மரபு நிலைகளுடன் மோத வேண்டும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


சிறப்புமலர்- 2004


பாலைவனத்துள் அங்கங்கே தனித்து நிற்கும் பசுஞ் சோலைகளாக அறிஞர் இருக்கலாமா? சமூகத்துள் புகுந்து, சிக்கல்களை எடுத்து நோக்கி, அதற்குரிய தீர்வுகளைத் தன் அறிவுக்கு எட்டியவாறு அச்சமின்றி எடுத்துரைப்பவரே அறிஞர். சமூகத்தில் வாழ்கின்ற அறிஞர் எவரும் சமூகத்தை விட்டுத் தனித்து நிற்கக் கூடாது.

அந்தக் கண்கொண்டுதான் ஓவியர் புகழேந்தியை நாம் பார்க்க வேண்டும். ஓவியர்களைக் கலைஞர்களாக மட்டும் பார்க்கும் நிலை மாறி, அறிஞர்களாகவும் பார்க்கும் உளப்பாங்கு வளரவேண்டும். ஓவியர் புகழேந்தியைச் சிறந்த அறிஞர்களுள் ஒருவராக நான் பார்க்கிறேன். சமூகத்தை விட்டுத் தனித்து நின்று ஆராய்ச்சியில் மூழ்கும் அறிஞராக அன்றி, ஓவியத்தில் புலன்களைத் தோயவிட்டுச் சமூகக் கண்ணோட்டத்தை மறந்த ஓவியராக அன்றி, சமூகத்தின் பிம்பமாகப் பணிபுரிபவராகக் காண்கிறேன்.

"பொது நன்மைக்காக ஒரு கருத்தை, ஒரு தத்துவத்தை, ஒரு பார்வையை, ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும். விளக்க வேண்டும், பிரதிநிதிப்படுத்த வேண்டும். அவரே அறிஞர்.

இவ்வாறு ஈடுபடக் கத்திமுனைக் கூர்மை வேண்டும். பொது இடங்களில் உளைச்சல் தரும் வினாக்களை எழுப்ப வேண்டும். மரபு நிலைகளுடன் மோத வேண்டும். விதித்தனவற்றை வினா எழுப்பி உடைக்க வேண்டும். விதிகளை அமைப்பதில் ஆர்வம் காட்டாதிருக்க வேண்டும்.

அரசுகளோ, அரசுசார் நிறுவனங்களோ அவருக்கு எளிதில் பதவி வழங்கா நிலை வேண்டும். மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட கொள்கைகளுக்ககாரும் மக்களுக்காகவும் போராடுவதையே வாழ்வதற்குரிய காரணமாகக் கொள்ள வேண்டும். அத்தகையோரே கற்றுத் துறைபோகிய அறிஞர்."

இவை எட்வர்டு செயிதர் கூறியவை
(Edward W. Said, Representations of the Intellectuals New York: Vintage books, 1994 p.11) இந்தக் கூற்று அமைய வாழ முயல்பவர் ஓவியர் அறிஞர் புகழேந்தி.

ஓவியனாக வாழ்ந்து புகழ்பெறலாம் என்பதைவிட, ஓவியக் கருத்தாளனாகச் சமூகத்தை வழிநடத்தலாம் என விழைபவர் புகழேந்தி. போராட்டத்தைப் பார்த்து வாழ்வதை விட்டுப் போராடுவதையே வாழ்வாக்க விழைபவர் புகழேந்தி.

அவர் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து சமூகக் கலைஞராய், தூரிகைப் போராளியாய்ப் பயனுறுத்த வாழ்த்துகிறேன்.