புகழேந்திக்குப் பல்லாண்டு

பழ. நெடுமாறன்


தலைவர், தமிழர் தேசிய இயக்கம்


சிறப்பு மலர் - 2004


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஓவியக் கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கி வந்துள்ளனர். கி.மு.10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் சில, தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. பழைய கற்காலத்தைச் சேர்ந்த இந்தத் தாழிகளில் சிவப்பு வர்ணம் பூசப்பட்டு வெண் புள்ளிகளும் இடப்பட்டுள்ளன. ஓவியக் கலையின் தொடக்கம் இதுதான். அன்றிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் ஓவியக் கலை வளர்ச்சி பற்றி ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்களிலும் பின்னர் தோன்றிய காப்பியங்களிலும் சமய இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் ஓவியக்கலை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன.

ஆங்கிலேயர் வரும்வரையிலான காலகட்டம் வரையிலும் தமிழகத்தில் ஓவியக்கலை ஓங்கி வளர்ந்திருக்கிறது. ஓவியக் கலைஞர்களை ஓவியர் கண்ணுள் வினைஞர். ஓவியப் பெருமகன், சித்திகாரி, வண்ணமகன், ஒப்பனைக்காரன் என்ற பெயர்களால் மக்கள் அழைத்துள்ளனர். சமண, பௌத்த துறவிகள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மன்னர்களால் எழுப்பப்பட்ட கோவில்களில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்று வரையிலும் நின்று, நமது பழம் பெருமைக்குச் சான்று தருகின்றன. ஓவியக் கலையின் வளர்ச்சி சிற்பக் கலையாகப் பரிணமித்தது.

அத்தகைய சிறப்புமிக்க தமிழர் ஓவியக் கலைக்குப் புதிய வடிவத்தினை நண்பர் புகழேந்தி தந்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. எந்தக் கலைஞனும் சமுதாயச் சிந்தனையுடனும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் தனது கலையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய கலைஞர்களே மக்களால் போற்றப்படும் கலைஞர்களாகத் திகழ்வார்கள். அந்த வகையில் ஓவியக் கலைஞர் புகழேந்தி அவர்கள் கலையாற்றல் மிக்கவர் மட்டுமல்ல, சமுதாயச் சிந்தனை நிறைந்தவரும் ஆவார். இத்தகைய சிந்தனையுடன் அவர் நடத்திய பல்வேறு ஓவியக் கண்காட்சிகள் சகல தரப்பினராலும் வியந்து பாராட்டப்பட்டிருக்கின்றன.

கலையைக் காசாக்கி மகிழும் கலைஞர்கள் நடுவில், கலை மக்களுக்காக என்பதை உறுதிப்படுத்தி வாழும் சிறந்த ஓவியக் கலைஞர் இவர்.
தமிழ்த் தேசியச் சிந்தனையை வளர்க்கவும் அதை மக்களிடம் கொண்டு செல்லவும் ஓவியக் கலைஞர் புகழேந்தி ஆற்றி வரும் பணி சிறப்பானது என்பது மட்டுமல்ல, தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைத்துப் பாராட்டத்தக்கதாகும்.

இளம் வயதில் உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்று இருக்கிற நண்பர் புகழேந்தி, மேலும் சிறப்புகள் பெறவும் அவரின் மூலம் தமிழினம் விழிப்பு பெறவும் வேண்டும் என வாழ்த்தி அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு கூறுகிறேன்
.