தமிழ்ச் சூழலில் கலைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓவிய கலைத்துறையில் நாட்டம் உள்ளவர்களுக்கும் தன்னுடைய ஓவியங்களால் தொடர்பு கொண்டிருப்பவர் ஓவியர் புகழேந்தி. மேற்குலக ஓவியர்கள், அகமும் முகமும், நெஞ்சில் பதிந்த நிறங்கள், கிழவன் அல்ல கிழக்குதிசை, வண்ணங்கள் மீதானவார்த்தைகள், ஓவியர் புகழேந்தியின் முகவரிகள், உறங்கா நிறங்கள் என பல்வேறு ஓவிய நூல்களை படைத்தவர்.தூரிகையின் தூண்டலில் சர்வதேச தமிழ் அடையாளம் பெற்றவர். பெரியார், அம்பேத்கார், மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் சிந்தனையில் தோய்ந்தவர். கம்யூனிச கொள்கையாளர்.
ஒடுக்கப்படும் போதெல்லாம் திமிறி எழும் மானுடம் வேண்டி தன் வண்ணங்களை கொண்டு எண்ணங்களை பதிவு செய்வதோடு வலிகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் ஒரு மின்கடத்தியாக தூரிகையை பயன்படுத்தும் ஓவியர் புகழேந்திக்கு, ஓவியம் பொழுது போக்கல்ல. வாழ்வும் இலட்சியமும் ஆகும். குறிப்பாக எங்கெல்லாம் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் மக்கள் மீது திணிக்கபடுகிறதோ அவர்களின் வலியை தன் வலியாக உணர்ந்து அதை ஓவியம் ஆக்குகிறார். ஏராளமான பேட்டிகள் ஜனரஞ்சக பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் தின நாளேடுகள், ஒளி ஒலி ஊடகங்களில் வந்திருந்தாலும் அண்மையில் சர்வதேச சந்தையில் முதன் முதலில் இவர் எழுதிய “தமிழீழம்” என்ற நூல் காட்சிப்படுத்த பட்டதை முன்னிலைப்படுத்தும் இந்த நேர்காணல் கவனத்துக்குரியது.
சர்வதேச சந்தையில் ஆங்கிலத்தில் பன்னாட்டு நூல்கள் இடம்பெறும் சூழலில் முதன் முதலாக “தமிழீழம்” என்ற நூல் காட்சிப் படுத்தப்பட்ட செய்தியை எப்படி உணர்கிறீர்கள்?
இந்நூலை எழுதும் போது என்ன வலியோடு எழுதினேன் என்று சொல்ல வேண்டும். 2005ல் தமிழீழத்தில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.அதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து கண்ணீர் விட்டு அழுததும், தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு எமக்கு இல்லை என்று சொன்னதும், என்னை மிகவும் பாதித்தது. இந்த கண்காட்சி பதினைந்துக்கும் மேற்பட்ட இடத்தில் காட்சி படுத்தப்பட்ட போது பலரும் இதையே பிரதிபலித்தனர். நாங்கள் அனாதையோ என்று நினைத்து இருந்தோம் ஆனால் தங்கள் வருகையால் அது மாறியுள்ளது. அவர்களுக்கு நான் சொன்ன பதில் “நீங்கள் அநாதை இல்லை" என்பதுதான். இதை சொல்ல நான் அங்கே போகவில்லை அவர்கள் நெருக்கடி என்னை சொல்ல வைத்தது. எங்கள் போராட்டம் உங்கள் ஊடகங்களில் வெகுவாக ஒளிபரப்பப் படவில்லை. அவர்கள் இப்படி சொன்னபிறகு நான் அவர்கள் பற்றி விரிவாக எழுத விரும்பினேன். இந்த நூலில் மிகைப்படுத்தல் இல்லாமல் வரலாற்று கடமையோடு எழுதினேன். 2006-ல் தமிழீழம் என்ற சொல்லை உச்சரிக்க முடியாத சூழல் இருந்தாலும், தமிழ் மக்களுக்காக புலம் பெயர்ந்தவர் களுக்காக இதை எழுத தீர்மானித்தேன். புலம் பெயர்ந்தவர்கள் பலரும்பல விடையங்களை அறிந்திருக்கவில்லை என என்னால் உணரமுடிந்தது. இந்த நூல் ஐந்து பதிப்புக்களை கண்டுள்ளது.
