ஓவியர் புகழேந்தியிடம் எனக்குப் பிடித்தவை

பேரா. கல்விமணி (கல்யாணி)


சிறப்புமலர்- 2004


சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சியொன்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டபோது, பேராசிரியர் சரசுவதி மூலம் எனக்கு புகழேந்தி அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்பு அவருடைய ஓவியக் கண்காட்சிகளை பார்க்கும் வாய்ப்புகள் கிட்டின. அண்மையில் மூன்றாண்டுகளாகத்தான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் அடிப்படையில் எனக்குப் பிடித்தவற்றைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கைகளோடு பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு, தீண்டாமைக்கு எதிரான ஆவேசத்தோடு சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை, தமிழீழ விடுதலை, தமிழ் தேசிய விடுதலையோடு உலக அளவில் தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு, இந்துத்துவா எதிர்ப்பு, மனித உரிமை மீறல்களுக்கும் அடக்குமுறைச் சட்டங்களுக்கும்

எதிராக உறுதியான நிலைப்பாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என ஒரு விரிந்த அரசியல் தளத்தில், தனது தூரிகை மூலம் வெளிப்படையாக வெளிப்படுத்தி வருவது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

மேற்குறிப்பிட்ட அரசியலில் இவருக்குள்ள தீவிர ஈடுபாடு காரணமோ... என்னவோ, இவ்வரசியலைத் தனது படைப்புகள் மூலம் வெகுமக்களுக்கு எடுத்துச் செல்வதில் இவருக்குள்ள அக்கறை... எந்தவிதமான வணிக நோக்கமும் இன்றி, தமிழக மக்களிடம் மட்டுமின்றி உலகமெங்கும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருவது... இதற்கு தன்னுடைய அலுவலகத்தில் வருவாயை மட்டுமின்றித் தலைமைக் கணக்கர் அலுவலகத்தில் பணிபுரியும் (ஏ.ஜி.எஸ். அலுவலகம்) தன் துணைவியார் திருமதி சாந்தி அவர்களின் வருவாயினையும் அர்ப்பணித்து வருவது இவை எல்லாமும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் அல்லது இயக்கத்தோடு மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் மேற்குறிப்பிட்ட அரசியலை மக்களிடம் எடுத்துச் செல்லும் அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுடனும், மக்கள் நலத் தொண்டர்களுடனும் நெருக்கமானதொரு நட்பினைப் பேணி வருவது இவருடைய தனிச்சிறப்பு ஆகும். இந்த அடிப்படையில் பேராசிரியர் சரசுவதி, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், பெ.மணியரசன், தோழர் நல்லக்கண்ணு, தோழர் சௌந்திரராஜன், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் ஆசிரியர் கி. வீரமணி, வைகோ, டாக்டர் இராமதாசு, பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்ற வெகுசனத் தலைவர்களுடன் நல்லதோர் உறவைப் பேணி வருகிறார். இவர்கள் மூலம் நிறையப் பணிகள் செய்ய முடியும் என்ற அளப்பரிய நம்பிக்கையோடு தன் ஓவியப்பயணத்தை மேற்கொண்டு வருவது எனக்குப் பிடித்தமான ஒன்றாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இவரிடம் எனக்குப் பிடித்தது. இவருடைய அசாத்தியமான துணிச்சல் ஆகும். அரசுப் பணியாளர் நடத்தை விதியானது. அரசுப் பணியில் இருக்கும் ஒருவர், இந்தியப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் ஒரு சங்கத்தில் உறுப்பினர் ஆகச் சேர்வதற்கோ அல்லது ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்கோ எதிராக இல்லை. இருந்தபோதிலும் பொதுவாக அரசு ஊழியர்கள் (அ) ஆசிரியர்கள் என்றால் தங்களது துறை சார்ந்த சங்கங்கள் மூலம் சில நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அதுவும் அவர்கள் பணிசார்ந்த கோரிக்கைகளை தொடர்பானதாக இருக்கும். சில அரசியல் சார்புள்ள அரசு ஊழியர் சங்கங்கள் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைத்தாலும் அதற்கு உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைப்பதில்லை. ஒருசில அரசு ஊழியர்கள் (அ) ஆசிரியர்கள் சில அரசியல் சார்புள்ள மென்மையான பணிகளைச் செய்தாலும் அதற்கு அவர்கள் பாதுகாப்பிற்காக சில புனைப் பெயர்களை கவசமாக நினைத்து அணிந்து கொள்வார்கள். இதுதான் இன்றைய தமிழக அரசுப் பணியில் உள்ளோரின் நிலையாகும். இந்நிலையில் ஒரு அரசுகவின் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தன்சொந்தப் பெயரிலேயே அனைத்துப் பணிகளையும் முழு ஈடுபட்டுடன் வெளிப்படையாகச் செய்து வருவது என்பது ரொம்பவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் இவருக்கு இணையாக எனக்குத் தெரிந்து இன்னொருவரை குறிப்பிடலாம். அவர்தான் பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் ஒன்பது பேர், பழ.நெடுமாறன், புதுக்கோட்டை பாவாணன், சுபவீ., க. பரந்தாமன், மருத்துவர் தாயப்பன், பதிப்பாளர் சாகுல் அமீது, பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் நக்சலைட் தோழர்கள் பலர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நாம் அறிந்ததே. ஜெயலலிதா அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கை பல்வேறு இயக்க முன்னோடிகளையெல்லாம் அச்சமுறச் செய்தது. தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபட்டால் எங்கே நம்மீது பொடா பாய்ந்துவிடுமோ என்று தயங்கி நின்றவர்கள் பலர் உண்டு. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பொடா சட்டத்திற்கு எதிராக தனது தூரிகையை வலுவாகப் பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல், மக்கள் உரிமைக் கூட்டமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு, பொடா எதிர்ப்பு நிதி வசூலிப்பதிலும், வழக்குகள் நடத்துவதிலும், பொடா எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகப் பெரும்பங்காற்றி வந்தார் என்பது அரசுப் பணியில் உள்ள வேறு எந்தக் கலைஞனுக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். இவருடைய இந்தத் துணிச்சல் என்னை மிகவும் கவர்ந்தது. கலைப்பயணத்தில் இவருக்குள்ள வெகுசன சார்பும் அர்ப்பணிப்பும்தான் இத்துணிச்சலுக்கு அடிப்படையானது எனக் கருதுகிறேன். தமிழகத்தின் சொத்தான இவரைப் போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.