தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா தேசங்களிலுமே ஓவியர்புகழேந்தி நன்கு பரிச்சயமானவர்.ஓவியனாக மட்டுமல்லாமல் அரசியல் செயற்பாட்டளராக,எழுத்தாளராக,ஆசிரியராக பலமுகங்கள் கொண்டவர்.தன் மாணவப் பருவத்திலிருந்து சமூகப் பிரட்சினைகள், அடக்குமுறைகள், ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்கள், சுற்றுச்சூழல் என பல்வேறு தளங்களிலும் களம் இறங்கிய போராளிக் கலைஞன் இவர் அவருடனான ஒரு நேர்காணலில்.......
- மனிதர்களின் வலியே உங்கள் ஓவியங்களின் பிரதானமாக இருப்பது ஏன்?
என் குழந்தைப் பருவத்தில் இருந்து என் பள்ளிப் பருவம் வரை வயல் வெளிகளையும், மலர்களையும், செடிகளையும், கொடிகளையும் பார்த்து ஈர்க்கப்பட்டு ஓவியங்களாக்கி வந்த என்னை என் கல்லூரிப் பருவம் ஈழத்தில் 83 –ஆம் ஆண்டு ஜூலையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, என்னை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து மனிதர்களின் வலியை என் வலியாக உணர்ந்தேன். அதன் பிறகு, உலகத்தில் மனிதத்திற்கு எதிராக எது நடந்தாலும் அதை வெளிப்படுத்தத் தொடங்கினேன்.
- வெகுஜன இதழ்கள் தான் இன்றைய தமிழ்ச் சூழலில் மக்களோடு ஓவியர்களை நெருங்கவைப்பதில் வெற்றி கொண்டுள்ளது என்பது எத்தனை தூரம் உண்மை என நீங்கள் நம்புகிறீர்கள் ?
எனக்குத் தெரிந்து எழுபதுகளில் இருந்து எழுத்து, கசடதபற போன்ற சிற்றிதழ்கள் நவீன ஓவியங்களை பயன்படுத்தி வந்திருக்கின்றன. ஓவியர்களின் ஓவியங்களை பயன்படுத்தினார்களே தவிர ஓவியர்கள் குறித்த அறிமுகமோ, ஓவியங்கள் குறித்த விமர்சனமோ பெரிதாக வெளிவரவில்லை. இன்றைய தமிழ்ச்சூழலிலும் வெகுஜன இதழ்கள் அவற்றினுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. வங்காளம், மும்பை, கேரளா போன்ற இடங்களில் இருந்து வெளிவருகின்ற வெகுஜன இதழ்கள் ஓவியர்கள் மற்றும் ஓவியங்கள் குறித்த அறிமுகங்களை செய்து வருவதை ஒப்பிடும் போது, தமிழ்ச்சூழலில் மிகக் குறைவுதான். ஆனால், என் மற்றும் எனது ஓவியங்கள் குறித்தும் வெகுஜன ஊடகங்கள் அதிகமாக வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் அதுமட்டுமே போதுமானதாக இல்லை. வெகுஜன ஊடகங்கள் சினிமாவுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை, பிற கலை வடிவங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
- மஹாராஷ்ட்ரத்தில் 400க்கும் மேற்பட்ட ஓவியக் கல்லூரிகள் உள்ளன, இங்கு இருப்பதோ வெறும் 3 கல்லூரிகள் தான் ஏன் ?
மஹாரஷ்டிரத்தில் கூட 400 கல்லூரிகள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. சிறுசிறு தனியார் நடத்துகின்ற பள்ளிகளாக இருக்கலாம். ஆனால், பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில் கல்லூரிகள் எண்ணிக்கை குறைவு. பிற மாநிலங்களில் தனியார் கல்லூரிகளும் இயங்குகின்றன. அங்கெல்லாம் அந்தக் கலை சார்ந்த, படிப்பு குறித்த விழிப்புணர்வு முக்கிய காரணம் என்பதோடு எதிர்கால நம்பிக்கையையும் தரக்கூடிய சூழல் அங்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது போன்ற சமூக பின்புலமும் இல்லை விழிப்புணர்வும் இல்லை.
- நீங்கள் ஓவியத் துறையைத் தேர்ந்தெடுக்க எது முதன்மைக் காரணம், ஓவியம் மீது இருந்த ஈர்ப்பா ? அல்லது சமூகச் செயற்பாட்டாளாராக வலிமையாகச் செயல்படுவதற்கு அதன் தேவையா ?
ஓவியத்தின் இருந்த ஈர்ப்பு தான் முதற்காரணம். அதன் பிறகு, சமூகம் குறித்த எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஓவியங்களை, ஒரு வலிமையான ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன். அது என்னுடைய சமூக செயற்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிறது.
- மிக அழுத்தமான வலியை, பார்ப்பவருக்குக் கடத்தும் உங்கள் ஓவியங்கள், நீங்கள் வரையும் போதும், வரைந்து முடித்த பின்னும் உங்களை எப்படி பாதிப்படையச் செய்யும் ?
வலியை உணர்ந்து உள்வாங்கி வெளிப்படுத்தியதால் தான், எனது ஓவியங்கள் பார்ப்பவருக்கு வலியை ஏற்படுத்துகின்றன. ஒன்று குறித்த ஓவியத்தை செய்வதற்கு முன் தயாரிப்பில் இருக்கும் பொழுதே பல்வேறு வலியையும் வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. ஒரு ஓவியத்தை முடித்த பிறகும், அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும், சில நேரங்களில் அடுத்த ஓவியத்தை செய்கின்ற போதும் கூட…
- உங்கள் ஓவியங்களை நீங்கள் ஏன் வியாபார ரீதியாக விற்பனை செய்வது இல்லை ?
