உலகந்தழுவிய அறிவியலும், ஓவியர் புகழேந்தியின் அழகியலும

கவிஞர் த. பழமலய் 2004


புகழேந்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 'வெண்பாவுக்குப் புகழேந்தி' என இலக்கிய உலகில் தடம் பதித்த திரு நாமம். இன்று 'ஓவியத்துக்குப் புகழேந்தி' என ஓவிய உலகில் பாதை சமைக்கும் ஒரு பெயர்.

புகழேந்தி, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்தவர் (9.6.1967) அது பருத்திக்கோட்டை.  பருத்தி அப்பர் என்பது சிவபெருமான் பெயர். சூரிய நாராயணன் என்பது போலச் சூரியச்சிவன்.

கலை ஆர்வலர்களின் உள்ளம் கவர் கள்வனாய் விளங்கும் புகழேந்தியின் சமுதாயப் பின்னணி சிற்றூரும் வேளாண்மையுந்தான்.

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெற்றோர்கள், யாவரையும் போலவே புகழேந்தியின் தந்தையார் குழந்தைவேலு, தன் அருமை மகனை மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க வைக்கவே விரும்பினார். ஆனால், ஓவிய உலகம் தவம் இருந்தது. புகழேந்தியின் தன் விடலைப் பருவத்தில் வயலில் ஏர் ஓட்டிய அழகைப் பார்த்தவர்கள், "இன் விலா கொலுறப்ப, போடுற சாலு வரி என்ன ஓவியமா இருக்கு பாரு" என்று கண்ணேறுபடுவார்கள். பாராட்டுவார்கள். அன்றைக்கே இவன் மக்கள் கலைஞன் ஆனான்! புகழேந்தி வரப்பு வரிகளையும், வயல் நத்தைகள் வரையும் மின்னும் கோடுகளையும் பார்த்தவர். பாம்புகள் ஊர்ந்து பதித்த நெளிகோட்டுத் தடங்களைத் தானும் வரைந்து சேத்தாளிகளை வியப்பில் ஆழ்த்தியவர்.

புகழேந்தி கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இளங்கலையும், அய்தராபாத்து நடுவண் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் முடித்தவர். மாணவப் பருவத்திலேயே போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றவர். பிறகு தனியாகவும் கூட்டாகவும் பல பத்து ஓவியக் கண்காட்சிகள் நடத்தியவர். கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். ஓவியம் பயிற்றுவித்து வரும் ஓவியப் பேராசிரியர்.

அவர் நிறங்களைக் குழைக்க அறிந்தவர். இரவு பகலாக உழைக்கத் தெரிந்தவர். புகழேந்திக்கு வண்ணங்களின் வரலாறு தெரியும். வரை கோடுகளின் நெளிவு சுழிவுகளும் அத்துப்படி. ஓவிய மரபுகள், புதுமைகள், வெற்றிகள் அவர் கல்லாதவை அல்ல. அவர் கவனத்தில் நில்லாதவை அல்ல.

புகழேந்திக்குத் திட்டங்கள் இருக்கின்றன. சமுதாயம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் உறுதியான நிலைப்பாடுகள் உடையவர். அவர் கரிசனம், அவர் அக்கறை, தனிப்பட்ட அவர் பெயரோ, புகழோ, அவர் பொருளாதார முன்னேற்றமோ அல்ல. அல்லவே அல்ல! அவர் ' ஒரு கலைஞன், முதலாவதாகவும்
முடிவானதாகவும் மக்களுக்கு, மக்கள் போராட்டங்களுக்கு, முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகப் பொறுப்புக் கொண்டவன்' என்று முழுதாக நம்புபவர்.

புகழேந்தியின் இந்த ஆளுமை அவரின் சமகாலப் போராளிக் கலைஞர்களிடம் இருந்து அவருக்குத் தொற்றியது. கலை, வடிக்கப்படுவது, அது புகழேந்திக்கு, 'வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே' என்னும் தமிழர் அழகியலிலே ஊன்றி நிற்பது. போராட்டந்தான் வாழ்க்கை என்று இருக்கும்போது, கலை போராடாமல், புல் பிடுங்கிக் கொண்டிருக்க முடியாது. இதுகுறித்துத் தொடக்கத்தில் எச்சரித்த மூத்த கலைஞர்கள் சிலர் கூடப் பிறகு புகழேந்தியின் வழிக்குத் திரும்பினார்கள். அது நல்லது!

காவிரி நீர் மறுப்பால் தஞ்சை வயல்களில் வெடிப்பும் விரிசலும் காண்பது, அவர் இதயத்தில் தோன்றுவது. பாபர் மசூதியை இடிப்பதும் திருக்குரானைப் கிழிப்பதும் அவர் நெஞ்சுக்கும் நேர்வது. வியட்நாமோ, இராக்கோ அவர்கள் கதி உயர மனம் கலங்குவதும், விதி எழுத வீரல் நீள்வதும் புகழேந்தியின் கலை. பெண் விடுதலைப் போராளி பேரா. சரஸ்வதியும், புலம் பெயர்ந்து அவுஸ்திரேயாவில் வாழும் டாக்டர் பொன் அநுராவும் புகழேந்திக்கு அக்காள், அண்ணன் உறவுகள் இல்லாத குறையை நீக்கியவர்கள். புகழேந்தியின் உடன் பிறப்புகள் தம்பிகள் இருவர்.