இது எனக்கு வெற்றியில்லை,தமிழீழத்தை எதிர்த்த பல சிந்தனையாளர்களும் இந்த நூலை படித்து விட்டு தங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டனர். இது என் சிந்தனைக்கும் எழுத்துக்கும் கிடைத்த வெற்றி. குறைந்தது ஆயிரம் நபர்களை இந்த நூல் மாற்றியிருக்கிறது. அப்படிப்பட்ட நூல் இது. சர்வதேச புத்தக சந்தையில். தமிழீழ விடுதலைக்கு எதிராக இருந்தவர்களே இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
இந்த நூலை திருச்சி புனித வளனார் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் தாமஸ் அவர்களை மொழி பெயர்க்க முனைவர் அந்தோணி குருசு(தமிழ் பேராசிரியர்) உதவினார். ஆங்கில நூல் 2008ல் முடிந்தாலும் முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகுதான் இந்நூல் சர்வதேச கண்காட்சிக்கு வருகிறது. இந்த செய்தி வந்த பிறகு மறுநாளே இலங்கை அதிபர் “போர்குற்றவாளி” என்று ஐநா அறிவிப்பு செய்கிறது. இத்தகைய சூழலில் இந்நூல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவந்திருப்பது இதன் அவசியத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.
தமிழ்நூல் முதன் முதலில் சர்வதேச சந்தையில் காட்சி படுத்தப்படுகிறது என்பது தமிழுக்கு பெருமை. அதற்கு நான் ஒரு கருவி. அதிலும் ஈழம் சார்பான நூல் வெளிவந்திருப்பது, அந்த மக்களுக்கு பெருமை சேர்க்கின்றது.தமிழ் அடையாளம் சர்வதேசியம் ஆகி இருக்கிறது. எந்த நோக்கத்துக்காக இந்த நூல் எழுதப்பட்டதோ அதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கிறது என்ற நிறைவைத் தருகிறது.
சமூக விடுதலைக்கு தங்களின் பங்களிப்பு என்ன?
சாதி விடுதலை, மத விடுதலை, வர்க்க விடுதலை என்பன மனிதனை மனிதன் நேசிப்பதில்லை என்பதனால் பேசப்படுவதுதான், உலகின் பிரச்சனைகளை என்னுடைய பிரச்சனைகளாக பார்ப்பதனால் தான் விடுதலையை பேச வேண்டும் என்று தோன்றுகிறது. விடுதலை சமூகத்தில் புறக்கணிக்க படுவதால் தான் அடக்கு முறையின் வெளிப்பாட்டையும் மீட்ச்சியின் அவசியத்தயும் ஓவியங்களில் பதிவு செய்கிறேன்.
ஓவியங்களின் தத்துவார்த்த பின்னணியை சொல்ல முடியுமா?
நாம் வாழ்வில் காணும் அனுபவங்கள் வாழ்வின் மீதான அந்நியத் தன்மை ஒடுக்குமுறை யாவற்றையும் உயிர்த்துடிப்போடு கூடிய இம்ப்ரஷனிசத்தோடு இழப்பை மீட்டெடுப்பதுமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் க்யூபிசம் போன்றவற்றையும் இணைத்து தான் ஓவியம் வரைய முடியும். எனவே எல்லா விதமான கோட்பாடுகளின் உள்ளடக்மே ஓவிய வெளிப்பாடாகும்.
