காலத்தை வெல்லும் கோட்டோவியக் கலைஞர்

அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா


சிறப்புமலர்- 2004


இப்பெயர் ஓவிய உலகில் மட்டுமல்லாது தமிழார்வலர்களிடையேயும் மிகவும் மதிக்கப்படும் பெயர். ஓவியக் கலையை வெறும் கவின்கலையாக மட்டுமல்லாது, தமிழின விழிப்புணர்வுக்குக் கட்டியம் கூறும் ஆற்றல்மிகு அருங்கருவியாகத் திறம்படக் கையாண்ட வெறொரு ஓவியரைக் காண்பதறிது.

ஆழ்ந்து நோக்கின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே ஓவியம் முதலான கவின்கலைகள். அவை காண்போர் சிந்தையை மகிழ்விப்பதோடு சிந்தனையைத் தூண்டுவதாகவும், புரியாதனவற்றைப் புரியவைப்பதாகவும், அறியாதவற்றை அறியச் செய்வதாகவும் அமையும் வண்ணம் அவற்றைக் கையாள்வதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அதில் கைதேர்ந்த மிகுதிறனாளராக விளங்குபவர்தான் ஓவியச் செல்வர் புகழேந்தி அவர்கள்.

எழுத்தால் வடிக்கவியலாத மனஉணர்வுகளைக் கோட்டோவியங்கள் மூலம் காண்போரிடம் திட்பநுட்பமாகப் பேசச் செய்யும் வல்லமை ஓவியச் செல்வர் புகழேந்தியின் தூரிகைக்கு உண்டெனின், அது மிகையன்று. ஈழமக்கள் விடுதலைவேட்கையின் விளைவாக, அல்லலுறும் அவலங்களை, எதிர்கொள்ளும் துன்ப துயரங்களை, இவரளவுக்கு ஓவியங்கள் மூலம் சித்தரித்த வேறொருவரைக் காண இயலவில்லை. அவலங்களையெல்லாம் காண்போர் உள்ளத்தின் அடித்தளத்தில் இறக்கிவைத்து சிந்திக்கத் தூண்டும் திறன்மிக்கவை. அவை அடிமனதில் ஆழமாகப் பதிவதால் சிந்தனையைக் கனக்கச் செய்கின்றன. அவலத்துக்கு ஆளானோர் பால் நம் உள்ளமும் உணர்வும் விரைந்தோடுவதில் வியப்பில்லைதான். பல மணிநேரம் விளக்கிச் சொல்ல வேண்டிய உண்மைகளை, ஒரு சில விநாடிகளில் உணர்த்தும் வல்லமை கொண்டவை ஓவியர் புகழேந்தியின் கோட்டோவியப் படைப்புகள். விடியலை நோக்கிப் பயணம் செய்வோருக்கு ஒழுங்கை ஊக்கியாக அமைத்துள்ளதென்றே கூறவேண்டும்.

இவரது கோட்டோவியங்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகள் தோன்றி மறையும் நீர்மேல் குமிழிபோன்று அமைவன அல்ல. அவை புதுப்புது உணர்வுகளாலும் அதன்வழி ஆழமான சிந்தனைகளை உருவாக்கவும் வல்லனவாகும். இதனால் அவை காலங்கடந்து நிற்கவல்லன என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எனவே, காலமெல்லாம் பயன்தரவல்ல கோட்டோவியங்களை, பரவலாக மக்கள் பார்வைக்கும் கொண்டு செல்லும் எண்ணத்தில் தமிழக அளவில் மட்டுமல்லாது உலக அளவில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி, உலகத் தமிழர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்து வருகிறார். இம்முயற்சி பாராட்டத்தக்க ஒன்று.

ஆக்கபூர்வமாக சிந்திக்கும் ஓவியர் புகழேந்தி இன்னும் ஒருபடி மேலே சென்று, தன் ஓவியப் படைப்புகளை நூல்வடிவாக்கி மக்களிடையே பரவவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓவிய நூல்கள் தமிழகத்தில் மிகஅரிதாகவே உள்ளன. அந்தக் குறையை நீக்க புகழ் முற்பட்டிருப்பது வாழ்த்தி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தன் ஓவியப் படைப்புகளைக் காணும் அனைத்துத் தரப்பு மக்களின் மனதைத் தூண்டிச் சிந்திக்க வைக்கும் இவரது ஓவியங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் உணர்வுகள் சிறகடித்துப் பறப்பதை உணரலாம். அவை உள்ளத்தில் பதிவதை, அதுவும் காவலச்சுவடுகளாகத் தடம் பதிப்பதை மறுப்பதற்கில்லை.

நண்பர் புகழேந்தி அவர்கள் ஆற்றல்மிக்க ஓவியர் மட்டுமல்ல, திறம்பட்ட எழுத்தாளருமாவார். இவர் உலகெங்கும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள தமிழுள்ளங்களையெல்லாம் வருடி அவற்றை எழுத்துருவில் பதிவு செய்து வருபவர். ஓர் ஓவியரின் கண்ணோட்டத்தில் உலகெங்கும் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பட்டறிவோடு பதிந்து வருபவர். தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என அவற்றை நூல் வடிவில் வெளியிட்டு வருபவர்.

இவரது ஓவியப் படைப்புகள் மட்டுமல்ல, எழுத்தும் காலத்தை வென்று வாழும் வல்லமை உள்ளவை என்பதில் ஐயமில்லை.