தூரிகையே ஆயுதமாய்

நாசர்


நடிகர், இயக்குநர்


சிறப்பு மலர் - 2004


ஓவியர் புகழேந்தி பற்றி செவி வழிக் கேள்வியுண்டு.

நேரில் சந்தித்ததில்லை...

அவரின் ஓவியம் பற்றி சில நண்பர்கள் சிலாகிப்பதுண்டு.

ஆனால் கண்டதில்லை.

எப்போதோ ஓர்முறை ஒரு கண்காட்சிக்கு அழைத்தாய்
தேய்ந்த நினைவுண்டு.

கடந்த ஏழெட்டு மாதங்களுக்கு முன்வரை.

நண்பரொருவர் நச்சரிப்பால் உடன்படா அரிமா சங்கத்தில் கூட்டமொன்றில் கலந்து கொள்ள திருச்சி விஜயம். பாராளுமன்ற தேர்தல் அறிவித்த காலமது.

தமிழர் தன் சுயநினைவிழந்து, எந்நிலை சார்வதெனக் குழப்பத்தில் ஆழ்ந்து, உச்ச நட்சத்திரங்களின் வாய் மலராதா என்ற ஏக்கத்திலிருந்த சூழலது.

அரிமா சங்கத்தின் கூட்டமதில் மரபு மீறி என் பேச்சு அதுபற்றியே அமைந்திருந்தது. அகன்ற வாய்ச்சிரிப்போடு அத்தனை பேர் ரசித்தாலும் பாதிப்பொன்றும் ஏற்படுத்தாததென்பதையும் நான் நன்கறிவேன். அமர்வு முடிந்து அரங்கு விட்டகன்றபோது பக்கத்து அரங்கில் ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கான அழைப்பு. மாறுதல் தேவையென உணர்ந்து கண்காட்சிக்குள் நுழைந்தேன்.

அரைவட்ட வழுக்கை குழந்தைச் சிரிப்போடு கண்ணாடி அணிந்த புகழேந்தி.

நான் புகழேந்தி... பார்த்துவிட்டுப் பேசுவோம்.

கை குலுக்கி ஓவியங்கள் பக்கமாய் நடந்து சென்றேன். விளக்கத் தேவையில்லா விவரமான ஓவியங்கள். நேற்று முன்தினம் வரை நடந்த அவலங்கள் வண்ணக் குழைவாய் சுவரை நிறைந்திருந்தன. அவை உணர்த்திய ஒரேயுணர்வு, வலி ஓவியர் கடத்திய அவ்வுணர்வு எனக்குள் கேள்விகளை எழுப்பியது. பதில்களும் தெரிந்திருந்தும் நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கலும் தாங்கியெழுந்தது. புகழேந்தியைப் பற்றி கேள்விப்பட்டவை மிகைப்படுத்தப்பட்டதாய் எனக்குத் தோன்றவில்லை. சீறிலங்கை முதல் கோத்ரா வரை உள்ளடக்கிய அவ்வோவியக் கண்காட்சி தன் பாதிப்பை என்மேல் ஏற்படுத்தியது. அது என்னை பேசத் தூண்ட, புகழேந்தியிடம் முதன் முதலாய் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டேன். பார்வையாளர்கள் குறைவாயிருந்தது எங்கள் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வசதியாயிருந்தது.

தமிழ் வரலாறு
தமிழினம் தமிழீழம்
தமிழ்க் கலாச்சாரம் கலை இலக்கியம்
சினிமா (இதுவல்லாமலா?) கும்பகோணம் கல்லூரி
அரசியல் நிலை திராவிட இயக்கங்கள்
ஜாதிய அமைப்புகள் மதவாதம்
எதிர்காலம் என்ற கேள்வி குறி

அதற்கான விடை காணும் சாத்தியக் கூறுகள். பற்றியெல்லாம் பேசினோம். ஒருமித்த கருத்துக்கொண்டோர் அறிமுகமாகிக் கொள்ளும்போது ஏற்படும் உணர்வு, இளம் பிராயத்தில் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பெருக்கெடுக்கும் உணர்விற்குச் சமம்.

ஒரு அரிமா வந்து உணவு வேட்டைக்கு இழுத்துப் போகும் வரை அவ்வுணர்வில் மிதந்து கிடந்தேன். சென்னையில் சந்திப்போம் என்ற சம்பிரதாயத்தோடு பிரிந்தோம். நிகழ்வெல்லாம் முடிந்து ரயிலில் பயணித்தபோது நினைவில் அசைபோட அரிமாச்சங்கம் வரவில்லை. புகழேந்தியும் வண்ணக் குழைவுகளும் அவர் பேச்சும் தான் வந்தன. சம்பிரதாயம் கடந்து சந்திப்பு நிகழவேண்டுமென்றே வேண்டினேன். வேண்டியது கடவுளிடம் அல்ல. மனதால் விழைந்தது. விழைந்தது நடந்தது.

