எந்தவகை ஓவியமானாலும் மக்களுக்குப் புரியவேண்டும்

                                                                    - ஓவியர் புகழேந்தி -

நேர்காணல் :  சூரியச் சந்திரன்.
அமுதசுரபி, ஜூலை 2006                         


                நீங்கள், தமிழ்ச் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவோ, நவீன ஓவியத்தின் மீது நாட்டமுள்ளவராகவோ, சமூகநிகழ்வுகளில் பங்களிப்புக் கொள்பவராகவோ இருக்கும் பட்சத்தில், உங்கள் பயணத்தில் ஏதோ ஒரு புள்ளியிலாவது நீங்கள் ஓவியர் புகழேந்தியைச் சந்தித்திருக்கக் கூடும் 

                40 வயது இளைஞராக இவர், கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக தீராத வேட்கையுடன் ஓவியங்களைத் தீட்டியும், அவற்றை பொதுமக்கள் மத்தியில் காட்சிப்படுத்தியும்பார்வயளர்களோடு தீராத உரையாடலை நிகழ்த்தியும் ஒரு தூரிகைப் போராளியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

                தமிழ்நாட்டின் முக்கிய கிராமங்களிலும் , நகரங்களிலும் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன தமிழ்நாட்டைக் கடந்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

                தமிழ்நாட்டின் முக்கிய கிராமங்களிலும் , நகரங்களிலும் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன தமிழ்நாட்டைக் கடந்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

             தஞ்சை மாவட்டம், தும்பத்திக்கோட்டை கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் தமிழகத்திலேயே ஓவிய நுண்கலையில் முதுகலைப்பட்டம் பெற்ற முதல் மாணவர். தான் பயின்ற குடந்தை ஓவியக் கல்லூரியிலேயே இப்போது விரிவுரையாளராகப் பயிற்று வித்துக்கொண்டிருக்கிறார்.

            எரியும் வண்ணங்கள், உறங்காநிறங்கள், புயலின் நிறங்கள், திசைமுகம், சிதைந்த கூடு, முகவரிகள், அதிரும் கோடுகள் எனும் ஏழு நூல்களாக இவரது ஓவியங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை’ தூரிகைச் சிறகுகள்; எனும் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இவரது ஓவியங்கள் பற்றிய கட்டுரைகள் ‘நெஞ்சில் பதிந்த நிறங்கள்’ என்ற நூலாகவும், இவரது நேர்காணல்கள் ‘அகமும் புறமும்’ எனும் நூலாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.

            ‘தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்’ அவரது சமீபத்திய பயண நூல். ஓவியராக மட்டுமல்லாது எழுத்தாளராக, பேச்சாளராக, பதிப்பாளராக, ஆசிரியராக பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட ஓவியர் புகழேந்தி அவர்களுடன் இனி…

‘நமது பாரம்பரியமான ஓவியங்கள் யதார்த்தமாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் வரையப்பட்டன. ஆனால் இப்போது நவீன ஓவியங்கள் என்று உருவங்களைச் சிதைத்தும், அருபமாகவும், புரியாமலும் வரைவது ஏன்?
           நம் முன்னோர்கள் தத்ரூபமாக, உள்ளது உள்ளபடியேவரைந்தார்கள். அந்தக்காலச் சுழலில் அப்படியான ஓவியங்களுக்கு ஒரு தேவை இருந்தது. ஆனால் அறிவியல் புரட்சியின் விளைவாக, புகப்படக் கருவி (Camera) கண்டுபிடிக்கபட்டபிறகு, ஒரு காட்சியை ஓவியரைவிடவும் தத்ரூபமாகவும், விரைவாகவும் புகப்படக் கருவிகள் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தன. இதனால் உலக அளவிலேயே ஓவியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.அப்போதுதான் உள்ளது உள்ளபடியே என்கிற நிலையிலிருந்து மாறி, உள்மனதில் உள்ளதை ஓவியங்களாக வரையத் தொடங்கினார்கள். அதில் பல்வேறுசோதனை முயற்சிகள் நடைபெற்றன.அவ்வாறு உள்மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓவியங்களையே நவீன ஓவியங்கள் என்கின்றோம். எந்த வகை ஓவியமானாலும் மக்களுக்கு அது புரியவேண்டும். எனது ஆரம்பக்கால ஓவியங்களை  எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. என்று கூறப்பட்டது. அதனால் எனது ஓவிய உத்தியையே மாற்றினேன்.

