கண்ணீரின் ராகமும், எரிமலையின் கொப்பளிப்பும்

கவிஞர் இன்குலாப்


சிறப்புமலர்- 2004


ஓவியர் புகழேந்தியின் ஓவியங்களின் தொடர் பார்வையாளனும் ஆர்வலனும் நான். அவரது ஓவியந்தான் முதலில் என்பார்வைக்கு வந்தது. முதற்பதிவே சிறந்த பதிவானாதால் அவர் ஓவியங்கள் என்னைத் தொடர்ந்து ஈர்த்துவந்துள்ளன.

ஓவியங்களின் திறனாய்வாளன் அல்லன்நான். ஆனால் எனக்கு ஓவியங்கள் நிரம்பப் பிடிக்கும். நல்ல ஓவியத்தைப் பார்க்கும் பொழுது நல்ல இசையைக் கேட்கிற உணர்வுதான் எனக்குத் தோன்றும். இசை பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது அதை ரசிப்பதைத் தவிர. ஓவியம் வரைபவரோ அல்லது திறனாய்வாளரோதான் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற வரையறை கட்டளையாக்கப்பட்டால், எந்தக் கலை குறித்தும் எவரும் ஒரு கருத்துச் சொல்ல முடியாமற் போய்விடும். கலைகளின் வளர்ச்சி நுட்பம் தெரிந்தவர்களின் கூரிய பார்வைகளால் மட்டுமல்ல; ரசிக்கத் தெரிந்தவர்களின் பாராட்டுகளாலுந்தான்.

ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் எனக்குத் கண்ணீரின் ராகத்தையும் எரிமலையின் கொப்பளிப்பையும் இசைப்பதை என்னால் கேட்க முடிகிறது. இப்படித்தான் அவர் ஓவியங்களின் முன்னால் நான் நிற்கிறேன். இதற்காக அவர் ஓவியங்களின் மீது திறனாய்வு கூடாது என்று ஒருபோதும் நான் சொல்லமாட்டேன். நுட்பந் தெரிந்தவர்கள் அதைச் செய்யவேண்டும். ஓவியத்துக்கு மட்டுமல்ல; கவிதை, இசை, நாடகம் எல்லாவற்றுக்குந்தான். அத்தகைய விமர்சனங்களை ஏற்க வேண்டியது படைப்பாளிகளின் கடப்பாடும் ஆகும்.

புகழேந்தியின் 'கோடுகளும் வண்ணங்களும்' புறத்தோற்றங்களில் நின்றுவிடாமல், அவற்றுக்குள் ஊடுருவ முயல்வதாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவர் உணர்வின் கோடுகளையும் நிறங்களையும் தமது தூரிகையால் தொடத் தொடர்ந்து முயல்கிறார். புறத்தோற்ற அளவிலேயே நின்று விடுவோமேயானால் புகழேந்தி தீட்டும் முகங்கள் அழகிய முகங்களாக நின்றிருக்கும். வரையும் பூக்கள் தோன்றும் வண்ணங்களிலேயே மலர்ந்து கொண்டிருக்கும். அவருடைய முகங்களும் பூக்களும் அப்படி இல்லை. அவருடைய தூரிகையின் ஊடுருவல் சமூகக்கடப்பாடு சார்ந்ததாக இருக்கிறது.

பெரும்பாலான ஓவியர்களின் தூரிகைகள் சமூகக் கடப்பாட்டுக்கு நெருங்காதனவாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல பேனா முனைகள் இயங்குவது போல தொடரும் அதிகார வன்முறையின் பரப்பில் இது தூரிகைகளுக்கும் பேனாக்களுக்கும் பாதுகாப்பானது. ஆனால் சமூகப் பொறுப்புள்ள ஒரு கலைஞன் இந்தப் பாதுகாப்பின் இலாபங்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை. சமூக நீதிக்காக ஒரு தூரிகை தோயும்பொழுது எழும் ஓவியங்கள், கேள்விகளின் குறியீடுகளாகவே முகம் காட்டுகின்றன. அவற்றின் போராட்டத்தின் தழல் நிறம் கொள்கிறது.

ஓவியர் புகழேந்தி தனது எல்லாப் பலத்துடனும் ஏன் பலவீனங்களுடனும் கூட சமூகம் சார்ந்த கேள்விகளுக்குத்தான் முகமும் வண்ணமும் கொடுக்கிறார். இந்த வகையில் அவருடைய படைப்பு முயற்சி தனிப் பாங்கிலானது. சமூகக் கடப்பாடுடைய அரிதான கலைஞர்களின் வரிசையில் நிற்கும் தகுதியை நிறுவுவது.

புகழேந்தியின் படைப்புகள் உருவாகும் காலத்திலயே உடனிருந்து பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருக்கிறது. உறங்கா நிறங்கள், சிதைந்த கூடுகள், திசைமுகம், புகைமூட்டம், இப்படிப்பல படைப்புகளின் போது இவற்றுக்குப் பெயர் சூட்டும் பேறும் எனக்கு வாய்த்தது. அவரது கோடுகளின் அழுத்தமும் வண்ணங்களின் தாக்கமும் என்னுள் ஏற்படுத்திய அதிர்வுகள்தாம் இந்தப் பெயர் சூட்டல்கள்.

இளம் வயதில் ஓவிய முதுகலைப் பட்டம் பெற்ற கல்விச் சிறப்பு இவருக்குரியது. இதைப் பதவி, பதவி உயர்வு என்ற அதிகார வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், அவருடைய தூரிகை சமூக வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருப்பது எங்களுடைய தோழமைக்குக் காரணம்.

ஓவியர் புகழேந்தி, இந்தச் சமூக வெளிப்பாட்டை அவர் கற்றறிந்த, அனுபவப்படுத்தியிருக்கிற ஓவிய நுட்பங்களுடன் இன்னும் புலப்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு சுறுசுறுப்பான படைப்பாளியாக இயங்கும் இவருக்கு உயர்ந்து செல்லும் அறைகூவல்களைச் சாதிப்பது கடினமானதாக இருக்காது. இத்தகைய சாதனைகள் அவருக்கு மட்டுமல்லாது, நம் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.