சென்னை நூறடிச் சாலையில் ஒரு ஐந்து மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் படப்பிடிப்பு. நடுச்சாலையிலும் கழிவறையிலும் அலுவலகத்திலும் எங்கு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள வசியான சொல்போனில் புகழேந்தி.

"சந்திக்கலாமா?"
"ஓ... சந்திக்கலாமே."
"எங்கு இருக்கிறீர்கள்?"
"படப்பிடிப்பில்"
"மன்னிக்கவும் நாம் பிறகு சந்திக்கலாம்"
"இல்லையில்லை... நீங்கள் வரலாம்"
"எனக்கேதும் சங்கடமில்லை."
"இல்லை. வேலை நடக்குமிடத்தில்.?"

"பரவாயில்லை நீங்கள் வாருங்கள்" என்று அழைப்பு விடுத்து இடத்தின் விலாசத்தை விவரித்தேன்.

அரைமணி நேரம் கழித்து அரைவட்ட வழுக்கை, குழந்தைச் சிரிப்போடு கண்ணாடி அணிந்த புகழேந்தி வந்தவுடன் வணக்கம் என்ற சொல்லோடே கையில் மூன்று புத்தகங்கள் தந்தார். நானும் மரபு ரீதியான மரியாதையோடு கையில் வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டே சொல்லுங்கள் என்றேன்.

என்னோட பதிவுகள்
சரி
நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லணும்.

சொல்றேன் எனச் சொல்லும் போதே படப்பிடிப்புக்கு அழைக்கப்பட்டேன். முடித்து வந்தமர்ந்து பேசினோம்.
இரண்டாண்டுகளாய் பொய்த்த வருணன் தன் இருப்பை நினைவு கூறும் கட்டியம்.

மேகங்கள் திரண்டு இருந்தன. பிசுபிசுப்பாய் தூறல் சென்னையின் வெப்பம் கலைந்து மெலிதாய் குளிர்காற்று, தூரத்து இடி முழக்கம். மொட்டை மாடியில் ஒரு மூலையில் இரு பிளாஸ்டிக் இருக்கைகளில் நானும் புகழேந்தியும்.

ஏற்கனவே பேசிப் பழகியதால் இறுக்கம் தளர்ந்து போன நிலையில், இன்னும் பல்வேறு விஷயங்களைப் பற்றி திராவிட இயக்கங்களைப் பற்றி விரிவாக விமர்சனமாக, பெரியாரைப் பற்றி அவரின் பெண்ணியத்தைப் பற்றி, அயோத்தி தாசர் ஏன் இதுவரை மறைக்கப்பட்டார் என்று என் சந்தேகத்தைப் பற்றி திராவிட இயக்கங்கள் வளர்த்த தமிழ்ப் பற்றி, அத்தமிழ் சினிமா என்கின்ற பார்க்கிற ஊடகத்தை கேட்கிற ஊடகமாக திசை திருப்பியதைப் பற்றி, சிறீலங்காவில் இஸ்லாத்தை தழுவிய தமிழர்கள் நிலைபற்றி, அவ்வைந்து மாடிக்கட்டடத்தினின்று கீழ் நோக்குகையில் தெரிந்த அகன்ற சாக்கடையாற்றைப் பற்றி அதைக் கரைகட்டி நின்ற பிளாஸ்டிக் குப்பை மேட்டைப் பற்றி அக்குப்பை மேட்டில் கூடாரமிட்டிருந்த நாடோடிக் கூட்டத்தைப் பற்றி...
எல்லாம்...
எல்லாம்...
எனக்கு எப்போதுமே ஒரு மமதையுண்டு. பதிலளிக்க முடியாத கேள்விகளை என்னால் எழுப்ப முடியுமென்று. அம்மமதையை தன் பதில்களால் அடக்கியாள முயற்சித்தார். முயற்சியும் சில வேளைகளில் திருவினையாகியது. முடிவில் என் மமதை அழிந்ததென்றே சொல்ல வேண்டும். ஓவியங்குறித்து என்ன ஆழமான தெளிவு உண்டோ அதேயளவு தம் இனம் குறித்த தெளிவும் இருந்த அவர் மேல் மரியாதை மேம்பட்டது.

