ஓவியர் புகழேந்தி போராளியின் தூரிகை

கவிஞர் புதிய மாதவி
, மும்பை

பதிவுகள்.காம் – மே 2004


ஓவியர் புகழேந்தி வண்ணங்களில் வாளின் வீச்சைக் காட்டும் போராளி. எங்கிருந்தாலும் தமிழன் வாழவேண்டும் என்பதற்காகத் தன் எண்ணங்களை வண்ணங்களில் காட்டி வழிகாட்டும் வெளிச்சம். ஓவியர் என்றாலே வளர்ந்து அசிரத்தையாகக் கிடக்கும் தாடி, மீசை, தலைமுடி, நீண்ட ஜிப்பா, ஜோல்னா பை இத்தியாதியாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் புன்னகையுடன் இனிமை, இளமை, நட்பு, நாணயம், ஏன் சிலச் சமயங்களில் கவிதை, இலக்கியம் என்ற எல்லா வண்ணங்களையும் தொட்டுப் பார்க்கும் அதிசயமானத் தூரிகை ஓவியர் புகழேந்தி. தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம் தும்பத்திக்கோட்டை என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து குடந்தை ஓவியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்த புகழேந்தி இன்று தமிழ்நாடு கும்பகோணம் ஓவியக் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நிகழ்வுகளை 37 ஓவியங்களில் அவர் படைத்திருக்கும் "உறங்கா நிறங்கள்" அவர் ஓவியங்களை மட்டுமல்ல, அவர் தூரிகை அவருடைய பெயரையும் இந்த நூற்றாண்டின் போராளிகள் வரிசையில் எழுதிவிட்டது.

பூக்களை வரைகின்றார். ஆனால் வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிடும் பூக்களை அல்ல. புயலில் இதழ்கள் சிதறி கீழே வீழ்ந்துவிடாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் மெல்லிய மகரந்தங்களை, நிலவை வரைகின்றார். காதலின் சின்னமாக அல்ல. மனிதன் கால் பதித்த வெற்றியாக. பெண்ணை வரைகின்றார். அழகின் சிரிப்பாக அல்ல. அனுபவிக்கும் பொருளாக அல்ல. அவரே இதைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார்.

பெண்களை வெறும் அழகுப் பொருட்களாக அணுக நான் விரும்புவதில்லை. அவர்கள் உலகின் ஆணிவேர்கள். அவர்கள் போராட்ட வாழ்க்கைக் களத்தில் புகுந்துவிட்டார்கள். தமிழ்ப் பெண்ணியத்திற்கும் உலகப் பெண்ணியத்திற்கும் இவர்களை விடச் சிறந்த முன்னோடி இருக்க முடியாது. இன்றைக்கு ஈழத்துச் சகோதரிகளின் அழகை, போதைக்காக வர்ணிக்க எந்த பேனாவுக்காவது துணிச்சல் இருக்கிறதா? வீரம் விளைந்த பெண்மை அது. வீரம் விளைந்த இலக்கியம் அது.

ஈழத்துச் சகோதரியைப் பூவோடு ஒப்பிட்டுக் கவிஞன் புலம்ப முடியாது. அவர்களைப் பூவாகக் காட்ட முனைகிற தூரிகையில் காளான் பூத்துவிடும். பெரும்பாலும் எனது ஓவியங்களில் வருகின்ற பெண்கள். அழகு அணிகலன்கள், பூ, பொட்டு இல்லாமல்தான் இருப்பார்கள். அவர்கள் பூ வைக்கவும் நேரமில்லாதவர்கள். என் ஓவியப் பெண்கள் அணிகலன்களுக்கு ஆசைப்படாத போராளிகள்...

புகழேந்தி என்ற மானுடக் கலைஞன் தன் தூரிகையின் கோடுகளுக்கு எழுதும் முகவரி புகழேந்திக்கு, கலை இலக்கிய உலகில் ஒரு தனி இடத்தை வரைந்துவிட்டது. எப்போது புகழேந்தியின் தூரிகையில் ஈரம் ஒட்டியது என்பதை அவர் சொல்லுகின்றார். 'எப்போது முளைத்தேன்? ஈழத்தில் எம்தமிழன் குருதி குடிக்கப்பட்டது அறிந்து தமிழ்ச் சகோதரிகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டது தெரிந்து இளம்பிஞ்சுகளை தீக்கிரையாக்கியது கண்டு மனம் வெடித்தேன். அப்போது என்னிலிருந்து வெடித்துக் கிளம்பியது சமூகப் பார்வை சமூகக் கடமை சமூகப் பொறுப்பு...'

