ஓவியர் புகழேந்தியின் ஓவியப் பயணம்...


தொடக்கப்பள்ளி

உலகின் மிகப் பெரிய நதிகளெல்லாம், சிறு ஊற்றாகத்தான் தொடங்குகின்றன.

அதுபோலத்தான் கலைவளமும் இசைவளமும் மிக்க தஞ்சை மாவட்டத்தின் தும்பத்திக்கோட்டை எனும் சிற்றூரில் 1967 ஆம் ஆண்டில் குழந்தைவேல் நாகரத்தினம் இணையருக்குப் பிறந்தார் ஓவியர் புகழேந்தி.

இளமைப் பருவத்தில் தந்தை குழந்தைவேலரோடு வயல்வேலைகளில் ஈடுபட்டதிலிருந்தே மண்ணோடு சேர்ந்து வளர்ந்தவர் புகழேந்தி. மருத்துவம் படித்து பெரிய டாக்டராக மகன் வரவேண்டும் என்றுதான் தந்தை விரும்பினார். ஆனால் தனது ஆர்வத்தால், உழைப்பினால், சமுதாய உணர்வால் இன்று உலகப்புகழ் பெற்ற ஓவியராக மாறியிருக்கிறார் புகழேந்தி.

கல்வி வளாகங்களுக்குள்ளே...

பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியும் மேலஉளுவூரில் உயர்நிலைக் கல்வியும், குடந்தை கவின் கலைக் கல்லூரியில் வண்ண ஓவியத்தில் பட்டயமும், பின் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் இவர் கல்விச் சாலைகளில் பெற்ற தகுதிகள். ஓவியத்தில் தமிழகத்திலேயே முதன்முதலாக முதுகலைப் பட்டம் பெற்றவர்.

பணி

சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஓவியப் பேராசிரியராகத் தொடரும் இவரது ஆசிரியப்பி, 19 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.

இல்லறத்தில்...

1995 ஆம் ஆண்டில் இவரது தூரிக்கைக்கு வண்ணமாக வாய்த்தவர் சாந்தி. இவர் வரைந்த ஓவியங்கள் சித்திரன், இலக்கியன்.

தூரிகைப் பயணம்

16 வயதிலேயே 1983 ஆம் ஆண்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரி கலை விழா ஓவியக் கண்காட்சியில் தடம் பதித்தார். அதன்பின் அவருடைய தனிநபர் ஓவியக் காட்சிகள் 100 கடந்தும், கூட்டாக அவர் பங்கேற்ற ஓவியக் காட்சிகள் ஐம்பதையும் கடந்துவிட்டன. இருபதாம் நூற்றாண்டு ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள் என்ற ஓவியக் கண்காட்சி 2000 ஆம் ஆண்டில் சென்னை லலித்கலா அகாதெமியில் அரங்கேறியது. தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் என்று விரிந்தது.

நெஞ்சை உலுக்கும் நீள்ஓவியம்

2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய முயற்சி. குஜராத் நிலநடுக்கப் பேரழிவினைச் சித்தரிக்கும் மிக நீளமான ஓவியம். ஆம். 150 அடி நீளமுள்ள இருள் வண்ணத் தொடர் ஓவியக் காட்சி சிதைந்த கூடு! சென்னையில் பலரது மனச்சாட்சியை, மௌன சாட்சியாய் நீண்டநாள் உலுக்கும் காட்சியானது. ஓவியத்தின் பெரும்பரிமாணமும், தாளில் வரையப்பட்ட ஓவியச் சுருளை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லும் இடர்ப்பாடும் பிற நகரங்களுக்கு கண்காட்சியைக் கொண்டு செல்ல இயலாது தடுத்துவிட்டது. எனவே அவர் பிறந்த தஞ்சையில் மட்டும் காட்சியாக்க முடிந்தது.

எனினும் இக்கண்காட்சி தமிழகத்தின் பல்வேறு நாளிதழ்கள், வாரஇதழ்கள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பேசுபொருளாகியது. தமிழகம் முழுதும் வேறெந்தவொரு ஓவியக் காட்சியும் பெறாத அறிமுகத்தையும் வரவேற்பையும் தருமபுரி மனிதவள மேம்பாட்டு மையத்தின் சிறந்த ஓவியருக்கான விருதையும் பெற்றது.

முகவரி தந்த ஆசானுக்கு

தமிழர்களுக்கு முகவரி தந்த பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் பன்முகத் தோற்றங்கள். வேறெவரும் சிந்தித்துப் பார்க்காத வகையிலும் வடிவிலும் கோட்டுச் சித்திரங்களாக மிகப்பெரும் வரவேற்பைப் திசைமுகம் ஓவியக்காட்சி. தமிழகத்தின் 25 நகரங்களில் உலா வந்தது இதன் தனி வரலாறு. இந்த கண்காட்சியை திராவிடர் கழகமே பொறுப்பேற்று நடத்தியது.

