உரிமைக் குரலாகும் ஓவியங்கள்...

ரகுராம்


அதிர்வு.காம். செப்டம்பர் 2009


மனமெங்கும் வேதனைகளும் வலிகளுமாய்க் கதறியழ, வெடித்துக் கிளம்பும் துன்பப் பேராற்றில் மூழ்கி, இனியும் எமக்கான வெளிச்சம் எங்கிருந்தேனும் கிளம்பாதா என வாழ்வின் இறுதிக் கணங்களிலும் நம்பிக்கையைத் தேடிக் களைத்து சிதைபட்டு, சின்னாபின்னமாகி அவலத்தின் கொடுமையான சாட்சிகளாகி நிற்கும் தமிழீழ மக்களின் உறைந்த கணங்களை மீண்டும் பதிவு செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் தமிழீழ மக்களதும் உணர்வுகளை, ஒரு உடன்பிறந்தானாய் உள்வாங்கும், அவர் படைத்த எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், அதிரும் கோடுகள், புயலின் நிறங்கள் வரிசையில் பாளம் பாளமாய் இதயங்கள் கதறியழ, நடந்து முடிந்த வன்னிப் பேரவலத்தை, உலகின் முன் ஓவியங்களின் வழி, வேதனைகளின் பதிவுகளாய் மட்டுமன்றி, இனியும் தொடர்ந்தேயாக வேண்டிய ஓர்மத்தின் வெளிப்பாடாகவும் காட்டுகிறது 'உயிர் உறைந்த நிறங்கள்' தமிழீழத்தின் ஓர் இரத்தத் பதிவுப் படைப்பு.

ஒடுக்கப்பட்டு, வதைபட்டு இனியும் வேண்டாம் அடக்குமுறை வாழ்வு என கிளர்ந்தெழுந்த ஒரு சுதந்திரப்  போராட்டம் தன்னாட்சியும் தகுதியும் மிக்கதொரு விடுதலைப் போராய்ப் பரிணமித்து, உரியதொரு தலைமையையும் பெற்று, பெருமையும் வீறும் கொண்டெழுந்த நிலையில் திட்டமிட்டுச் சூழ்ந்த பேரினவாதமும், அதற்குத் துணையான பிராந்திய சர்வதேச சக்திகளும் கூட்டாய்ப் பின்னிய சதிவலைக்குள், தமிழீழமும் மக்களும் கண்டிக்கும் குருதி தோய்ந்த வரலாற்றுச் சரிவை தன் தூரிகையால் உள்ளக் குமுறல்களோடு சொல்லியிருக்கும் புகழேந்தியின் உணர்வுகள், 'மனிதம்' பற்றிய பெரும் கேள்விகளை தட்டி எழுப்புகின்றன.

அருகே, உயிர்காற்றுக்காய் ஏங்கித் தவிக்கும் சகோதரர்களின் குரல்கள் தமிழக மண்ணை எட்டியபோதும், 'எங்கே உங்கள் கைகளைத் தாருங்கள்' என தமிழீழ மக்கள் எட்டியெட்டிக் கதறியபோதும் ஒருபுறம் உயிர்க்கொடை தந்ததும் உயிரோடு எரிந்தும் தமிழகம் சிலிர்ந்த வேகமும், மறுபுறம் சீறும் எழுச்சியை தணித்த அரசியற் சதுரங்கங்களும் கண்முன்னே வரலாறாய் நிகழ்ந்த காலப் பகுதிகளில் 'என்றும் நாங்கள் உங்களோடு இருப்போம்' எனத் தோழமையுடன் கிளம்பும் குரல்களில் வலிதானதாய் ஒலிக்கிறது புகழேந்தியின் ஓவியக்குரல்.

தமிழீழத்தைக் காணமுன்பு, அவர் காட்டிய வர்ண வெளிப்பாடுகள், எவ்வளவுக் கெவ்வளவு தமிழீழ மக்களது உணர்வலைகளை தன்னாக்கம் செய்து நின்றதோ, அதனின்றும் இன்னும் நெருக்கத்துடன் அவர் தமிழீழம் கண்டு திரும்பிய பின் படைத்திருக்கும் 'உயிர் உறைந்த நிறங்கள்' அவர் நேரில் கண்ட அம்மண்ணின் வளமான வாழ்வு, வேதனைகளின் சாக்காடாய் இன்று உயிர் தொலைத்து நிற்பதை விழிகசியும் ஈரத்துடன் சொல்லிச் செல்கிறது.

