ஓவியர் புகழேந்தி நம் இனத்துக்குக் கிடைத்த பெரிய செல்வம்

கி. வீரமணி


தலைவர், திராவிடர் கழகம்


விடுதலை – 16.2.2002


'திசைமுகம்' என்ற பெயராலே ஓவியர் புகழேந்தி அவர்கள் தொண்டு செய்து பழுத்த பழமான அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பல்வேறு பன்முகத் தோற்றங்களை தன்னுடைய தூரிகையின் மூலம் பேச வைத்திருக்கிறார். ஓவியத்தின் மூலமாகவும் காட்டியிருக்கிறார். அதைப் பார்க்கிறபொழுது ஏற்பட்ட உணர்வுகளிலிருந்து உள்ளபடியே அதிலிருந்து நான் மீளமுடியவில்லை.

தந்தை பெரியார் அவர்கள் ஒரு வாழும் தத்துவம், அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருப்பம், அவர் ஒரு காலகட்டம், அவர் ஒரு சகாப்தம் என்று வரலாற்று உண்மையைச் சொன்னார்கள்.

ஒரு தனிமனிதனுக்கு மறைவு உண்டு. ஆனால் தத்துவங்கள் என்பது இறப்பதில்லை. அதுவும் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற, வாழ வைக்கின்ற தத்துவங்களுக்கு எப்பொழுதும் இறப்பில்லை. பல மனிதர்கள் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் செத்தாருள் வைக்கப்படும் என்ற அந்த இலக்கணத்திற்கு ஆளானவர்களாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட நிலையிலே ஓவியர் புகழேந்தியின் தூரிகை இளைய தலைமுறையினருக்கு அற்புதமான ஒரு சிந்தனைக் கருவியை உருவாக்கித் தந்திருக்கின்றது.

மிகப்பெரிய ஒரு பண்பாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இந்த நாடு எல்லாத் துறைகளிலும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை எதிர்த்து நின்று வெற்றி கொள்ளக்கூடிய ஒரு சின்னத்திற்குப் பெயர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய திசைமுகத்தைக் காட்டினால்தான் பல்வேறு திசைகளிலே இருக்கக்கூடிய ஆபத்துக்கள், அறிவுக்கேடுகள், தீய விளைவுகள், நம்மை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய வெறிகள், பிற்போக்குத்தனங்கள் இவைகள் எல்லாம் வீழ்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
என்று சொன்னார்கள். இன்றைக்கு உலகம் தொழுது கொண்டிருக்கின்றது.

ஓவியர் புகழேந்தி வரைந்த தந்தை பெரியார் பற்றிய படங்கள் பெரியாரைப் பார்க்காதவர்களுக்கு, பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் தெரிந்து கொள்ள அவைகள் வெறும் ஓவியங்களாக மட்டுமல்ல தத்துவங்களாக, எழுச்சியின் சின்னங்களாக தன்னுடைய தூரிகையின் மூலமாக ஒரு அற்புதமான பணியைச் செய்திருக்கின்றார்.

'அய்யிரண்டு திசை முகத்தான்' என்பதற்கு அடையாளமாக இருப்பவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள். இதுவரையில் எட்டு திசை, எட்டு திசை என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், புரட்சிக் கவிஞர் அவர்கள் மட்டும்தான் 'அய்யிரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன்' என்று இராவணனைப் பற்றி எழுதினார்.

நான் அந்தப்பாடலைப் படித்துவிட்டு பலுவர் இராமநாதன் அய்யா அவர்களிடம் கேட்டேன். புரட்சிக் கவிஞர் அவர்கள் இப்படி 'அய்யிரண்டு திசை முகத்தும் தன் புகழை வைத்தோன்' என்று எழுதியிருக்கின்றார்களே, எட்டுத் திசைகள் என்று தானே சொல்லுகின்றார்கள் என்று விளக்கம் கேட்டேன்.

புரட்சிக் கவிஞர் அவர்களுடைய பாடலின் விளக்கம் கேட்கவேண்டுமானால் புலவர் இராமநாதன் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். அவர்தான் அதற்கு உரியவர். அவர்கள் விளக்கம் சொன்னார்கள். புரட்சிக் கவிஞர் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனையோடுதான் எழுதியிருக்கின்றார். எட்டுத் திசைகள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் புரட்சிக் கவிஞர் அவர்கள் விட்டுப்போன இரண்டு திசைகளையும் சேர்த்தார். அதுதான் மேலும் கீழும். எனவே தான்
அய்யிரண்டு திசைமுகத்தோன் என்று புரட்சிக் கவிஞர் பாடினார்கள் என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள்.

எனவே ஓவியர் புகழேந்தி இதற்கு 'திசைமுகம்' என்று பெயர் வைத்தது இருக்கிறதே அது ஓவியத்தை வரைந்ததைவிட இன்னும் சிறப்பான கண்டுபிடிப்பு என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். அதற்காக மிகுந்த அளவுக்கு நாம் பாராட்ட வேண்டும்.

