வரலாற்றின் வலிகள்…

பேராசிரியை அரங்கமல்லிகா


அமுதசுரபி
ஏப்ரல் 2011


உண்மை வரலாறு, ஒடுக்கப்படுபவர்களிடமிருந்துதான் பிறக்கிறது. மதம், சாதி, இனம் ஆகியன அடக்குமுறையை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. எல்லாக்கால கட்டங்களிலும், போர் பெண்ணுடன் அதிகதொடர்பு கொண்டதாகிறது.பசுமைகளைக் கவர்தலும் மீட்டலும், பெண்ணைப் பாலியல் கொடுமையால் அழித்தலும், கருச்சிதைத்தலும் போரின் யுக்தியாகக் காலந்தோறும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதன் தீவிரத்தை உலகளாவிய இனப்பிரச்சனையால் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தாய்மைக்குப் பெருமை சேர்த்த புறநானூற்றுத் தாய், தன் மகனை போர்க்களத்தில் காணலாம் என உறுதிபடக் கூறுவது ஈழமண்ணில் வேறானதாக இருக்கிறது. போருக்கு மகனை அனுப்ப மறுக்கும் மனநெருக்கடியை யுத்த களம் தந்திருக்கிறது களப்போராளியாய் மரணித்துக் கிடக்கும் மகனை தன் மகன் இல்லை எனச் சொல்லும் தாயின் அழுகுரலிலிருந்து  உணரலாம்.

 ஒவ்வொரு பெண்ணும் சூழல் கைதியாகி மனப்பிறழ்வுடன் வாழும் அகதிகளாய் அவதிப்படுவதைக் கனத்தமனதோடு தான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. பள்ளிக்குச் செல்லும் பெண்குழந்தைகள் கடத்தப்பட்டு,பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். விறகுகளை அடுக்கிவைப்பது போல் அடுக்கி எரியூட்டப்பட்டனர். வலிமை சேர்ப்பது தாய்முலைப்பாலடா என்ற பாரதியின் சிந்தனை தூக்கிலிடப்பட்டு, அறுத்து எறியப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்குப் பதுங்கு குழி தேடுவோருக்கு அது மரணக்குழியாக்கப்பட்டது. விமானத்தை விளையாட்டாய் வேடிக்கை பார்ப்பதை மறந்துபோய் மருண்ட­­­­ பயந்த கண்களோடு காதுகளைப் பொத்திக்கொண்டு, கண் இறுகமூடி உயிரைப் பாதுகாப்பதில் படபடக்கும் இதயம் நிதானிக்க எடுக்கும் நேரத்தின் கொடுமை மறக்க இயலாதது. காரிருளில், அடர்காட்டில் விலங்குகளின் அச்சுறுத்தலைக் காட்டிலும் சிங்கள இராணுவ விலங்குகளின் அதிர் தோட்டக்களின் ஒலியில் மனம் நடுங்க, நடக்க இயலாத பசியின் கொடுமை வயிற்றை உள்ளிளுக்க, பாலுக்கு அழும் குழந்தைக்கு வற்றிய மார்பைப் பசியாற்றத் தரும் துயரம் எல்லாம் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் துயரங்களாய் மிதந்தன.

தலைமுறை தலைமுறையாய் மனப்பிறள்வோடு, உறவுகளை இழந்த சோகம், மண்ணின் மணத்தை நுகரமுடியாது காசநோயுடன் வாழும் ஏக்கம், ஈழமண்ணின் கால்நூற்றாண்டுப் போராட்டம் முள்ளிவாய்க்கால் வதையோடு முடிந்திருக்கிறது.

