தொடுவானத்தின் எல்லை மாறிக்கொண்டே போகவேண்டும்

பெ. மணியரசன்


பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


சிறப்புமலர் - 2004


ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் கலை நுட்பத்தில் புதிய சிகரங்களை எட்டிப் பிடித்தன என்பதற்காகப் பாராட்டப்படவில்லை. ஆனால் அவை ஒரு சரியான காலகட்டத்தில் பிறப்பெடுத்தவை. அதுவரை இல்லாத புதுவகைப் படைப்புகள் அவை என்பதற்காகப் பாராட்டப் படுகின்றன. காலத்திற்குக் கவரி வீசவில்லை. காலத்தைக் கீறி வரலாற்றின் வாசலில் கோலமிடுகிறது. இதற்காகவே இவரது படைப்புகள் பாராட்டப்படுகின்றன.

எல்லாக் கலைப்படைப்புகளும் ஒத்த கருத்தை நாடுவது முக்கியமல்ல. விவாதத்தைத் தூண்டி சர்ச்சையை எழுப்புவதே முக்கியம். பொறுப்புமிக்க இந்த விவாதத்தில் போலித்தனம் இருக்கவே கூடாது. குறைந்தபட்சம் அது ஒரு தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

தமது படைப்பு விவாதப் பொருள் ஆக வேண்டும் என்பதற்காகவே, மாறுபட்ட உத்திகளைக் கையாள்வது போலித்தனமே. சமூகத்திற்குச் சொல்வதற்குத் தன்னிடம் ஒரு தகவல் இருக்கிறது என்ற உணர்வு ஒரு கலைஞனுக்கு உணர்ச்சி அளிக்கிறது. அரசின் அதிகாரமோ, செல்வாக்கு மண்டலங்களின் சீராட்டோ, அவனை வளைத்து விட முடியாது.

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மிக்க படைப்பாளி, தனிமனிதத் துணிச்சலில் மட்டும் காலூன்றி நின்றால் நீண்ட காலம் அவனால் நிலைத்து நின்று போராட முடியாது. அவன் நிற்பதற்கு ஓர் அடித்தளம் தேவை. அவனுக்கு ஊக்கமும் பாதுகாப்பும் தரக்கூடிய சமூக அடித்தளம் ஒன்று தேவை.

நமது தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கலைப்படைப்புகள் மூலம் சொல்வதற்கான தகவல்கள் ஓவியர் புகழேந்தியிடம் நிறைய இருக்கின்றன. அவற்றைச் சொல்லும் துணிச்சல் அவரிடம் இருக்கிறது. அவர் காலூன்றி நிற்பதற்கான சமூக அடித்தளம் வலுவாக உள்ளது. உணர்வுள்ள தமிழர்கள் அந்த இளம் படைப்பாளியை தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டுள்ளனர்.

போராட்டக் காலம்தான் இளைஞர்களையும் புதிதாகப் பதியம் போடுகிறது. ஈழத் தமிழர்கள் குவியல் குவியலாக இனப்படுகொலை செய்யப்பட்ட 1983 சூலைத் துயரம் தமிழ்நாட்டில் மாபெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அந்த எழுச்சியில் புகழேந்தியின் சமூகப் பார்வை குருத்துவிட்டு, மண்ணைப் பிளந்து கொண்டு வெளியில் வந்தது.

அப்போது பள்ளிப்பருவம், பால் வடியும் முகம், ஈழத் தமிழர்களுக்காதரவான ஊர்வலம், கண்காட்சி, பொதுக்கூட்டம் என, தஞ்சையிலிருந்தும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடக்கும். எல்லா இடங்களிலும் புகழேந்தி துருதுருவென்று சுற்றி வருவார். பலதரப்பாரிடமும் அவர் தொடர்பு வைத்திருப்பார். புகழேந்தி என்ற சமூக உணர்வுள்ள ஓர் இளைஞர் பல்வேறு அரசியல் பிரமுகர்களிடமும் இலக்கிய வட்டங்களிடமும் தொடர்பு கொண்டு வருகிறார் என்பது தெரிந்தது.

பல்வேறு இடங்களில் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்க்கென்று உறுதிப்பட்ட கொள்கை முடிவுகள் உருவாயின. அநீதி கண்டு பொங்கும் இளமைத் துடிப்பும், ஈரநெஞ்சம், ஈழத் தமிழர்களின் துயரங்களை ஓவியமாக்கச் செய்தன. அவர் நடத்திய முதல் கண்காட்சி சாலையோரத்தில் நடந்தது.

