விழிகளின் வழியே நெஞ்சுக்குள் நெருப்பு

பாரதிராஜா


இயக்குநர் இமயம்


சிறப்பு மலர் - 2004


பொதுவாக புகழேந்தி பேனாவோ பென்சிலோ எடுத்து கிறுக்கினால் கூட அது சமூகத்தின் சிக்கல்களைப் பேசுகின்ற ஓவியமாக மலர்கின்றனவே... கருப்பு நிறத்தில் விழியை வரைந்தாலும் சிவப்பு விழியாகத் தெரிகின்றனவே... எப்படி என்று எண்ணி எண்ணி வியந்து கொண்டு இருக்கின்றேன்!

புகழேந்தியின் ஓவியங்கள் விழிகளின் வழியே விரல் நீட்டி நெஞ்சுக்குள் நெருப்பு மூட்டுகின்றது. காசுக்காக மட்டும்தான் கலையா? என்று கலை தேவதை கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றாள். இந்த வேளையில் கண்ணீரையும் கலையாக்கும் புகழேந்தியின் ஓவியத் தூரிகைக்கு நான் வாழ்த்துக்களைப் பூக்களாகத் தூவுகின்றேன்.

கடந்த கால ஓவியங்கள் அழகு உணர்ச்சியையே பெரும்பாலும் தாங்கி நின்றன என்றால் மிகையல்ல! தற்கால ஓவியங்கள் வியாபார நோக்கம் கொண்டவை என்பதுவும் மிகையல்ல! புகழேந்தியின் ஓவியம் இந்த நூற்றாண்டின் மனித மனத்தின் ரணங்களை ஒரு சில கணங்களில் இதயத்தில் பதிவுச் செய்கின்றது என்பதும் மிகையல்ல!

கிரேக்கப் பழமொழி ஒன்று இப்படிக் கூறுகின்றது.
பேசாத கவிதை ஓவியம்
பேசும் ஓவியம் கவிதை

ஆனால் புகழேந்தியின் படைப்பு. இரண்டும் சேர்ந்த ஒரு புதிய காவியமாய் எனக்குத் தெரிகின்றது.

புகழேந்தியின் தூரிகையின் தூவலில் பல உணர்வுகள் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. சபிக்கப்பட்ட மானிட வரலாற்றின் இருண்ட பக்கங்கள் இவரின் வர்ணத் தீட்டுதலால் வெளிச்சமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த வெளிச்சத்தின் விடியலில் மனிதத்தின் ஆன்மாக்கள் விழிக்கட்டும்!

வாழ்த்த வார்த்தைகளின்றி...