மண்விடுதலைக்குரிய போராட்டம் என்றும் முற்றுப் பெறுவதில்லை. அது தொடர்கதை. தொடர் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதும் எந்த சுவற்றிற்குள் சுவாசம் உயிர்பெற்றதோ அந்த சுவற்றழிப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயல்வதும் உண்டு. தற்காலிகமாய் அகதியாய் நின்று மீண்டும் தன் அடையாளத்தை மீட்டெடுக்க எழுப்பப் படும் எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்யும் பெண்களின் வருகை, தொட்டிலை ஆட்டும் கைகள் துப்பாக்கியேந்துவதும் தோட்டாக்களை இயக்குவதும், மரணத்துக்குப் பாடை கட்டுவதும் ஒடுக்குமுறைக்குட்பட்ட நாடுகளின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களின் குரலாய் அடையாளப்படுகின்றன.

இத்தகைய வந்துயரத்தை ஓவியர் புகழேந்தி காட்சிப்படுத்தினார். செழிப்பான பச்சைவனம் அடக்குமுறையாளர்களாலும், வன்முறையாளர்களாலும் சிவந்த வனமாகியதே? அவர்களின் இன அழிப்பு உக்கிரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய முள்ளிவாய்க்கால் உட்பட பலநிகழ்வுகளை “வஞ்சிக்காடு- பெண்: போரும் அமைதியும்” என உருப்படுத்தி 85 ஓவியங்களைத் தீட்டி பெண் ஒடுக்குமுறை வரலாற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஓவியர்களும், பாடகர்களும் மென்மையானவர்கள் என்பார்கள். இலக்கியத்தை, காட்சிகளாய் வண்ணம் தீட்டியவர்கள் நடுவே, இனவரலாற்றின் கோபத்தை சிவப்புவண்ணத்தில் “காடே சிவந்தது” என உணரவைத்திருக்கும் ஓவியர் புகழேந்தி, பிற ஓவிய வல்லுநர்களிடமிருந்து மாறுபடுகிறார்.

சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் மார்ச் 8, 2011 உலகமகளிர் தினத்தை நினைவுபடுத்த நடத்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கில் ஆண்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, “அவர்கள் பார்வையில் பெண்கள் தினம்” விவாதிக்கப்பட்டது.


இதில் ஓவியர் புகழேந்தி கனத்த குரலில் பெண் விடுதலை வரலாற்றை ஈழப்போரட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். கணவனை, மகனை, மகளை, பேரனை, பேத்தியை, பெற்றோரை இழந்த ஒரு பெண்ணின் அவலத்தையும் அவள் ஏகாதிபத்திய அரசின் ஆதிக்கத்தை எதிர் கொண்ட திராணியையும் சொன்னார். உலக மகளிர் தினம் பெண்களின் விடுதலை வேட்கையை நினைவுபடுத்துவதற்குரிய அடையாள நாள் எனத் தன் கருத்தை மேடையில் பதிவு செய்தார்.

அத்தோடு 8,9 ஆகிய இரு நாட்களும் ஓவியக் கண்காட்சி வைத்து, “எந்திரனில்” மூழ்கிக்கிடக்கும் இளைய தலைமுறையை எந்திரனிலிருந்து மீட்டு, ஓர் உண்மையான காட்சியை, வரலாற்றின் தழும்பை மாணவிகள் அறிய உதவியிருக்கிறார் ஓவியர்.

6000 மாணவிகள் பயிலும் எதிராஜ் மகளிர் கல்லூரியில் ஏறத்தாள 5000 மாணவிகள் இந்தக் கண்காட்சியைக் கண்டு மனவலியோடு தாங்களும் வன்முறைக்கு எதிராக, சமூக விடுதலைக்குப் பாடுபட முன்வருவோம் எனப் பதிவுசெய்துள்ளனர். சினிமா, அலைபேசித் தொடர்பு, குறுஞ்செய்திப் பரிமாற்றம், மூளைக்கு மூளை தொடர்பு என உறவை இரண்டு முனைகளில் இறுக்கிக்கொள்ளும் வாலிபப் பருவத்தைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் புகழேந்தியின் ஓவியங்கள் மூலம் அடிமை வரலாறு, விடுதலை வரலாறாகும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம.