“ சினிமாவில் சொல்லமுடியாத உணர்வை ஓவியத்தில் கொண்டுவரும் ஓவியப் போராளி புகழேந்தி “

                          _ இயக்குநர் மகேந்திரன்.

                          சந்திப்பு : இராம அய்யப்பன்.
சினிக் கூத்து
15.01.2004

வியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி சென்னை தியாகராயர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜனவரி 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை திரைப்பட இயக்குநர் மகேந்திரன் திறந்துவைத்தார். அவரை அவரது இல்லத்தில் சந்தித்து ‘புகழேந்தி ஓவியங்களில் அப்படியென்ன தனிச்சிறப்பு? என்று கேட்டோம்.

பொதுவாக ஓவியர்களில் பெரும்பாலானோர் தங்களது ஓவியங்களில் அழகுணர்ச்சியை மட்டுமே அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அது சாதாரணவிசயமில்லைதான். இருப்பினும் நாட்டில் நடைபெறும் அவலநிலைகளை வெளிப்படுத்தும் ஓவியர்கள் மிகக் குறைவு. அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவராக விளங்குகிறார் புகழேந்தி. மனிதஇனங்களில் பெரும்பாலானோர் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று ஒரு குறுகியவட்டத்திற்குள் முடங்கிக் கிடப்பார்கள். ஆனால் புகழேந்தி அப்படியல்ல; பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத நிலையில்  சோமாலியர்களின் வறுமையை இங்கிருந்து தன் ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார். மனிதம் எனும் விதை புகழேந்தியின் மனதில் மரமாக வளர்ந்து நிற்கிறது. வணிகரீதியாகமட்டும் தன்னை ஈடுபடுத்தியிருந்தால் அவர் கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கலாம். ஆனால் சமூகச் சிந்தனையோடு, சமூக கருத்துக்களை சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் இவரது ஓவியங்கள் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டன. பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில் உள்ள சமூகத்தினர் படும் வேதனைகளையும், சோதனைகளையும் ஓவியத்தால் பேசவைப்பது சாதாரணமானதல்ல. அப்படி ஒரு செயலை புகழேந்தி, தன் கைவண்ணத்தில் கையாளுகிறார் என்றால் அது உலக அரங்கில் தமிழனுக்கு அல்லவா பெருமை! புகழேந்தி வெறும் ஓவியப் போராளி மட்டுமல்ல; அவரது ஓவியங்களும் போராடுகின்றன’ என்று ஒரு கவிஞர் சொன்னது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. இது தவிர இவரது ஓவியத்திற்குக் கிடத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று உண்டு. அதாவது 2000 ஆம் ஆண்டில் புகழேந்தி மலேசியாவில் ஓவியக் கண்காட்சியை நடத்தியுள்ளார். அந்த ஓவியக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மலேசியப் பத்திரிகைகளில் வெளிவந்தன. அதனைப் பார்த்த மலேசியப் பெண் ரசிகையான மோகனா முருகேசு என்பவர் ஓவியர் புகழேந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை நானும் பார்த்தேன். அதிலிருந்த சிலவரிகளைச் சொல்கிறேன்.

‘புகழ் சார், தங்கள் ஓவியங்களை பத்திரிகை வாயிலாகப் பார்த்தேன். எனக்குத் தமிழ் இலக்கியம் தெரியாது. பிழை இருப்பின் மன்னிக்கவும். தாங்கள் வரைந்த சோமாலியர்களின் வறுமை பற்றிய அந்த ஓவியம் என்னைக் கண்லங்க வைத்துவிட்டது. ஒரு துளி பாலுமின்றி ஒட்டிய மார்பு- மழலை பசி தீர்க்க முடியாத அன்னையின் துடிப்பு, பசிக்கு ஒரு துளி பாலாவது சுரக்காதா என்ற அந்தப் பிஞ்சின் உணர்வு என் நெஞ்சை கசக்கிப் பிழிந்தது.

தாய்மை என்பது கருப்பையில் மட்டும் அல்ல என்பதை நீங்கள் வரைந்த அன்னைத் தெரேசா படம் உணர்த்தியது. நான் தாயாகாவிட்டாலும் என்னுள்ளும் இருக்கும் தாய்மை உணர்வு என்னை மிகவும் வாட்டியது. தாய்மை பெண்களுக்கு மட்டும் சொந்தமில்லை; ஆண்களுக்கும் இருக்கின்றது என்பதையும் உங்கள் ஓவியம் மூலம் உங்களிடம் நான் காண்கின்றேன். இக் கடிதத்தைப் படிக்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியபோது என் கண்கள் என்னையும் அறியாமல் குளமாகின. இந்த ஓவியனின் சமூகச் சிந்தனையைக் கண்டு எனக்கு நானே வெட்கப்பட்டுக் கொண்டேன். இதைவிட வேறென்ன அங்கிகாரம் வேண்டும் இந்த ஓவியனுக்கு.

மலேசியாவில் அதுவும் போதுமான படிப்பறிவு இல்லாத பாமரத்தனமான ஒரு பெண்ணின் மனதைத் தொட்ட புகழேந்தியின் ஓவியத்தை வெறும் வார்த்தைகளால் புகழாரம் சூட்ட இயலுமா? புகழேந்தி தன் மனிதனேயத்தால் வானளாவிய உயரத்தை எட்டிவிட்டார். ஒரு சினிமாக்காரனால் சொல்லமுடியாத அவலநிலைகளை இவர் தனது ஓவியங்கள் மூலம் உணர்த்தி உள்ளார்.

அந்த வகையில் சாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் அடையாளங்கள் எதுவுமின்றி விளங்கும் புகழேந்தியின் ஓவியங்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றுவிட்டது. குஜராத் ரயில் எரிப்பு சம்பவம், தவறாகப் பயன்படுத்தப்படும் ‘பொடா, சட்டம் ஆகியவற்றையும் விட்டுவைக்கவில்லை இந்த ஓவியன். மிசாவில் முடக்கி, தடாவில் நெரித்து, பொடாவில் முடக்கப்படுகிற மனித உரிமை என்ற அந்த மூன்று ஓவியங்கள் எந்தவகையிலும் ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமை பறிபோய்விடக்கூடாது என்பதில் புகழேந்தியின் இதயம் எவ்வளவு குறியாக இருக்கின்றது என்று நினக்கும்போது, ஓவியர் புகழேந்தி, ஓவியப் போராளியாகத்தான் என் கண்ணுக்குத் தெரிகிறார்” உணர்ச்சி கொப்புளிக்கப் பேசினார் மகேந்திரன்.

        இந்த ஓவியனின் போராட்டம் தொடர நாமும் வாழ்த்துவோம்