ஓவியனுக்கும், பார்வையாளனுக்குமான தொடர்பு என்பது மாத, வார இதழ்களில் இலக்கிய படைப்புகளுக்கு நடுவே வருகின்ற சில ஓவியங்களே. பெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்புகளை ஆர்ட் கேலரிகளுக்கு உள்ளே வைத்து அழகு பார்ப்பார்கள். ஆனால், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் சென்னை ஓவியக் கல்லூரி பேராசிரியர் புகழேந்தி. இனப் படுகொலைகள், சாதி, மத ரீதியான வன்முறைகள், இயற்கைப் பேரழிவுகள் குறிப்பாக ஈழப்போராட்டம், பாலஸ்தீன விடுதலை, தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம் போன்ற சமூக நிகழ்வுகளை, மக்கள் பிரச்னைகளை மையமாகக் கொண்ட ஓவியங்களை தனது ஓவியப் படைப்புகளில் கொண்டு வருபவர். ஓவியர் புகழேந்தியின் மற்றொரு தனிச்சிறப்பு மக்கள் பிரச்சனை பேசுகின்ற அவரின் ஓவியங்களை மக்கள் அதிகமாகக் கூடுகிற இடங்களில் கண்காட்சியாக வைப்பது தான். தமிழக அரசின் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இவர் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தி இருக்கிறார். நமது “மகாகவி” இதழுக்காக ஓவியர் புகழேந்தி அளித்த நேர்காணல் இது…
- இலக்கிய படைப்புகளைப் போல் ஓவியத்தால் கருத்துக்களை வாசகன் மனதில் பதிய வைப்பது சாத்தியமா ?
இலக்கியப் படைப்புகளுக்கு ஏதோ ஒரு மொழி தேவைப்படுகிறது. அதைப் படைப்பதற்கும் அல்லது வாசிப்பதற்கும். ஆனால், ஓவியப் படைப்பு என்பது உலகப் பொதுமொழி. மொழி எல்லைகளைக் கடந்து, பரந்து விரிந்து அனைத்து மொழி பேசுகின்ற மக்களிடத்திலும் மிக எளிதாகச் சென்றடையும். ஓவியம் ஒரு காட்சி மொழி என்பதால், இலக்கிய படைப்புகளால் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஓவியத்தால் ஏற்படுத்த முடியும். “ஆயிரம் புத்தகங்களில் பதிவு செய்யப்படும் கருத்தை ஒரு ஓவியத்தில் பதிவு செய்துவிடலாம்” என்று கன்னட கவிஞர் சித்தலிங்கையா, என்னுடைய ஓவியக் கண்காட்சியில் பதிவு செய்தார். இதுபோல், பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். எனவே, இலக்கியப் படைப்புகளைப் போல் மட்டும் அல்ல, கூடுதலாகவே தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
- ஓவியங்களில் கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணம் இதில் எது கருத்துக்களை தீவிரமாக வெளிப்படுத்தும் ?
கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு இரண்டுமே சிறந்தது தான். ஆனால், வண்ணத்தில் செய்வதை விட கருப்பு வெள்ளையில் செய்வது கடினம். கருப்பு வெள்ளையில் ஒரு ஓவியத்தை உருவாக்குவதற்கு சரியான புரிதல் வேண்டும். சரியான புரிதலோடு கருப்பு வெள்ளையில் ஒரு ஓவியத்தைச் செய்ய முடிந்தால், வண்ணங்களில் செய்வது மிக எளிதாகி விடும். கருப்பு வெள்ளை, வண்ணங்களை விட ஆழத்தை (depth ) கொடுக்கும்.
- தமிழகத்தின் ஓவிய வரலாறு குறித்து...
