கோடுகளின் கோட்பாடுகள்

அ. குமரேசன்


சிறப்புமலர்- 2004


எழுத்துக்கு ஆதாரம் ஓவியம்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. அவ்வகையில் இலக்கியத்துக்கும் ஆதாரம் ஓவியம்தான் என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கு ஓவியங்கள் என்றால் பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளுக்கான தூரிகைத் தீட்டல்கள் மட்டுமே சாமான்ய வாசகர்களுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறில்லாமல், ஒரு ஓவியமே தனியொரு படைப்பாகப் பத்திரிகையில் வெளியாகக் கூடாதா, அதன் படைப்பாளி அதற்குத் தலைப்பு ஏதேனும் கொடுத்தால் தலைப்போடு வரட்டும் இல்லையேல் தலைப்பில்லாமல் வரட்டுமே.. என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஏனோ தெரியவில்லை பத்திரிகைகள், குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகள் அத்தகைய ஓவிய வெளியீட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

அவ்வாறு இதழியலாளர்கள் ஓவியங்களை மற்ற எழுத்துப் படைப்புகளுக்கான பக்கத்துணையாக மட்டுமல்லாமல் தனிப் படைப்பாகத் தொடர்ச்சியாக வெளியிட முன்வருவார்களானால் முதலில் அவர்கள் தேர்வு செய்ய வேண்டியது புகழேந்தியின் ஆக்கங்களைத்தான் என்று தயக்கமின்றிப் பரிந்துரைக்கலாம். காரணம், ஓவியங்கள் பற்றி தெளிவான கண்ணோட்டமும் உறுதியான கொள்கையும் கொண்டவர் புகழ்.

பொதுவாக நான் பார்த்திருக்கிற பல நவீன ஓவியர்களின் படைப்புகளும், சிந்தனை வெளிப்பாடுகளும் புரியாமைப் புதிர்க்காட்டில் சிக்கியவையாக, வெகுமக்கள் தளத்திலிருந்து வெகுதொலைவு விலகிச் சென்றவையாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஓவியங்களின் சமூக அக்கறைகள் பற்றிய கேள்விகளுக்குச் சுற்றி வளைத்து அவர்கள் கூறுகிற விளக்கங்களின் சாராம்சம் அப்படிப்பட்ட அக்கறை எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை என்பதாகத்தான் இருக்கிறது.

குறிப்பான செய்தி எதுவும் இல்லாவிட்டாலும் கூட, கண்ணுக்கு அழகாக இருக்கிறது, மனதின் இறுக்கத்தைத் தளர்த்திட உதவுகிறது. அறையின் சுவரில் இருக்கிற ஒரு நவீன ஓவியம் ஒருவகைத் தேடுதல் ரசனையைத் தருகிறது.. என்று நாமாகக் கூறிடமுடியும். அப்போது கூட அப்படி உணர்வது உங்கள் விருப்பம் என்று பெருந்தன்மையோடு அனுமதிக்கிறவர்களாக இருக்கிறார்களேயன்றி, அப்படியொரு படைப்பு நோக்க அடையாளம் கிடைப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை. அதெல்லாம் தம் புனிதத்தைக் கெடுக்கிறதாகிவிடும் என்று எண்ணுவார்களோ? அவர்களுடைய ஓவியங்களை விட, அவர்கள் கூறுகிற விளக்கங்களும் வார்த்தைகளும் அதிகமாக மருட்டுவதுண்டு.

"தங்கக் கூண்டுக்கள் நவீன ஓவியர்கள்" என்று இத்தகையவர்களைப் பற்றித்தான் முன்பொரு கட்டுரை எழுதினேன். அந்த நிலைமை பெரிதும் மாறிடவில்லை. அதிலிருந்து விடுபட்டவர்களாக, அந்தக் கூண்டுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்களாக ஓவியத்தின் சமூக அடிப்படை, அக்கறை, வெளிப்பாடு, இலக்கு ஆகியவற்றை உணர்வுப் பூர்வமாக உள்வாங்கி இயங்குகிற ஓவியர்கள் சிலர்தான். அவர்களுள் முக்கியமான ஒருவர் புகழ்.

ஒரு ஓவியம் அதற்குரிய கலைத்தகுதிகளுடன் இருந்தால்தான் களத்திற்கே வரப்போகிறது. அந்தத் தகுதியும் நுட்பங்களும் இல்லாதவற்றைப் பற்றிப் பேச்சே கிடையாது. எனவே புகழின் படைப்புகளில் உள்ள கலைத் தன்மைகள் பற்றி நான் விரிவாகப் பேசப்போவதில்லை. நான் அதற்குத் தகுதி வாய்ந்த வல்லுநனும் அல்ல. கோட்டோவியங்கள், ஒற்றை வண்ண ஓவியங்கள், பல வண்ண ஓவியங்கள், யதார்த்த பாணி ஓவியங்கள், யோசிக்க வைத்துப் பின் அரவணைத்துக் கொள்கிற புதிரோவியங்கள், இவை எல்லாவற்றிலும் தனது போட்டியிடும் தகுதியை நிலைநாட்டியவர் இவர்.

