இதயங்களெல்லாம் கண்ணீர் வடிக்கிற வகையில்...

கவிக்கோ அப்துல் ரகுமான்


திசைமுகம் - 2002


ஓவியர் புகழேந்தி வழக்கமான ஓவியர்களிடமிருந்து மாறுபட்டவர். கலை மூலமாக முற்போக்குக் கருத்துக்களை, சமுதாயப் பணிக்கான சாதனமாக ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பவர். அதற்காக நிறைய பொருள் இழப்புக்கும் ஆளாகி இருப்பவர். எந்தக் கலையையும் பணம் சம்பாதிக்கும் பாத்திரமாக ஆக்கிக் கொள்கின்ற இந்தக் காலத்தில் அவர் நினைத்திருந்தால் பொருள் ஈட்டுகின்ற சாதனமாக ஆக்கியிருக்கலாம். ஒரு சில ஓவியர்கள் வகைவகையாக நடிக நடிகைகளுடைய படத்தை வரைவதைப் போல வரைந்து தள்ளியிருக்கலாம். அதனால் பெருத்த புகழும், சம்பாத்தியமும் கிடைத்திருக்கலாம். ஆனால் மரியாதை கிடைக்காது. ஓவியர் புகழேந்திக்கு இன்றைக்குக் கலை இலக்கிய உலகத்திலே இருக்கிற மரியாதை இருக்கிறதே அது பெரியது.

அதைச் சாதாரணமாகச் சம்பாதிக்க முடியாது. ஏற்கனவே பூகம்பத்தின் சேதங்களை நம்முடைய இதயங்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கிற வகையில் வரைந்து காட்டியிருக்கிறார். அதுபோல உலகத்தினுடைய சரித்திரத் திருப்பங்களை, அதை ஏற்படுத்திய பெரியவர்களை அவர் வரைந்து காட்டியிருக்கிறார். ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவர் கண்காட்சி நடத்தியிருக்கிறார். உலக மனித வரலாற்றில் வெளிப்படக் கூடிய மிக முக்கியமான செய்திகள் எல்லாவற்றையும் அவர் தூரிகை தொட்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது 'திசைமுகம்' என்ற தலைப்பில் இந்த நாட்டிற்கு ஒரு விடியலாக வந்த அய்யா பெரியாரைப் பற்றி ஓர் ஓவியக் கண்காட்சியை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்.

பெரியார் பன்முகத் தோற்றம் என்பது மிகவும் அருமையான சொல்லாட்சி. பெரியாருக்குப் பன்முக ஆற்றல் உண்டு. அந்தப் பன்முக ஆற்றலைச் சொல்லக் கூடிய வகையிலே இந்தப் பெயர் அமைந்திருக்கிறது. பல்வேறு துறைகளிலே அவருடைய பணி நடந்திருக்கிறது. 'திசைமுகம்' என்ற பெயரும் மிகவும் அருமையாக வைத்திருக்கிறார். தமிழனுக்குத் திசை காட்டியவர் பெரியார். இன்னும் சொல்லப் போனால் தமிழனுக்கு முகம் கொடுத்தவரே அவர்தான். அதனால் திசைமுகம் என்று சொல்கிறபோது அந்த இரண்டுச் சொற்களின் சேர்க்கை பெரியாருடைய முகவரி மாதிரி அமைந்திருக்கிறது. ஆகவே இந்தப் பெயர்களுக்காகவும் நான் ஓவியர் புகழேந்தி அவர்களைப் பாராட்டுகிறேன். இன்னொன்றுக்காகவும் நான் அவரைப் பாராட்ட வேண்டும். ஒரு செயல் அது என்னதான் சிறந்ததாக இருந்தாலும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்யும் பொழுதுதான் அதனுடைய சிறப்பு அதிகமாகும். இந்த நேரத்தில், இந்தக் காலகட்டத்தில் பெரியாரை நினைவு படுத்த வேண்டிய அவசியத்திலே நாம் இருக்கிறோம். அவருடைய கொள்கைகள் மிக வேகமாக மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழினத்தின் மீது பகிரங்கமாகப் போர் தொடங்கியிருப்பதாக நான் கருதுகின்றேன். இந்த இனமும், இந்த மொழியும், இந்தப் பண்பாடும் சரித்திரத்திலே தமிழன் என்றொரு இனம் இருந்தது என்று எழுதிவைக்க வேண்டிய ஓர் அவல நிலைக்கு ஆளாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

