வண்ணப் புரட்சியாளரை வாழ்த்துகிறேன்!

டாக்டர் ச. இராமதாசு


நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி


சிறப்பு மலர் - 2004


உயிர்களைப் படைத்தவன் பிரம்மா என்கிறார்கள். நான் பார்த்ததில்லை. ஆனால் காகிதத்தில் பதியவைக்கும் வண்ணங்கள் மூலம் உயர் எண்ணங்களைப் படைக்க முடியும் என்பதையும், உயிர்களையும் உருவாக்க முடியும் என்பதையும் ஓவியர் திலகம் புகழேந்தியின் ஓவியங்களில் பார்க்கிறேன். உயிரைப் படைக்கும் ஆற்றல் ஓவியரின் விரல்களுக்கு எப்படி வந்தது? என்று வியந்து போகிறேன்.

காதலர்கள் படங்களைக் கவர்ச்சியாகப் படைத்து காசு பார்ப்போர் மத்தியில், சமூகத்தில் படிந்த தூசுகளைத் தட்டித் தூய்மைப்படுத்தும் ஓவியங்களைப் படைக்கும் ஓவியருக்கு 'படைப்பாளி' என்ற சொல் நூற்றுக்கு நூறு பொருந்தும். சாயம் வெளுத்துப்போன சமுதாயத்திற்கு புதிய சிந்தனைச் சாயம் பூசும் ஓவியரை 'ஓவியர் திலகம்' என்று சொல்வதிலே கூட நான் நிறைவு கொள்ளவில்லை. சமூக நீதிக்காகப் போராடி வரும் போராளியான என் பார்வைக்கு இந்த ஓவியங்கள் எல்லாம் போராளிகளாகவே தெரிகின்றன. எனவே புகழேந்தியை 'ஓவியப் போராளி' என்று கூறுவதே எனக்கு மகிழ்ச்சி.

ஏழ்மை, வறுமை, வன்முறை, கொடுமை, கொடூரம், அவலம், அநீதி என்ற சொற்களுக்குரிய விளக்கங்களே ஓவியரின் ஓவியங்களாக மிளிர்கின்றன. இவரின் ஓவியங்களை கண்ணில்லாதவர்களால்தான் பாராட்டாமல் இருக்க முடியும்.

தூரிகைச் சிறகுகள் என்ற நூலில் முதலில் உள்ள ஓவியம், பார்த்ததும் வரைந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. இது இவரின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பொங்கல் நாளன்றும் பயிற்சிப் பட்டறையில் பிள்ளைகளுடன் இவர் ஓவியம் வரைவது இவருக்கு ஓவியத்தின் மேல் உள்ள ஈடுபாட்டின் எல்லையை உணர்த்துகிறது.

சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பாரீஸ், இலண்டன், டென்மார்க் எனப் பல்வேறு நாடுகளுக்கு இவர் மட்டுமல்ல, இவரின் ஓவியங்களும் உலா சென்று வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமைத் தர கூடிய ஒன்றாகும்.
பயணத்தின் செய்திகளை விளக்கும் நூலில்,

வேன் = மூடுந்து
அகதி = ஏதிலி
லிப்ட் = மின்தூக்கி
பெட்ரோல் பங்க் = எரிபொருள் நிரப்பும் இடம்
என்பன போன்ற தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருப்பது தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் இயங்கும் என்னை நெகிழ வைத்தது மகிழ வைத்தது.

ஓவிய வாழ்க்கை இலாபமாக இருக்கிறதா? என்று கவிஞர் இக்பால் என்பவரின் வினாவிற்கு நமது ஓவியர் அவர்கள்,

"பொருளாதார இலாபங்களை நான் பொருட்படுத்துவதில்லை. என்னுடைய ஓவியங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் லாபம். இன்று உலகம் முழுவதும் இந்த ஓவியங்கள் பார்க்கப்படுகின்றன. இது இலாபம்" என்பன போன்ற ஓவியரின் பதில்கள், இவர் கொள்கையின் சிகரம் என்பதைக் காட்டுகிறது.

"
ஓவியம் என்பது பேசாத கவிதை
கவிதை என்பது பேசும் ஓவியம்"
என்ற விளக்கமும் அருமை.

இருள் சூழ்ந்த செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தச் சமூகத்தில் அழகியலைவிட அவலங்களே மேலோங்கியிருக்கின்றன என்பதை கவிஞர், ஓவியங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

உறங்கா நிறங்கள் என்ற நூல் உண்மையில் உறங்கா நிறங்கள்தான். அட்டைப்பட ஓவியத்தைப் பார்த்தவர்கள் எவரும் அகக்கண்ணால் அழாமல் இருக்க முடியாது.

ஒரு துளி பாலுமின்றி ஒட்டி மார்பு.
மழலையின் பசிதீர்க்க முடியாத அன்னையின் துடிப்பு.

பசிக்கு ஒரு துளி பாலாவது சுரக்காதா? என்ற அந்தப் பிஞ்சின் சோர்வு. இவற்றை விளக்கும் ஓவியம் கல்நெஞ்சக்காரர்களையும் கலங்க வைத்துவிடும்.

மே நாள் போராளிகளுக்கான நினைவுச் சின்னத்தின் கீழே,

"இன்று நீங்கள் நெரித்து அழிக்கும் எங்கள் குரலைக்காட்டிலும் எங்கள் மௌனம் அதிக வலிமை பெறும் காலம் வந்தே தீரும்" என்ற தொடர் என்னை எத்தனையோ வகைகளில் சிந்திக்க வைக்கிறது.

இந்நூலில் உள்ள உலகத்தலைவர்கள், கவிஞர்கள், ஓவியங்கள் நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. அந்த ஓவியங்களுடன் பேசவேண்டும் என்ற உணர்வையும் அளிக்கிறது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை, வெண்மணிச் சம்பவம், பகத்சிங் தூக்கிலிடல் போன்ற ஓவியங்கள் நம்மை இரக்கத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கின்றன.

உயிரோடு தீயில் முழுமையாக எரியும்போது, அழுகின்ற கண்ணீரால் அணைக்க முடியுமா? என்ற தொடர் கண்களைக் குளமாக்குகிறது.

குட்டிமணியின் கண்கள் பெயர்த்தெடுக்கப்படும் காட்சியைப் பார்க்கும்போது கோழையும் வீரனாவான். சிங்கள வெறியனைச் சின்னாபின்னமாக்கத் துடிப்பான் என்பதே உண்மை நிலை.

அஜந்தா, எல்லோராக் குகை ஓவியங்களைத் தான் அழியாத ஓவியங்கள் என்பார்கள் 'உறங்கா நிறங்கள்' என்ற கவிஞரின் ஓவியங்கள்தான், நாட்டில் மண்டிக்கிடக்கும் தீமைகளை அழிக்க முயலும் அழியாத ஓவியங்களாகும்.

வரைந்த கையாளவு; வரையவேண்டியது உலகளவு என்ற நிலையில் உங்கள் ஓவியத்தொண்டு; வண்ணப்புரட்சி; வையகம் முழுவதும் பரவ, ஒளிர வாழ்த்துகிறேன்.

ஓவியப் புரட்சியாளர்களை உருவாக்குவதும் உங்கள் பணியில் ஓர் அங்கம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்.

உங்கள் ஓவியங்களின் ஒளியால்
உலகின் இருள் அகலட்டும்!
உங்கள் நிலை பரவட்டும்! என்ற
மனமாரப் பாராட்டி நெஞ்சார வாழ்த்துகிறேன்.