ஓவியப் போராளி கு. புகழேந்தி

இளமாறன்


முகம், மே 2005


சமுதாயப் பொறுப்புள்ள எந்த ஒரு தனி மனிதனும் தன் சிந்தனையை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்திவிடுவான். அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் படைப்பு ஊடகம் அவனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கலையுணர்வின் வெளிப்பாடாக வடிவம் பெற்றுவிடுகிறது. அந்தக் கலையுணர்வு எழுத்தாகவும் இருக்கலாம். பேச்சாகவும் இருக்கலாம். ஓவியமாகவும் இருக்கலாம். சிற்பமாகவும் இருக்கலாம். இசையாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒரு வகையாகவும் இருக்கலாம்.

கலை, கலைக்காகவே என்றும் கலை சமுதாயத்திற்காகவே என்றும் இருவேறு கருத்துகள் நெடுங்காலமாகவே நிலவி வருகின்றன. மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படாத எந்த ஒரு கலையும் இரண்டாந்தரமாகவே கருதப்படுகிறது. கலை, சமுதாயத்திற்காக என்பதே முதன்மை நிலை பெறுகிறது.

ஒரு படைப்பாளியின் படைப்பு, தான் சார்ந்த மக்கள் சமுதாயத்திற்கும், தன் மொழிக்கும், தன் இனத்திற்கும் தன் மண்ணுக்கும் பயனுள்ளதாக அவற்றின் மேம்பாட்டிற்குத் துணைபுரிவதாக, தூண்டுகோலாக, விழிப்புணர்வு ஊட்டுவதாக அறிவூட்டுவதாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படைப்பும், படைப்பாளியும்தான் மக்களால் மதிக்கப்படுவர்.

ஓவியப் போராளி என்ற வீறார்ந்த அடைமொழியால் சுட்டப்பெறும் ஓவியர் கு. புகழேந்தி அவர்கள் மேற்கண்ட அளவு கோல்களின் உச்சத்தில் உலாவரும் ஒப்பற்ற ஓவியர். எந்தெந்த நாட்டில் பட்டினியால் மக்கள் மடிகிறார்களோ, இனக்கலவரங்களால் மடிந்து மக்கிக் கொண்டிருக்கிறார்களோ, வஞ்சிக்கப்படுகிறார்களோ, நிற வேற்றுமையால் சீரழிக்கப்படுகிறார்களோ, பேரழிவு ஆயுதங்களால் வேட்டையாடப்படுகிறார்களோ அவர்கள் எல்லோருக்காகவும் தூரிகையால் குரல்கொடுத்து வருபவர் அதனால்தான். இவரை ஓவியப்போராளி என்கின்றனர்.

இவரது ஓவியங்கள் அழகுணர்ச்சியூட்டும் நளின ஓவியங்கள் அல்ல. நலிந்து கிடப்போரின், நசுக்கப்பட்டோரின் நாடித் துடிப்புகளை, நரம்பின் புடைப்புகளை, சதையின் சிதறல்களைக் கோட்டோவியமாகக் காட்டும் குமுறல்களின் வெளிப்பாடு. புகழேந்தியின் படைப்புகள் அவருக்கான வரலாற்றுப் பதிவு அன்று. மானுடச் சமுதாயத்திற்கான, தமிழ் இனத்திற்கான, வரலாற்றுத் தேவைக்கான வரலாற்றுப் பதிவுகள்.

ஈராக்கில் நிகழ்ந்த இனப்படுகொலைகள், ஈழ மண்ணில் நடைபெற்ற இனவெறிக் கொலைத் தாண்டவம், அமெரிக்காவின் அரக்கத்தனமான ஹிரோசிமா அணுகுண்டு வெடிப்பு, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வெறிச்செயலான ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஜெர்மனியில் நாஜிக்களின் கொடூரங்கள், மைலாய் கோரங்கள், சோமாலியாவின் பட்டினிச்சாவுகள், தமிழகத்தில் முதலாளித்துவ சாதிவெறிச் செயலான வெண்மணியில் உழைக்கும் மக்களை உயிரோடு தீயிட்டு எரித்தது போன்ற ஒடுக்குமுறைக் கேடுகளெல்லாம் இவரிடம் ஓவியக்கோடுகளாக உருவெடுத்துள்ளன.

