தீர்க்கப்பட வேண்டிய கணக்குகளுக்காத்

தீட்டப்பட்ட தூரிகை


மணிவண்ணன்


இயக்குநர்


சிறப்பு மலர் - 2004


புகழேந்தி நீ
புகழேந்"தீ" இது
வார்த்தை விளையாட்டல்ல; உன் தூரிகைக்கு நான்
பதிவு செய்யும் மரியாதை.
எழுத்தும் கவிதையும் பாட்டும் இசையும்
இதையொட்டிய எல்லா வெளிப்பாடுகளும் மனிதனை
மகிழ்ச்சியடையச் செய்யவே என்கிற அழிக்க முடியாமல்
கிடக்கிற அழுக்கு அர்த்தத்தை அர்த்தமில்லாமல்
செய்தன உன் தூரிகைகள்.
வரலாற்றை கோயில்களும் சிற்பங்களும்
இலக்கியங்களுமே
பதிவு செய்து வைத்திருக்கின்றன.
கோயில்களில் நாங்கள் இல்லை;
சிற்பங்களில் நாங்கள் இல்லை;
இலக்கியங்களில் நாங்கள் இல்லை;
எங்கும் நாங்கள் கண்ணில் படாமல்(!)
எங்கள் மண்ணின் எங்கள் இனத்தின் நாங்கள் பேசும் மொழியின்
வரலாறும்
பதியப்பட்டது.
வரலாற்றின் வழித்தடத்தில் நாங்கள் எங்களைத் தேடி
அலைந்தோம். நாங்கள் படிக்க அனுமதிக்கப்படாதவர்கள்.
எங்கள் பாட்டன் எழுதியிருப்பான் என்று எப்படி
எதிர்பார்க்க முடியும்?
எங்களை படிக்கவே அனுமதிக்காதவர்கள் எங்கள்
வாழ்க்கையை பதிவு செய்திருப்பார்கள் என்று எப்படி
நம்புவது? அது
அரைஞான் கயிறில்லாதவன் கோவணம் கட்ட
ஆசைப்படுவதைப்
போன்ற ஏமாளித்தனமாகத்தான் இருக்கும்.
எங்கள் சந்ததிகள் கொடுத்து வைத்தவர்கள்.
வரலாற்றைப் பதிவு செய்ய உங்களைப் போன்றோர்
எரிமலைக் குழம்பாய் கிளம்பியிருக்கின்றீர்கள்.
நாங்கள் மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
எங்கள் குழந்தையின் விலங்குகளை உடைக்க, உங்கள்
தூரிகை சம்மட்டியின் வேலையைப் பார்க்கிறது.
"தீ" யென்று சொன்னதில் தவறில்லை தானே?
உன்ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மன்னிக்கவும், படிக்கும் போதெல்லாம்
ஹிக்கிம் கிசன்ஷா, தாதா சாகிப் அம்பேத்கர்
அவர்களைப் பற்றி 1940இல் எழுதிய "தூப்பாகியும் நூறு
தோட்டக்களும்" தான்
நினைவுக்கு வந்து போகும்.
உன் கையில் இருப்பது துரிகையல்ல...
துப்பாக்கி.
உன் துப்பாக்கி இருபக்கமும் பாயும்
முன்னே பாய்ந்து எதிரிகளைக் காயடிக்கும்
பின்னே பாய்ந்து இதயத்தில் விதை தூவும்
முதன்முறை உன்னை உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன்
ஓவியர் திரு. சந்தானம் உட்பட்ட இன உணர்வாளர்களுக்கு
மத்தியில் சந்தித்தேன். உறங்கா நிறங்கள்
உன் படைப்புக் காட்சியைத் திறந்து வைக்கும்
பேறு பெற்றேன். திணறிப் போனேன்.
மறக்க முடியாத ஓவியங்களோடு திறந்து கிடந்த
கண்களோடு முழு இரவும் படுத்துக்கிடந்தது
நினைவுக்கு வருகின்றது.
இந்த நூற்றாண்டை நீ சிறையெடுத்திருந்தாய்
யுகப்புரட்சி வீரன் லெனினோடு துவங்கி
மனிதப் புரட்சிக்காக தெற்கே உதித்த சூரியன்
