அடடா, எத்தகையதொரு பட்டறிவு!

பெரியார் மாணாக்கன்


உண்மை, மார்ச்  2002


அடடா, அது எத்தகையதொரு பட்டறிவு! உள்ளக் கிளர்ச்சியூட்டிய ஒப்பரிய உற்றறிவு! மெய்யெல்லாம் சிலிர்க்கச் செய்த மேன்மையான நுகர்வு! விம்மிதம் விளைவித்த பெருமிதத் துய்ப்பு!

"கண்ணுள் விளைஞர்" புகழேந்தி படைத்தளித்த கண்காட்சியை நோக்கிய நமக்கு, அது முற்றிலும் புதுமையானதொரு பட்டறிவே.
"பெரியார் திசைமுகம்" என்று, தான் படைத்த கண்காட்சிக்கு ஓவியர் புகழேந்தி பெயரிட்டிருந்தார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பல்வகை முகத் தோற்றங்களைத் தீட்டி மக்கள் காணும் வகையில் தியாகராயர் நகர் மேனிலைப் பள்ளியில் 12.02.2002 ஆம் நாளிலிருந்து 16.02.2002 முடிய காட்சியாக வைத்திருந்தார் புகழேந்தி.

ஓவியக் கலை தமிழர்க்குப் புதியதன்று. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் ஓவியங்கள் பற்றிய செய்திகள் நிறையவுண்டு. "மணிமேகலை"க் காப்பியத்தில் ஓவியச் செந்நூல் என்றே பேசப்படுகிறது. பல்லவர்கால சோழர்கால ஓவியங்களைப் பல்வேறு ஊர்களில் அமைந்துள்ள  கோவிற் சுவர்களில் காணலாம். சித்தன்ன வாசலில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் பாண்டியர் காலத்தவையாகும். ஆனால்...

இவ்வோவியங்கள் அத்தனையும் மிகச் சிலவற்றைத் தவிர தொன்மம் எனப்படும் புராண இதிகாசப் புளுகுக் கதைகளில் இடம்பெறும் ஆரியத் தெய்வ மாந்தர்களைப் பற்றிய கற்பனை உருவங்களே. இந்திரன், ரதி, மன்மதன், அகலிகை, நடராஜன், கயிலாயம், வெள்ளையானை, கந்தர்வர்கள் என்பவை எடுத்துக்காட்டுக்காகச் சில. மராத்திய ஆட்சியில் தஞ்சை அரண்மனையிலும் சரஸ்வதி மஹாலிலும் வரையப்பட்ட ஓவியங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். இராமாயணக் கதைக் காட்சிகளும் கிருஷ்ணலீலைக் காட்சிகளும் மட்டுமே தீட்டப்பட்டுள்ளன.

செந்தாமரை வெண்தாமரை மலருதல்; அன்னப்பறவை நீச்சல், யானைகள் குளித்தல், மீன்களின் துள்ளல் போன்ற இயற்கைக் காட்சிகளும் அரசன் அரசி, இராஜராஜசோழன், நடனப் பெண்கள் போன்றோர் ஓவியங்கள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய விலக்குகளாகும்.

மெல்ல மெல்ல, சிறுகச் சிறுக மாற்றங்கள் நிகழ்ந்தன.

இயற்கைக் காட்சிகள், மக்களின் வாழ்வியல் காட்சிகள் என வளர்ச்சி ஏற்படலாயிற்று. தொடர்ந்து ஓவியக் கலைஞர்களில் சிலர் தாங்கள் கொண்ட குறிக்கோள்களுக்குப் பட வடிவங் கொடுக்கத் துணிந்தனர்.

அண்மையில் சில ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்த சான்றோர்களின் நிழற் படங்கள், ஓவியங்கள் அடங்கிய கண்காட்சிகள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. அவற்றைக் காண வருவோரின் எண்ணிக்கை குறைவே. என்றாலும் அவர்களில் ஒரு சிலரேனும் சிந்திக்கத் தூண்டப்படுகின்றனர் என்பது நன்மை.

