இவரைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமை

கவிஞர் அறிவுடைநம்பி

தலைவர், தமிழமுத மன்றம், தஞ்சை


சிறப்பு மலர், 2004


ஒன்பது ஆண்டுகட்கு முன், ஒரு முன்னிரவு நேரம். தமிழமுத மன்றத்தில் மாதாந்தோறும் முகிழ்க்கும் ஒரு கவிராத்திரிப் பொழுது. கிராமத்தில் மலர்ந்த தூரிகை என்ற முக உரையோடு ஒரு அழகான இளைஞனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். கவிதை ஓவியம் இரண்டிலும் ஆர்வமிக்க மண்ணின் மைந்தர் சிலர். அடக்கமான இளைஞன். புன்முறுவலிக்கும் முகம்.
அக்னி மயமான கண்கள். அதில் அர்த்தப்படும் தீமையை எதிர்க்கும் எரிக்கும் பிரகாசம்.

என் உள்ளத்தில் மின்னல் வெட்டாய் ஒரு சிந்தனை. இவனின் தூரிகை தமிழுக்கான தமிழருக்கான போர்வாளாய் மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சிந்தனையை மனதில் நிறுத்தி அன்றைய கவிராத்திரியை நடத்துகின்றேன்.

படைப்பரங்கம் நடைபெறுகிறது. கவிதைகள் அரங்கேறுகின்றன. வளமான விமர்சனங்கள் கவிதைக்கான சுவையை மேம்படுத்திக் கொண்டிருந்தன. மிக நேர்த்தியாக பண்புமிக்க விமர்சனங்களைப் பந்திவைக்கிறார் நமது ஓவியர். அந்த ஓவியனுக்குள் மலர்ந்திருந்த கவிஞனை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தனர்.

படைப்பரங்கத்தைத் தொடர்ந்து ஓவியரின் ஓவியம் கவிதைப் பற்றிய சொற்பொழிவு தொடர்கிறது. மிக இயல்பான பேச்சு. ஓவியத்தைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் அவைகள் சமுதாயம் சார்ந்தவையாக அமைய வேண்டியதின் அவசியம் பற்றியும் ஓவியரின் பேச்சு சுழல்கிறது. அந்த இனிமை கூடிய இயல்பான ஆனால் அழுத்தமான சொற்பொழிவின் மூலம் எங்களுக்கு அறிமுகமானவர்தான் புகழ் என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் ஓவியர் புகழேந்தி.

இன்று அவர் அனைவருக்கும் அறிமுகமான தமிழ் ஓவியர். இமயத்தைத் தொடும் வேள்வியில் தொடர்ந்து உற்சாகமாய்ச் செயலாற்றி வருபவர்.

பொதுவாக ஓவியர்கள் ஒருவிதத் தீவிர தனித்தன்மையுடன் காணப்படுவார்கள் அல்லது உணரப்படுவார்கள். இந்த தனித்தன்மையென்பது மற்றவர்களோடு ஒட்டாமை. அதிகத் தூய்மை அல்லது தூய்மையற்ற நிலைமை. தன்னை மறக்கடிக்கும் மயக்க நிலை, மாறுபட்ட உடைப்பாணி, இப்படிப் பலவகைப்படும். ஓவியர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓரளவு அடையாளம் காணக்கூடிய விதத்தில் அவர்களது தனித்தன்மை அமைவது கண்கூடு. ஆனால் நம் புகழேந்தி இப்படிப்பட்ட தனித்தன்மையற்றது, அதேசமயத்தில் வேறு சில எளிதில் புலனாகும் தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்டிருப்பவர்.

ஓவியர்கள் அவர்களது ஓவியத்தினால் மட்டும் அறியப்படுவார்கள். ஓவியர் புகழேந்தி அவருடைய ஓவியத்தினால் அறியப்பட்டவர் என்றாலும் அவருடைய எழுத்துக்களாலும் அடையாளப் படுத்தப்படுவர். சாதாரணமாக ஓவியர்களுக்கு இலக்கியப் படைப்புகள் கைவரப்படுவதில்லை. ஆனால் புகழேந்திக்கு எழுத்தாற்றல் இன்னொரு வரம். இதுவரை ஆறு செம்மையான நூற்களைப் படைத்திருக்கிறார். அத்தனையும் நன்முத்துக்கள். ஓவியத்தை அறியாதவர்கள் கூட படித்து இன்புறும் வகையில் எளிய தமிழில் இனிய நடையில் எழுதப்பட்டவை.