இயற்கைச் சீற்றங்களான ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுகளும் ஒரிசா புயலின் சூறையாடல்களும் குஜராத் நிலநடுக்கத்தின் நிலை குலைவுகளும் இவரது தூரிகையின் கீறல்களாக வெளிப்பட்டுள்ளன.
புகழேந்தி எதையும் உற்று நோக்கி அதன் மாறுபட்ட கோணத்தை மனத்தில் நிறுத்தி, தூரிகையின் துணைகொண்டு தன் எண்ண அலைகளைப் பதிவு செய்பவர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுப் பகுதியின் சிற்றூரான தும்பத்திக்கோட்டையில் திருவாளர் குழந்தைவேலனார் திருவாட்டி நாகரத்தினம் இணையருக்கு 9.1.1967இல் பிறந்த புகழேந்தி, இளமை முதற்கொண்டே ஓவியக் கலையின்பால் உள்ளத்தை ஒப்படைத்தவர் தன் கிராமத்து வரப்பு மேடுகளின் வரிகளும், வயல் நத்தைகள் வரையும் வெள்ளிக் கோடுகளும், பாம்புகள் ஊர்ந்து பதித்த நெளிக்கோட்டுத் தடங்களும் இவரது ஓவிய உணர்வுக்குத் தொடக்கத்தில் உந்தாற்றலாக இருந்துள்ளன. இவருடைய தந்தையார் இவரை மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்க்க விரும்பினாலும் உள்ளத்திற்குள் உலவிக்கொண்டிருந்த ஓவிய உணர்வு இவரைக் குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்த்தது. ஓவியத்தில் மேற்படிப்புக்காக ஐதராபாத் சென்றபோது, ஆந்திரத்தில் சுண்டூரில் தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இவரைத் தூரிகைப் போர்க்கோலம் பூணச் செய்தது. அன்றுமுதல் அடக்குமுறைகளுக்கு எதிராக அழுத்தங்களுக்கு எழுச்சியாக, விடுதலைக்கான போராட்டக் கலைஞராக உருவெடுத்துள்ளார்.

இன்று, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் விலா எலும்புகளுள் ஒன்றாகத் தன்னை உற்பத்தி செய்துகொண்டு, தமிழ்த் தேசிய விடுதலைக்காகத் தூரிகையைத் துப்பாக்கியாய்ச் சுமந்து கொண்டிருக்கிறார். புகழேந்தியின் தமிழர் இன உணர்ச்சி மனதநேயத்தின் அடிப்படையில் உருவானதே அன்றி, வெறும் இனவாதத்தில் உருவானதல்ல. தமிழினம் ஒடுக்கப்பட்டிருப்பதால் உள்ளங்களைத் துயிலெழுப்பியவர்.

தமிழகத் தமிழர்கள் இவரை அறிந்திருப்பதைவிட, உலகளாவி வாழும் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் புகழேந்தியின் ஓவியங்களை அதிகமாக அறிந்து வைத்துள்ளனர். இவரது ஓவியக் கண்காட்சிகள் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலண்டன், பிரான்சு, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நடைபெற்றுள்ளன. தமிழகத்திலும் இவருடைய ஓவியக் கண்காட்சிகள் உறங்கா நிறங்களில், எரியும் வண்ணங்களில், புகைமூட்டம் என்னும் பெயர்களில் நடைபெற்றுள்ளன. இக்கட்டுரை யாசிரியரும் இக்கண்காட்சிகளைக் கண்டு வியப்புற்றதும், பெருமைப்பட்டதும் உண்டு. இவர் ஓவியராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் நூல்களைப் படைத்துள்ளார்.

ஒரு போராளி தன் கையில் ஏந்தியுள்ள ஆயுதத்தைப் போலத் தூரிகையைத் தனது ஓவியக் கலையின் வழியே ஆயுதமாக ஏந்தியுள்ள ஓவியப்போராளி கு.புகழேந்தி இளம் வயதிலேயே உலகம் அறிந்த ஓவியராகத் திகழ்வதற்குத் தமிழர்கள் பெருமை கொள்ளலாம். தமிழகமும் பெருமை கொள்ளலாம். இவரும் இவருடைய ஓவியங்களும் காலப்பதிவேட்டில் கவனமாய்ப் பதியப்படுவர்.