புகழேந்தி எனும் ஓவிய இயக்கம்

கவிஞர் பா. ரவிக்குமார்


சிறப்புமலர்- 2004


மேலை ஓவிய மரபில், ஒரு மைக்கலேஞ்சலோவை, ஒரு லியனார்டோ டாவின்சியை, ஒரு பிக்காசோவைச் சுட்டிக் காட்டுவது போல் தமிழில் சுட்டிக்காட்டி விடமுடிவடிவதில்லை. தமிழில் சிற்பிகளுக்கும், ஓவியர்களுக்குமா பஞ்சம்? கவிதைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தமிழ் மரபு, ஓவியங்களுக்கும், சிற்பங்களுக்கும் கொடுக்கவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. வேறுவகையாகவும் இதனைக் குறிப்பிடலாம். ஓவியங்களை ரசிப்பதில் தமிழ்நாட்டுப் பார்வையாளர்களின் பங்கு குறைவு. 'நவீன ஓவியங்கள் புரிவதில்லை' என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுபவர்கள் நம் பார்வையாளர்கள். திரைப்பட மோகமும் நம் பார்வையாளர்களை எந்த அளவு ஆக்கிரமித்து உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்த நெருக்கடியான சூழலில்தான் ஓர் ஓவிய இயக்கமாகவே செயல்பட்டார் புகழேந்தி. நிலவோ, பூக்களோ, ஆரஞ்சுப் பழமோ, ஆழ்கடலோ, பெரும் மலைப்பிரதேசங்களோ அவர் ஓவியத்தின் வரைபொருள் இல்லை. சோமாலியாவின் பசிக்கொடுமை, ஈழத்தில் சிந்தப்பட்ட ரத்தம், பெண்களின் சிந்தப்படாத கண்ணீர், ஜாலியன்வாலா பாக்கின் மரண ஓலம், உலகப்போரில் சாய்ந்த மனித உடல்கள்... என்று வரலாறு நெடுகிலும் வழிந்த ரத்தத்தையும் கண்ணீரையும் தான் புகழேந்தியின் தூரிகை தொட்டது.

கலைஞனுக்கே உரிய சமூகப் புரிதலுடன் புகழேந்தி செயல்பட்டுள்ளார் என்பதை இன்று வரலாறு நிரூபித்துள்ளது. லெனின், சேகுவார, பிடல் காஸ்ட்ரோ, பிரபாகரன் முதலியவர்களெல்லாம் இவர் மனங்கவர்ந்த அரசியல் தலைவர்கள். பெரியாரின் பன்முகத் தன்மையை இதற்கு மேல் யாரும் தீட்டி விடமுடியாது. யாரிடம் போராட்டக் குணமிருக்கிறதோ, அவர்களை அங்கீகரிக்கத் தவறுவதில்லை புகழேந்தியின் தூரிகை. தஸ்லீமா நஸரீனை வரைந்ததற்குக் காரணமும் இதுதான்.

சினிமா நடிகர்களின் பிம்பங்களே ஆழ்மனத்தில் பதிந்துவிட்ட தமிழ்ச் சமூகத்தில் புகழேந்தியின் ஓவியச் செயல்பாடு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வரலாறு நிரூபிக்கும். தோண்டப்பட்ட குட்டிமணியின் கண்களிலிருந்த சொட்டும் ரத்தத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதனைப் பார்க்கும் நம் கண்களில் குட்டி மணியின் கண்கள் ஒட்டிக் கொள்கின்றன.

சொட்டுப் பாலும் இல்லாமல் தவிக்கும் குழந்தைக்காகவா? வறண்டு கிடக்கும் தாயின் முலைக்காகவா? யாருக்குத் தேம்புவதென்று தெரியாமல் திடுக்கிடுகிறோம். இப்படி, ஓவியக் கலையில் சாதாரணத் தமிழ்ப் பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்ததுதான் புகழேந்தியின் குறிப்பிடத்தக்க சாதனை என்று சொல்வேன்.

எனினும், இந்தப் புகழாரங்களெல்லாம் புகழேந்தியை முடக்கிவிடக்கூடாது. ஓரே பாணியிலான ஓவியங்கள் புகழேந்தியின் கலை ஆளுமையை எதிர்காலத்தில் சிதைத்துவிடுமோ என்ற அச்சமும் எனக்குள்ளது. போர்க்குணமிக்க கவிதைகளைப் படைத்த பாப்லோ நெரூடாவிடமிருந்துதான் மென்மையான காதல் கவிதைகளும் படைக்கப்பட்டன. மேடைதோறும் தமிழனுக்காகப் போர்முழக்கம் பாடும் இன்குலாப், அறிவுமதி ஆகியோரிடமிருந்துதான் அழகான காதல் கவிதைகளும் வழிந்தன.

புகழேந்தியின் ஓவிய சாதனைகளை முற்போக்காளர்கள் விதவிமாகப் பாராட்டிவிட்டார்கள். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

உண்மையான கலைஞன் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவன். வாழ்க்கையிடமிருந்து எவ்வளவு பெறுகிறானோ அத்தனையையும் வாழ்க்கைக்குத் தருபவன். காக்கைச் சிறகின் அழகில், பெண்ணின் முத்தத்தில், குழந்தையின் மழலையில் தன்னை இழந்த பாரதியும் புகழேந்திக்கு முன்னோடி.

புதிய புதிய அனுபவங்களை, புதிய புதிய பாணியில், புகழேந்தி இன்னும் இன்னும் தரவேண்டும். உலக ஓவிய வரலாற்றில் புகழேந்தி நிலைபெற்றால் அது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.
புகழேந்தியின் தூரிகை தொடவேண்டுமென்று மேலும் பல உணர்வுகள் காத்திருக்கின்றதென்று சத்தியமாக நம்புகிறேன்.