நீங்கள் ஆரம்பத்திலிருந்தே நவீன ஓவியங்களைத்தான் வரைந்துகொண்டிருக்கின்றீர்களா?
           
எனது    சிறுவயதில் பசுமையான வயல் வெளிகளையும், ஆடு மாடுகளையும், வயலில் உழைக்கும் மக்களையும் தத்ரூபமாகத்தான் வரைந்துகொண்டிருந்தேன். ஓவியக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நவீன ஓவியங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். என்றாலும், யதார்த்த ஓவியங்களைத்தான் அப்பொழுதும் வரைந்துகொண்டிருந்தேன். அப்போது ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகள் என்னை மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை, என்கோபத்தை, என் உணர்சியை வெளிப்படுத்த யதார்த்த வடிவம் போதுமானதாக இல்லை. அப்போதுதான் முதல் முதலாக உருவச் சிதைப்பு எனும் உத்தியைக் கையாண்டேன். (இந்த உத்தியை பிக்காசோ தனது ஓவியங்களில் கையாண்டிருப்பார்). அதன் பிறகு நவீன ஓவியங்களைத்தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருந்தேன்.

உங்கள் மணவப்பருவத்தில், அகில இந்திய ஓவியக்கண்காட்சியில் இரண்டாம்பரிசு பெற்ற ஓவியம் – நவீன பாணியிலானதா?         
           ஆமாம், நான் குடந்தைக் கல்லூரியில் மணவனக சேர்ந்த காலத்திலிருந்தே மநில அளவில் நடைபெற்ற பல போட்டிகளுக்கு என் ஓவியங்களை அனுப்பி வத்தேன். பல பரிசுகளையும் பெற்றேன். ஆனால், நிங்கள் குறிப்பிடுகின்ற இந்தப் போட்டி அகில இந்திய அளவில் நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில் எனது ‘பாதிக்கப்பட்டவன் 1987’ என்கிற ஓவியம் இரண்டாம் பரிசு பெற்றது. அந்த ஓவியத்தை எம் எஃப். உசேன் தேர்ந்தெடுத்தார். என்பது மற்றொரு சிறப்பம்சம்.

நவீன ஓவியங்களிலேயே பல்வேறு கூறுகள் உள்ளன. இவற்றில் எவ்வகையான கூறுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

           சர்ரியலிசம், கியூபிசம்,எக்ஸ்பிரசனிசம் என பல்வேறு கூறுகளையும் என் ஓவியங்கள் கொண்டுள்ளன.

