ஆவணத்  தொகுப்பாக முக-வரிகள்

அ. குமரசேன்


தீக்கதிர், வண்ணக்கதிர் 21.09.2003


புள்ளியின் நீட்சிதான் கோடு. நீட்சியடைந்த புள்ளிகளும் நீட்சியடையாத கோடுகளும் இணையும்போது பிறப்பதுதான் ஓவியமும் எழுத்தும். சொல்லப்போனால் எழுத்தின் மூலப் பரிணாமமே ஓவியம்தான். ஆதிப்பாட்டிகளும் ஆதிப்பாட்டன்களும் சகமனிதர்களுக்காகவும் வருங்காலத் தலைமுறையினருக் காகவும் தமது செய்திகளைப் பாறையில் செதுக்கிய ஓவியங்களின் வடிவில் எழுதிச் சென்றார்கள். எழுத்து என்பதே தனித்துப் பரிணமித்தபின், உலகத்தைச் சித்திரிப்பதில் எழுத்தோவியங்களைப் படைக்கத் தொடங்கினார்கள் எழுத்தாளர்கள்.

ஓவியம் ஒரு கலைத்திறன் வெளிப்பாடு மட்டுமல்ல, சமூகப் போராட்டத்தில் ஓர் ஆயுதமும் கூட என்ற உணர்வோடு அதைக் கையில் எடுத்துச் சுழற்றுபவர் ஓவியர் கு. புகழேந்தி. முகவரியில்லா மனிதர்களின் வலிகளுக்கும் ஏக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் தமது தூரிகையால் அடையாளம் தந்தவர். குடந்தை ஓவியக் கல்லூரியின் இந்த ஆசிரியர், இப்போது 'முகவரிகள்' என்ற தலைப்பிலேயே ஓவியத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'எரியும் வண்ணங்கள்', 'உறங்கா நிறங்கள்', 'சிதைந்த கூடு', 'திசைமுகம்' ஆகிய நூல்களைத் தொடர்ந்து இந்த "முகவரிகள்."

தெரிந்தே சூட்டப்பட்ட பெயரோ, தற்செயலான தேர்வோ புத்தகத்தின் பெயர்பொருத்தமாக அமைந்துள்ளது. ஆம் இதில் உள்ள ஓவியங்கள் அனைத்தும் மக்களிடையே நன்கு அறிமுகமான அதாவது தமது செயல்பாடுகளால் தமக்கென்று முகவரி தேடிக்கொண்ட தலைவர்களின் முகங்கள். அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் முகங்களில் காணப்படும் தனித்துவ அடையாளத்தை ஓவியத்தின் கோடுகள் அதாவது வரிகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கோட்டோவியத்தின் இந்தச் சாத்தியத்தை ஏற்கெனவே பெரியார் பற்றி "திசைமுகம்" புத்தகத்தில் நிறுவிக் காட்டியவர் புகழேந்தி.

அகர வரிசைப்படி டாக்டர் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, எழுத்தாளர் அகிலன், அன்னி பெசன்ட், கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானி ஐன்ஸ்டீன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், பெருந்தலைவர் காமராசர், காயிதேமில்லத், கலைவாணர் என்.எஸ்.கே., குன்றக்குடி அடிகளார், வியட்நாம் வீரர் ஹோசிமின், சேகுவேரா, பகத்சிங், மகாகவி பாரதி, கார்ல்மார்க்ஸ், லெனின், ஜீவா உள்ளிட்ட 100 முகங்கள் இதில் உள்ளன. இன்றைய பல தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் முகங்களும் ஓவிய வரிகளாக்கப்பட்டுள்ளன.

முதல் பக்கத்தில் சிகாகோ நகரில் உள்ள மேதினத் தியாகிகள் சிலையின் ஓவியம் தொகுப்பிற்குக் கூடுதத் கனம் சேர்க்கிறது.

"இதழ்கள், பதிப்பகங்கள் உட்பட பிறருடைய தேவைகளுக்காகப் பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்ட இந்த ஓவியங்கள் என்னுடைய பார்வை சார்ந்தோ அரசியல் நிலைப்பாடு சார்ந்தோ வரையப்பட்டதல்ல, தொகுக்கப்பட்டதல்ல. முழுக்க முழுக்க ஆவணத்தொகுப்பு மட்டுமே" என்று முதலிலேயே கூறிவிடுகிறார் ஓவியர். ஆயினும் அவரது பார்வை இவ்வோவியங்களின் தேர்வில் வெளிப்படவே செய்கிறது. இன்று மக்களின் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து வீரத் தழும்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிற இன்றைய இடதுசாரி இயக்க முகங்கள் ஏன் இவரது தூரிகையின் வரிசைப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, அந்த இயக்கங்களைச் சேர்ந்தோர் தமது தேவைகளுக்காகத் தம்மை நாடவில்லை என்ற ஓவியர் பதில் சொல்லக்கூடும். எனினும் நெடுங்காலத்துக்¢ பயன்படும் ஓர் ஆவணத்தொகுப்பு என்பதால், இவரது பல முயற்சிகளுக்கு ஊக்கமளித்து வருகிற இந்த இயக்கங்களின் தலைவர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் முகங்களைத் தனியாக வரைந்தேனும் தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டாமா?

தொகுப்பில் உள்ள முகங்கள் புகைப்படங்களாகவே கிடைக்கிறபோது இக்கோட்டோவியங்களால் என்ன பயன் எனச் சிலர் கேட்கக்கூடும். இதழ்களில் கட்டுரைகள் அச்சிடுகிறபோது சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் தயாரிக்கிறபோது, அச்சில் புகைப்படங்களை விட இத்தகு ஓவியங்களே அழகும் ஆழமும் சேர்க்கின்றன. வழக்கமான புகைப்பட அச்சைவிட, ஓர் ஓவியத்துடன் வரும் பிரசுரம் சட்டெனக் கண்ணைக் கவர்ந்து கருத்துக்குள் இட்டுச் செல்கிறது. அவ்வகையில் 'முகவரிகள்' ஓர் ஆவணத் தொகுப்பாக மட்டுமின்றி, அச்சுப் பணியில் ஒரு துணையிருப்பதாகவும் வந்திருக்கிறது.