சங்க இலக்கியங்களிலேயே ஓவியங்கள் குறித்த குறிப்பு காணக் கிடைக்கிறது. விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற ஓவியங்கள் தான் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் (pre historic paintings) என்று வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது. மனிதன் ஒரு மொழியை பேசுவதற்கு முன்பு, ஓவியம் வழி தான் உரையாடியிருக்கிறான் என்பது விளங்கும். அப்படிப்பட்ட தொன்மையான வரலாற்றில் தொடங்கும் தமிழக ஓவிய வரலாறு, அடுத்து சுவர் ஓவியங்கள் என்ற வளர்ச்சி நிலையை, சித்தண்ணவாசல், தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களில் பார்க்கலாம். மிக அருமையான செய் நேர்த்தியுடன் கூடிய Fresco முறையில் செய்யப்பட்ட சுவர் ஓவியங்கள் (Mural Painting) இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல இடங்களில் உள்ள கோவில்களில் Tempra முறையில் செய்யப்பட்ட சுவர் ஓவியங்களைக் காண்கிறோம். பல கோவில்களில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளவையாக விளங்குகின்றன. சமீப காலங்களில் அவை மெல்ல மெல்ல அழிவு நிலையை அடைகின்ற காரணத்தால், அதனுடைய முக்கியத்துவத்தை அறியாத அறங்காவலர்களும், அதிகாரிகளும் அதை அழித்துவிட்டு, தற்கால வண்ணங்களைக் கொண்டும், ஏதும் அறியாத ஓவியர்களைக் கொண்டும் செய்து இருப்பதாக அறிகிறோம். சில கோவில்களில் சோழர் காலத்திலும், சில கோவில்களில் நாயக்கர் காலங்களிலும் செய்யப்பட்ட ஓவியங்களாக இருக்கின்றன. அதே காலகட்டங்களில் செய்யப்பட்ட சிற்பங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அதற்கு அடுத்த நிலையில், ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு, அய்ரோப்பிய பாணி பயிற்சியும், அதைத் தொடர்ந்து அம்முறையிலான வெளிப்படுத்தலும் ஆரம்பமாகிறது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட முதல் கலைப்பள்ளி சென்னை கலைப்பள்ளி தான். இங்குதான் நவீன வரலாறு தொடங்குகிறது. தொன்மையில் தொடங்குகின்ற தமிழக ஓவிய வரலாறு நவீனமாக நீட்சியடைகிறது. நீண்ட வரலாறாகத் தொடர்கிறது.
- சமூக மாற்றத்திற்கு ஒரு ஓவியன் என்ன மாதிரியான பங்களிப்பை செய்ய முடியும் ?
ஒரு ஓவியன் என்பவன், முதலில் ஒரு மனிதன். தான் வாழ்கின்ற சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. துன்பங்கள், துயரங்கள், மகிழ்ச்சிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள் என்று தொடரும் நிகழ்வுகளில் பல நேரங்களில் அவனும் அகப்பட்டுக்கொள்கிறான். அவ்வாறு இல்லாவிடினும், அதன் தாக்கத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கிறது. அதற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை என்று இல்லாமல், ஒரு மனிதனாக உள்வாங்கியவைகளை, ஒரு படைப்பாளனாக, ஓவியனாக, வெளிப்படுத்தி, மக்களிடத்தில் கொண்டு சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை போராட்டத்திற்கு தயார் படுத்துகின்ற பணியைச் செய்யமுடியும். செய்ய வேண்டும்: அதோடு நில்லாமல் ஒரு சமூகத்தை வழி நடத்துகின்ற பொறுப்பும், பண்படுத்துகின்ற பொறுப்பும் கலைஞர்களுக்கு உண்டு. போராட்ட களங்களிலும் நின்று மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பங்களிக்க முடியும். ஒரு அரசியல் கட்சியை விட, இயக்கங்களை விட கூடுதல் பொறுப்பும், அக்கறையும், கலைஞர்களுக்கு உண்டு என்பதை உணர வேண்டும்.
- தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்குப் பின்பும் தனி ஈழம் சாத்தியம் தானா ?
இலங்கையில் ஏற்பட்டுள்ளது அரசியல் மாற்றமல்ல. தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு. எப்போதும் இல்லாத அளவிற்கு பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழீழத் தமிழர்களின் போராட்டம் உலக அளவில் சென்றிருக்கிறது. புலிகள், ஒரு தனி நாட்டைக் கட்டமைத்து, அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளோடு தனி அரசை, தமிழீழ அரசை நடத்திக் கொண்டிருந்த போது கிடைக்காத உலக அங்கீகாரம், விடுதலைப்புலிகள் பல இராணுவ ரீதியான வெற்றிகளைப் பெற்றபோது கிடைக்காத உலக அங்கீகாரம் இப்போது தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கிறது. என்ன! அதிகமான இழப்புகளைச் சந்தித்து விட்டோம். ஈடு செய்ய முடியாத இழப்புகள் அவை.
