புரட்சியின் கருவி புகழேந்தியின் தூரிகை!

வைகோ


பொதுச் செயலாளர், ம.தி.மு.க.


சிறப்பு மலர் - 2004


விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு, காட்டில் உண்டு, உறங்கிய மனிதன். கூட்டம் கூட்டமாக வாழத் தலைப்பட்ட வேளையில் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் தகவல் செய்தித் தொடர்புக்குப் பயன்பட்ட ஓவியங்கள் தாம் மனிதனின் முதல் கலை இலக்கிய வடிவங்களாகும்.

இன்றைக்கும், பண்டைய நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில்; அவை சிந்து சமவெளியில் அரப்பா, மொகஞ்சதாராவானாலும் சரி அல்லது அரிக்கமேடு, ஆதிச்சநல்லூராக இருந்தாலும் சரி, ஓவியங்களே நாகரிகங்களின் எச்சங்களாக, மிச்சம் மீதியாகத் திகழ்ந்து வழிகாட்டி ஒளி சேர்க்கின்றன.

சிந்து சமவெளி தொடங்கி, அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் வழி நாம் அறியும் நாகரிக மேன்மைச் சாட்சியங்கள் ஓவியங்களே.

அதனால்தான் மும்பையைச் சேர்ந்த செல்வர் ஒருவர், தம் நாற்பதாவது வயதில் ஓவியங்கள் வரையத் தொடங்கி தொண்ணூறைத் தொட்டுள்ள எம்.எஃப் ஹுசைனிடம் 20ஆம் நூற்றாண்டை 100 ஓவியங்களில் வெளிப்படுத்த நூறு கோடி ரூபாயைத் தர முன்வந்து, 20 ஆம் நூற்றாண்டு மனித நாகரிக வளர்ச்சியின் பெரும் பாய்ச்சலாக அமைந்ததைப் பதிவு செய்து, வரும் நூற்றாண்டுக்கு வழங்க முன் வந்துள்ளார்.

ஆனால் எம் தமிழ்க் குலத்தின் இளைஞர் புகழேந்தி தம் 37 வயதில், 37 ஓவியங்கள் மூலம் 20 ஆம் நூற்றாண்டின் நுழைவாயிலில் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சி தொடங்கி, 21 ஆம் நூற்றாண்டின் தலைவாயிலில் உலகின் மனச்சாட்சியை உலுக்கி வரும் ஈழத்தின் விடுதலை எழுச்சிவரை, அனைத்தையும் 'உறங்கா நிறங்களில்', 'எரியும் வண்ணங்களில்' எழிலுற ஏற்றமுற உள்ளத்தில் கிளர்ச்சியையும் சீற்றத்தையும் ஊட்டிய வண்ணம் தீட்டிக் காட்டிப் புகழ்க்கொடி நாட்டிவிட்டார். இதை அந்த மும்பைச் செல்வர் ஏற்கெனவே அறியவில்லை போலும்!

பொன்னை பொருளை புகழை விரும்பியல்ல. ஒடுங்கிக் கிடக்கின்ற உறங்கிக் கிடக்கின்ற முடங்கிக் கிடக்கின்ற மனிதத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எழுச்சியூட்டி புரட்சியை விடுதலையை மனிதநேயத்தை விதைத்திடத் தூரிகையைத் தூக்கிப் பிடித்துள்ளார் நம் புகழேந்தி!

அதனால்தான், நூற்றாண்டுகளின் எல்லைகளைத் தகர்த்த வண்ணம் வரலாற்றுப் பதிவுகளை வளரும் தலைமுறைக்கு வண்ணத்தில் தந்துள்ளார். அழகை எழிலை ஆராதிக்கும் ஓவியங்களல்ல அவை!

வறுமையை அவலங்களை ஒடுக்குமுறைகளை மனிதநேயத்தின் மகத்துவ ஒளியை அவர் வண்ணங்களில் குழைத்துத் தந்திருப்பதைப் பார்க்கும் மனிதர்களின் நெஞ்சில், விடுதலை வேட்கையை புரட்சியின் தழலை விதைத்திருக்கின்றனர் பலர்.

உலகெங்கும் மைக்கேல் ஆஞ்சலோக்கள், உடற்கூற்றை ஓவியப்படுத்தி வெற்றி கண்டனர் என்றால், இதோ  எம் குலக்கொழுந்து புகழேந்தி உருவங்களின் உள்ளங்களை அவற்றின் வேதனைகளை தவிப்புகளை வேட்கைகளை பசியை கோபத்தை குமுறலை வண்ணங்களாக்கி அவை 'உறங்கா
நிறங்கள்', 'எரியும் வண்ணங்கள்' எனக் கெக்கெலி கொட்டுகின்றார்.

வாளை விட வலிமையான புரட்சியின் கருவி பேனா என நிலைநாட்டினார் வால்டேர், ரூசோ என்பது அன்றைய பழைய நிலை! இதோ துப்பாக்கி வெடிகுண்டு இவற்றைவிட வலிமைமிக்க என் தூரிகை புரட்சியின் கருவி என நிலைநாட்டியிருக்கிறார் புகழேந்தி என்பதே இன்றைய புதுமை நிலை! இன முழக்கமாம் தமிழ் முழக்கம் வெளியிட்டுள்ள உறங்கா நிறங்கள் உண்மையில் புதுமையின் புரட்சியின் நிறங்களே!

தம் தூரிகையின் வலிமையால் புகழேந்தி வருங்காலத்தை உருவாக்குகின்றார். காலத்தை வெல்லும் கவித்துவம்மிக்க அவர், ஓவியத் துறையில் தமிழுக்குப் புத்துலகை பொன்னுலகைப் படைத்துத் தருவார் என்பதில் ஐயமில்லை!

வளர்க மலர்க வெல்க புகழேந்தி!