உரைநடை இலக்கியத்தில் பயணக் கட்டுரை (Travelogue) தனித்தன்மை வாய்ந்தது. சற்று கடுமையான முயற்சி கூட.  பல பிரபல எழுத்தாளர்கள் கூடப் பயணக் கட்டுரை எழுதுவதில் உள்ள சங்கடங்கள் காரணமாக, தேவைப்படுகிறபோது கூட இவ்வகையிலான கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்த்து விடுவார்கள். பயணக் கட்டுரை எழுதும் பொழுது வாசகர்களை எழுத்தின் மூலம் உடன் அழைத்துச் சென்று தான் நுகர்ந்த அதே இன்ப அனுபவங்களை வாசகர்களையும் நுகரச் செய்யும் ஆற்றல் எழுத்தாளர்களுக்குக் கட்டாயம் தேவை. மேலை நாடுகளில் பயணக் கட்டுரைகளைத் தனி இலக்கிய வகையாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். புகழேந்தியின் தூரிகைச் சிறகுகள் என்ற பயணக் கட்டுரை நூல் தற்கால பயணக்கட்டுரை நூல்களுக்கு மகுடம் என்றே கூறலாம். அத்துணை எளிமை இனிமை உயிரோட்டம். நல்ல தமிழ் சொற்களால் கோர்க்கப்பட்ட இந்நூல் படிக்கும்பொழுதே சொற்களுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் நம்மை மயங்கி விழ வைக்கும் தனமையது.

புகழேந்தி நல்ல நுகர்வாளர். எதனையும் உற்றுநோக்கி அதன் மாறுபட்ட கோணத்தை மனதில் பதித்துக் கொண்டு தேவைப்படும் பொழுது தூரிகையின் துணை கொண்டு சீரிய முறையில் வெளிக்கொணரும் இவரது ஆற்றல் எவரையும் மலைக்க வைக்கும்.

எளிமையான பேச்சுக்கும் தோற்றத்திற்கும் உயர்ந்த பண்புகளுக்கும் சொந்தக்காரரான இவர் தன் ஆழமான சமுதாயப் பார்வையால் மற்ற கலைஞர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்பதை இவரின் ஓவியங்கள் கட்டியம் கூறும். கலை வெறும்கலைக்காக மட்டுமல்ல. கலை மற்றொரு அழகியல் சாதனம் அல்ல. கலை வெறும் வெறும் பொழுதுபோக்கும் அல்ல. கலை சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்போரின் இன சம்மட்டிகளால் நொறுக்கப்பட்டோரின் போராயுதமாக இருக்க வேண்டும் என்ற புகழேந்தியின் கருத்தோடு எந்த ஒரு சமுதாய அக்கறை உள்ளவனும் ஒத்துப் போவான். ஒத்துப்போக வேண்டும்.

இவருடைய போலித்தனமற்ற தமிழ்ப் பற்று தமிழ் உணர்வு மிகவும் போற்றுதற்குரியது. எந்த ஒரு தமிழனையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டது. அந்த உணர்வே அவரின் வலிமை. அவருடைய ஓவியத்தில் எழுத்தில், பேச்சில் அன்றாட நடைமுறையில் தமிழின் ஆதிக்கத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. இது நமக்கெல்லாம், தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திற்கும் பெருமைக்குரிய செய்தியாகும்.

ஒரு லியானார்டோ டாவின்சி, ஒரு பிகாகோ, ஒரு ஜான்வான் ஐக், ஒரு டர்னர்,
ஒரு ரவிவர்மா இவர்களின் பிரமிக்கும் திறமைகளோடு தமிழ் மண்ணில் புகழேந்தி பரிணமித்து வருகிறார். இவரைப் போற்றுவதும் பாதுகாப்பதும், உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் தமிழர்களின் கடமை.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.