பறக்கும் சிறகு

திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்பான் பாரதி. புகழேந்தியின் உறங்கா நிறங்கள் 2000 ஆம் ஆண்டில் கோலாலம்பூர், மலேசியா, சிங்கப்பூர் எனக் கடல் கடந்த நாடுகளின் தமிழர்களிடையே மட்டுமல்லாமல் வேற்று இனத்தவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதேபோன்று திசைமுகம், உறங்கா நிறங்கள் இருவரிசை காட்சிகளும், 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ, வாஷிங்டன் நகரங்களிலும், கனடா, டென்மார்க், பாரிஸ் மற்றும் பல ஐரோப்பிய நகரங்களிலும் அரங்கேறின. இவ்விரு தொடர் காட்சிகளும் அவை தந்த அனுபவமும் வரவேற்பும் ஓவியர் புகழேந்தியை உற்சாகப்படுத்தின. இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் என்ற அடுத்த காட்சி.

2003
ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் அரங்கேறியது. 2004 ஆம் ஆண்டிலிருந்து தமிழக நகரங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக மக்களின் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

2004
ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஈழ வரலாற்று ஓவியக்காட்சியான புயலின் நிறங்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போன், சிட்னி நகரங்களில் புகழ்ப் பயணமாக ஓவியரை அழைத்துச் சென்றது.

தமிழகத்திற்கு வெளியே 2006 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஈழப்போரா ஓவியக்காட்சியான புயலின் நிறங்கள் மற்றும் உறங்கா நிறங்கள் நடைபெற்றன. கர்நாடக மக்களிடையே ஈழப் போராட்டத்தைப் பற்றிய சரியான புரிதலையும் மனமாற்றத்தையும் உருவாக்கியது என்பது ஓவியக் காட்சிக்கு கிடைத்த கூடுதல்வலு.

2009
ஆம் ஆண்டு ஈழப் போரின் இறுதிக் கட்டத்தை, முள்ளிவாய்க்கால் துயரத்தை ஐம்பது ஓவியங்கள் அடங்கிய தொகுப்பாக உயிர் உறைந்த நிறங்கள் என்ற தலைப்பில் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டன.

2010
ஆம் ஆண்டு ஈழப்போராட்ட வரலாற்றை விளக்கும் 80 ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு போர் முகங்கள் என்ற தலைப்பில். முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு நினைவு வாரத்தில், சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை அலையன்ஸ் பிரான்சைஸ் அரங்கு, மதுரை போன்ற இடங்களிலும், சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்துவது தொடர்கின்றன.

2011
ஆம் ஆண்டு உலக மகளிர் நாளை முன்னிட்டு பல்வேறு ஓவியத் தொகுப்புகளிலுள்ள பெண்கள் குறித்த 85 ஓவிய படைப்புகள் தொகுக்கப்பட்டு வஞ்சிக்காடு: பெண் போரும் அமைதியும் என்ற தலைப்பில் சென்னையில் காட்சிப்படுத்தப்பட்டது.

தமிழீழப் பயணம்

2005 ஆம் ஆண்டில் தமிழீழத்தில் பயணம் மேற்கொண்டு போர் நடைபெற்ற 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஈழப்போராட்ட வரலாற்று ஓவியக்காட்சி புயலின் நிறங்கள் நடத்தப் பெற்று ஈழமக்களின் எழுச்சிக்கு துணைபுரிந்ததோடு மிகப் பெரும் வரவேற்பையும் பெற்றது.

பயிலரங்குகள்

தமிழகத்திலும் பல்வேறு நாடுகளிலும் ஓவியக்காட்சிகள் நடைபெற்ற இடங்களில் மாணவர் களுக்கும் ஆர்வமுடையவர்களுக்கும் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. என்றாலும் போராட்டக் களத்தில் இருந்த ஈழத் தமிழர்களிடையே மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போராளிகளுக்கு பயிலரங்குகள் நடத்தப்பெற்றமை உணர்ச்சிமிக்கதாகவும் உணர்வூட்டுவதாகவும் இருந்தது மறக்கவொண்ணா அனுபவமாக அமைந்தது.

உலக நாடுகளுக்கு கலைப்பயணம்

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஈழம். இலங்கை, நார்வே, சுவிடன் போன்ற நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

விருதுகளும் பாராட்டுக்களும்


1987
    கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் ஓவியக்காட்சியில், புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். உசேன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

1987
      தமிழக அரசின் மாநில விருது.

1987
      இந்தியாவின் சர்வதேச விமான போக்குவரத்துக் குழுமம் விருது.

1988
      காரைக்குடி ACCET ஓவியப்போட்டி முதல் பரிசு.பரிசு.

1990
      ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தகுதி விருது.