இன்னும் தமிழர் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கிறது. எவ்வித சுதந்திரமும் இல்லாமல், இருக்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தமிழர்கள் சிரமப்படுகிறார்கள் என்பது ஒரு புறம், தமிழர்கள் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை செய்து சிங்களப்பகுதியாக மாற்றுவதும், தமிழ் ஊர் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி சிங்களமயப்படுத்துவதும் தீவிரமாகத் தொடர்கிறது.
இலங்கையில், தமிழர்கள் சிங்களவர்களுக்கிடையில் உள்ள பிரச்னை என்பது இலங்கை சுதந்திரம் பெற்ற அன்றிலிருந்து தொடர்கின்ற பிரச்னை. 60 ஆண்டு கால ஆயுதப் போராட்டம். இந்த 60 ஆண்டு கால போராட்டம், ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. தமிழர்களும், சிங்களவர்களும் இனிமேல் சேர்ந்து வாழமுடியாது என்பதை.
இந்நிலையில் தான், 2009 மே மாத, முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாதம் உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று, இன அழிப்பைச் செய்திருக்கிறது. சிங்கள பேரினவாத அரசு, இன அழிப்பு செய்ததோடு, போர்க்குற்றமும் செய்திருக்கிறது என்பதை தொடர்ந்து வரும் சாட்சியங்கள் நிரூபிக்கின்றன.
தமிழர்கள் பூர்வகுடிகள். தமிழீழப் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கான உரிமை அங்கு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அதனால் தான் 60 ஆண்டுகளாக போராட்டம் தொடர்ந்தது. ஆயுதங்கள் ”மௌனிக்க”ப்பட்டதை வைத்து போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக சிங்களமும் கருதிவிடக் கூடாது, உலகமும் கருதிவிடக் கூடாது. உலகில் விடுதலைப் போராட்டங்கள் 300 ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்றிருக்கின்றன.
ஒரு நோய்க்கு சரியான மருந்து கொடுக்கப்பட்டால் தான் அந்த நோயை குணப்படுத்த முடியும். அதுபோல் ஒரு பிரச்னைக்கு, சரியான தீர்வு தான், மருந்தாக இருக்க முடியும். தமிழர்-சிங்களவர் பிரச்சினைக்கு தீர்வு “தமீழீழம்” மட்டுமே. அது இல்லாதவரை பிரச்னை இருக்கும். பிரச்னை இருக்கும் வரை போராட்டமும் தொடரும் என்பதோடு, தமிழர்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் தொடர்ந்த அடக்குமுறையும், அங்கு தமிழினத்தை அழித்தொழிக்கும் முயற்சியும், தமிழிர் பகுதிகளை கபளீகரம் செய்கின்ற போக்கும், தமிழர் பகுதிகளில் இராணுவ மயப்படுத்தலும், பிரச்சினையை நீடிக்கச் செய்து, போராட்டத்தைத் தொடரச் செய்யுமே தவிர, முடக்கி விடாது. எனவே, உலக சமூகம் இதை உணர்ந்து, தமிழர் தரப்பு பக்கம் நின்று, ஆராய்ந்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபையைக் கொண்டு தமிழர்களிடத்தில் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தமிழீழம் சாத்தியம் என்பது மட்டுமல்ல தமிழீழம் மட்டுமே தீர்வு.
- சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியா பொருளாதார ரீதியாக உதவினால் போதும், அரசியல் ரீதியாக தலைவர்கள் தலையிட வேண்டாம் என்ற தொனியில் பேசியுள்ளாரே வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். அது குறித்து உங்கள் கருத்து என்ன ?
இது உள்வீட்டுப் பிரச்சினை, தமிழகத் தலைவர்கள் வேண்டாம் என்பது போல் செய்தி வந்தது. ஆனால், அவர் அதற்கு உடனே மறுப்பு தெரிவித்து விட்டார். அவ்வாறு கூறவில்லை என்றும், என் கருத்து திரிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். அவர் நேர்காணலை வெளியிட்ட இதழ் குறித்தும் நமக்குத் தெரியும். எனவே, அது குறித்து விவாதம் தேவையில்லை என்றே கருதுகிறேன்.