பேரினவெறியின் கால்களில் மிதிபட்டுக் கதறிய தமிழினத்தை, தமிழ்ப் பெண்களின் உயிர்ச் சுவடுகளையும் கிழித்தெறிந்த இனவாத அரக்கத்தனத்தை 'பெண்ணின் சிதைவு' உளம்கொதிக்க பதிவு செய்கிறது.

வாழ்ந்த இடம் விட்டு, அகதிகளாகி, எங்கே காப்பிடம் என்று ஓடியும் ஒதுங்கியும் அவலப்பட்ட தமிழினம், 'தகர்க்கப்பட்டது எங்கள் வீடுகள் மட்டுமல்ல, நான் போற்றிய நாடுமன்றோ' எனக் கதறுவதை 'வெறி'யும் 'அலைவு'ம் வெளிப்படுத்துகின்றன. அடிமைத்தனத்தின் வெட்கம் சுமந்த வாழ்வின் நீட்சியாய், இன்று வதை முகாம் வாழ்வை தந்திருக்கும் எதிரியை 'அலைவு' இன்னும் சுட்டி நிற்கிறது.

கடற்கரை மணல் நடுவே, பதுங்கு குழிகளே வாழ்வாகி கண்முன்னே உறவுகளையும் நட்புக்களையும் நாளாந்தம் பறிகொடுத்த மனவெடிப்பைச் சொல்கின்றன 'பதுங்கு குழி', 'பெருமூச்சு' ஓவியங்கள். விமானக் குண்டுகளும், ஆட்லறிகளும் பதுங்கு குழிகளைத் தாக்க, அவையே சாக்குழிகளாகவும் ஆனதைச் சொல்கிறது 'நாங்கள் புதைபடாத குழிகளும் உண்டு...'

புகழேந்தி 'யாழ் வெளியேற்றம்' பற்றி வரைந்த ஓவியம் இன்று 'வன்னி வெளியேற்றம்' ஆகி 'சிறகு விரித்து விதையொன்று அலையும் முளைக்க ஒரு பிடி மண் தேடி...' செல்கிறது.

'பிணவாடை வீசும் தென்திசைக் காற்றில் அசோக மரத்துக் கிளைகள் துளிர்த்தன' என்னும் 'வல்லவைப் படுகொலையும்', 'புதைக்கப்பட்ட கடைசிச் சொற்கள் வேர்களாய் நீளும், எம் தூரிகை கேட்டும் மவுனம் காக்கும் மனச்சாட்சிக்கு முன்பு எரியும் வண்ணங்களில் முழங்கிக் காட்டும்' என்னும் 'செம்மணி'யும் இற்றைவரை முள்ளிவாய்க்காலிலும், பொக்கணையிலும் மாறிப் போகாதிருப்பதை; சிங்கள இனவாதம் இன்னும் அசுரத்தனமாய் வேகம் கொள்வதை ஒப்பீடு செய்கின்றன.

முள்ளிவாய்க்காலில், திரும்பிய பக்கங்களெல்லாம் பிணக் குவியல்களாக, சடலங்கள் வீதிகளெங்கும் நிறைந்து கிடந்ததை கண்களில் நீர் வழியக் காட்டும் 'முள்ளியவளை மே 17, 2009' 'நொடிப் பொழுதில் எரிந்து சாம்பலானது, இருபதாயிரம் தமிழ் உயிர்களா? உலகின் மனச்சாட்சியா?' என நியாய ஆவேசங் கொள்கிறது.

தம் வாழ்வின் இறுதிவரை விடுதலையே உயிர்மூச்சாய் சுமந்து நின்று களமாடிய மாவீரரைப் போற்றும், 'விதைக்கப்பட்டவர்கள்' 'நாளைய மானுடப் பிஞ்சு முகங்கள் முகர்ந்து பார்க்கும் ஒவ்வொரு பூவிலும் உங்கள் உயிரின் வாசம்' என வணங்கி நிற்கிறது.

தானீன்ற சேயின் உடல் முழுதும் காயங்களின் வலி கதறித் துடிக்க வைத்தாலும் 'இவள் கவலை, ஒரு குழந்தையின் எதிர்காலம் அல்ல, ஒரு தாய் மண்ணின் எதிர்காலம்' என்ற 'களம்' 'விடியும் எம் வாழ்வு' என ஏங்கி நிற்கும், தமிழ்த்தாயைப் போற்றுகிறது.