ஓவியம் வரைந்தான்

அவன் உள்ளத்தினை வரைந்தான்
என்று எவ்வளவு எளிதான வரிகளிலே புரட்சிக் கவிஞர் அவர்கள் சொல்லியிருக்கின்றார். ஓவியர் என்றால் அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகச் சொன்னார்.

தசைமுகம், பசைமுகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கக்கூடிய ஓவியர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான ஓவியர்கள் பசைமுகம் எங்கே இருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் எங்கே தனக்கு வசை முகம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அல்லது வருமானம் போய்விடுமோ என்று கவலைப்படுகிறார்கள்.

ஆகவே இந்த நிலைகளிலிருந்து மாறுபட்டு எது வந்தாலும் எனக்குக் கவலை இல்லை என்பதை ஏற்றுத் தந்தை பெரியார் வழியே என் வழி என்பதற்கு அடையாளமாகத் தந்தை பெரியார் அவர்களுடைய படங்கள் எல்லாம் ஓவியர் புகழேந்தி அவர்கள் வரைந்திருக்கின்றார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலே தன்னுடைய உள்ளத்திலே இருக்கின்ற கொள்கை உணர்வுகளைப் பெரியார் ஓவியத்தின் மூலம் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள்.

ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது நன்றியைக் காட்டி அதன் மூலம் புகழேந்தியதாக இருந்து சாதித்திருக்கிறார். அவரை எவ்வளவோ பாராட்டலாம். ஓவியர் புகழேந்தி அவர்கள் அகில இந்திய அளவில் எவ்வளவோ இன்னல்களைத் தாண்டி, தடைக்கற்களைத் தாண்டி அவர்கள் பெருமை பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் ஒன்று. இன்னாருடைய அங்கீகாரம் கிடைப்பதில்லையே என்பதைவிட காலத்தை வென்றவர்களுக்கு எப்பொழுதுமே காலம் தாழ்ந்துதான் அங்கீகாரம் கிடைக்கும். ஒரத்த நாட்டுக்குப் பக்கத்திலே இருக்கக்கூடிய தும்பத்திக்கோட்டை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியினுடைய மகனாகப் பிறந்த ஒருவருக்குள் இவ்வளவு பெரிய ஆற்றல் புதைந்திருக்கின்றது.

புகழேந்தி மூலமாக இளைஞர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் எந்த இடத்திலே பிறந்தார்கள்; எந்தக் குடும்பத்திலே பிறந்தார்கள்; அவர்களுடைய பெற்றோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய அறிவோ, ஆற்றலோ அமைவதில்லை.

எல்லோருக்குள்ளும் ஆற்றலும், அறிவும் புதைந்திருக்கிறது. அதை அவரவர்கள் வெளியே கொண்டு வந்து காட்டவேண்டும். புகழேந்தி அவர்கள் குடந்தையிலே ஓவியக் கல்லூரியிலே தன்னை மாணவராக ஆக்கிக் கொண்டு இன்றைக்குத் தலைசிறந்த ஓவியராக உலகளாவிய நிலையிலே வந்திருக்கின்றார். ஓவியர் புகழேந்தி நம்முடைய இனத்திற்குக் கிடைத்த மாபெரும் செல்வம், சொத்து என்று நாம் சொல்ல வேண்டும். அவரைப் பாராட்டுகின்ற நேரத்திலே எல்லையற்ற மகிழ்ச்சியை நாம் பெறுகிறோம்.

பல நேரங்களிலே எழுத்தாளர்கள் பல நீண்ட கட்டுரையில் கூடச் சொல்ல முடியாத கருத்தைத் தன்னுடைய தூரிகையின் சில கோடுகளாலே சொல்லக்கூடிய ஆற்றல் ஓவியர்களுக்கு உண்டு. எனவே, அந்த ஓவியங்கள் பல புரட்சிகளை, கால மாற்றங்களை, அரசு மாற்றங்களை எத்தனையோ மாற்றங்களைச் செய்யக்கூடிய தன்மை உண்டு.

ஓவியம் என்பது சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகப் பயன்பட வேண்டும். அது ஏதோ ஒரு பொழுதுபோக்கிற்காகவோ அல்லது வருமானத்திற்காகவோ இருக்கக்கூடாது.

ஈரோட்டை நோக்கிப் போனவர்கள் யாரும் பாராட்டைப்  பற்றிக் கவலைப்படாதவர்கள். உங்களுடைய பணிகளைச் செய்யுங்கள். உங்களுடைய தூரிகைக்கு வண்ணங்களைக் கலந்து கொடுப்பவர்களாக என்றைக்கும் நாங்கள் இருப்போம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் அதற்குக் கருஞ்சட்டைக் குடும்பம் கேடயமாக இருக்கும். உங்களுடைய பயணங்கள் தொடரட்டும்! உங்களுடைய இலட்சியங்கள் வெல்லட்டும்!