அதேசமயத்தில் தனது தூரிகை சில மேல்தட்டு ரசனை பீடங்களாகிய கண்காட்சிக் கூடங்களோடு சிறைப்பட்டுவிடக்கூடாது என்பதில் திட்டவட்டமான முடிவெடுத்துச் செயல்பட்டு வருகிறவர். கலை நேர்த்தியோடு சேர்ந்த கலை நேர்மை இவரது தாகம். கலை மக்களுக்காக என்பதில் குழப்பமே இல்லாதவர். தனது படை மக்களோடு தோழமை கொண்டிருக்க வேண்டும் என்று கருதுபவர். கலையும் இலக்கியமும் சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ வேண்டும் என்றார் மாக்சிம் கார்க்கி. புகழேந்தியின் படைப்புகள் சமூகத்தின் போலித்தனங்களைக் குத்திக் காட்டுகின்றன. அதன் அநீதிகளைத் தட்டிக் கேட்கின்றன; அதன் பாதையைச் சுட்டிக் காட்டுகின்றன; அதன் போராட்டத்தைத் தட்டிக் கொடுக்கின்றன. மனசாட்சியின் வேலை இந்த நான்கும்.

ஆகவேதான் எழில் சேர்க்கும் வண்ணங்களை இவரால் எரியவிட முடிந்தது! நிறங்களை உறங்கவிடாமல் விழித்திருக்கச் செய்ய முடிந்தது.

ஒடுக்கப்படும் மனிதர்களின் குரலாகவும் இவரது ஓவியங்கள் ஒலிக்கின்றன. எடுத்துக்காட்டாக திண்ணியம் கொடுமையை வெளிப்படுத்திய ஓவியங்கள், பண்பாட்டுப் பெருமை மலர்த் தூவல்களுக்கு அடியில் நம் சமுதாயம் சாதிய ஒடுக்குமுறை மல நாற்றத்தில் கிடப்பதைச் சொல்லி பார்வையாளர்களின் மனச்சாட்சியை அதிரவைத்தது. உலகமயமாக்கல் பொருளாதாரம் ஒரு தேவ வரம் போல் சித்தரிக்கப்படும் அயோக்கியத்தனத்துக்கு எதிராக, இங்கே நிலத்தடி நீரும் கூட ஏழைகளுக்கு வறண்டுபோன விதியாக்கப்பட்டு, அமெரிக்க கோக் பெப்சி வல்லூறுகளின் வயிற்றில் நிரம்பியிருப்பதை உணர்த்தின.

குஜராத் மண்ணில் பூகம்பத்தை நிகழ்த்தி உயிரைப் புதைத்த இயற்கையின் கொடுமையை சிதைந்த கூடு எனக் காட்டியது ஒரு நீள் ஓவியம். சில ஆண்டுகள் கழித்து அதே குஜராத்தில் மதவெறியாட்டம் நிகழ்த்தி உயிர்களை எரித்த சூலாயுதவாதிகளின் கொலைகாரத்தனத்தை புகை மூட்டம் எனக்காட்டி கலவரப் புகை மூட்டத்திற்கு அடியில் எரியும் வர்ணாசிரம நெருப்பை அடையாளம் காட்டின சில ஓவியங்கள்.

இதெல்லாம் வெறும் பிரச்சார போஸ்டர்கள் என்று விமர்சன வாள் வீசுபவர்களுக்கு இவர் தருகிற புதிலடிதான் திசைமுகம். "பிரச்சாரமேதான்.. மாற்றத்திற்கான பிரச்சாரமேதான்.. இப்ப என்னடா சொல்றீங்க, வெங்காயம்" என்று கலகக்காரர் பெரியாரே வந்து கேட்க வைத்த படைப்புகள் அல்லவா அவை! இன்னும் பெண்ணுரிமைக்காக, காதலுக்காக, நட்புக்காக, சுதந்திரத்துக்காக ஏங்குகிற உள்ளங்களின் குமுறல்களை அதிரும் கோடுகளாக்கினார். இப்படி வரைவது வெறும் உருவச் சித்திரம்தான். அதிலே கலை என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காகவே முகவரிகளைத் தொகுத்து தனது முகவரியைத் தெளிவுபடுத்தினார். அதனை, இந்த நாட்டு மக்களின் உய்வுக்காக உழைத்தவர்களுக்குக் காணிக்கையாக்கினார்.

புகழேந்தியின் சில தனித்துவ இன அடையாளக் கோட்பாடுகளில் 'நம் பண்பாடு' என்ற சிந்தனைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு. அவரிடமே இதுபற்றி விவாதித்திருக்கிறேன். அந்த மாறுபாடுகளைத் தாண்டி எங்களது தோழமை ஒரு இனிய அனுபவப் பரிமாணமாய் வளர்ந்திருக்கிறது. என் எழுத்துப் பணியில் எனக்குக் கிடைத்த ஒரு முக்கியப் பரிசு இந்த நட்பு.

இன்னொரு பக்கத்தில், கோடுகள் இல்லாத உலகம் பற்றிய கனவு எனக்கு உண்டு. கோடுகள் என்பவை தூரிகைகளுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற பேராசைக் கனவு அது. ஆனால் இன்றைய யதார்த்தத்தில் நாடுகளாக, தேசங்களாக, இனங்களாக, மதங்களாக, சாதிகளாக, மொழிகளாக... இன்னும் பலவகையாகக் கோடுகள் போடப்பட்டுக் கூறுபடுத்தப்பட்டிருக்கிறது. இதில், சுரண்டல் வர்க்கங்களும் ஆதிக்க வர்ணங்களும் கிழிந்திருக்கிற ஏற்றத்தாழ்வுக் கோடுகளை அழிப்பதற்கான போராட்டம் நசுக்கப்பட்டுள்ளன. சமூகங்களின் அடையாளக் குரல்களை எதிரொலிப்பதில்  தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆம். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தனி அடையாளக் கோடுகள் இறுதியில் மனிதர்களை இணைப்பதற்கான கோடுகளின் புள்ளிகளேயாகும். புகழேந்தியின் தூரிகை அந்தக் கடமையைத்தான் நிறைவேற்றுகிறது.
.