துயரங்களால் அடக்குமுறைகளால் உருவெடுத்தவர்

தங்கர் பச்சான்


நடிகர், இயக்குநர்


சிறப்பு மலர் - 2004


இப்படிப்பட்ட மலர் வெளியீடுகளை யார் தொடங்கி வைத்தார்கள் எனத் தெரியவில்லை. பணம் கொழுத்தவர்களும், புதுப்பணக்காரர்களும், இந்த சமூகத்தில் தலைதூக்கி நடக்கத் தகுதியற்றவர்களும்தான் பெரும்பாலும் குறிப்பாக தமிழகத்தில் மலர் வெளியிட்டு அதற்கான பொருளையே சிதைத்துவிட்டார்கள். எப்பொழுது அறுபது வயதாகும் என காத்துக்கிடந்தவர்கள், தங்களது குடும்பத்தினருக்கு தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்க நினைத்தவர்களெல்லாம் எல்லாருடைய புகைப்படத்தோடும் மலர் என்கிற ஒன்றினை வெளியிட்டு மகிழ்ச்சி டைந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மலர்கள் எல்லாம் எனது கைக்கு வந்தபோது மனம் தளராமல் பழைய செய்தித்தாள்கள் விற்கிறபோது எடைக்குள் எடையாக சென்றுவிட்டன. எல்லா மலர்களும் அப்படிப்பட்டவைகள் அல்ல. சிலவற்றைத் தேடி நானே சென்று கேட்டு வாங்கி பாதுகாத்து வைத்துக் கொண்டதுண்டு. அப்படிப்பட்ட ஒரு மலர் இப்பொழுது நமது ஓவியர் புகழேந்திக்கு உருவாகப் போகிறது என்கிற நம்பிக்கையோடு இந்த காலைப்பொழுதில் எழுத அமர்ந்திருக்கிறேன்.

அறுபது வயதானவர்கள்தான் மலர் வெளியிடலாம் என்கிற சடங்கினை இந்த மலர் உடைக்கட்டும். கொஞ்சம் நஞ்சம் கூர்மையோடு வருகிறவர்களைக் கூட நாம் பட்டம் கொடுத்தும் பாழ்படுத்தி பாடைகட்டியவர்கள். கண்டவர்களுக்கெல்லாம் பட்டம் கொடுத்தே வீணாய்போனவர்கள் நம் தமிழர்கள். கொஞ்சமும் மனம் கூசாமல் கைதட்டி கைதட்டி கை அசராமல் இருப்பவர்கள்.

நண்பர் என்போன்ற ஒரு கலைஞர். நாமெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவர்.

கலை, இலக்கியம் எனப்படுவது அரசியல் பின்புல அடிப்படையோடுதான் இயங்க வேண்டும் என்பதை புரிந்து உறுதியுடன் அதனை செயல்படுத்திக் கொண்டிருப்பவர். கண்டவைகளையெல்லாம் படைப்புகளாக்க அவரது மனமும், கையும் தூரிகையும் ஏற்றுக் கொள்வதில்லை. கலைஞனின் மனம் போனபோக்கில் செயல்படக் கூடியது. ஆனால் இந்தப் போராளிக் கலைஞனின் மனம் திட்டமிட்டே படைப்பினை உருவாக்குகிறது. நானும் பலநேரங்களில் இவர் தன்னை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்பதனை பறைசாற்றுவதற்காகத்தான் அவ்வப்போதைக்கான வரலாற்று நிகழ்வுகளை ஓவியங்களாக்குகிறாரா என அய்யப்பட்டதுண்டு. கடந்த மூன்று ஆண்டுகளில் வெகுவாக அவரின் சிந்தனையிலும், படைப்புகளிலும் பண்பட்டிருக்கிறார்.

ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் அவருக்கான வரலாற்றுப் பதிவு இல்லை. தமிழ் சமூகத்துக்கான இந்த இனத்துக்கான நமது மொழிக்கான, வரலாற்றுத் தேவைக்கான வரலாற்றுப் பதிவு. கலைஞனிந் கடமை அதனைப் படைப்பதோடு முடிந்து விடுகிறது. அதனை பாதுகாப்பதும், மக்களுக்குக் கொண்டு செல்வதும் வரலாற்று ஆவணங்களாக மாற்றுவதும் மற்றவர்களின் வேலை. அதுதான் இப்போது நடந்தேறுகிறது.

அவரது படைப்புகளின் கண்காட்சியாக நடந்தேறியவைகளில் மூன்றினை மட்டும் நேரில் பார்த்து உள்வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போனது. தவற விட்டவைகளை அச்சு வடிவங்களாகத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக அவரது படைப்புகளில் என்னை மிகக் கவர்ந்தவை உறங்கா நிறங்கள், புகைமூட்டம் இரண்டும் எனது ஆழமனத்தில் உறங்கிக் கிடக்கின்றன. நம்மவர்களில் கலைஞர்களாக சொல்லிக்கொண்டும், ஒப்பனை செய்து கொண்டும் வாழ்பவர்கள் ஏராளம். இவர் ஒப்பனைக் கலைஞரும் இல்லை. பிறவிக் கலைஞரும் இல்லை. எங்களது துயரங்களால், எங்களுக்கான அடக்குமுறைகளால் எங்களுக்கான விடுதலைக்கான போராட்ட குணத்தால் கலைஞராக உருவெடுத்தவர். இவர் எங்களுக்கான கலைஞர். தமிழ்த் தேசிய விடுதலையில் அயராமல் தன்னை இணைத்துக் கொண்டு அதற்காகவே தனது தூரிகைகளுக்கு வேலை கொடுப்பவர்.

இந்த வரலாற்றுப் பதிவு மலர் இன்னும் வரும் காலங்களில் அய்ந்நூறு ஆண்டுக் கழித்தோ ஆயிரம் ஆண்டுகள் கழித்தோ நமது வலிகளை வருங்காலத்துக்கு உணர்த்தப் போகிறவை. நண்பர் ஓவியப் போராளி புகழேந்தியை எவ்வாறு நாம் பாதுகாக்க வேண்டுமோ அவ்வாறே நாம் நமது தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கத்தான் வேண்டும். மலருக்கு எழுதுவது என்றாலே ஓடி ஒளியக்கூடிய நான் மகிழ்ச்சியோடு எனது ஆழ்மனதிலிருந்து இதனை வடிக்கிற
ேன்.