கிழக்கில் பிரமிக்கும் ஒளியின் சாரல்

புகழேந்தி ஓவியங்கள்


செல்வா


ஈழநாடு,  தமிழீழம். 3.5.2005


நறுக்கென இறுகப்பிடித்துக் கொள்ளும் சுழியின் பிரமிப்பு ஆழ்கடலின் அகலத்திலும் நீளத்திலும் தன்னை மையப்படுத்தி விடுவது போல சுழன்றடித்து, ஆட்டத்தின் அதிர்வு அலைகள் பரவுவது போல எல்லா இடங்களும் பேசப்படுகின்ற புகழேந்தியின் ஓவியங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையினை அமுல்படுத்தி நிற்கின்றது.

தலைகுனிவு, அடக்கம் வாழ்வின் கடைசி சந்தர்ப்பத்திலும் காப்பாற்றப்படாமல் அநாதரவாக நின்ற ஒவ்வொருவரின் மூச்சு, பயனற்றுப்போன காலங்களில் அழிக்கப்பட்ட முறைகள் பல கோலங்களாகப் புள்ளியிட்டு ஒவ்வொருவரின் மனதையும் காயவிட்டு, தாகத்திற்குத் தண்ணீர் கேட்கின்றது.

சிவப்பு நிறமல்ல நிஜம், கத்தியின் கூர்மையில் தோய்ந்தபோது, மரத்துப்போன கரங்களுக்கு வலி தெரியாத நாட்களில் குருதியின் கிறுக்கல்கள்தான் புகழேந்தியின் ஓவியங்கள்.

ஒவ்வொரு பார்வையாளர்களையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற, போராடினால் மட்டுமே விடிவு என்கிற ஒவ்வொரு ஓவியத்தூண்களும், சரிந்திருக்கின்ற மனதைத் தூக்கி நிறுத்தி விடுகின்றது.

கற்பனைகளையும், வெளிப்பூசல்களையும் நிறைந்திருக்காத உண்மை நிகழ்வை வடித்திருக்கின்ற இவரது ஓவியங்கள், வெட்டப்பட்ட உடன் இரத்தமும், வலியும் சேர்ந்து வருவதுபோல எம்மைப் பல தடவை தண்ணீரில் மூழ்கி எழுப்புவது போலல்லாமல் ஒரு தடவையில் திக்கு முக்காடவைக்கும் நினைவுகள் கிட்டப் பார்வையுள்ள கண்களைத் துடைத்து விடுகிறது.

நிழல் இல்லாத மரங்களாக அறுந்து போயிருக்கின்ற வேர்களில் பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிர்ப்பு. அதிகமான சூட்டில் கருகியும், மெலிந்தும் அதன் உருவமற்ற மாறுபட்ட உருவம் தீனி இல்லாமல் என்னையே உண்பது போல தெரிகின்ற பார்வையில் புகழேந்தியின் ஓவியங்கள் எனக்கும் பசியினை உண்டாக்கி விடுகிறது.

வேர் பரவும் ஆழம் மண்ணிலும், மனத்திலும் கூடவாக இருக்கின்ற போதுதான் சிந்திக்கத் தூண்டுகின்ற அதற்குள் விடை காணுகின்றபோது தெளிவான அடையாளங்களில் கிடைக்கின்றது.

நீரில் நனைந்து காய்ந்தாலும் அந்த நிலத்தின் வலிமை ஓவியங்களில் தெரிகின்றது. கலங்கிய இதயத்தினுள் தெளிவான விடுதலைப் பாதையினை உருவாக்கிவிடுகின்ற பாகங்களை ஓவியத்தினுள் விதைத்து விட்டிருக்கின்றார்.

மண்ணோடு மண்ணாக மூடிப் புதைத்தாலும் வெளிக்காட்டியிருக்கும் படுகொலைகள், மண்டையோடு குவியலாக ஒரே பிரதேசத்தில் செம்மணி அறிந்தபோது, அம்பலப்படுத்திய இராணுவத்தின் செயற்பாடுகளை ஓவியங்கள் ஒவ்வொன்றும் முகவரியாகத் தனித்தனியாக நின்று அடையாளப்படுத்துகிறது.

கிறுக்கலில் ஆரம்பிக்கும் தொடக்கப் புள்ளியில் இருந்து முடிகின்றவரை, ஒன்றை மட்டும் தெரியப்படுத்த முடிவு எடுத்து ஆரம்பிக்கிறபோது ஓவியனுக்குப் பல கற்பனைகள். அதில் சமூகத்துக்கும் தமிழரின் பண்பாட்டிற்கும் வித்திடுகின்ற போதும், அடிமைப்பட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையினை வெளிப்படுத்துவதும், அதற்கான வழியாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்த்துவதுமான ஓவியங்கள் வரலாற்றில் இடம்பிடிக்கிறது.

என்றுமே அழிக்கப்படாத புகழேந்தியின் ஓவியங்கள் விடுதலைக்கு எவ்வளவு விலை கொடுத்தோம் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றபோது அனைத்தும் உயிர் பெற்றிருக்கின்றது.

கிழக்கில் பிரமிக்கும் ஒளியின் சாரல் ஊர் முழுவதையும் சூடாக்கி விடுகின்றபோது, ஒதுங்கிக் கொள்ளும் அதற்கான வழியினை தேடுவதுமாக இருக்கிற சூழலைப் போல், போர் வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மண் காயம்பட்டு, உயிரற்றும் போய்கொண்டிருக்கிறபோது வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த முடியாமல் இருக்கிறபோது, ஓவியங்கள் ஊடான பிரமிப்பு புகழேந்தியின் விடுதலை சுவாசத்தில் எழுந்ததனால் வெளிப்படுத்தி நிற்கிறது.