சிந்திக்க வைக்கும் சித்திரங்கள்

அமுதசுரபி
நவம்பர் 2010
                                                திருப்பூர் கிருஸ்ணன்.

ஓவியர்  புகழேந்தி,நவீன  ஓவியக்கலை சார்ந்த தமது திறனைப் பல்வேறு கண்காட்சிகள் மூலம் ஏற்கனவே நிரூபித்தவர் கலை விமர்சகர்களாலும் உயர்நிலைப் பிரமுகர்கள் பலராலும் அவரது கலைச்சிறப்பு   பலமுறை வியந்து பாராட்டப்பட்டுள்ளது.அவரது வயத்தகு கலை ஆளுமை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

எனினும் கலைஞர்கள் இரு வகைப்பட்டவர்கள் என்பதை மனத்தில் கொள்ளுதல் நலம்  கலையைக் கலையாகவே கண்டு அதில் தேர்ச்சி காண்பிப்பவர்கள் ஒரு ரகம் .கலையைச் சமுதாய மாற்றதிற்கான கருவியாகக் கொண்டு அதில் ஆற்றலைக் காண்பிப்பவர்கள் இன்னொரு ரகம் , புகழேந்தி சமகாலச் சிந்தனையும் சமுதாயப் பொறுப்புணர்வும் உள்ள

நவீன ஓவியர். படைக்கலங்கள் செய்ய வேண்டிய வேலையை அவரது தூரிகை செய்கின்றது என்பதே அவரது கலையின் விசேஷம். அவர் வரைந்த ஓவியம் எதையும் பார்த்து விட்டு ,வெறுமே ரசித்துவிட்டுப் போய்விட முடியாது,அதைத்தாண்டி பார்வையாளர்களை உரத்துச் சிந்திக்கவும் வைக்கிற கலை அவருடையது,

அவரது ஓவியங்கள் எழுப்பும் சிந்தனைகளால் மனம் பரபரக்கிறது. நிலைமை இவ்விதமிருக்க, இதை மாற்றும் வகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற கையறுநிலை உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

மெல்ல மெல்ல ஆக்கபூர்வமான சமுதாய மாற்றத்துக்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் நம் நெஞ்சில் பிறக்கிறது ஓர் உயர்தர இலக்கியம் செய்யக்கூடிய எல்லா பணிகளையும் புகழேந்தியின் ஓவியங்களும் செய்கின்றன. அவரது கலையை ஓவிய இலக்கியம் என்றே கருதல் தகும்.

பல இடங்களில் நடைபெற்றுப்  பெரும்புகழ் பெற்ற அவரது ‘போர்முகங்கள்’ என்ற தலைப்பிலான ஓவியக்கண்காட்சி அண்மயில் சென்னையில் சென்னை அலியான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெற்றது ஈழ விடுதலைப் போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சித்திரப்படுத்தப் பட்டிருந்தன.  தூரிகையில் வண்ணத்தைக் குழைத்ததோடு தம் எண்ணத்தையும் குழைத்திருந்தார் ஓவியர். வார்த்தைகளற்ற வெறும் கோடுகள் வாய்திறந்து பேசும் அதிசயத்தை அவரது கலை சாத்தியப்படுத்திருந்தது. பல்லாண்டு கால உழைப்பின் மேதைமை சுவரெல்லாம் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தது,

ஓவியங்களே பேசும் ஆற்றல் பெற்றிருப்பதால் ஓவியங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை,என்றாலும் இன்குலாப் ,காசி ஆனந்தன் ஆகிய புகழ் பெற்ற கவிஞர்களின்  முத்து முத்தான வரிகள் ஓவியங்களுக்கு இசைவாய்ப் பொருத்தப்பட்ட அணிகலன்கள் போல் ஆங்கங்கே எழுதி வைக்கப்பட்டிருண்டன,

புகழேந்தியிடம் ‘அவரது கலைக்கான உத்வேகத்தைஎது அவருக்குக் கொடுக்கிறது? என்று கேட்டோம், அவர் தீர்மானமான உறுதி தொனிக்கும் பாவனையுடன், ஆழ்ந்த பார்வையொன்றை நம்மை நோக்கி வீசியவாறே தன்னம்பிக்கை தொனிக்கும் குரலில் சொன்னார் ;

‘எந்த போராட்டத்திலிருந்தும் என்னால் விலகி நிற்க முடியவில்லை, ஒரு மனிதனாக ஈழ போராட்டத்தைக் கடந்த 28 ஆண்டுகளாக உள்வாங்கினேன். அதை ஒரு கலைஞனாக புயலின் நிறங்கள், உயிர் உறைந்த நிறங்கள், என்ற தலைப்புகளில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறேன், தற்போது போர்முகங்கள் என்ற தலைப்பிலானஇந்த ஓவியங்களும் ஒரு வரலாற்றுச் சான்று,

உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் அவலக் குரலை நெஞ்சில் சுமந்தவாறு சிந்தனை தோய்ந்த முகத்துடன் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் கண்காட்சியை பார்த்துவிட்டு வெளியேறுவதைக்கான முடிந்தது ,கண்காட்சியின் வெற்றிக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?....