காலத்தை வென்று நிற்கின்றன

சி. மகேந்திரன், ஆசிரியர், தாமரை


தாமரை - 2004


ஓவியம் மற்றக் கலைகளிலிருந்து வேறுபட்டது. கோடுகளின மூலம் தனது உலகத்தை அமைத்துக் கொண்ட ஓவியம், அகத்தில் பதிவு செய்த காட்சிகளை மீட்டெடுத்து மீண்டும் படைப்பாகப் புறவுலகப் பார்வையாளருக்கே வழங்குகிறது. ஒருவன் எந்தச் சூழலில் வாழுகின்றானோ அதுதான் மனப்பதிவாகி படைப்பாக்கமாக வெளிப்பட முடியும். மேட்டுக்குடிச் சூழல் அவனது ஓவியத்தையும் வாழ்க்கையற்ற வெற்றுவெளிக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. அடித்தள வாழ்க்கையைப் போல அடித்தள மக்களைப் பற்றிய ஓவியங்களும் உண்மை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது. அடித்தள எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் காலத்தை வென்று நிற்கின்றன.

ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் அடித்தள மக்களைப் பற்றியவை. கோடுகள் வண்ணங்கள் ஆகிய அனைத்தும் உழைக்கும் மக்களைப் போலவே அமைந்தவை. இதுவே புகழேந்தி ஓவியங்களின் தனித் தன்மையாகும். தனது ஓவியங்களை வெகுமக்களுடன் பகிர்ந்து கொள்ள கண்காட்சி முக்கிய கருவியாக உள்ளது எனப் புகழேந்தி கருதுகிறார். இதுவரை ஐந்து தலைப்புகளில் ஓவியக் கண்காட்சிகளை உருவாக்கிய புகழேந்தி நூற்றுக்கும் அதிகமான கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். இதில் அயல் நாடுகளில் நிகழ்த்தப்பட்டவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.

'எரியும் வண்ணங்கள்' தான் இவரது முதல் கண்காட்சி. இதிலுள்ள படைப்புகளில் பல ஈழத் தமிழர்களின் துயரம் பற்றியவை. 1984 1994 ஆண்டு இடைவெளியில் பிறந்த படைப்புகள் இவை. இரண்டாவது கண்காட்சியின் பெயர் 'உறங்கா நிறங்கள்'. இந்தக் கண்காட்சி இருபதாவது நூற்றாண்டின் முக்கியமான நிகழ்வுகளை விவரித்துச் செல்கிறது. இந்தக் கண்காட்சி 2000இல் உருவக்கப்பட்டது. அண்மைக் காலங்களில் நம்மை வெகுவாகப் பாதித்த நிகழ்வு குஜராத் பூகம்பம்தான். அது 'சிதைந்த கூடு' என்னும் பெயரில் 2002இல் அமைந்தது. அடக்குமுறை எதிர்ப்பை தெரிவிக்க எழுந்த ஓவியக் கூட்டங்களின் பெயர் 'புகைமூட்டம்' ஆண்டு. 2004.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பாதியப்பர் கோயில் அருகில் உள்ள தும்பத்திக்கோட்டை என்னும் அழகிய கிராமியச் சூழலில் பிறந்தவர் புகழேந்தி. குழந்தைப் பருவத்திலேயே கோடுகளின் மீது கவர்ச்சி பெற்றதைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார். ஆரம்பப் பள்ளிகளில் வரலாற்று நாயகர்களின் மீதுதான் ஈர்ப்புக் குவிந்துள்ளது. ஆங்கிலப் பிரபுக்களின் வித்தியாசமான ஆடைகள், மாமன்னர்களின் உருவத் தோற்றங்கள் ஆகியவற்றை பிஞ்சுவிரல்கள் வரைந்து பார்த்ததை குதூகலத்துடன் இப்பொழுது விவரிக்கிறார். பள்ளிப் பருவத்தில் தொடங்கிய இந்த உணர்வு குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான உந்துதலை வழங்கியுள்ளது.

பொருளாதார இழப்புகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படும் இவருடைய ஓவியங்கள் உழைக்கும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.