புகழேந்தி சாந்தியைத் துணையாகப் பெற்றவர். இவர்கள் பிள்ளைகள் சித்திரன், இலக்கியன்.

இந்தத் தொடர்புக்கும் பெயர்களும்கூட கூடப் புகழேந்தியை ஒருவர் விளங்கிக்கொள்ள உதவுவன.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் 'தமிழர் இலக்கிய அறிவியல்', இந்த நூற்றாண்டில் ஓவியர்கள் வீர.சந்தானம், கு.புகழேந்தி போன்றவர்களின் தமிழர் ஓவிய அழகியலாகப் பிறவி எடுத்துள்ளது. இது வாழையடி வாழையென வரும் வள்ளலார் திருக்கூட்டம். கலை, சத்தியம் சொல்ல வேண்டும் என சாதிக்கும் ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையின் போர்ப்படை. ஆந்திர மக்கள் தொடுத்துள்ள யுத்தம், தந்தைபெரியாரும் அண்ணல் அம்பேத்கரும், அன்னை தெரசாவும், எண்ணற்ற தோழர்களும் தொடுத்தது.

இவர்கள் வரலாற்றில் வாழ்பவர்கள். வரலாறாய் எதிர்வரும் புதிய தலைமுறையை முன்னுக்கு உந்தி இயக்குபவர்கள்.

புகழேந்தியின் வண்ணங்கள் எரிபவை. சூடேற்றுபவை. நிறங்கள் உறங்காதவை. விழிப்படையச் செய்பவை. தந்தை பெரியாரின் முகமே நமது எதிர்காலத் திசைமுகம் என்று கண்டு காட்டுபவர் புகழேந்தி. வாழும் வரலாற்றில், நினைக்கப்பட வேண்டியவர்களின் முகங்களை அவர் வரைந்து தந்தால், அது அவர்களின் முகவரிகளாக நம்மை நாம், அவர்களை நாடச் செய்கிறது. புகழேந்தியின் ஓவியங்களின் செய்தி, சிலர் நினைப்பது போல அந்த ஓவியங்களின் சட்டங்களுக்குள் இல்லை. அது எப்போதும் வெளியிலேயே உள்ளது. வெளியின் செய்தி வெளியில்தான் இருக்க முடியும்!

தந்தை பெரியாரை நேரில் பார்க்க முடியாமல் போனவர் ஓவியர் புகழேந்தி. புகைப்படங்களின் துணை பற்றி அவர் வரைந்திருக்கும் கோட்டோவியங்கள் உருவப்படங்கள் என்பதை மீறி அவற்றுக்கு அப்பால் சொல்லும் செய்திதான் அவற்றைக் கலைப்படைப்புகள் ஆக்குகின்றன. அந்தச் செய்தி பெரியாரின் ஆளுமை!

புகழேந்தியின் ஓவியங்கள் பெரும்பாலும் பிறந்த மேனியன. அல்லது குறைந்த உடுப்புகள் உடையவை. அவர் நிறைய முகங்கள் வரைந்திருக்கிறார். திரையிட்டு மறைக்கப்படாத முகங்கள்! இஃது ஏன்?

புகழேந்தியின் உடல்களும், சுட்டப்படாத குறிகளும், முகங்களில் உணர்த்துவது, மனிதர்கள் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர், நினைக்கப்பட வேண்டியவர்கள் என்பதே, நினைக்க வேண்டிய அளவுக்கு பார்க்கப்பட வேண்டியவர்கள்! புகழேந்தியின் 'அம்மணம்' குறித்த பார்வை இதுவாகவே தோன்றுகிறது. அவர் அம்மணம், அதன் வடிவு, அழகு ஆகியன பற்றி அறியாதவர் அல்லர். அந்தப் பயிற்சிகளைக் கடந்தவர். அதில் வணிகம் செய்ய விரும்பாதவர்.

பெரியாரின் மார்பளவுப் படங்களில், புகழேந்தி முகங்களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம், பெரியாரின் ஆளுமையை மீண்டும் கோடுகளுக்குள் 'பூடகமாகக்' கொண்டு வந்திருப்பதில்தான் உள்ளது. இது புகழேந்தியின் கலை. இது எளிது அன்று. சாதனை!

செய்நேர்த்தியில், செய்தி நேர்த்தி மூழ்கி விடக்கூடாது, என்பது அவர் மதம், கட்சி. செய்நேர்த்தி, செய்தி விளக்கத்திற்குத்தான். வெறும்புனைவும் கோலமும் பெரும் ஓவியங்கள் ஆகா. புகழேந்தியின் தலைவர்கள் அல்லாத, ஓரிருவரைத் தவிர்த்த, பிற ஓவிய மாந்தர்கள் போராடுபவர்களாக இல்லை. அவர்கள் இயலாதவர்கள். இவர்களை இவ்வாறு ஓவியப்படுத்தி இருப்பதன் நோக்கம் என்ன? பார்க்கப்படுபவர்களுக்குப் பார்ப்பவர்கள் போராட வேண்டும் என்பதுதான்! பார்ப்பவர்கள் போராடாமல் பார்த்துக் கொண்டிருப்பதால்தானே இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்!