இவற்றையெல்லாம் மேற்சுட்டிய வரலாற்றுப் பின்னணியுடன் கருதிப் பார்த்தால்தான் புரட்சி ஓவியர் புகழேந்தியினுடைய முயற்சியின் ஆழமும் அருமையும் புலப்படும். பல்வேறு ஓவியங்களின் இடையே தந்தை பெரியாரின் உருவப்படமும் வைக்கப்பட்ட கண்காட்சிகள் நடந்ததுண்டு. கழக நிகழ்ச்சிகளில் அய்யா பற்றிய பல்வகை ஓவியங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆனால் வேட்கை மேலிட்ட கலைஞரொருவரால் பகுத்தறிவுப் பகலவனின் பல்வேறு தோற்றங்களை ஓவியங்களாகப் படைத்து, அய்யா பற்றிய அறிஞர் பெருமக்களின் புகழுரைகளை இணைத்து, கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதலாவதாகும்.

புகழேந்தியின் ஓவியப்புனைவு தனித்தன்மை வாய்ந்தது. பெரியாரய்யாவின் தலை முகம் தோள்கள் அவற்றையொட்டி அமைந்துள்ள மேல்மார்பு ஆகிய உறுப்புகளை மட்டும் அடக்கிக்கொண்ட மார்பளவு ஓவியங்களாக இருபத்தைந்து படங்களை வரைந்திருந்தார். ஒவ்வொரு படத்தின் கீழேயும் அய்யாவைப் பற்றிய அறிஞரொருவரின் புகழுரை அல்லது பாராட்டுப்பா இடம் பெற்றிருந்தது.

முதலாம் படமே நம்மைக் கவ்வி இழுக்கும் கவர்ச்சி படைத்ததாய் இருந்தது. தொண்டு செய்து, பழுத்த பழமாம் தந்தை பெரியாரவர்கள் அடக்கத்தின் திருவுருவமாக இருகைகளையும் கூப்பி நம்மை வரவேற்பது போல் அமைந்திருந்தது; அய்யா மெய்யாய் அணிந்திருந்த விரலணிகூட விடுபட்டுப் போகாமல் இயற்கையாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஒரு பக்கத்தோற்றமாக அமைந்த அய்யாவின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவதாக வைக்கப்பட்டிருந்த ஓவியத்தில் அய்யா உணர்ச்சியுடன் தம் வலக்கையை பெருவிரல் சுண்டுவிரல் இரண்டும், நடுவிரல்கள் மூன்றும் இணைந்திருக்க, அவற்றில் படாமல் பிரிந்து விரிந்திருக்கும்படியாக உயரே தூக்கிக் காட்டும் தோற்றம் வரையப்பட்டிருந்தது. அய்யா அவர்கள் உரைப்பொழிவு நிகழ்த்தும்போது அருகிலிருந்து கண்டோர் இத்தோற்றத்தை நன்கு சுவைப்பார்கள் என்பது உறுதி.

அடுத்த ஓவியத்தில் தந்தை பெரியார் சற்றே குனிந்த நிலையில் சிந்தனை செய்யும் அழகான தோற்றம் காட்டப்பட்டிருந்தது.

அய்ந்தாம் படம் மூடிய கண்களுடன் அய்யாவின் முக்கால் பகுதி முகத்தோற்றத்துடன் இருந்தது. முகம், தோள், முழு மார்பு ஆகியவற்றைக் காட்டியது அடுத்த ஓவியம். ஏழாம் ஓவியத்தில் பகுத்தறிவுப் பகலவனின் அழுத்தமான தனிப்பார்வை உணர்த்தப்பட்டிருந்தது.

அரைவிழி திறந்தாற்போல் அய்யா இருக்கும் ஒருபக்கத்தோற்றம் அடுத்த படத்தில் அமைந்திருந்தது. அதை அடுத்த ஓவியம் புன்னகை ஒளிந்து கொண்டிருக்கும் பெரியாரின் 90 விழுக்காடு முகத்தை நமக்குக் காண்பித்தது. வெள்ளை உள்சட்டையுடன் ஒரு பக்கத் தோற்றத்துடன் அய்யாவைக் காட்டுவது பத்தாம் படம்.

திறந்த சட்டையுடன் திறந்த கண்களுடன் நேர்பார்வை செலுத்தும் தந்தை பெரியாரின் முழுமையான முகத் தோற்றத்தை அடுத்த ஓவியம் பார்வையாளர்கட்கு அறிமுகப்படுத்தியது. ஓய்ந்த நேரத்தில் அய்யா அவ்வாறுதான் தோன்றுவார்.

