அறுவடை நோக்கிய விதைப்பு அது

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்


சிறப்புமலர்- 2004


உலகெங்கும் சிந்தப்படும் மாந்தர் குருதி புகழேந்தி வரையும் ஓவியங்களின்

நாளங்களை ஊடுருவிப் பாய்கிறது.

சினம் கொண்ட சிவப்பு.

நிறங்களில் பிற நிறங்களை அவர் ஓவியங்களில் பார்த்ததாய் நினைவில்லை.

பச்சை அவர் ஓவியங்களில் இடம் பெறுவதானால் மரங்களை அவர் வரையவேண்டும். கொடியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்ட மொட்டை மரங்களையே தொடும் அவர் ஓவியங்களில் பச்சை வர வாய்ப்பில்லை.

மாந்தன் ஆனாலும் மரம் ஆனாலும் புகழேந்தி அடக்கப்பட்ட வதைக்கப்பட்ட அழிக்கப்பட்ட மாந்தனையே மரத்தையே வரைகிறார்.

ஒடுக்குமுறையும் கண்ணீரும் பெருமூச்சும் உயிர்வதையும் சாவுமே அவர் ஓவியம்.

கடுமையான உழைப்பு

அவர் நடத்திய ஒரு கண்காட்சிக்கு அவர் இட்ட தலைப்பு உறங்கா நிறங்கள்.

புகழேந்தியின் நிறங்கள் மட்டுமல்ல புகழேந்தியின் தூரிகையும் உறங்குவதில்லை.

உலகத்தை நேசிக்கிறார் தமிழ்மண்ணை மறக்காமல் - தமிழ் மண்ணை நேசிக்கிறார் உலகத்தை மறக்காமல்.

அடிமைத்தனத்தை அவர் நிறங்கள் ஓங்கி அறைகின்றன.

கோணிப்போன மாந்தர் வாழ்வை நிமிர்த்துவனவாய் அவர் கோடுகள்

எப்படி வரைகிறார் புகழேந்தி என்பதைச் சொல்ல ஓவியக் கலையில் போதிய அறிவு எனக்கில்லை. ஆனால் எதை வரைகிறார் அவர் என்பதை எடைபோட என் கண்கள் போதும்.

மக்கள் கலைஞராய் அவரை மதிக்கிறேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நிறங்களாக்கிய தமிழ்நாட்டின் முதல் ஓவியர் வீர சந்தானம். ஓவியர் புகழேந்தியின் தமிழீழ விடுதலை ஓவியங்களும் வரலாற்றில் தனித்தே நிற்கும். கடல் தாண்டிய தமிழ்நாட்டின் இனஉறவுக் கை கொடுப்பாய் மட்டுமல்ல வாய் கனத்த சீற்றமாய் அந்த ஓவியங்கள் காலப்பரப்பில் தடம் பதிக்கும்.

வறுமை தின்று தொலைத்த எத்தியோப்பிய பெண்ணின் பாதி உயிர் சுமந்த எலும்புக் கூட்டை அவர் வரைந்தார். இன்றும் அந்த ஓவியம் என் நெஞ்சின் வலித்துக் கொண்டேயிருக்கிறது.

புரட்சிக்கான தேவையைப் பதிவு செய்வதே புகழேந்தியின் ஓவியம்.

அறுவடை நோக்கிய விதைப்பு அது.