பசித்த கோடுகள்

கவிஞர் பழநிபாரதி

சிறப்பு மலர், 2004


எழுதப் படிக்கத் தெரியாத பூக்காரியின், தயிர்க்காரியின் அடுக்கப்பட்ட சுவர்க்கோடுகளில் கண்ணுக்குத் தெரியாத ஒரு காலமும் கணிதமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடிகாரத்தில் ஒரு கோடு நொடியை, ஒரு கோடு நிமிடத்தை, ஒரு கோடு மணியை அடையாளப்படுத்தி அசைந்து கொண்டிருக்கின்றன.

வெளிச்சம் ஊடுருவும் கோடுகள் கதிர்களாகின்றன. பூமிக்கடியில் தண்ணீர் குடித்துப் படுத்துக் கிடக்கும் கோடுகள் வேர்களாகின்றன. மழை லட்சம் கோடுகளாக மண்ணை நனைக்கிறது.

ஆகாயத்திலிருந்து பார்த்தால் பூமியின் கோடுகளில் புள்ளிகள் நகர்கின்றன. உலகமே கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கவிஞனின் சொற்களை வெறும் சத்தங்களாக எப்படிப் பார்க்க முடியாதோ, அப்படித்தான் ஓர் ஓவியனிடமிருந்து வெளிப்படுகிற கோடுகளும். அவை எல்லாம் எதையோ நோக்கி அல்லது எதிர்த்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

ஓவியர் புகழேந்தியின் கோடுகள்தாம் எனக்குள் இப்படி ஒரு கற்பனையை விரிய வைக்கின்றன. அதிரும் கோடுகள் என்கிற அவரது ஓவியநூலில் முதலோவியத்தைப் பார்த்தேன். ஒரு மனிதன் துப்பாக்கி ஏந்தி நிற்கிற பாவனையோடு காணப்படுகிறான். அவனது பார்வை எதிர்த்திசையைக் கூர்ந்து தேடுகிறது. அவனது கையில் உள்ளது துப்பாகியா பேனவா என்று பார்த்தால் புகழேந்தியின் கோடுகள் இரண்டையுமே ஒன்றாகச் சுட்டிப் புனைந்திருக்கிறது.

இந்த ஓவியத்தைக் கொண்டே புகழேந்தியின் ஓவியக் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகிறேன்.

உலகெங்கும் மனிதாபிமானத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை அழித்தொழிக்க ஆக்ரோஷத்தோடு உயரும் போராட்டங்களும், இயற்கைச் சீற்றங்களும் அவரது ஓவியங்களில் தம்மைத்தாமே பதிவு செய்து கொண்டது போல பதிந்திருக்கின்றன. இவரது ஓவியங்களைப் பற்றிய அபிப்ராய பேதமான விமர்சனங்களையும் நான் கேட்டிருக்கிறேன். சிலவற்றை உணர்ந்திருக்கிறேன்.

வரலாறு எலும்பும் தோலுமாக இருக்கும்போது அதன் வரைபடத்தில் எப்படி சதைப்பிடிப்பை எதிர்பார்க்க முடியும்? நம் நிகழ்கால வரலாற்றின் துயரமான உண்மைகளின் ஓவிய ஆவணங்கள்தாம் புகழேந்தியின் கோடுகள். அதனால்தான் அவரது கோடுகளில் கண்ணீர் ஓடுவதை, இரத்தம் வழிவதை, கறுப்படித்த அந்தத் துக்கத்தோடு காணமுடிகிறது. அந்தக் கோடுகளின் வழியே ஒரு கலைஞனின் கோபம் நேர் எதிர் மின்சாரமாகப் பாய்வதை உணரமுடிகிறது.

புல்லாங்குழல் வாசிக்கிற கலைஞன் துப்பாக்கி சுடக் கற்றுக்கொள்வதையும், துப்பாக்கி சுடுகிற போராளி ஆறுதலாக புல்லாங்குழலில் மனம் லயிப்பதையும் காலம்தான் தீர்மானிக்கிறது. புகழேந்தி இப்போது காலத்தின் கலைஞனாக நின்று கொண்டிருக்கிறார்.

இயல்பான வெளியழகைவிட இயங்குகிற உள்ளழகை வெளிப்படுத்துவதுதான் இன்றைய நவீன ஓவியங்களின் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. அதனாலேயே அது அதன் தலையாய இடத்தைப் பிடித்திருக்கிறது.

நவீன ஓவியங்களின் உலகில் உயிரோவியம் என்கிற சொல் தேவையற்றதாகவிட்டது. ஓவியமாக அல்ல; அவை உயிராகவே இருக்கின்றன. நம்மோடு வசிக்கின்றன.

கோடுகளின் பேராற்றல் பிக்காசோவிடமிருந்து பீறிட்டு வெளிப்பட்டது. வண்ணங்களின் வலி வான்காவிடமிருந்து கசிந்தது. ஆழ்மன உலகம் டாலியிடம் சிறகுகள் பெற்று விரிந்தது. இப்படி ஒவ்வொரு கலைஞனுக்கும் ஓவிய உலகில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இப்போது வன்முறையில் சிக்குண்ட கடைசி மனிதர்களின் உயிர்முனகல் புகழேந்தியின் ஓவியங்களில் கேட்கிறது. இதை எதிர்த்துப் போராடும் முதல் மனிதர்களை அவரது கோடுகள் அழைத்துச் செல்கின்றன.

'துப்பாக்கிக்கு மூளை உண்டு இதயம் இல்லை' என்று ஓர் கவிதை என் நினைவுக்கு வருகிறது. கலைஞனின் கையில் உள்ள துப்பாக்கிக்கு மூளை, இதயம் இரண்டும் உண்டு என்கிற நம்பிக்கையைப் புகழேந்தியின் ஓவியங்கள் நமக்குத் தருகின்றன. அவரது நேரிய கோடுகளை விடவும் அந்தக் கோடுகளில் இருக்கிற நேர்மை அந்தக் கலைஞனை எப்போதும் கைவிடாது.