- தமிழகத்தில் ஓவியம் குறித்த ஆர்வமும், புரிதலும் எப்படி இருக்கிறது?
கடந்த 30 ஆண்டுகளாக ஓவியனாக இயங்கி வருகின்றேன். தமிழகத்தின் பல இடங்களில், சிறு நகரங்களில் கூட கண்காட்சி நடத்தியிருக்கின்றோம். சாதாரண மக்கள் கூட ஓவியங்களைப் பார்த்து, கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்கள். ஓவியங்களை மக்களிடமும் கொண்டு சென்றால் ஆர்வமுடன் வந்து பார்க்கிறார்கள். புரிதலிலும் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், ஓவியம் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருக்கிறது. மக்களுக்கும் ஓவியர்களுக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. ஓவியங்களின் உள்ளடக்கம் மக்களுடையதாக இல்லை, உருவமும் மக்களுக்கானதாக இல்லை என்று மக்கள் கருதுகின்ற நிலையில், பல்வேறு முற்போக்கு சமூக இயக்கங்கள் துணையோடு நாம் மக்களிடம் நெருங்கியிருக்கின்றோம். மக்களுடைய பிரச்சினைகள் குறித்து, மக்கள் மொழியில் பேசினால், ஆர்வமுடன் பங்கேற்பதோடு புரிந்துகொண்டு எதிர்வினையாற்றவும் செய்கிறார்கள். தொடர்ச்சியான முயற்சிகளால் இன்னும் அதிகமான ஆர்வத்தையும், புரிதலையும் ஏற்படுத்த முடியும்.
- ஒரு உணர்வை, சம்பவத்தை இலக்கியப் படைப்பாக்குவதை விட ஓவியமாக்குவது எளிதா ?
உணர்வு ஒன்று தான், மொழிதான் வேறு. இலக்கியப் படைப்பில் அந்த உணர்வைக் கொண்டு வருவதற்கு அந்த மொழியை இலாவகமாக பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், அந்த உணர்வை ஓவியத்தில் வெளிப்படுத்த காட்சி மொழியை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அதனதன் வடிவத்தில் அதனதன் வேலையை அது செய்யும். படைப்பாளர்களைப் பொறுத்து மாறும் என்றாலும் வாசகர்களிடம், பார்வையாளர்களிடம் அதிக ஈர்ப்பைப் பெறுவது ஓவியம் தான்.
- ஒரு ஓவியனால் பொருளாதார ரீதியாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வது சாத்தியம் தானா ?
தமிழகச் சூழலில், ஒரு ஓவியன் பொருளாதார ரீதியாக வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை. கலைப்படைப்புகளை வாங்கி சேகரிப்பது என்பது பழக்கம் இல்லாத ஒன்று. இல்லத்தில் ஓவியங்களை மாட்டி அழகுபடுத்துகின்ற பழக்கமில்லை. கேளிக்கைகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கின்ற வசதி படைத்த தமிழர்கள், ஒரு ஓவியனின் ஓவியத்தை வாங்குவதற்கு பணமிருந்தும், மனமில்லை. மேலை நாடுகளில், ஏன் இந்தியாவில் மும்பை, தில்லி, கல்கத்தா போன்ற நகரங்களில் உள்ளது போல், தமிழகத்தில் இல்லை. மேலை நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் மிகவும் சிரமம். இந்தியாவின் பிற நகரங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் மிக மிகச் சிரமம். இந்திய அளவிலேயே ஓவியத்தை மட்டுமே வைத்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்டவர்கள் மிகச் சிலரே.
- உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன ?
மனித விடுதலையை நோக்கியே எனது பயணம். அது என் ஓவியமாக இருந்தாலும், என் எழுத்தாக இருந்தாலும், என் பேச்சாக இருந்தாலும் அதை நோக்கித்தான். என்னுடைய அனைத்துச் செயற்பாடுகளும் அதை நோக்கியே இருக்கும். செய்வதற்கு நிறைய இருக்கிறது. காலமும், சூழலும் அதைத் தீர்மானிக்கும்.
|