காலம் புதிது, கலை புதிது

தியாகு


சிறப்புமலர்- 2004


கரைகள் இல்லாத ஆறு இல்லை.

காலம் வகுத்த எல்லைகள் இல்லாத கலைஞனும் இல்லை

கலையும் இலக்கியமும் இறுதியாகப் பார்த்தால் வரலாற்றின் விளைச்சலே

நல்ல விளைச்சல் வீரிய விதையாகலாம்

காவியமோ ஓவியமோ காலச் சுவரில் ஒட்டாமல் அந்தரத்தில் உலவமுடியாது.

ஒரு படைப்பாளியையும் அவரது படைப்பையும் வரலாற்றுப் பகைப்புலம் அறியாமல் மதிப்பீடு செய்ய முடியாது. இத்தாலிய ராபேல் முதல் தமிழ்நாட்டுப் புகழேந்தி வரை ஒவ்வோர் ஓவியக் கலைஞரும் எண்ணங்களை வண்ணங்களாக்கிக் கற்பனையைத் தூரிகையாக்கிக் காலச் சுவரில் உயிர் தீட்டியவரே.

ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம் கலைதோறும், கலைதோறும் புதியன படைக்கும் புதியவர்களைப் 'புகழொடு' தோன்ற அழைத்து வந்தது. இசையில் பீத்தோவன், பக்கானீனி, இலக்கியத்தில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கெதே, ஹைனே... அது ஒரு நீண்ட பட்டியல். ஓவியக் கலையில் ராபேல், பிக்காசோ, வான்கோ முதலானவர்கள் மறுமலர்ச்சிக் காலத்தின் கொடைகளே. லியானார்டோ டாவின்சி போன்ற பல்கலை வித்தகர்களும் அக்காலத்தின் ஆக்கங்களே.

இப்படிச் சொல்லும்போது மறுமலர்ச்சிக்கு இந்தக் கலைஞர்கள் செய்த பங்களிப்பைக் காணத் தவறுவதாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. மறுமலர்ச்சி இவர்களைத் தந்தது. இவர்கள் மறுமலர்ச்சியைத் தந்தார்கள்.

நம் இனிய தமிழ்த் தேசத்திற்கும் மறுமலர்ச்சி தேவை. ஒரு கட்டம் வரை இந்தியத் தேசிய இயக்கமும், பிறகு திராவிட இயக்கமாக உருக்கொண்ட தமிழ்த் தேசிய இயக்கமும், ஒரு வரம்புக்குள் பொதுமை இயக்கமும், தமிழியக்கமும் தமிழ் மண்ணில் மறுமலர்ச்சியின் விதைகளைத் தூவின. காலனியமும், பார்ப்பனியமும் விளைத்த களைகளை அழிக்காமல் இங்கே மறுமலர்ச்சிப் பயிர் விளையாது. வளர்ந்த பயிரில் ஒரு பகுதி சாவியாகி மடிந்து மக்கிக் களைக்கே எருவாகிப்போனது ஒரு சோகக்கதை.

மறுபடியும் இது ஒரு மீட்சிக் காலத்தின் முன்னந்திப் பொழுது, தன்னல வெறியையும், அயல் மோகத்தையும், அடிமைத் தாழ்வையும், சமய அரசியல் ஆதீன விசுவாசங்களையும், தலைமைத் துதியையும் புறந்தள்ளி விட்டுப் புதிய உள்ளடக்கத்தோடு புதிய உருவங்களோடும் புதிய உத்திகளோடும் புறப்பட்டு வருகிறது ஒரு புதிய கலைப்படை. அந்தப் படையில் ஒரு முன்னணி வீரர்தான் நம் புகழேந்தி.

எரியும் எண்ணங்களை "எரியும் வண்ணங்களாக்கி" ஆதிக்கத்துக்குத் தீமூட்டி எழுச்சிக்கு விளக்கேற்றும் புகழேந்தி, சமகாலத்தைப் புரிந்து சமகாலத்தில் பொருந்தி சமகாலத்தை மாற்றுவதற்காக இயங்கும் தூரிகைப்போராளி. புயலைச் சிமிழுக்குள் பூட்ட முயன்றோரை மறுதலித்து காலத்தின் மாலுமியைத் திசைமுகம் ஆக்கித்தந்த அறிவோவியர்.

பாரதியின் கவிதைப் பரப்பு போல் புகழேந்தியின் ஓவியப்பரப்பும் விரிந்தகன்றது. லெனின் முதல் காஸ்ட்ரோ வரை அராபத் முதல் பிரபாகரன் வரை... எல்லாரும் நம் புகழின் விரலசைவில் எதிர்வந்து நிற்பர். அவரின் கோடுகளில் சிக்கிய புகழ் முகங்கள் எத்தனை எத்தனை!

அழகியலும் ஆழ்பொருளும் பின்னி வரும் பற்பல ஓவியங்களை எழுதியுள்ள புகழேந்தி மெய்யாகவே இளைஞர். வந்திருப்பது கையளவே. வரவேண்டியது எவ்வளவோ! எதிர்பார்க்கிறது தமிழ்ச் சமூகம்..