சமூகத்தில் நடக்கின்ற கொடூரங்களுக்கு எதிரான உங்களது குரலை தூரிகையின் வழியாக உடனுக்குடன் பதிவுசெய்து விடுகிறீர்கள். உங்களுக்குமட்டும் இது எப்படிசாத்தியமாகிறது?
           ஒரு சமூகப்படைப்பாளி தான் வழும்காலங்களில் நடக்கின்ற கொடூரங்களுக்கு எதிராக வினையாற்றவேண்டியது கடமையென்று கருதுகிறேன். அந்தவகையில்தான் குஜராத் பூகம்பம், மகாமக பலி, தாமிரபரணி சம்பவம், மாணவிகள் எரிப்பு, கீழவளவு நிகழ்வு, குடந்தைப் பள்ளிக் குழந்தைகள் தீக்கிரையானது போன்ற துயரங்களை உடனுக்குடன் பதிவுசெய்தேன். அதுமட்டுமல்லாமல் நான் நேரில் பார்த்திராத வெண்மணிச் சம்பவம் போன்றவற்றையும் முக்கியத்துவம் கருதி வந்திருக்கிறேன். இன்னும் நான் வரையாத பல சம்பவங்கள் என் கித்தானுக்குக் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உங்கள் ஓவியங்களில் மிக முக்கியமானதாக ‘சிதைந்த கூடு’ எனும் நீண்ட ஓவியத்தைக் கூறலாம். இந்த ஓவியம் பிக்காசோவின் ‘குவர்னிகா’ ஓவியத்தை ஞாபகப்படுத்துகிறதே…?
           நான் ஓவியங்களை வரைந்து ஆர்ட் காலரியில் வைப்பதில்லை. பொதுமக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்செல்ல வேண்டும் என நினைப்பவன். அதனால் என் பெரும்பாலான ஓவியங்கள் 3 x 3 என்ற அளவிலேயே வரையப்பட்டிருக்கும். ஆனால் குஜராத் பூகம்பம் என்னை மிகவும் பாதித்தது. அந்தப் பாதிப்பிலிருந்து என்னால் மீளவேமுடியவில்லை. என் ஓவியங்களின் மூலமாக அதற்கு ஒரு வடிகால் கிடைக்குமென்று நினைத்தேன். அத்துடன் அதை சிறு ஓவியமாக வரைந்து அதன் உயிரை சுருக்கவும் எனக்கு விருப்பமில்லை. அதை 100 அடியாவது வரையணும் என்கின்ற எண்ணம் தோன்றியது. 45 முன் தயாரிப்பு ஓவியங்கள் வரைந்து, தீட்டப்படுகையில் 150 அடிகளாக நீண்டது. அதனை ஒரு சம்பவமாக மட்டும் வரையாமல், இழப்பு, மீட்பு, நிமிர்த்தல், உயிர்ப்பு, நம்பிக்கை என்று வரிசைப்படுத்தி நம்பிக்கையளிக்கும் வகையிலே அவ் ஓவியத்தை வரைந்தேன். சென்னையில் 9 நாள் கண்காட்சி நடத்தினேன். அவ்வளவு நீளமான அந்த ஓவியத்தை வேறு எங்கும் காட்சிப்படுத்த முடியாமல் போனதுதான் வருத்தமான விசயம்.

உங்களின் ‘முகவரிகள்’ ஓவியங்கள் திட்டமிட்டு வரையப்பட்டவையா?
           திட்டமிட்டு வரையப்பட்டவை அல்ல, திட்டமிட்டு தொகுக்கப்பட்டவை. பல்வேறு காலகட்டங்களில் பதிப்பாளார்களுக்காக, பத்திரிகைகளுக்காக, எழுத்தாளர்களுக்காக பிரபல அரசியல் தலைவர்கள்,போராளிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என பலரின் முகங்களை கோட்டோவியங்களாக வரைந்தேன். அந்த ஓவியங்களில் உள்ளவர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்களோடு எனக்கு நெருக்கமான தோழமை உண்டு. ஆகவே அவர்களின் குணநலன்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை ஓவியங்களில் வெளிப்படுத்தினேன். அந்த ஓவியங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த வேண்டும் என்கின்ற ஜனநாயக நோக்கத்தில்தான் அவற்றைத் தொகுத்து      ’முகவரிகள்’ எனும் நூலாக வெளியிட்டேன்.

‘எனினும், பெரியாருக்கு மட்டும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து ‘திசைமுகம்’ எனும் தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கோணங்களில் வரைந்திருக்கிறீர்களே…?
           தந்தை பெரிராயார் மீது எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாகவே அந்த ஓவியங்களை வரைந்தேன். பெரியார் என்றொருவர் பிறந்திருக்காவிட்டால், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் நிச்சயமாக முன்னுக்கு வந்திருக்க முடியாது. அவரை இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வதற்காக அவரது சிந்தனைகளை எனது ஓவியங்களின் மூலமாக மீட்டுருவாக்கம் செய்தேன். தமிழ்நாட்டில் 25க்கு மேற்பட்ட இடங்களிலும் அமெரிக்காவிலும் கண்காட்சிகள் நடத்தினேன். பெரியார் என்கிற மாமனிதனை – அவன் ஓர் ஓவியன் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறிந்து வியந்தனர். அந்த ஓவியங்கள் ‘திசைமுகம்’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

உங்கள் ஓவியங்களுக்கு இன்குலாப், காசி ஆனந்தன் போன்ற கவிஞர்கள் கவிதை புனைந்திருப்பது போல, பிறரின் இலக்கியப் படப்புக்களுக்கு நீங்கள் ஓவியங்கள் வரைந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம்…?
           அந்த இலக்கியப் படைப்பின் கருவை வெளிப்படுத்துவதுடன், அந்த அதிரும்கோடுகள் தனித்து பொதுப்படைப்பாகவும் நிற்கவேண்டும் என்கின்ற வகையிலேயே அந்த ஓவியங்களை வரைகிறேன்.