ஓவியத்தில் பட்ட மேற்படிப்பு படிக்க ஐதராபாத் சென்றார் புகழேந்தி. அப்போது ஆந்திரப் பிரதேசத்தில் சுண்டூரில், தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அவர் நெஞ்சைக் கிழித்தது. புகழேந்தியின் தூரிகை போர்க்கோலம் பூண்டது. சுண்டூர் படுகொலையை ஓவியமாக்கினார்.

தமிழர் இன உணர்ச்சியில் முதல்வரிசையில் நிற்கும் புகழேந்தி, குஜராத் நிலநடுக்கத்தில் மடிந்து போன, வீடுவாசல் இழந்துபோன வடபுலத்து மக்களின் துயர் தாங்காமல், தூரிகை தூக்கினார். அதற்காக தனிச்சிறப்பு மிக்க ஓவியங்கள் தீட்டினார். மக்கள் முன்படைத்தார். ஓவியர் புகழேந்தியின் தமிழர் இனஉணர்ச்சி மனித நேயத்தின் அடிப்படையில் உருவானதே அன்றி வெறும் இனவாதத்தில் உருவானதல்ல. தமிழினம் ஒடுக்குண்டு கிடப்பதால் ஏற்பட்ட இன உணர்ச்சி அது.

கலைப்படைப்புகளுக்கு மக்களிடம் சந்தை மதிப்பு ஏற்படுவது தேவை. ஆனால் சந்தைக்காக என்று கலைப்படைப்புகளை உருவாக்குவது ஓர் இலட்சியமாக இருக்க முடியாது. ஓவியர் புகழேந்தி சொந்தப் பணத்தைச் செலவிட்டுக் கலைப்படைப்புகளை உருவாக்குகிறார்.

புகழேந்தியைப் பாராட்டுவது அவரை ஊக்கப்படுத்தி மேலும் அவரிடமிருந்து சமூகத்திற்குத் தேவையான ஆக்கங்களைப் பெறும் நோக்கம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, இளம் படைப்பாளிகளுக்கு அவர் 'திசை காட்டும் கருவி'யாக இருக்கிறார் என்பதை எடுத்துச் சொல்லவும் தான் இந்தப் பாராட்டு.

ஓவியத் துறையில் சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுள் சமூகத்திற்கு தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்கள் மிகச் சிலரே. அச்சிலருள் புகழேந்தியின் முகம் பளிச்சென்று தெரிகிறது.

பட்டை தீட்டத் தீட்ட வைரம் பளிச்சிடுவது போல், தமது படைப்புகளை மக்கள் முன் திரும்பத்திரும்பக் கொண்டு வருவதால் புகழேந்தியின் கலைநுட்பம் மேலும் மேலும் வளர்ந்து வருவதை அறிய முடிகிறது.

"உன்னைத்தேடு, உள் மனதைத்தேடு" என்பன போன்ற தனிமனித மையவாதம் கலை இலக்கியத் துறையில் கோலோச்சும் காலமிது. இது ஒரு வகையான உளவியல் நுகர்வுவாதம். தன்னல மையவாதம். இதில் வெற்றிபெற வித்தைகாட்டத் தொடங்கிவிடுகிறார்கள். பலபடைப்பாளிகள். இந்த "இருண்மை" வாதத்தில் சிக்கிக் கொள்ளாதவர் புகழேந்தி.

தன்னை உணர்ந்து தனது சமூகத்தின் சிக்கலை உணர்ந்து ஓவியப்போராளியாகச் செயல்படுகிறார். மக்களுக்காக உண்மையாகச் சிந்திப்போர் உழைக்கும் மக்களின் அரவணைப்பைப் பெற்றே தீருவர். ஓவியப்போராளி புகழேந்தியும் மக்கள் அரவணைப்பைப் பெற்றுள்ளார்.

இன்னும் அவர் இளைஞர்தாம். தமிழ்ச் சமூகம் அவரிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறது. பசியோடு இரைதேடும் சிங்கம்போல் அவரது தேடுதலில் வேகம் தொடரவேண்டும்.

அவரிடம் உள்ள தேடுதல் வேகம். சமூகச் சிக்கல்களைத் தீர்க்க முனைவதிலும் இருக்க வேண்டும். அதேநேரம் படைப்புத்திறனை மேலும் மேலும் நேர்த்தியாக்கிக் கொள்வதிலும் இருக்க வேண்டும். புகழேந்தியின் இருப்பு, இறுதிக்கும் இறுதியாக அவர் ஒரு சிறந்த ஓவியர் என்பதில்தான் இருக்கிறது.

ஓவியக் கலைநுட்பத்தில் அவர் ஒவ்வொரு அடி முன்னேறும் போதும் தொடுவானத்தின் எல்லைமாறிக் கொண்டே போக வேண்டும்.