நண்பருமாய் நல்லாசிரியருமாய்

ஸ்ரீகாந்த் மீனாட்சி

கணிப்பொறி வல்லுநர், அமெரிக்கா


சிறப்பு மலர், 2004


புகழேந்தியை நான் முதலில் சந்தித்தது 1990 ஆம் ஆண்டில். ஹைதராபாத்தில் முதுநிலை மாணவராக (அவர் கலை, நான் கணிப்பொறி) அவரோடு இரண்டு வருடங்கள் பழகிய பின்னர் நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். 2000 ஆம் வருடம் தங்கை கல்யாணத்திற்கு இந்தியா வந்திருந்தபோது செய்தித்தாளில் 'உறங்கா நிறங்கள்' கண்காட்சி பற்றிய விவரம் பார்த்தேன். லலித் கலா அகாதமி எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து, ஓவியங்கள் நிறைந்த அந்த அறைக்குள் ஒரு சந்தடியற்ற மதிய நேரத்தில் நுழைந்தபோது அட "ஸ்ரீகாந்து வா! வா! எப்போ வந்தே?" என்று வரவேற்றவரை அடையாளம் காண எனக்குத்தான் சில வினாடிகள் பிடித்தது. புகழுக்குப் பிரச்சினையே இல்லை. ஏதோ போனவாரம் சந்தித்தவரை மீண்டும் இந்த வாரம் சந்திப்பது போல் உரையாட ஆரம்பித்துவிட்டார். எட்டு வருடம் கழித்து சந்திக்கிறோம். என்னை அவருக்கு நினைவிருக்குமா என்றெல்லாம் எனக்கிருந்த சந்தேகங்கள் எல்லாம் ஒரே நிமிடத்தில் தவிடு பொடியாயின.

புகழை நன்கு அறிந்தவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான விஷயமே இல்லை என்று நினைக்கிறேன். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் புகழ் ஒரு நல்ல நண்பர். கால இடைவெளியோ, தூர இடைவெளியோ நட்புக்கு ஒரு தடங்கலாகக் கருதாதவர். பல மாதங்கள் கழித்து, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து நான் தொலைபேசினாலும் அதே பரிச்சயமும் அதே சகோதரப் பாசமும் நிறைந்து, மிகுந்த ஆறுதலையும் அமைதியையும் அளிக்கும் தொனியில் தான் அவரது உரையாடல் இருக்கும். துரிதகதியான வாழ்க்கையும், மாறும் ஊர்களும், பேர்களும், வேலைகளும், முகங்களுமாய் இருக்கும் இந்நவீன நாட்களில் புகழ் போன்ற நண்பர்கள் அமைவது அரிது. கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற சொல்லாடலைச் சார்ந்தது.

புகழேந்தி என்ற ஓவியரை மதிப்பீடு செய்வதற்கு எனக்கு கடுகத்தனையும் தகுதியில்லை. எனது உலகம் வேறு. எண்களும், கடுமையான கட்டமைப்புகளும் தீவிரமான இயந்திர விதிகளும் நிறைந்தது. வளைவுகளும், வண்ணங்களும் அவைகாட்டும் சிந்தனைப் பரிமாணங்களும் எனக்கு மிக மேலோட்டமாகத் தான் புரிகின்றன. ஆனால் புகழ் என்ற மனிதரின் மனிதநேயத்தையும், நட்புணர்வையும் புரிந்து கொள்ள என் போன்ற ஒரு சக மனிதனாக இருந்தாலே போதுமானது. புகழ் என்ற சமூக சிந்தனையாளரின் ஆற்றாமைகளையும், கோபங்களையும் ஏக்கங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்ள ஒரு சமூக அக்கறையுள்ள ஒரு சக குடிமகனாக இருந்தாலே போதுமானது.

எனது சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவனுக்குத் தமிழ் தெரியாது என்பதால், தைரியமாக ஹரி என்ற அவனது பெயரைச் சொல்லலாம். நல்ல பையன் ஆனால் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அவனுக்கு வாதம் செய்வதில் உள்ள ஆர்வம். வாதம் செய்யும் விஷயம் குறித்த உண்மைகளை அறிந்து கொள்வதில் இல்லை.

நானோ செய்தித்தாள், புத்தகங்கள், இணைய தளங்கள் என்று சதா ஏதாவது படித்துக் கொண்டே இருப்பவன். இதனால் என்ன ஆகும் என்றால், அவனோடு பேசும் சமயங்களில் விஷயம் தெரிந்து நான் செய்யும் வாதங்களுக்கு எதிராக விதண்டா வாதம் செய்வான். விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை பேசுவான். ஆரம்ப நாட்களில் இது எனக்கு மிகக் கடுப்பாகவும், கோபமாகவும் இருந்தது. ஆனால் போகப்போக எனக்குப் புரிந்த விஷயங்கள் என்னவென்றால், இத்தகைய உரையாடல்களிலிருந்து நான் சொல்லும் செய்திகள் அவனது கருத்துகளை சீர்படுத்துகின்றன என்பதும், அதனால்தான் மீண்டும் மீண்டும் என்னோடு அவன் வாதம் செய்ய முனைகிறான் என்பதும்தான்.