ஒன்றை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது கலைஞனின் உரிமை. ஓ அப்படியா! என்று புரிந்து கொள்வது பார்ப்பவர் கடமை. இந்த உரிமை, கடமை ஒரு வழிப்பாதை அல்ல என்பதும் அவர் அறிந்ததுதான்.

புகழேந்தி ஓவியங்களின் குண சீலங்களுள் ஒன்று:

எதிரிகளின் கத்திகளில் கத்தி முனைகளும் வெள்ளையாக இருக்கின்றன. இதே வெள்ளை நிறத்தில் பாதிக்கப்படுபவர்களின் விரல் நகங்களும் விழிகளும் காட்டப்பட்டுள்ளன. பற்கள் மற்றும் பேனா, பல், விழி, விரல் பேனாமுள் இவற்றின் வெண்மை இயல்பானதுதான். ஆனால் இவற்றில் ஒருவர் எதிரிகளின் ஆயுதங்களில், ஆயுத முனைகளில் உள்ள வெண்மையைப் போன்ற வெண்மையை காண முடிவதாக இருக்கிறது. இது ஓவியர் நினைத்துச் செய்யாததாகக் கூட இருக்கலாம். இது (வெண்மை) ஒரு வெம்மையை உணர்த்துகிறது. இது ஒரு நிறமாக(உணர்ச்சியாக) தோன்றாமல், நிறங்கள் (உணர்ச்சிகள்) யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு நிறமாக (உணர்ச்சியாக) தோன்றுகிறது.

இன்னொன்று "எரியும் வண்ணங்கள்" தொகுதியில் உள்ள ஓவியங்களை ஊடறுத்துச் செல்லும் கோடுகள், சட்டகத்திற்கு அப்பால் உள்ள பெரிய வலை அமைப்பு ஒன்றின் கண்ணிகளாகவே தெரிகின்றன. இந்த ஊடறுக்கும் கோடுகள் (கண்ணிகள்) மனிதரைச் சிறைப்படுத்துவது மட்டும் அல்லாமல் சிதைக்கவும் செய்கின்றன. அந்த வலை எது? அமைப்பு எது? அந்தக் கண்ணிகள் யாவை? இந்தக் கேள்விகளும் சேர்ந்தவைதாம் இந்த ஓவியங்கள். இவற்றிற்கான விடைகளை ஓவியர் சொல்லலாம். சொல்லாமல் இருக்கலாம். ஓவியங்களைப் படைப்பவர்களைப் போலவே பார்ப்பவர்களும் சேர்ந்துதான் ஓவியத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

ஓவியர் புகழேந்தி தனக்கு என்று வடிவ அமைதி, நிறத்தேர்வு, எடுத்துரைத்தல், பாடுபொருள்... ஆகியவற்றைக் கொண்டுள்ளார். இவற்றில் உள்ள உறுதிப்பாடே அவர் ஓவியப்பணியாக உள்ளது. இது அய்யத்திற்கு இடம் இல்லாமல் தனித்துவமானது. இந்தத் தனித்துவமே புகழேந்தி!

புகழேந்தி என்பது அவருக்கு இடுகுறிப்பெயராக மட்டும் அமையாமல் காரணப் பெயராகவும் அமைந்துவிட்டது என்பது இதனால்தான்.

அன்றைக்கு வெண்பாவுக்குப் போல இன்றைக்கு ஓவியத்துக்கு இந்தப் பெயர் உச்சரிக்கப்படுவது வரலாறும் பொருத்தமும் ஆகும்.

ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் தமிழர் அறிவியலுக்கும் (அது உலகம் தழுவியது) தமிழர் அழகியலுக்கும் (அது அகவயமானது) சரியான சான்றுகளாக உள்ளன. இதனாலேயே மக்கள் கவிஞர் இன்குலாப்பும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இவர் ஓவியங்களுக்கு எழுதும் கவிதை வரிகள் மிகவும் நெருங்கியவனாக நிறைவளிக்கின்றன. இவர்கள் சகமனர், சமஇருதயர்.

மருத்துவம், பொறியியல் படிக்காமலும் ஒருவர் குடும்பத்திற்கும் குவலயத்திற்கும் பெருமை சேர்க்க முடியும் என்பதற்குப் புகழேந்தியும் ஒரு நல்ல உதாரணமாய் உள்ளார்.

ஒரு கனவு நிறைவேறியதைப் பெற்ற தாயார் கேட்டுப் பார்த்தும் உவகை உறுகிறார் என்றால், தந்தையார் குழந்தைவேலு கேட்டு மட்டுமே மகிழ்கிறவராக இருக்கிறார். இது யாருக்குத்தான் ஒரு குறையாக இருக்காது!