எல்லோரும் வேறொரு திசையிலே திரும்பியிருக்கிறார்கள். பெரும்பாலோர் அரசியல் திசையிலே திரும்பியிருக்கிறார்கள். அரசியல் நமக்கு வேண்டும் தான் என்றாலும்கூட என்ன நடக்கிறதோ அதைப் பற்றிய கவலையே இல்லாமல், எல்லோரும் அத்திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தான விஷயம்.

நாம் பண்பாட்டின் பக்கமும், மொழியின் பக்கமும் இனத்தின் பக்கமும் திரும்ப வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த ஓவியங்கள், செயற்பாடுகள் உதவும் என்று நம்புகின்றேன். தமிழர்களுடைய போதையைத் தெளிவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது.

பெரியார் வேறு ஏதேனும் ஒரு நாட்டிலே தோன்றியிருந்தால் அவரை மிகப் பெரிய அளவிலே மதித்திருப்பார்கள். அவருடைய சாபக்கேடு தமிழ்நாட்டிலே தோன்றியிருக்கிறார். ஆனால் எங்கே நோய் இருக்கிறதோ அங்கேதான் மருந்து வரவேண்டும். ஆனால் அந்த மருந்தைச் சாப்பிட்டார்களா என்பது வேறு விசயம். அந்த இயக்கத்தின் பரிணாமமாக வந்த இயக்கங்களெல்லாம் பெரியார் எதைச் சொன்னாரோ, அதற்கு எதிரான விசயங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பெரியாரை நான் ஒரு விசயத்திற்கு மிகவும் பாராட்டுவதுண்டு. எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசியாக இருந்தால், அவர் தேர்தலிலே நிற்கக்கூடாது என்று தன் இயக்கத்தைத் தடுத்திருப்பார். அதை ஒரு கொள்கையாக வைத்திருப்பார். அதை, நான் எண்ணி எண்ணி வியப்பதுண்டு. இன்றைக்குத் தன்மான இயக்கத்தின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் எல்லாம் எலும்புக்கு வாலாட்டுகிற நாய்களாக மாறிப்போன அவலத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்கு வந்ததாலேயே வாக்குகள் வாங்க வேண்டும் என்ற விபச்சாரத்திற்காகவே கொள்கைகள், கோட்பாடுகளை விட்டுவிட வேண்டிய ஓர் அவல நிலைமை எழும். இதை அறிந்துதான் பெரியார் அவர்கள் அந்த இடத்திற்குப் போக வேண்டாம் என்று சொன்னார்.

எப்பொழுதும் ஒரு கலாச்சாரப் புரட்சிகர இயக்கமாக, சீர்திருத்த இயக்கமாகவே இருக்க வேண்டும் என்று சொன்னார். இன்றைக்கு அவருடைய கொள்கைகளை எல்லாம் காற்றிலே விட்டுவிட்டார்கள். யாரும் நினைப்பதாகக்கூட எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அது ஆபத்தானது.

அந்த கொள்கைகளுக்காகப் பாடுபடுவது என்பது ஆபத்தான விசயம். இன்றைக்கு எதிரி இனம் மிகவேகமாக இறங்கியிருக்கிறது. வெவ்வேறு துறைகளிலே. இதைப்பற்றியெல்லாம் உண்மையிலேயே தமிழினப் பண்பாடு மீது அக்கறையுள்ளவர்கள் ஆழமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். மிகவேகமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய கட்டாயமும் அவசியமும் நமக்கு நேர்ந்திருக்கிறது. அத்தகைய ஒரு காலகட்டத்தில் ஓவியர் புகழேந்தியின் இந்த ஓவியங்கள் பயன்படு
ம்.