கடைசியில் சூரியன் அஸ்தமிக்கின்ற வேளையில் கருமேகங்கள் குடைபிடித்த அந்த மந்தகாசமான சூழலில், சூடான தேநீர் அருந்தி விடைபெற்றோம்.

படப்பிடிப்பில் தளமாற்றம் நடந்து கொண்டிருந்ததால் சிறு இடைவெளி. நான் புகழேந்தி கொடுத்துச் சென்ற மூன்று புத்தகத்தில் ஒன்றையெடுத்து புரட்ட ஆரம்பித்தேன். பெரியாரின் கோட்டோவியம் நிறைந்த புத்தகமது. பெரியாரின் பல்வேறு உணர்ச்சிகள் அக்கோட்டோவியங்களில் உறைந்து கிடந்தது. பெரும்பாலான படங்கள் அசைவை உள்ளடக்கி, உயிராயிருந்தது. படம் பார்த்து வரைந்ததாய் தெரியவில்லை. பெரியாரின் கருத்துகளை உள்வாங்காமல் கோடுகள் இவ்வடிவம் பெற்றிருக்காது.

மற்ற இரு புத்தகங்களும் அருகே கிடந்தன. வந்த ஒரு இணை இயக்குநர் ஒரு புத்தகத்தை எடுத்து பார்க்கலாமா என்றார். சம்மதம் அளிக்க அவ்விளைஞர் புத்தகத்தையெடுத்து புரட்டிப்பார்த்து அதை வேகத்தில் சட்டென மூடி வந்தது யார்? என வினவினார்.

புகழேந்தி என்றொரு ஓவியர்.
அவர் எப்படி இங்கு?
என்னைப் பார்க்க வந்திருந்தார்.
அவர் பரபரப்புற்று எனக்கேன் சொல்லவில்லை?
எனக்குத் தெரியாது. அவர் உங்களுக்கும் முக்கியமானவர் என்று.
தயவு செய்து மறுமுறை சந்தித்தால் எனை அறிமுகம் செய்வீர்களா?
அவர் பதட்டம் என்னுள் புரிந்தது. புகழேந்தியின் வீச்சும் புரிந்தது.
நான் நிச்சயம் செய்கிறேன் என்று வாக்களித்தேன்.

அவர் இரு புத்தகங்களையும் வாரிக்கொண்டு... நான் இவற்றை நாளை தரட்டுமா? என்றார். நான் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தையும் அவர் கையில் திணித்து தாராளமாய் என்றேன். அவர் சந்தோஷப்பட்டது எனக்குத் தெரிந்தது.

நீண்ட இடைவெளிக்கிடையில் அவ்வப்போது தொலைபேசியில் குசலவிசாரிப்பு. ஒருநாள் அலுவலகத்தில் கடிதங்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு கடிதம். புகழேந்தி பற்றி ஒரு மலர் வெளியீடும் அது குறித்து என் எழுத்து வேண்டியும்.

சற்றே... இல்லையில்லை... வெகுவாகவே சங்கடமுற்றேன்.
இருமுறையே சந்தித்தளவாளாவிய ஒருவரைப் பற்றி என்ன வரைவதென்று?
தவிர்க்க முற்பட்டேன்.
அதையே முடிவெடுத்தேன்.

முடிவெடுத்தபின் நிம்மதியாய்த் தூங்கப்போகலாமென்றால் அவ்வோவியரின் வண்ணக் குழைவுகள்... காட்சியாய் வந்தன. அவர்தம் பேச்சின் தெளிவுகள், உறைத்தன. அந்த இணை இயக்குநரின் பதட்டம் தோய்ந்த முகத்தின் பிம்பங்கள் தோன்றி மறைந்தன. இவ்வெண்ணோட்டமே மலருக்கு எழுதலாம் என்ற முடிவுக்கு உந்தித் தள்ளியது.

அதுவே இவ்வெளிப்பாடு...

ஆயுதமேந்திய போராளியின் ஆயுதத்தின் அடிப்படை நோக்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தன் எதிரியை வீழ்த்துவது... ஆனால் தன் ஆயுதமான தூரிகை கொண்டு இப்போராளி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவோ தன் எதிரியை வீழ்த்தவோ முனையவில்லை. தாம் நம்புகின்ற மதிக்கின்ற எண்ணங்கள் சார்ந்த விழிப்புணர்வைத் தூண்டவே முயற்சிக்கிறார். ஆக இவர் ஒரு மேம்பட்ட போராளியென்றே தோன்றுகிறது.

இவருக்கு மனதார வாழ்த்தல்லாமல் வேறென்ன சொல்லுவது...