2002
      தர்மபுரி மனிதவள மேம்பாட்டு மையத்தின் சிறந்த ஓவியர் விருது.

2005
    தமிழீழத்தின் அழகியல் கலாமன்றம் வழங்கி கௌரவித்த தங்கப்பதக்கம்             விருது.

2007
      இராசராசன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் சாதனையாளர் விருது.

2007
  திருச்சி தூயவளனார் கல்லூரி வழங்கிய ஓவியம் வழி சமூகமாற்ற             இயக்க விருது.

2007
  வேலூர் தமிழ் இயக்கம் வழங்கிய ஓவியத்தை சமூக விடுதலைக்கு              பயன்படுத்து வதற்கான விருது.

2008
 இராசபாளையம் பெரியாரியல் சிந்தனை மையம் வழங்கிய             பொரியாரியல் சிந்தனையாளர் விருது.

2009       சென்னை கிருத்தவக் கல்லூரி ஆளுமைக்காக கௌரவிப்பு.

1995 தஞ்சை உலகத்தமிழ் மாநாட்டில் ஓவிய வடிவமைப்பு             ஆலோசகராகவும், கருத்தரங்கில் பேராளராகவும் பங்கேற்பு.

ஊடகங்கள் தந்த ஊக்கம்

தமிழகத்தின் பெரும்பாலான நாளிதழ், வார இதழ், பருவ இதழ்களில் (தமிழ், ஆங்கிலம்) வெளியான நேர்காணல்கள், கட்டுரைகள் உற்சாக வரவேற்பு பெற்றன. இதேபோன்று மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், சுவிஸ் நாட்டு இதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் நேர்காணல்கள் வெளியாகி வரவேற்புப் பெற்றன. பொதிகை, சன், ஜெயா, விஜய், தமிழன், கலைஞர், வின், மக்கள், ராஜ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பலமுறை நேர்காணல்கள் செய்யப்பட்டார்.
கனடா தமிழ் வானொலிகள், தமிழ் தொலைக்காட்சி (TTN) பிரான்சு, ஐபிசி, லண்டன் தொலைக்காட்சி கள், ஆஸ்திரேலியாவின் சிகரம் மற்றும் தரிசனம் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் இவரை விட்டுவைக்கவில்லை.

தூரிகையைத் தாண்டி தூவல்

இவரது ஓவிய கலைத்திறன் பல்வேறு கட்டுரைகளாகவும் தொடராகவும் வெளிவந்ததோடு, தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமாக எரியும் வண்ணங்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், அதிரும்கோடுகள், சிதைந்தகூடு, புயலின் நிறங்கள் என்ற தலைப்பில் இவரது ஓவியப்படைப்புகள் நூலாக வெளிவந்துள்ளன. தூரிகைச் சிறகுகள் என்ற தலைப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய வெளிநாட்டு அனுபவ நூலும், அகமும் முகமும் என்ற தலைப்பில் இவருடைய நேர்காணல்கள் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
நெஞ்சில் பதிந்த நிறங்கள் என்ற தலைப்பில் இவருடைய ஓவியங்களைப் பற்றி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் தொகுப்பும், மேற்குலக ஓவியர்கள் என்ற தலைப்பில், ஐரோப்பிய ஓவியர்கள் ஓவியங்கள் பற்றிய வரலாறும் நூலாக வெளிவந்துள்ளன. தமிழீழப் பயண அனுபவங்கள், தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Tamil Eelam – What I saw How I was seen என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் இந்நூல் வெளிவரவுள்ளது. ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் என்ற தலைப்பில் அனைத்து காட்சி ஊடகத்திற்குமான அடிப்படை நூல் ஒன்றும் வெளிவந்துள்ளது.

சிறப்பு மலர்

2005 ஆம் ஆண்டில் ஓவியப்போராளி புகழேந்தி சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

ஓவியர் நல வாரிய உறுப்பினர்

2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் ஓவியர் நலவாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.

எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய்ச்சொல்

தமிழகத்தின் பலதுறை அறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள், இதழாளர்கள், திரைக்கலைஞர்கள் என அவரது நட்பு வட்டமும் தோழமை உறவும் மிகப் பரந்தது. விரிவானது, நீண்டது.
அந்த நட்பும் உறவுமே மனித உரிமை மீறலுக்கெதிரான போரிலும் தமிழின உரிமைக்கான போரின் முன்னணிப்படையிலும் அடக்குமுறைகள், கறுப்புச் சட்டங்கள் எதிர்ப்பு அணியிலும் சமூகநீதி, மொழி இன உரிமைக் கிளர்ச்சியிலும் இவரைக் களப்போராளியாக ஆக்கியுள்ளன. எனவே அவரது ஓவியப் பயணத்திற்கான திசை வழி மிக  நீண்ட வரலாற்றைப் படைக்கும்.

 
. . . . . * . . . . .