மாவீரன் பிரபாகரன் வரை பதிவு செய்தாய்
நவகாளிக்கு பயணம் செய்த பாதங்களையும்
நிலவில் பதித்த பாதங்களையும்
நிறங்களால் நிறைவு செய்தாய்...
நிர்வாணம் வரையாத ஓவியக்காரன்
முழுமையான ஓவியனாக மாட்டான் என்று ஓவியத்தில்
பட்டம் பெற்ற என்நண்பன் முன்பொருநாள் சொன்னது
எருமைகளையும் பசுமாட்டையும் பாக்கும் போதெல்லாம்
நினைவுக்கு வரும்.
நிர்வாணம் தானே வேண்டும் போதுமாடா என்பது போல்,
இரண்டாம் உலகப் போரின் பதிவில்
ஓநாய்களுக்கு நடுவே... மனிதம் கூனிக்குறுகி நின்றதை
படைத்துக் காட்டினாய்.
நாங்கள் மனிதர்கள் என்பதை நினைவு படுத்தினாய்.
செப்டம்பர் 11இல் என்னை அறியாமல் மனநிழலில் வந்து
போகும் வியாட்நாமின் ஓலங்களும் ஹிரோஷிமாவின்
காயங்களும் கடந்த நூற்றாண்டின் ஆறாத வடுக்கள்
உன்னால் அடையாளம் காட்டப்பட்டன.
காலையில் இருந்து மாலை வரை உண்ணா நோன்பு என்பது புரட்டாசி சனிக்கிழமை மாதிரி நகைச்சுவைக் காட்சியாய் நாடு முழுவதும் நடக்கிறது.
"பசித்தது அவனே உணவானான்"
மூலம் கதர் குல்லாக்களுக்கு உண்ணாவிரதத்தின்
உண்மை அடையாளத்தை ஞாபகப்படுத்தி
தீவிரவாதி எனும் தீண்டத்தகாதவர் பட்டியலில்
இடம் பிடித்தாய்.
நல்ல கலைஞனோடு நட்பாக இருப்பதே
பெருமிதத்திற்குரியது. துணிச்சலான கலைஞனோடு
நட்பாய் இருந்தால் கேட்கவா வேண்டும்.
நான் திமிரோடு அலைகிறேன்.
இதைச் சொல்ல நான் கூச்சப்படவில்லை.
இந்த நூற்றாண்டையும் நீ பதிவு செய்யவேண்டும்.
என்ன அவசரம்? என்று கேட்கலாம்.
போன நூற்றாண்டு ஏமாற்றிவிட்டது. வரும்
நூற்றாம்டாவது மக்களின் காலமாக இருக்க வேண்டும்
என்ற ஆசைதான்.
காவிச் சாயம் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொள்.
நிறையத் தேவைப்படும்.
"நடந்த நிகழ்வுகள் அனைத்துமே வரலாற்றுக்கு
உரியவையாகக் கருதப்பட வேண்டும். மீட்சியடையும்
மனிதகுலத்தால் மட்டுமே அதன் கடந்த
காலத்தின் முழுமையைப் பெறமுடியும். அதாவது,
மீட்சியடையும் மனிதகுலத்தால் மட்டுமே
அதன் கடந்த காலத்தின் எல்லாத் தருணங்களும் சாட்சிகளாகக் காட்டப்படத் தக்கவையாக
மாறுகின்றன.
மீட்சியடைந்த மனிதகுலம் வாழ்ந்து
முடிந்த ஒவ்வொரு கணமும் அந்தந்த நாளுக்கான
சாட்சியாக மாறிவிடும். அந்த நாள் தான்
இறுதித் தீர்ப்பு நாளாகும்."

வால்டர் பெஞ்சமின்
அந்த இறுதி தீர்ப்பு நாளுக்காக...
ஆயுதங்களும், அழிவும், உதிரப்போகும்,
உயிர்ப்பலியும் இல்லாத, அன்னை தெரசாவின்
மடியில் அமர்ந்திருக்கும் பத்திரமான குழந்தையின்
நிலையில் இந்த மனித சமூகம் வாழும். அந்த
இறுதி தீர்ப்பு நாளுக்காக...
தூரிகை ஓய்வில்லாமல் உழைக்கட்டும்.
உங்கள் தோளோடு எங்கள் தோள்கள்
உங்கள் கரங்களோடு எங்கள் கரங்கள்...