உலகின் பரப்புகளில் எத்தனை கதைகள் உலாவினாலும் எமக்கான வாழ்வை நம்பிக்கையுடன் தொடக்கி வைத்து கரம் பிடித்த, நாளையும் வழி தொடரும் என்ற பெரும் எதிர்பார்ப்பை எமக்குள் ஆழ வேரூன்றிய எம் தலைவன் 'பிரபாகரன்' தோற்றத்தை 'மறுக்கப்பட்ட மனித விடுதலை தெற்கில் ஒரு புள்ளியாய் முளைத்தது' என்று போராட்டத்தின் அடித்தளம் மனிதத்திற்கான தேடலே என உலகெங்கும் ஓங்கிச் சொல்கிறது ஒரு ஓவியம்.

இழப்பதற்கு ஏதுமில்லை என்றபோதும், உறுதி தொடரும் உறவுகளை 'உதறுவதற்கு இன்னும் ஓரிரு கனவுகள்' என்கிறது 'பயணம் தொடரும்' பதிவு.

நாளை விடியும் என்ற நம்பிக்கை மட்டுமே எம்மை வாழவைக்கும் என்பதை 'எந்த இன்றுக்கும் உண்டு நாளை' என்கிறார் புகழேந்தி. 'வீழும் அருவி ஆறாய் விரியும்' என்னும் படைப்பும் 'விடிந்தேதான் ஆகவேண்டும் இரவு' என்னும் படைப்பும் இருகளற்றும் நாளைய வெளிச்சத்திற்கான நம்பிக்கையையும் உறுதியையும் பாய்ச்சி நிற்கின்றன பார்ப்பவர் உள்ளங்களில்.

ஒருபுறம், வன்னிப் பெருநிலப்பரப்பில் வேதனைகளையும் வலிகளையும் சொல்லும் புகழேந்தியின் படைப்புக்கள் மறுபுறம், எத்துணை இழப்புக்ளின்றும் நிமிர்ந்தேயாக வேண்டிய அவசியத்தையும் சுட்டுவது, தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் வாழ்க்கைக்கான வேட்கையைத் தட்டி எழுப்புகிறது.

ஒரு படைப்பாளன் என்பவன் தனியே பதிவுகளோடு நின்று விடாமல், மக்களை வழிசெலுத்தும் பாதைகளின் பங்குதாரனாகவும் நின்றாக வேண்டும் என்ற வேண்டுகையை புகழேந்தியின் ஓவியங்கள் தெளிவுடனே எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு ஓவியனாக மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதன் தலைமையை, தமிழீழ மக்களை மனதார நேசிக்கும், விசுவாசிக்கும் ஒரு கலைப் போராளியாக தன்னை மீண்டும் அழுத்தத்துடன் பதிவு செய்கிறார் புகழேந்தி.

அவரது இந்தப் படைப்புக்கள் ஒரு வரலாற்றுப் பதிவு என்ற நிலை கடந்து, உலகின் மனச்சாட்சியை, நேர்மையை தட்டிக்கேட்கவும், ஒரு கலைத்துவ படைப்பாக்கத்தின் வழியே சாதாரண பார்வையாளரை மட்டுமல்லாது புலமையாளர்களையும், கலாரசிகர்களையும், ராஜதந்திரிகளையும் ஈர்த்து, ஈழத்தமிழினம் கண்ட அவலம் வழியே அவர்தம் எதிர்காலம் பற்றிய உரத்த சிந்தனைகளை எழுப்பவும் பயன்படுத்தப்பட்டே ஆகவேண்டியது அவசியம்.

உலகின் பார்வை இன்று ஈழத்தமிழினம் பால் திரும்பி வரும் சூழலில், உரிமைப் போராட்டத்தின் தர்க்க நியாயங்களை எட்டுத்திக்கிலும் எடுத்துச் செல்லும் கலை ஊடகப் பணிகளில் புகழேந்தியின் ஓவியங்களும் பாரிய தூண்டு விசையாய் அமைவது திண்ணம். பல்கும் போராட்டப் பாதைகளில் புகழேந்தியின் ஓவியப் பாதையும் பலமிக்கதாக அமையும்.