ஒரு வாசகனுக்கு இம்ப்ரஷனிசம், க்யூபிசம், சர்ரியலிசம் பற்றிய புரிதலை எப்படி ஏற்படுத்துகிறீர்கள்?
எப்படி கவிதைகளில் பயன்படுத்துகின்றோமோ அப்படித்தான் ஓவியத்திலும். இசம் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விட என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வாசகன் புரிந்து கொள்வதன் மூலம் தான் படைப்பளனுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவரவர் வாசிப்பு அனுபவம் அவற்றைத் தொடர்பு படுத்திக் கொண்டு அந்த ஒவியத்தோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்வது எனச் சொல்லலாம்.
அரசு பணியில் இருந்து கொண்டு தூரிகையை சமூக தாக்குதலுக்கு எதிராக பயன்படுத்துவதால் ஏதேனும் நெருக்கடி உண்டா?
இருபத்தெட்டு வருடமாக ஓவியனாக இருந்து வருகிறேன், படைப்புச் சுதந்திரம் உண்டு. அதை யாரும் பறிக்க முடியாது, யாரும் என் சுதந்திரத்தில் தலையிடுவதை நான் அனுமதிக்க மாட்டேன். அரசு பணியில் நான் குறை வைத்தால் அரசு தலையிடலாம். அதில் நான் குறை வைப்பதில்லை. என் பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவேன். அத்து மீறி என் படைப்பில் தலையிடும் போது நான் அதை ஏற்று கொள்வதில்லை.
நூறுக்கும் மேற்பட்ட கண்காட்சிகள் நடத்திய பிறகு வரும் ஊடக செய்திகளை பார்த்து விட்டு அரசு நோட்டிஸ் விட்டது. சிந்தனை தாக்கம் உள்ள தோழர்கள் நடத்துகிறார்கள் என பதில் சொன்னேன் ஒரு படைப்பாளனை சட்டரீதியாக அடக்க முடியாது.
தங்களுக்கு முன்னோடி ஓவியங்கள் உண்டா?
பொதுவாக ஓவியங்கள் வியாபாரம் சார்ந்து இருக்கின்றன, ஓவியங்கள் ஆயிரம், லட்சம், கோடியில் விற்பனை ஆகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஒவ்வொருவரும் ஒரு ஏஜென்ட் மூலம் விற்பனை செய்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மாணவர் போராட்டத்தில் பங்கு எடுத்து கொண்ட பிறகு சமூகம் சார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் ஈழ பிரச்சனை தொடங்கியது. இது தான் எனக்கு பெரிய தாக்கத்தை தந்தது. அதன் பிறகு ஈழம் சார்ந்த ஓவியங்களை வரைந்தேன். பிறகு தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங் களில் நடந்த சாதி கலவரம் ஓவியத்தின் மையம் ஆனது. தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் மதக்கலவரங்கள், உலகளாவிய அளவில் மிகக் கொடூரமாக நடத்தப்படும் இனப்படுகொலைகள் எல்லாம் என் ஓவியத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு பிக்காசோவை நினைவு படுத்த விரும்பு கிறேன். பிக்காசோ அடக்குமுறைக்கு எதிராக படைக்கப்பட்ட ஓவியம் 'குவர்னிகா' குவர்னிகா நகரம் குண்டு போட்டு அழித்த அந்த வரலாற்றை பிக்காசோ குவர்னிகா என்ற தலைப்பில் பெரிய ஓவியமாக செய்தார். இருபதாம் நூற்றாண்டில் வன்முறையை சொல்லும் முன்னோடி ஓவியம் இது. வீர சந்தானம் ஓவியங்களையும் நான் கவனத்தில் கொண்டிருக்கின்றேன்.
