கலையென்னும் ஆயுதம் ஏந்தி

தொல். திருமாவளவன்


பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்


தாய்மண் – பிப்ரவரி - 2004


மரியாதைக்குரிய ஓவியர் புகழேந்தி அவர்களைக் கடந்த சில ஆண்டுகளாக நான் அறிந்திருக்கிறேன். நெருக்கமாக அவரோடு உறவாடுகின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். செய்தி ஏடுகளில் அவர்களைப் பற்றி நான் படித்ததுண்டு.

ஆனால், தந்தை பெரியார் அவர்களைப் பற்றி 'திசைமுகம்' என்கிற ஓவிய கண்காட்சியை அவர் நடத்திய காலத்தில்தான். அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு, அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்கின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதன்பின்னர் அவருடைய உள்ளக் கிடக்குகளை, அவருடைய தமிழ்த் தேசிய உணர்வுகளை, அவரிடத்திலே எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தாகத்தை என்னால் ஊண்றிக் கவனிக்க முடிந்தது. அந்த அடிப்படையில் தான் என்மீதும் அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன். என்னை அவரே தேடி வந்து பார்த்திருக்கிறார். பல நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்தியிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடுகள் இன்னும் விரிவடைய வேண்டும் என்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட உணர்வுள்ள ஓவியப் போராளி அன்புச் சகோதரர் புகழேந்தி அவர்களின் 'புகைமூட்டம்' என்கின்ற ஓவிய கண்காட்சியின் நிறைவரங்கத்தில் பங்கேற்று அவரை வாழ்த்துகின்ற ஒரு வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.

ஏற்கெனவே அவர் வெளியிட்டிருக்கின்ற பல்வேறு வெளியீடுகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கின்றன. அவர் நடத்துகின்ற கண்காட்சிகள் அவரை மக்களிடத்தில் எடுத்துச் சென்றிருக்கின்றன. 'எரியும் வண்ணங்கள்', ' உறங்கா நிறங்கள்' என்கின்ற இரண்டு வெளியீடுகளைப் பார்க்கின்ற வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவ்வெளியீடுகளில் உணர்ச்சிப் பாவலர் அய்யா காசி ஆனந்தன் அவர்கள் அணிந்துரை எழுதியிருக்கிறார்கள். "ஒரு கலைஞன் ஒரு சிற்பி, ஒரு ஓவியன் வழியில் நடந்து செல்கின்றபோது ஒரு இளைஞன் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அவன் குருதியிலே கிடந்து துடிக்கின்றபோது அதை பார்த்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்ற நிலவைப் பார்த்து, அது கொடுக்கின்ற வெளிச்சத்தைப் பார்த்து, அது தருகின்ற சுகத்தைப் பார்த்து அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொள்வானா? ஒருபோதும் மாட்டான். அவன் உண்மையான கலைஞனாக இருக்க முடியாது. உண்மையான கலைஞனாக இருக்க முடியாது. உண்மையான சிற்பியாக இருக்க முடியாது. உண்மையான ஓவியனாக இருக்க முடியாது. அவனை பாதிப்படையச் செய்வது நிலவின் வெளிச்சத்தைவிட தெருமுனையிலே விழுந்து குருதியிலே துடிக்கின்ற அந்த இளைஞனின் வேதனைகள் தான் அந்த கலைஞனைப் பாதிக்கும். ஓவியனைப் பாதிக்கும். அத்தகைய கலைஞனாக, ஓவியனாக, போராளியாக, ஓவியர் புகழேந்தி விளங்குகிறார்" என்று அந்த அணிந்துரையிலே காட்டியிருக்கிறார். அரர் ஒரு புரட்சியாளர் என்றே அணிந்துரையில் பதிவு செய்திருக்கிறார். உணர்ச்சிப் பாவலர் அய்யா காசி ஆனந்தன் அவர்களே சான்று வழங்கிய பிறகு, நான் எதைச் சொல்லப்போகிறேன்.