விதைக்கப்படுகின்ற உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளும் எப்படி சும்மா இருப்பதில்லையோ அதுபோல கிழிக்கப்படுகின்ற கோடுகளும் சும்மாயிருப்பதில்லை.

'எனது தூரிகையை இருட்டின் பிரதிநிதியாக நியமித்திருக்கிறேன்.'

அதனால்தான் புகழேந்தியின் தூரிகை கருப்பு, வெள்ளையில் தந்தை பெரியாரை வரைந்திருக்கும் ஓவியங்கள் திசைமுகம்.

| இன்றையக் காலகட்டத்தில் தந்தை பெரியாரை மக்களிடத்தில் நினைவுபடுத்துவது மிகவும் அவசியம். எந்தக் கொள்கைகளுக்காக அவர் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டாரோ அந்தக் கொள்கைகள் வலிமையான ஊடகங்களின் துணையுடன் மறைக்கப்படுகின்றன. மறைக்கப்படும் எதுவும் காலப்போக்கில் மறக்கப்படும் என்பதும் உறுதி. அதனால்தான் இவருடைய 'திசைமுகம்' காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

கவிதைகளுக்கு, கதைகளுக்கு ஓவியம் வரைபவர்கள் உண்டு. ஆனால் இவரின் ஓவியங்களுக்குத் தமிழ் இலக்கிய உலகின் இரண்டு கவிதைத் தூண்கள்... கவிதைகளில் கண்காட்சி நடத்தியிருப்பதே இவருக்கும் இவரின் படைப்புகளுக்கும் கிடைத்திருக்கும் மிகப் பெரிய விருது.

ஹிரோசிமா ஓவியத்திற்கு...
இன்னும் ஆறாத காயங்களோடு
இன்னும்  பிறந்து கொண்டிருப்பது
நான்தான்

பகத் சிங் ஓவியத்திற்கு...
இன்குலாப் ஜிந்தாபாத்
முழக்கத்தில் தோற்கும்
அரசின்
கொலைக்கயிறுகள்
கவிஞர் இன்குலாப்பின் கவிதைகள் இவை இரண்டும்.

நெல்சன் மண்டேலா ஓவியத்திற்கு...
வெள்ளை இருளைக் கிழித்த
கறுப்பு வெளிச்சம்

திலீபனின் ஓவியத்திற்கு...
பசித்தது...
அவனே
உணவானான்
அன்னை தெரேசாவின் ஓவியத்திற்கு...
தாய்மை
என்பது
கருப்பையில்
அல்ல...

இதெல்லாம் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள்.

தமிழகமெங்கும் இவரின் ஓவியப்பயணம் இன்று கடல் கடந்தும் இந்தப் போராளியின் பயணம் தொடர்கின்றது. ஓவியக் கண்காட்சிகளின் வெற்றி எத்தனை ஓவியங்கள் விற்பனை ஆனது, எவ்வளவு அதிக விலைக்கு விலைப்போனது? என்றெல்லாம் மதிப்பீடுகள் நடக்கும் காலக்கட்டத்தில் தன் ஓவியக் கண்காட்சிகளின் வெற்றி எத்தனைப் பேர் பார்த்தார்கள். உள்வாங்கிக் கொண்டார்கள் என்பதில்தான் இருக்கின்றது என்று செயல்படுவர் இவர்.

இவர் போராட்டம் பற்றி ஓவியங்களை வரையவில்லை. இவரது ஓவியங்களே போராடுகின்றன என்று கவிஞர் காசி ஆனந்தன் சொல்லியிருப்பதுதான் இவர் தூரிகையின் கோடுகள். எரியும் வண்ணங்கள், முகவரிகள், உறங்கா நிறங்கள், சிதைந்த கூடு, திசைமுகம், புகைமூட்டம் என்று தொடர்கின்றது இவரின் கோடுகள்.

புகழேந்தியின் ஓவியங்களைப் பற்றி எழுத நினைக்கும்போது என் சொல்லகராதி ஊமையாகி கண்களில் கண்ணீரின் புகைமூட்டம் முகவரிகளைக் கிழித்துக் கொண்டு எரிகின்றது. உறங்கா விழிகளில் சிதைந்து போன மனித உறவுகள். இது வார்த்தைகளால் எழுதது முடியாத ஈரம். அவன் தூரிகையின் ஈரத்திற்கு இமைகளின் ஈரமே கவிதை. கலைச்சொல்.