ஓவியங்களைத் தீட்டும் போது அவற்றிற்குரிய வண்ணங்களுடன் தீட்டப்பட்டால் தான் உயிர் பெறும். வண்ணத்துக்குரிய உளவியலை அறிந்தவர்கள் ஓவியத்தை பார்க்கும் போது என்ன நிற வண்ணம் பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சேர்த்து தான் கவனிப்பர். நீங்கள் உங்கள் ஓவியங்களுக்கான வண்ணத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
இது நல்ல கேள்வி வண்ணம் நம் மண் சார்ந்தது. பழுப்பு, கருநீலம், செம்மஞ்சள், செம்மண் இவை நமது சூழலுக்கு உரியவை. நான் பிறந்தது சிறு கிராமம். வளர்ந்ததும் கிராமத்தில் தான். பழகியது வாழ்ந்தது உழவர்களோடு, அவர்களின் உடலமைப்பு (Anatomy) அங்க அடையாளம் என் மனதில் ஓர் அழுத்தமாகப் பதிவாகி விட்டது. அவர்களது உடலமைப்பில் உள்ள வலிமை என் படைப்பில் உரமானது. அதே போல அவர்களது நிறம், சேற்றில் அவர்கள் வேலை செய்யும் போது உள்ள நிறம் தான் என் ஓவிய வண்ணம். நிறங்கள் என்கிற போது தமிழ் அடையாளம் சார்ந்து படைக்கிறேன், கையாளுகிறேன்.
தங்கள் ஓவியங்களில் சாதியக் கலவரங்கள் சர்ந்த பதிவுகள் உண்டா?
ஈழ விடுதலையில் 15 வயதில் ஈடுபட்டதால் எல்லா வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. 1990 அய்தராபாத்தில் உள்ள மத்திய பல்கலை கழகத்தில் முதல் முதுகலை ஓவியராக படித்துக் கொண்டிருந்த போது அங்கே முற்போக்குச் சிந்தனையுள்ள (Progressive student) மாணவர்கள் ஓர் அமைப்பாகி மண்டல் கமிசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர், பிறகு மண்டலுக்கு ஆதரவானவர் பலரும் இந்த அமைப்பில் சேர்ந்தார்கள். ஆனால் ஆந்திர அரசு மக்கள் யுத்த குழு (PWG) என இவர்களை எதிர்த்தது. சுண்டூரில் 21 தலித்துக்களை ஆதிக்க சாதி வெறியர்கள் வெட்டி ஆற்றில் வீசி எறிந்தார்கள். அச்சமயத்தில் நான் அங்கு சென்றேன். அவர்களுடன் இருந்தேன். மக்கள் பட்ட துன்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1961 ல் நாகை மாவட்டம் வெண்மணியில் நடந்த படுகொலைச் சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகு எனக்கு (நான் தஞ்சையில் பிறந்ததால்) குற்றவுணர்வை உண்டாக்கியது. இதை நான் 1991ல் ஆந்திராவில் தெரிந்து கொள்கிறேன். உடனே சுண்டூர் படுகொலை ஓவியமாகிறது. அதே போல் முத்தம்மா என்ற பெண் ஆதிக்க சாதிகளால் கற்பழிக்கப்பட்டு நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சந்தையில் பல மணி நேரம் கட்டி வைக்கப்பட்டாள். இது “சலகுருத்தி” என்ற இடத்தில் நடந்ததால், சலகுருத்தி என்ற தலைப்பில் ஓவியமாக வரைந்தேன். இது ஆனந்த விகடனில் வந்தது. நான் முன்னர் குறிப்பிட்டது போல இருபதாம் நூற்றாண்டின் பதிவை ஓவியமாக்கிய போதும் உலகளாவிய மாற்றங்களை பதிவு செய்த போதும் தமிழ் நாட்டில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக கீழ் வெண்மணியில் விவசாயிகள், உழைத்ததற்காக அரைப்படி நெல் கூடுதலாக கேட்டதால் நாற்பத்தி நாலு பேர் ஒரு குடிசையில் அடைக்கப்பட்டு எரிக்கப்பட்ட கொடூரத்தை ஓவியமாக்காமல் இருக்க முடியுமா? தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய வன்முறை இது என்று நான் கருதுகிறேன். அதனைத் தொடர்ந்து உலகளாவிய தொழில்நுட்ப, கணினி யுகப் புரட்சி அடைந்த பிறகும் மனிதன் சக மனிதனுக்கு மலம் தின்ன கொடுத்த திண்ணியம் நிகழ்ச்சியும் என் தூரிகைகளில் கனத்தது. கர்நாடகா பெங்களூரில் நடந்த கண்காட்சியில் இந்த திண்ணிய ஓவியத்தை கண்ணுற்ற மிகப்பெரிய எழுத்தாளர் கவிஞர் சித்தலிங்கையா குறிப்பெடுத்து கொண்டார் இந்த நிகழ்ச்சியின் பின்னணியை கேட்டு வருந்தினார். இந்த ஒடுக்குமுறைகள் ஓவியத்தின் மூலம் உலகளாவிய பார்வைக்கு முன் வைக்கப்படுகிறன.