ஹரிக்கு நான் இருந்ததைப் போல் புகழ் எனக்கு பல சமயங்களில் இருந்திருக்கிறார். எனது செய்தி உள்ளீடுகள் மிகப்பெரும்பாலும் ஊடகங்கள். அதுவும் இன்றைய நாட்களில் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கிடைக்கும் சொற்பத் தகவல் தளங்கள். புகழுக்கு ஒவ்வொரு நிமிடமும் எல்லாப் புலன்களின் வாயிலாகவும் செய்திகளும், கருத்துகளும், கண்ணோட்டங்களும் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை அவரது மிகக் கூரிய சிந்தனைத்தளம் சீர்தூக்கி, செம்மைப்படுத்தி, பதம் பிரித்து, தனது சொந்த மதிப்பீடுகளை மிகுந்த நேர்மையோடு வகுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கையில், நட்பு என்ற அந்த உரிமைச் சீட்டோடு அவரோடு சமதியாக அமர்ந்து உரையாடுகையில், மிகப் பொறுமையோடு எனது குறைவாதங்களை அவர் எதிர்கொண்டு பதிலளித்திருக்கிறார். அவரை விட மிக வித்தியாசமான சூழ்நிலையில் பிறந்து, வளர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எனது சிந்தனைப் பரிமாணங்களின் பரப்பளவு எத்தனை குறைவானது என்பதைப் புரிந்து கொள்வதற்கும், அதை மெல்ல மெல்ல விரிவடையச் செய்து கொள்வதற்கும் இவ்வுரையாடல்கள் மிக இன்றியமையாததாக இருந்தன. புகழ் அருகில் இல்லாதபோதும், ஒரு புதிய கருத்தாகத்தை நான் எதிர்கொள்ள நேரும்போது, அதற்கு புகழின் அணுகுமுறை எத்தகையதாக இருக்கும் என்று கற்பனை செய்து எனக்குள் நான் நடத்திக்கொள்ளும் உரையாடல்கள் ஏராளம். தனது சொந்த இருப்பையும், சொற்களையும் கடந்து ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்துகிறார் என்றால் அவரது சிந்தனையின் உறுதியும், ஒழுங்கமைவும் நேர்மையும்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

அவரது உறுதிக்கும், நேர்மைக்கும் ஒரு உதாரணம் சொல்லலாம். அவரது 'உறங்கா நிறங்கள்' கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கருத்துப் பதிவேட்டில் நான் சில எண்ணங்களைச் சொல்லியிருந்தேன். பெரும்பாலும் புகழ்ச்சியாக இருந்த அவற்றில் சில நெருடலான வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. பின்னால் அவ்வோவியங்கள் புத்தகவடிவில் வெளியானபோது அந்தக் கருத்துப் பதிவேட்டில் எழுதப்பட்டவை ஒரு பிற்சேர்க்கையாக அதில் வெளியிடப்பட்டன. அதைப் பார்த்ததும் நான் இயல்பாகவே நான் எழுதியதும் வெளியாகி இருக்கின்றதா என்று பார்த்தேன். எழுத்து மாறாமல் அப்படியே பதிப்பிக்கப்பட்டிருந்தது. நான் பார்ப்பதைப் பார்த்த புகழ் என்னிடம் அதை பதிப்பித்த நண்பர்கள் தன்னிடம் அக்கருத்துக்களை நீக்கி விடலாமா என்ற கேட்டதையும், தான் உறுதியாகக் கூடாது என்று சொல்லி விட்டதையும் தெரிவித்தார். அவரது உயரிய ஆளுமைக்கு அத்தாட்சியாக விளங்கும் இந்தத் தகவல் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

குஜராத் பூகம்பத்தின் பின்னால் அவரது சிதைந்த கூடு ஓவியக் கண்காட்சியை தி.நகர் மேல்நிலைப் பள்ளியின் ஒரு வகுப்பறையில் மிக வித்தியாசமாக நடத்தினார். அது குறித்த செய்தியை இங்கு எனது அமெரிக்க நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோது ஒரு ஓவியக் கண்காட்சியை, ஒரு அரசாங்கப் பள்ளியின் வகுப்பறையில் சாதாரணமாக நடத்தியதை வினோதமாகக் கருதினார்கள். நான் அவர்களிடம் ஐயமறக் கூறியது இதுதான். இதே கண்காட்சியை ஒரு தெருவின் நடைபாதையில் நடத்தியிருந்தால் இன்னமும் நன்கு மக்களைச் சென்றடைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று புகழ் கருதியிருந்தால், அங்கே கூட இந்தக் கண்காட்சி நடந்திருக்கும் என்றேன். நான் இப்படிச் சொன்னதில் அவர்களது ஆச்சரியம் எனக்குத் தெரியப்படுத்திய செய்தி என்னவென்றால், புகழ் போன்ற கலைஞர்கள் நமது சமுதாயத்தில் எத்தனை அருகி இருக்கிறார்கள் என்பதுதான்.

புகழேந்தி மிகுந்த போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரித்தான மனிதர். நமது சமுதாயத்தால் மிகவும் கொண்டாடப்பட வேண்டியவர். ஆயினும் உண்மையாதெனின், ஏராளமான குறைகளும், பழமைகளும், பிற்போக்கு சிந்தனைகளும் புறையோடிப் போயிருக்கும் நமது சமுதாயத்தில் புகழ் போன்ற கலைஞர்களும் சிந்தனைவாதிகளும் நிறையத் தேவைப்படுகிறார்கள். இவ்வகையில் நாம் புகழ் என்ற மனிதரையும், கலைஞரையும் தாண்டி, ஒரு ஆசிரியராகவும், எதிர்கால சந்ததியின் சிந்தனைப் போக்குகளையும் சீர்படுத்தும் சக்தியாகவும் அவர்களது திறமைகளை ஒருமுகப் படுத்தும் கிரியா ஊக்கியாகவும் இருக்கப் பெரிதும் வேண்டுகிறோம். இதற்குத் தேவையான சக்தியும் வாய்ப்புகளும் அவருக்கு சாத்தியப்பட வேண்டுமென்பதே பிரார்த்தனை.