புகழ் சேர்த்த புகழேந்தி

பேரா. இராம.சுந்தரம்


முன்னாள் தலைவர் அறிவியல் தமிழ்த்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை


சிறப்பு மலர், 2004


அஜாந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், தஞ்சைப் பெரியகோவில் ஓவியங்கள் இன்றும் அழியாத படைப்புக்களாய் நம் கண்முன் காட்சியளிக்கின்றன. ரவிவர்மா ஓவியங்களையும் அவ்வப்போது கண்டு மகிழ்கிறோம். டிராஸ்ட்கி மருது போன்றோரின் ஓவியங்களும் நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு கால ஓவியத்துக்குப் பின்னேயும் ஒரு சமூக, அரசியல் சார்பு உண்டு. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு வர்க்கச் சார்பு உண்டு. நம்மிடையே வாழும் ஓவியர் புகழேந்தியின் படைப்புக்களிலும் அது ஒளிவுமறைவின்றி முகம் காட்டுகிறது. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நாடு, மொழி, இனஉரிமைகள் மறுக்கப்பட்ட வர்க்கத்தின் குமுறல்களை, கோபங்களை அவை வீரியத்துடன் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. மனதில் எழுச்சியையும், வேகத்தையும் எழுப்புகின்றன. நம்மைப் பாதிக்கிற பல நிகழ்வுகளை அதே பாதிப்போடு அவர் வரைந்து காட்டும்போது அவை உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன.

ஈராக், ஈழ இனப்படுகொலைகள், குஜராத்தில் ஏற்பட்ட இயற்கை அழிவு, மதத்தின் கோர தாண்டவம். தமிழகத்தில் நிகழ்ந்த தீண்டாமைக் கொடுமைகள் முதலிய பல நிகழ்வுகள் அவர் மனதில் பதிந்து, தூரிகையால் வடிவம் பெற்றன. இந்தக் கேட்டிற்கும் கொடுமைக்கும் தீர்வுதான் என்ன? அது எப்போது? என்கிற கேள்வியை அவை எழுப்புகின்றன. தீர்வுகளைக் காணப்போராடும் சக்தியைப் பார்வையாளர்களிடையே கொண்டு சேர்க்கிறது. இதுதான் படைப்பின் வெற்றி. ஓவியத்தைப் பார்த்தோம். ரசித்தோம். வந்தோம் என இல்லாது. ஏதோ ஒரு வகையில் சமூக நலன் நோக்கிச் செயல்பட வைப்பதுதான் கலையின் நோக்கமாகும். அந்த நோக்கத்தைப் புகழேந்தியின் படைப்புகள் நிறைவேற்றுகின்றன.

ஒரு பழைய பாடல், ஓவியத்தை மையப்படுத்திய பாடல் நினைவுக்கு வருகிறது. பொருள் தேடுவதற்காக தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல நினைக்கிறான். தலைவி எவ்வளவோ சொல்லியும் அவன் முடிவில் மாற்றமில்லை. பிரியும் நாளும் வருகிறது. தலைவி எதுவும் பேசவில்லை. தலைவன் அவள் முகத்தை நோக்குகிறான்.  அதுபல குறிப்புகளை, உணர்வுகளைத் தாங்கிய ஓவியமாகக் காட்சித் தருகிறது. வாய்பேசாத அந்த ஓவியம் வாய்ப் பேச்சைவிடப் பல சிந்தனைகளை, பாதிப்புகளை, உணர்வுகளை எழுப்புகின்றன. அவன் தன் முடிவை மாற்றிக் கொள்கிறான். தலைவியுடன் தங்கி விடுகிறான். அந்த முக ஓவியம் தந்த செய்தியின் விளைவு இது. புலவன் ஓவச் செய்தி என அதைக் குறிக்கிறான். (அகநானூறு, 5). இதனால்தான் ஓவியத்தைப் பண்டைத் தமிழர் வட்டிகைச் செய்தி என்றனர் போலும். ஓவச் செய்தி, வட்டிகைச் செய்தி என்பன தரும் குறிப்பு. ஓவியங்கள் ஏதேனும் ஒரு செய்தியைத் தர வேண்டும். வெறும் அழகியல் படைப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதுதான். கலை வாழ்க்கைக்காகவே என்பதன் கருத்தும் இதுதான். அந்தக் கருத்து அழகியலையும் சேர்த்துக் கொள்ளும்போது அதன் மதிப்பு கூடுகிறது.

இதை உணர்ந்த புகழேந்தி தன் படைப்புகளுக்குக் கோடிடுவதில் தொடங்கி வண்ணமூட்டும் வரை கவனமாக இருந்து, செயல்பட்டு, உருவமைத்து, அழகூட்டியுள்ளார். இது அவரது கலையுணர்வின் வெளிப்பாடு. ஓவச் செய்தி தரும் புகழேந்தி அத்தகைய செய்திகளோடு, அச்செய்திகளின் மூல முதல்வராக விளங்கும் மார்க்ஸ், லெனின், மாவோ, பெரியார், அம்பேத்கர், பிரபாகரன் முதலியோரையும் அசலாக நம்முன் நிறுத்தி அசத்துகிறார். இதைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால், நூற்றாண்டு வாரியாகச் செயற்கரிய செய்த / செய்கிற தலைவர்கள் பற்றிய சிந்தனை மேலெழும்புவதைக் காணலாம்.

பல செய்திகளை, உணர்வுகளை, சிந்தனைகளை, அழகுணர்வுடனும், கலைநயத்துடனும் வெளிப்படுத்தும் தனது படைப்புகளை உலகெங்கும் உள்ள தமிழர்களும், கலை ஆர்வலர்களும் வரவேற்றுப் போற்றும் வண்ணம் பல நாடுகளில் காட்சிப்படுத்தி தமிழுக்கும், தமிழர்க்கும் புகழும் பெருமையும் சேர்த்துள்ளார். தனது கைவண்ணம் காலப்போக்கில் கரைந்துவிடக்கூடாது என்கிற முன்னுணர்வோடு அவற்றையெல்லாம் அச்சுவண்ணமாக்கியிருப்பது அவரது வரலாற்றுணர்வுக்கு நற்சான்றாகும். புகழ் சேர்த்த புகழேந்தியின் மக்கள் சார்புக் கலைப்பணி தொடரட்டும்.