மேலே கருஞ்சட்டை உள்ளே வெள்ளைக் குறுஞ்சட்டை என்னும் நிலையில் அய்யாவின் ஒருபக்கத் தோற்றம் அடுத்ததாக இடம் பெற்றிருந்தது. அடுத்து எள்ளல் சுவையைப் புலப்படுத்தும் அய்யாவின் முகத்தோற்றத்தை ஓவியமாக்கியிருக்கிறார் புகழேந்தி.

கறுப்பு மேலாடையுடன் தந்தை பெரியார் இடது கையில் தாள் ஒன்றை ஏந்திப் படிக்கும் ஒரு பக்கத் தோற்றம் அடுத்த ஓவியத்தில் வரையப்பட்டு, நம் கருத்தைக் கிளறி விடும் மனப்பான்மையதாய் விளங்கிற்று.

நுண்பெருக்காடி ஏந்தி எழுத்துகளுள் நுழைந்து மேய்ந்தாய்கின்ற பேரறிவாளர் பெரியாரின் தோற்றம் பதினைந்தாம் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆடிதான் அய்யாவின் வாழ்வில் எத்துணை துணையாய் இயங்கியது.

கொடுமை கண்டு கொதித்தெழுந்த இனக் காவலரின் கடுமைத் தோற்றம் காண வேண்டுமா? இதோ என்று ஓவியமாய் எழுதிக் காட்டியுள்ளார் புகழேந்தியவர்கள்.

அய்யா, எதுவாயிருந்தாலும் கருதிப் பார்க்கும் சிந்தனையாளர். அத்தகையதொரு தோற்றம் அடுத்த ஓவியத்தில் நமக்குக் கிட்டிற்று. அதற்கு அடுத்த ஓவியம் அய்யா அவர்கள் ஏறிட்டுப் பார்ப்பது போன்ற எழிலான தோற்றத்தைக் காட்டியது.

முற்றிலும் கருஞ்சட்டைப் பின்புலத்தோடு அய்யா உருவம் தீட்டப்பட்டு அடுத்ததாக வைக்கப்பட்டிருந்தது. வெண்மையான உள்சட்டையுடன் 'அறிவின் எல்லை'யாம் பெரியாராவர்களின் குனிந்த தோற்றம் இருபதாம் ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது. அடுத்த படத்தில் முழுப் புரட்சியாளரின் முறுவலிக்கும் முழுமையான முகத்தைக் கருப்பாடைத் துணைப்புலத்துடன் கண்டு மகிழ முடிந்தது. மாறாக அய்யாவின் அக்கறை உணர்வு ஒருபக்க முகத்தோற்றமாகக் காட்டப்பட்டிருந்தது. மீண்டும் நம் இன மக்களைக் குறித்த அவலம் தேங்கிய தோற்றம் ஓவியமாக்கப்பட்டிருந்தது. ஏற்று மகிழும் ஈரோட்டாரின் எழிலார்ந்த தோற்றத்தை 24 ஆம் படமாக்கியிருந்தார் புகழேந்தி. இறுதியானதாக அய்யா அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு இலக்காகியுள்ள தோற்றம் ஓவியமாக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட இருபத்தைந்து ஓவியங்களைத் தோழர் புகழேந்தியவர்கள் பெயரளவில் என்றில்லாமல், நன்கு திட்டமிட்டு ஒருவகை வெறியோடு படைத்துள்ளார். வெள்ளை வண்ணம், கருப்பு வண்ணம், அணுக்கூறுகளினும் சிறிதான புள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டு தன் தூரிகையை இயக்கி விந்தை புரிந்திருக்கிறார் அவர். என்னே அவரின் இரு வண்ணக் கைவண்ணம்!

அக்காலத்துப் புகழேந்தியார் பாவியப் புலவரென்றால், நம் காலப் புகழேந்தி ஓவியப் புலவர் என்போம். கண்காட்சியைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணியவர்கள் குறிப்பிட்டதைப்போல, "ஓவியம் என்பது சமுதாய மாற்றத்திற்கானதொரு கருவியாகப் பயன்பட் வேண்டும். தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஓவியக் கண்காட்சியை நடத்த வேண்டும். ஓவியர் புகழேந்தி நம்முடைய இனத்திற்குக் கிடைத்த மாபெரும் செல்வம்."