கூரிய வாள்களாய்க் கீறிய கோடுகள்

சுப. வீரபாண்டியன்


சிறப்புமலர்- 2004


'கலைகளிலே அவள் ஓவியம்' என்று பாராட்டத்தக்க அளவிற்கு ஓவியக்கலை சிறப்பு வாய்ந்தது.

எங்கள் ஊர்ப்பக்கத்தில் பெண்கள் பேசிக்கொள்ளும் போது உன் புள்ள மட்டும் என்ன ரொம்ப ஓவியமோ? என்று பேசக் கேட்டிருக்கிறேன். ஓவியம் என்றாலே உயர்வு என்ற பொருளில் இங்கு அச்சொல் ஆளப்படுகின்றது.

எனக்கு ஓவியம் வரையத் தெரியாது. ஓவியத்தின் நுட்பங்கள் தெரியாது. எனினும் ஓவியத்தைச் சுவைத்து ரசிக்கும் மனநிலை உண்டு. அதனால்தான் என் பெயர்த்திக்கும் ஓவியா என்று பெயர் சூட்டியுள்ளோம்.

ஓவியம் மட்டுமன்று; எல்லாக் கலைகளுமே நம் ரசனைக் குரியவைதாம். ஆனால் அவை சுவைக்காக மட்டுமே அல்ல என்ற கருத்துடையவர்களின் வரிசையில் நிற்பவன் நான்.

'கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே' என்று சொன்ன மாவோவின் பார்வையே சரியானது.

அப்படி ஒரு மக்கள் ஓவியனாய் விளங்கும் காரணத்தினாலயே நண்பர் புகழேந்திக்கும் என் போன்றவர்களுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

அழகு ஓவியனைப் பாதிக்கும். சமூக அக்கறை இருக்குமானால் அவலமும் அவனைப் பாதிக்கும்.

பாதித்தது. குஜராத்தின் நில நடுக்கம். திண்ணியத்தின் காட்டு விலங்காண்டித்தனம், ஈழமண்ணின் கொடூரங்கள் எல்லாமே ஓவியர் புகழேந்தியைப் பாதித்தன. அந்தப் பாதிப்புகள் அழியாத கோடுகளாய் அழகான ஓவியங்களாய் உருப்பெற்றன.

புகழேந்தி வெறும் ஓவியர் மட்டுமில்லை. போர்க்குணம் மிகுந்த மனிதரும் ஆவார் என்பதை அவை உலகுக்கு உணர்த்தின.

அதன் பிறகு, தந்தை பெரியாரைப் பல்வேறு கோணங்களில் அவர் வரைந்த ஓவியங்கள். அவருக்குள் இருந்த இன்னொரு மனிதரையும் அடையாளம் காட்டின.

பெரியாரை வரைவதற்கு அவர் பயன்படுத்திய ஒவ்வொரு கோடும், நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியது. பெரியாரின் படங்கள் உயிரோவியங்களாய்த் திகழ்ந்தன.

ஈழம் என்று சொன்னாலே தீவிரவாதம் என்ற பெயர் சூட்டப்பெற்ற அண்மைக் காலத்தில், ஈழத்தின் அவலங்களைத் தூரிகையால் படம் பிடித்தவர் புகழேந்தி. அது மட்டுமல்லாமல், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் பிரபாகரனையும் கம்பீர ஓவியமாக்கிக் கண்காட்சியில் வைத்த துணிவுடையவராகவும் விளங்கினார் புகழேந்தி.

இவை எல்லாவற்றையும் தாண்டி, அவருடைய உறுதிக்கும் உண்மைக்கும் சான்று பகரும் நிகழ்வொன்று நடந்தது.

2002 ஆம் ஆண்டில் தமிழகமெங்கும் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. 'பொடா' என்றொரு புதிய சட்டம் புறப்பட்டு தமிழின உணர்வாளர்களையும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களையும் வேட்டையாடியது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய மாபெரும் குற்றத்திற்காக வைகோ, நெடுமாறன் உட்பட நாங்கள் 16 பேர் பொடாவில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் சிறையிருந்த எங்களுக்காக நிதி திரட்டியும் வழக்குரைஞர்களை அமர்த்தியும் பாடுபட்ட நண்பர்களின் பட்டியலில் புகழேந்தியின் பெயரையும் பார்க்க முடிந்தது. மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தோழர் கல்யாணி முன்னின்று ஆற்றிய பணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஓவியர் புகழேந்தி, எல்லோரது நெஞ்சிலும் இடம் பெற்றார்.

அமைதிக் காலங்களில் பொதுப்பணி ஆற்றுவோரின் எண்ணிக்கையே குறைவானதுதான். ஆபத்துக் காலங்களில் அந்த எண்ணிக்கை மேலும் சுருங்கும்.

ஆனால் அப்போதுதான் கொள்கை வழிப்பட்ட, நெஞ்சுரமிக்க நேர்மையாளர்கள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அப்படி அறியப்பட்ட அன்பு நண்பர்தான் ஓவியர் புகழேந்தி.

அவருடைய நெஞ்சுரமும் நேர்த்தியான ஓவியங்களும் மேலும் வளம் பெற என் இனிய வாழ்த்துகள்!