மதவெறி, சாதி வெறி, வல்லரசு ஆதிக்கம் என்று வரிசைப்படுத்தி அந்த ஓவியங்களை வடித்து வைத்திருக்கிறார். நிறைவாக ஒரு உடைந்த ஓட்டிலிருந்து குஞ்சு வெளியே வருவதைப்போல ஒரு ஓவியத்தை வரைந்து வைத்திருக்கிறார். வன்கொடுமையில் தொடங்கி ஒரு விடிவை நோக்கி பயணப்படுகிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உடைந்த முட்டையிலிருந்த ஒரு குஞ்சு வெளியே வருகிறது. இந்த இரவுக்கு விடியல் உண்டு என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். எந்த இரவுக்கும் ஒரு விடியல் உண்டு. இரவு இரவாகவே இருந்து விடுவதில்லை. வன்கொடுமை வன்கொடுமையாகவே இருந்துவிடுவதில்லை. ஆதிக்கம் ஆதிக்கமாகவே நீண்டுவிடுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு மாற்றம் உண்டு என்பதை வெளிப்படுத்தக் கூடிய வகையிலே அந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன. மதவெறியாட்டத்தை அவர் வெறிப்படுத்துகின்ற அந்த அழகு அவருடைய உள்ளம் எந்த அளவிற்கு புகைமூட்டமாக இருக்கிறது என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆகவே, அந்த மதவெறியாட்டத்தில் எத்தகைய வன்கொடுமைகள் எல்லாம் தரைவிரித்தாடின என்பதை படம்பிடித்து காட்டினார். அடுத்து சாதிவெறி பற்றி ஓவியங்களை வடிவத்து வைத்திருந்தார். அந்த ஓவியங்களில் திண்ணியமும் ஒன்று.

அப்படி தொடர்ச்சியாக பொடா சட்டம், தடா சட்டம் என்றெல்லாம் அடக்குமுறைகளை காட்டிக் கொண்டு வருகின்ற வகையில், ஈராக் போரிலே பாதிக்கப்படுகின்ற மக்களின் வாழ்நிலையையும் அதிலே படம் பிடித்து காட்டியிருக்கின்றார். இந்திய மண்ணிலே வல்லரசுவாதிகள் எதையெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை வெறும் நீரை மட்டும் சுரண்டவில்லை. எமது இரத்தத்தையும் சுரண்டுகிறார்கள். உறிஞ்சி குடிக்கிறார்கள். எமது அனைத்து வளங்களையும் அவர்கள் உறிஞ்சி குடிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பெப்சி, கோக்கோ கோலா சுரண்டலையும் அதிலே வெளிப்படுத்தியிருக்கிறார். வறண்ட தஞ்சை மண்ணையும், அவருடைய சொந்த மண்ணையும், அவருடைய தாய் மண்ணையும் அதிலே பதிவு செய்திருக்கிறார்.

அப்படி வறண்டு கிடந்தாலும் அந்த வறண்ட பூமியிலிருந்து எமது நம்பிக்கை துளிக்கிறது. தழைக்கிறது என்கிற வகையில் வறண்ட பூமியில் இருந்து வறண்ட மண்ணிலிருந்து ஒரு செடி குருத்தையும் வரைந்திருக்கிறார். இவ்வளவு வன்கொடுமை நடந்தாலும் அமைதி ஒரு நாள் துப்பாக்கியை சுடும் என்ற வரிகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆக, அவருடைய ஏக்கமும் என்னவென்று தெரிகிறது. இந்த துப்பாக்கிச் சத்தங்கள்
ஓயாதா? ஆதிக்கம் வேரறுக்கப்படாதா? ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒரு முடிவுக்கு வராதா? என்கின்ற அந்த கேள்விகளையும் அவர் எழுப்பியிருக்கிறார். அதனுடைய விடையாகத்தான் உடைந்த முட்டை ஓட்டுக்குள்ளிலிருந்து குஞ்சு பொறிப்பதைப்போல ஒரு விடியல் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறார். இந்த ஓவியங்கள் அனைத்தும் நமது நெஞ்சிலே ஆழமாகப் பதியும் வகையில் வரையப்பட்டிருக்கின்றன. ஓவிய கலைப் பற்றி இலக்கியத்தைப் பற்றி கலை பண்பாடு பற்றி ஆழமான ஈடுபாடு கொண்டவன் அல்ல நான் என்றாலும், அந்த உணர்வுகளை மதிக்கக்கூடியவன். அந்த உணர்வுகளுக்குள் ஊடுருவி பயணம் செய்ய வேண்டும் என்று துடிக்கிறவன். அத்தகைய உணர்வுகளை பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான் ஓவியர் புகழேந்தி போன்றவர்களை நம்முடைய தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு ஆயுதமாக, ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் நான் எழுதும்போதுகூட "ஓவியர் புகழேந்தி புகழை மட்டும் ஏந்தி நிற்கவில்லை. கலை என்னும் ஆயுதத்தையும் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்" என்று பதிவு செய்திருக்கிறேன்.

