'ஓவியப் போராளி'யின் உள்ளத் தூரிகை

மகேந்திரன்


இயக்குநர்


சிறப்பு மலர் - 2004


"அட, இவர் எங்க தஞ்சாவூர்க்காரர் அய்யா.." என நான் தலையைச் சிலுப்பிக் கொண்டு ஓவியர் புகழேந்தியைப் பார்த்துப் பெருமைப்பட உரிமை இருக்கிறது.

அதேபோல ஓவியர் புகழேந்தி மதுரைக்காரர் என்றோ, அல்லது ராமநாதபுரம் பக்கம் தான் பூர்வீகம் என்று தெரிய வந்தாலும் கூட இப்படி என்னால் குதியாட்டம் போட முடியும். என் தந்தையாருக்குப் பூர்வீகம் தஞ்சை, தாயாருக்குப் பூர்வீகம் மதுரை; நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் ராமநாதபுரம் மாவட்டம். இந்தத் 'தாளிப்பு' எல்லாம் எதுக்கு என்று தோணலாம். இதுதான் மனித சுபாவம்! ஒரு சாதனையாளனைப் பாராட்டி சொந்தம் கொண்டாட அவனது சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் இப்படி ஏதாவது ஒரு வகையில் மல்லுக்கு நிற்பது என்றுமே 'ஒரு சுகமான சுபாவம்'. அதை நீங்களும் நானும் மாற்றிக் கொள்ள இயலாது.

சரி, ஓவியர் புகழேந்தி ஒரு வேளை வெளிநாட்டுப் பிரஜையாக மாறியிருந்து தனது ஓவியச் சிறப்பில் இப்படியொரு 'தனி அடையாளம்' அடைந்திருந்தால் அப்போது நாமே "இவர் எங்கள் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்" என்று நமது பாராட்டின் தன்மையை அகலித்துக் கொண்டிருப்போம்.

சரி, அதையெல்லாம் விடுங்கள். நம்முடைய இப்படிப்பட்ட ஆழமான ஆனால் குறுகலான மனோபாவத்தை எல்லாம் உடைத்து விட்டு அவர் பயணம் கூட மேற்கொள்ளாத, பிறநாட்டு மக்களையும் அவர்கள் ஒரு பகுதியினர் சக மனிதர்களால் வஞ்சிக்கப்படும் கொடூரங்களையும், அவர்கள் சிந்திடும் ரத்தத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் இவரது மனத்தூரிகை மனிதநேயத்தில் தோய்ந்து உருகிச் சிவப்பாகி போர்க்குணம் கொண்ட ஓவியங்கள் வாயிலாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரே; "நான் ஒரு உலகப் பிரஜை" என்று பிரகடனப் படுத்துகிறாரே! அதுதான் விசேஷம்! பிறநாட்டு மண்ணைச் சார்ந்த மக்களின் துயரங்களையும் அடிமைத்தனத்தையும், அதிகார வர்க்கத்தின் மனித வேட்டைகளையும், சிறுமைகளையும், கூர்மையான வண்ணக் கோடுகளால் தோலுரித்துக் காட்டுகிறார். தஞ்சை மண்ணுக்குரியவர்கள் மட்டும் அல்ல, வெளிநாட்டு மண்ணைச் சார்ந்தவர்களும் "ஓவியர் புகழேந்தி எங்களுக்கு வேண்டியவர்" என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அவசியத்தைத் தோற்றுவித்திருக்கிறார்.

20ம் நூற்றாண்டில் உலக மக்களின் பலபகுதியினர் ராட்சதத்தனமான அடக்குமுறைகளுக்குப் பலியான கண்ணீர் வரலாற்றை இவர் ஓவியங்களில் பதிவு செய்திருப்பது 21ம் நூற்றாண்டுக்கு ஒரு 'கண்திறப்பு' மாதிரியானது.