ஓவியங்களை எத்தகைய இடங்களில் காட்சிபடுத்துகிறிர்கள்?
ஓவியத்தை மக்கள் மிக எளிதாக நெருங்கும் இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும். இதை நட்சத்திர அரங்கங்களில் காட்சிப்படுத்தும் போதும் நோக்கம் சார்ந்து இயங்கும் போதும் மக்கள் அன்னியமாகின்றனர். நான் மக்கள் கூடும் இடத்தில் வைக்கிறேன். தெரு முனையிலும் வைத்திருக்கிறேன். வெளிநாடுகளில் குறிப்பாக மலேசியாவில் மத்திய சந்தையில் (Central Market) மக்கள் கூடும் இடத்தில் வைக்க சொன்னன். படைப்பை உருவாக்கும் போதே ஏன் செய்கிறோம்? யாருக்காக? யாருக்காக காட்சிப்படுத்துகிறோம் என்ற நோக்கத்தோடு நான் செயல்படுவதால் வெற்றி கிட்டுகிறது என உணர்கிறேன்.
தற்போதைய மாணவர்கள் ஊடகத்தில் அதிக நேரம் செலவு செய்கிறார்கள் ஒருவருக்கொருவரான அலைபேசித்தொடர்பில் தங்கள் நேரத்தை செயவிடுவதாக பலரும் கருதுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் ஓவியம் மூலமான செய்தி உண்டா?
சமூகம் சார்ந்து இயங்கும் இயக்கங்களில் இளைஞர்கள் தங்களை ஒருங்கிணைத்து கொள்வதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் ஆனால் என் ஓவியத்துக்கு அப்படி இல்லை. பொதுவாக இளைஞர்கள் வருகிறார்கள். மாணவகளைப்பார்க்கும் போது அவர்களுக்கு யாரிடமும் நம்பிக்கையில்லை. பொழுது போக்கு ஊடகங்களில் அவர்கள் ஆர்வம் காட்டினாலும் ஓவியத்தை பார்ப்பதில் குறிப்பாக, பெண்கள் மிக கூர்மையாக இருக்கிறார்கள். ஓவியத்தை கூர்ந்து கவனித்து சமூகத்தை புரிந்து கொள்கிறார்கள்.
நம்மை நாம் செதுக்கி கொள்வதற்கு சமூக போராட்ட நிகழ்வு காரணமாக இருப்பதை போல ஓவிய காட்சி இளைஞர்களுக்கு மாற்று திசையை கற்பித்து தருகின்றது. அந்தந்த ஊர்களில் உள்ள பெரியவர்கள், இளைஞர்கள் ஓவிய காட்சிக்கு அதிகமாக கூடுகிறார்கள். ஓவிய காட்சிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது ஒரு கலை. கலை சார்ந்து இயங்கும் இயக்கம். அரசியல் என்பது அப்படியில்ல அது ஒரு கூட்டம்.