பொதுவாக, தமிழ்ச்சூழலிலும் இந்தியச் சூழலிலும் வியாபார நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஓவியங்களே விற்பனை ஆவதில்லை என்ற நிலையில், சமூக நோக்கத்தோடு செய்யப்படுகின்ற என் ஓவியங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்த அளவிற்கு, சந்தையில் இடம் பிடிப்பது சிரமம் என்கின்ற நிலையில் தான் அவற்றை விற்பனைக்காக நாம் வைப்பதில்லை. அது எனக்கும் வசதியாக இருக்கிறது.. அத்தோடு பார்ப்பவர்களுக்கும் வசதியாக இருக்கிறது.
- திடீரென்று, உங்கள் ஓவிய பாணியை முழுவதுமாக மாற்றிக்கொள்ள எண்ணியதுண்டா ? செய்திருக்கிறீர்களா ?
எல்லா ஓவியர்களுக்கும் Transition Period என்பதாக ஒன்று ஏற்படும். அதுபோல், எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்பட்டுக் கொண்டும் இருக்கிறது. ஆனால், முற்றும் முழுவதுமாக மாற்றிக் கொள்ள நான் எண்ணியதில்லை. பாணி என்பது, ஒருவருக்கான அடையாளமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் பரிசோதனை முயற்சியாக சில உத்திகளைக் கையாண்டிருக்கின்றேன்.
- உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார் ?
உலக அளவில் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் என்னுடைய ஓவியங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள். அவர்களில் தலைவர்கள் இருக்கிறார்கள்.. போராளிகள் இருக்கிறார்கள்.. சமூக சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள்.. அடித்தட்டு மக்களும் இருக்கிறார்கள். பார்வையிட்டு முடித்த பிறகு, பலர் தங்களது கருத்துக்களை கருத்துப் பதிவேட்டில் பதிந்திருக்கிறார்கள். துக்கம் தொண்டையை அடைத்து கண்ணீரோடு பேச முடியாமல், என்னோடு கைகுலுக்கி விடை பெற்றவர்களும் இருக்கிறார்கள். பிறகு பக்கம் பக்கமாக கடிதம் எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்களை இரசிகர்கள் என்று நான் எப்படி அழைப்பது ? அந்த ஆயிரக்கணக்கானவர்களையும் என்னால் மறக்க முடியாது. அதனால் தான், அவர்களுடைய கருத்துக்களைத் தொகுத்து ”வண்ணங்கள் மீதான வார்த்தைகள்” என்று நூலாகத் தொகுத்திருக்கிறேன்.
- ஓவியத்துறையில் உங்கள் கனவு என்ன?
மனித விடுதலையை உறுதி செய்கின்ற போராட்டத்தில் ஓவியத்தை முக்கிய ஆயுதமாக தொடர்ந்து பயன்படுத்துவதும்.. உலக அளவிலான ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்த வரலாறுகளைத் தமிழில் எழுதுவதும், அது குறித்துப் பேசுவதும், அதன் மூலம் புரிதல்களை ஏற்படுத்துவதும் தான்.
- பொதுவாக ஓவியர்கள் என்றால் மக்களை விட்டு விலகி தான் இருப்பார்கள், நீங்கள் மட்டும் ஒரு கூட்டத்திற்குள் (மக்கள்) தான் இருக்கிறீர்களே எப்படி?
மக்களைக் குறித்து, மக்களுக்காக சிந்திக்கின்றவர்களும்.. செயல்படுகின்றவர்களும் மக்களை விட்டு எப்படி விலகி இருக்க முடியும். என்னுடைய முப்பதாண்டு கால ஓவிய சமூக செயற்பாடு மக்களை நோக்கியதாகவே இருந்து வருகிறது. மக்களுடைய போராட்டங்களை, வாழ்க்கையை, அவர்களுடைய துன்பங்களை.. வலிகளை என் ஓவியங்களில் பார்க்கிறார்கள். அதனால் தான், மக்கள் திரளுக்குள் நான் இருக்கிறேன் என்பதை விட அவர்களுக்குள் என்னை வைத்திருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்.
- உங்கள் ஓவியங்களை கிராமங்களில் கூட கண்காட்சியாக வைக்கின்றீர்கள், நவீன ஓவியங்களை எப்படி மக்கள் அனுகுகிறார்கள்?
பொதுவாக, எந்தக் கலையும், எந்த வடிவத்தில் இருக்கிறது என்பது முக்கியமல்ல. அது, நவீனமாக இருந்தாலும் சரி.. அல்லது பாரம்பரியத் தன்மையோடு இருந்தாலும் சரி, அது மக்கள் குறித்து பேசுகிறதா என்பது தான், முக்கியம். மக்கள் குறித்து பேசுகின்ற எதையுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்னுடைய ஓவியங்கள் நவீனம் சார்ந்தவை என்றாலும் கூட, உருவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதன் பொருட்டே, மக்கள் மிக எளிதாக எவ்வித அச்சமுமின்றி, தயக்கமுமின்றி எனது ஓவியங்களை அணுகுகிறார்கள். |