ஒவ்வொரு நாட்டிலும் அன்றும் இன்றும் மாபெரும் ஓவிய மேதைகள் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களது ஓவியங்கள் மூலம் இன்றும் என்றும் உலக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இன்றைக்குள்ள ஓவியப் படைப்பாளிகளும், இலக்கியத்தாலோ, புகைப்படக் கலையாலோ சித்தரிக்க முடியாத 'நிஜங்களை' விவரிக்கும் வல்லமை படைத்தவர்களே... அதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆனாலும் எனது 'எறும்பளவு' அறிவுக்குத் தெரியும் உண்மை ஒன்று இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை பெரிய அளவு ஞானம் உள்ளவர்கள் என் அபிப்ராயத்தை மறுத்து விளக்கம் தர முன்வந்தால் கோடிப் புண்ணியம். இருந்தாலும் என் மனசில் 'பட்டதைச்' சொல்லிவிடுகிறேன். பிறநாட்டு ஓவிய மேதைகள் எல்லாம் தாங்கள் பிறந்த நாட்டின் சகலவித அழகையும், வரலாற்றையும், மனிதச் சண்டைகளையும், அடிமைத்தனத்தையும் தத்தமது ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அவர்கள் எல்லாம் தங்களுக்குக் கொஞ்சம் கூட தொடர்பு இல்லாத பிறநாட்டு மக்களின் தீராத சோகங்களை தங்களின் படைப்புகளில் உணர்த்தியுள்ளனரா? அந்நிய நாட்டு மக்களின் துயரங்களை அறிந்து, மனம் நொறுங்கி ஓவியங்களில் தங்களது உணர்வுகளைச் சித்தரித்திருக்கிறார்களா? அப்படிச் செய்திருந்தால் சந்தோஷமே! 'அப்படி யாரும் கிடையாது' எனத் தெரியவந்தால் ஆச்சரியமே.

ஆனால் என் கண்ணெதிரே தெரியும் ஓவியர் புகழேந்தி பொருளுக்கும், புகழுக்கும் துளி அளவு ஆசை அற்றவராய், மனத்தூரிகையின் உந்துதலுக்குக் கட்டுப்பட்ட இளகிய மனம் கொண்டவராய், எந்தெந்த நாட்டில் எல்லாம் பட்டினியால் மக்கள் மடிகிறார்களோ, இனக்கலவரங்களால் மடிந்து மக்கிக் கொண்டிருக்கிறார்களோ, வஞ்சிக்கப்படுகிறார்களோ, நிறத்துவேஷத்தால் சீரழிக்கப் டுகிறார்களோ, பேரழிவு ஆயுதங்களால் வேட்டையாடப்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருக்காகவும் தூரிகை எடுத்துக் குரல் கொடுக்கிறார். அவரது ஓவியங்களின் ஆவேசமான வண்ணக் கோலங்கள்.. அழுத்தம் திருத்தமான வெளிப்பாடுகள்.. இவர் போன்ற லட்சிய வேட்கை கொண்ட ஓவியர்கள் ஒவ்வொரு நாட்டு மண்ணிலும் அதிக அளவில் உருவாக வேண்டும் என்பது காலத்தின் அவசியம்.

இயற்கையின் சீற்றங்களான புயல், பெருவெள்ளம், பூகம்பம், எரிமலை இவற்றை எல்லாம் தவிர்க்க இயலாதவை என்றாலும், இன்றைய விஞ்ஞான உச்சத்தின் விளைவாக, அந்த இயற்கைச் சீற்றங்களின் வருகையை முன்னரே அறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும். மக்கள் அழிவைக் கட்டுப்படுத்தவும் மனிதன் இன்று கற்றுக் கொண்டிருக்கிறான்.

அதுமாதிரி, ஓவியர் புகழேந்தி போன்றவர்கள் எண்ணிக்கையில் அதிகமாகி வரும் பட்சத்தில், மனித இனத்தில் நிலவிடும் கேவலமான ஏற்ற தாழ்வுகளை, மனிதனே மனிதனை அழித்திடும் கொடுமைகளின் அளவுகளைக் குறைக்கவும், தணிக்கவும் முடியும் என முழுமனத்துடன் நம்புகிறேன்.

இப்போது சொல்லுங்கள்...
ஓவியர் புகழேந்தி தஞ்சாவூர்க்காரரா?
குஜராத் காரரா?
ஈழத்தமிழரா?
சோமாலியாக்காரரா?
ஜப்பான்காரரா?
வியட்நாம் பிரஜையா?
ஈராக்கா? ஈரானா?

மொத்தத்தில் நசுக்கப்படும் மக்கள் எந்த மண்ணைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவர்க்கும் சொந்தமான, ப்ரீதியான, பொதுவான நெருக்கமான, ஓவியக்கோடுகளால் அவர்களுக்காகக் குரல் எழுப்பும் ஓவியப் போராளியாக வாழ்கிறார் என்பதே உண்மை.

அதுவும் பெருமைக்குரிய உண்மை!!!