா நிறங்கள், குஜராத் நிலநடுக்கப் பேரழிவு குறித்த சிதைந்த கூடு, ஆகிய கண்காட்சிகள் மூலம் ஓவிய இரசனை உலகத்தில் தன்னை அறிமுகப்படுத்தி நிலைநாட்டிக் கொண்டவர். சமூகச் சீர்குலைவுகளைத் தனது தூரிகையால் எரித்திட வேண்டும் என்ற முனைப்போடு இவர் படைத்த ஓவியங்கள் எரியும் வண்ணங்கள் என்ற நூலாகவும் 1994 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

வ(ர்)ணங்களை எரித்தால் மிஞ்சுவது கருப்பு வண்ணம்தானே? அந்தக் கருப்பு வண்ணத்திலேயே பெரியாரின் மாறுபட்ட முகத்தோற்றங்களைப் படைத்திருந்தார். தமிழகத்திலேயே முதன்முறையாக ஓவியத்துறை முதுகலைப் பட்டம் பெற்றவரான புகழேந்தி, தூரிகையைப் பயன்படுத்தாமல் முழுக்க பேனா மற்றும் கருப்பு மையையே பயன்படுத்தி அந்த ஓவியங்களை உருவாக்கியுள்ளார். ஏன் கருப்பு வெள்ளை? "அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கருப்பு வெள்ளையை மிஞ்சுகிற வேறொரு வண்ணம் கிடையாது. பெரியார் நல்ல சிவப்பு. எனினும் அவர் சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் கருப்பு ஆடையையே அணிந்தார். நானும் அவரைக் கருப்பு வண்ணத்திலேயே பதிவுசெய்ய விரும்பினேன்" என்றார் ஓவியர்.

தாடி உள்ளிட்ட பெரியாரின் முக நுட்பங்களை பேனா+மை மூலமே நுணுக்கமாகப் பதிவு செய்ய முடியும் எனத் தாம் கருதியதாகவும் தெரிவித்தார்.

மூடநம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், சாதியம் முதலிய காலத்துக்கொவ்வாத பழமைகளிலேயே இன்னும் ஊறிக்கிடக்கும் தமிழ்ச்சமுதாயம் பற்றிய பெரியாரின் கவலை, இதை மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை, காலமெல்லாம் இதற்காக உழைத்த களைப்பு. இன்னும் மாறாத சமூகம் குறித்த கோபம், எத்தனை தடைகளும் சோர்வுகளும் ஏற்பட்டாலும் விடமாட்டேன் என்கிற நெஞ்சுறுதி ஆகிய அனைத்தும் புகழேந்தி வடித்துள்ள பெரியார் முகங்களில் வெளிப்படுகின்றன. நேரில் கண்டு அனுபவிக்க வேண்டிய உணர்வு இது.

பெரியாரின் பல்வேறு செயல்பாடுகள், மாறுபட்ட தோற்றங்கள் இருக்க முகங்களை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன்? "பெரியாரின் முகம் பொதுவாகவே ஓர் ஓவிய முகம் என்பது எனது கருத்து. ஓவியக் கலைஞர்களுக்கு அவரது முகமும், முகத்தின் சுருக்கங்களும், விழிகளும், புருவங்களும், பறக்கும் தலைமுடியும், அடர்ந்த தாடியும் அற்புதமான படைப்பு அனுபவத்தை அளிப்பவை. அதுமட்டுமல்ல, அவரது முகம் வெளிப்படுத்தும் உணர்வுகள் சமுதாயத்தின் உணர்ச்சிகளாக இருப்பதாக நான் கருதுகிறேன். அதை ஓவியத்தில் கொண்டு வருவதன் மூலம் இன்று பெரியாரை நினைவூட்ட விரும்புகிறேன்" என்றார்.

நவீன ஒப்பனைகளோடு இந்துத்வா கும்பல்கள் மூட நம்பிக்கைகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் மீண்டும் நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கும் இந்த நாளில் பெரியாரை இவ்வாறு நினைவூட்டுவது ஒரு முக்கியத் தேவைதான்.

பெரியாரின் செயல்பாடுகள் குறித்த ஓவியக் கண்காட்சி ஒன்றை ஒரு வரலாற்றுக் கண்காட்சியாகவே அமைக்கும் விருப்பம் தனக்கு இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

பெரியார்தான் தன்னை மார்க்சியத்தையும் பார்க்க வைத்ததாகக் கூறிய புகழேந்தி, "பெரியார் இல்லையேல் இன்று நான் ஒரு ஓவியனாக உருவெடுத்திருக்க முடியாது. எங்கோ மாடு மேய்த்துக் கொண்டுதான் இருந்திருப்பேன். அவரை நேரில் பார்த்து வரைய முடியாத இழப்புணர்வு எனக்கு உண்டு. அந்த ஏக்கத்தை இந்த ஓவியங்கள் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொந்த உணர்வையும் பகிர்ந்து கொண்டார்.

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்ற சிமிழுக்குள் அடைக்கச் சிலர் முயல்கிறார்கள். ஆனால் அவர் மாபெரும் மனிதநேய இயக்கவாதி.

அறிவியல், கல்வி, பெண் விடுதலை, சாதிய ஒழிப்பு, மதநல்லிணக்கம், சமத்துவம் எனப் பல்வேறு விடியல்களுக்காக போராடியவர் அவர். ஆகவேதான், நவீன தமிழகத்தின் ஒரு அடையாள முகமாகப் பெரியாரைத் தாம் எடுத்துக்கொண்டதாகவும் ஓவியர் கூறினார். அவர் கூறியது உண்மைதான் என்பது போல் பார்வையாளர்களில் ஒருவர், "நான் கடவுள் பக்தி உள்ளவன்தான். ஆனாலும் இன்று எங்கள் சமூகமும் குடும்பமும் நானும் சமுதாயத்தில் மரியாதையோடு வாழ்வதற்குப் பெரியார்தான் காரணம். அவருக்கு அஞ்சலி செலுத்த இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறது" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய உண்மையான உணர்வுகள் தழைத்திருக்கும் வரையில் சனாதனக் கும்பல்கள் பெரியார் மையங்களை இடித்து விடுவதால் பெரியார் சிந்தனைகளைத் தடுத்து நிறுத்திவிட முடியாதுதானே?