‘நீங்கள், வெளிநாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்த  ஆர்வம் கொள்வதேன்? வெளிநாட்டு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான புரிதலை உங்கள் ஓவியங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன?
           வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள், என் ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டுமென ஆர்வத்துடன் அழைப்பு விடுக்கின்றன. அது நம் கலையாற்றலை பரந்த தளத்திற்கு கொண்டுசெல்ல உதவுகின்றது. அவ்வாறு பரந்த தளத்திற்குச் செல்வதன் மூலம் நம் ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள, செழுமைப்படுத்திக் கொள்ள உதவுகின்றது. அந்தநாட்டில் வாழ்கின்ற தமிழர்களாக இருந்தாலும் வேற்று இனமக்களாக இருந்தாலும், நம் ஓவியங்கள் வழியாக, கீழ்வெண்மணி பற்றியும்,ஈழப் படுகொலைகளின் கொடூரங்கள் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் இன்னும் பல்வேறு சமூக நிகழ்வுகள் பற்றியும் புரிதல் களையும் உணர்வுகளையும் பெறுகிறார்கள்.

உங்கள் ஓவியங்கள் பற்றி வெளிநாட்டு ஓவியர்கள் என்ன கருத்துச் சொன்னார்கள்?
            எழிமையான Composition, Strong ஆன வண்ணங்கள் வடிவங்கள் உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் உருவங்களின் வெளிப்பாடு என பொதுவாக கருத்துச் சொன்னார்கள் ஓவியர்கள் மட்டுமல்லது லட்சக்கணக்கான பார்வயையாளர்களும் ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுத்திலும் பேச்சிலும் பதிவு செய்கிறார்கள். அவையெல்லாம் தொகுக்கப்பட்டு வண்ணங்கள் மீதான வார்த்தைகள் எனும் நூலாக வெளிவரவுள்ளன.

ஓவியங்களைத் தீட்டுவதில் எவ்வளவு கவனம் எடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு பார்வையாளர்களோடு உரையாடல் நிகழ்த்துவதிலும் அக்கறை கொள்கிறீர்கள். என்ன காரணம்? 
      ஓவியங்களைப் பார்வையாளர்கள் பார்க்கும்போது ஓவியத்துக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஓர் உரையாடல் நடக்கிறது அந்த உரையாடலுக்கு உதவி செய்வதாக படைப்பளிக்கும் பார்வையாளனுக்கும் இடையிலான உரையாடல் அமைகிறது. அந்த உரயடல்களின் வாயிலாக, கருத்துப் பரிமாற்றங்கள் பார்வையாளனுக்கும் மட்டுமல்ல படைப்பளிக்கும் புதிய சிந்தனையை புதுப்பித்தைலைத் தருகிறது,

உங்கள் ஓவியப்பணிக்கு ஆசிரியர் பணி எந்தளவுக்கு உதவிகரமாக இருக்கிறது?
            நான் ஓர் ஆசிரியராக இருப்பதால் என் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களுடன் உரையாடுவது இயல்பாக அமைந்துவிட்டது அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுடன் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதிலும் நான் விருப்பம் கொண்டவனாக இருக்கிறேன்.

ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீங்கள் ஓர் ஓவியனாக உலகின் பல நாடுகளிலும் பயணம் செய்கிறீர்கள். இதை எவ்வாறு உணர்கிறீர்கள்?
           கார்ல் மார்க்ஸ் சமாதியில் நிற்கும்போது என் உடல் சிலிர்ந்தது அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது அதே போல் எந்தஇடத்தையெல்லாம் நினைத்துப் பார்க்ககூட முடியாமல் இருந்ததோ அந்த இடங்களில் நின்றபோது கிடைத்த அனுபவம், பல்வேறு நபர்களை சந்தித்த அனுபவம் இவையெல்லாம் சாதாரண குடும்பத்தில் குக்கிராமத்தில் பிறந்திருந்தாலும் ஒரு சமூகக் கலைஞன் என்கிற அடிப்படையில் நான் பெற்றேன்.

. . . . . * . . . . .