ஆக, அப்படிப்பட்ட ஒரு கலை உணர்வோடு போர்க்குணமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. அந்தப் போர்க்குணம்தான் இந்த மக்களை உசுப்பும், இந்த மக்களை விடுவிக்கும். அந்த உணர்வு மழுங்கிப்போகாமல், மங்கிப் போகாமல், அந்தப் போர்க்குணத்தின் முனை சிதைந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய, அடைகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இலக்கிய வாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் இருக்கிறது. களத்திலே இறங்கிப் போராட வேண்டும் என்பது அல்ல. ஆயுதம் ஏந்தி உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்பது அல்ல. அந்தந்தக் கால இடைவெளிகளில் எது உருவாக்கப்பட வேண்டுமோ அதை உருவாக்குவதும் அதை அடைகாப்பதும் பாமர மக்களுடைய கடமையல்ல. உழைக்கின்ற பாட்டாளி மக்களின் கடமை அல்ல. அதை வடிவமைப்பதும், அதைப் பாதுகாப்பதும், அடைகாப்பதும் சிந்தனையாளர்களின் பொறுப்பும், கடமையும், கவிஞர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். அதுதான் தமிழகத்தில் இன்றைக்கு மிகப் பெரிய வறட்சியாக இருக்கிறது. அத்தகைய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பிழைப்பை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு யார் யாருக்கோ பிள்ளைத் தமிழ் பாடுவது அல்லது தம்முடைய அறிவையும், ஆற்றலையும் அடமானம் வைப்பது என்கிற அளவிலே தமிழகத்தில் சிந்தனையாளர்கள் மாறிக்கொண்டு வந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்திலே, இவ்வளவு கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றபோது 1983லிருந்து 2003 வரையில் அங்கே நடந்து கொண்டிருக்கின்ற கொடுமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் திரைப்படக் கொட்டகைக்குள்ளே அடுத்த முதல்வரை தேடிக்கொண்டிருக்கின்ற அவல நிலைமையில் தமிழ் இளைஞர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய கதாநாயகனின் திரைப்படம் தீபாவளிக்கு வரவில்லை என்பதற்காகத் தன் உடலில் சிவகாசிப் பட்டாசை கொளுத்திக்கொண்டு தியாகம் செய்வதற்கு தயாராகக்கூடிய அளவிற்கு தமிழர்களின் உணர்வுகள் காயடிக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் இன்றைக்கு தமிழகத்தின் நிலை.

இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தேசிய உணர்வுகளை, விடுதலைத் தாகத்தை,
ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்குணத்தைப் பாதுகாப்பதும், அடைகாப்பதும் யாருடைய கடமை? கலைஞர்களுடைய கடமை. கவிஞர்களுடைய கடமை அத்தகைய கடமைமிக்க ஒரு போராளியாக விளங்குபவர்தான் அன்புச் சகோதரர் ஓவியர் புகழேந்தி. அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.