கண்காட்சியில் பார்க்கும் ஓவியச் செய்தி கூர்மையானது ஆயிரம் கூட்டங்களில் பேசும் பேச்சின் தாக்கத்தை விட ஓர் ஓவியம் ஈர்க்கிறது. மிகப்பெரிய அளவில் மாணவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்த ஓவியங்கள் பயன்படுத்தப் படுகின்றன. சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் கண்காட்சியை ஏறத்தாள 5000 மாணவிகள் பார்வையிட்டனர். ஓவியங்களை பார்வை யிடுவதற்கு முன்னர் இருந்த மனநிலைக்கும் பார்வையிட்ட பின்னர் இருந்த மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். தங்கம் என்ற மாணவி போர்குணத்தை உருவாக்குகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மோகனா என்ற பெண் மலேசியா நாட்டில் இருந்து உங்கள் கலை சாதித்கிறது என எழுதியிருந்தார், நான் படைக்கும் ஓவியங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன விடுதலை மட்டுமல்ல, சாதிய விடுதலையையும் ஆயுதத்தால் வெல்ல வேண்டி இருக்கிறது. இது இளைஞர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
உங்கள் படைப்புக்களில் துயரம் அதிகமாக வெளிப்படுகிறது அழவைப்பது உங்கள் நோக்கமா?
அழ வைப்பது என் நோக்கமல்ல. இன்னும் பிறரை அழவைக்கக் கூடாது என்பதற்கான ஒரு விழிப்புணர்வுதான் என் படைப்பு. இருள் என்பதை பார்த்திருக்கிறீர்களா? காலம் காலமாக மகிழ்ச்சி இருப்பது போலவும் அதனால் கவலையை படைப்பாக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர். இருட்டில் நாம் வாழ்கின்றோம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. ஒரு படைப்புக்கு கடமை இருக்கிறது. சமூகம் இந்த சீரழிவில் இருக்கிறது என சுட்டிகாட்டுவது தான் அந்த கடமை. இதை மாற்ற வேண்டிய தீர்வைச் சொல்ல வேண்டும்.
வெறும் ஓவியராக மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கத்துக்காக சமூக போராளிகளுடன் சேர்ந்து செயற்பட்டிருக்கிறிர்களா?
சமூக செயர்பாட்டளர்களுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்றும், மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.
எல்லோரும் மானிடரே உனக்கும் எனக்கும் மனசு ஒன்றுதான் ஆனால் தமிழினம் சிங்கள இனம் எனப்பிரித்து சிங்கள தலைமை அமைச்சுக்கள் தமிழ் மக்களை ஒதுக்கலாமா? இந்த இனப்போரில் பௌத்தத்தின் நிலை என்ன?
பௌத்தம் சார்ந்து நான் பார்க்க வில்லை. மனிதனை மனிதன் அடக்குவதை சாதி, மத, வர்க்க, இனம் சார்ந்து அடக்குகிறனர். ஆனால் நான் இதை அப்படிப் பார்க்க வில்லை. கிளிநொச்சி நகரத்தில் நடந்த பாராட்டு கூட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குவதால் தமிழர் பக்கம் நிற்கிறேன். சிங்களவரை தமிழர் ஒடுக்கினால் சிங்களவர் பக்கம் தான் நிற்பேன். என்று பேசினேன். நான் யார் அடிபட்டாலும் துடிப்பேன். நான் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர் பக்கம். எங்கு தமிழன் அடிபட்டாலும் எனக்கு துடிக்கும். இதை ஒரு தொப்புள் கொடி உறவாக பார்கிறேன். உலக பார்வையோடு இருக்க வேண்டும். குஜராத்தில் 2002ல் நடந்த கோத்ரா ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர் வன்முறை, மதக்கலவரமாக வெடித்த போது, மதத்தின் பேரால் மனிதன் மனிதனை அழிக்கக் கூடாது. என்பதை பிரதிபலிப்பதாகத்தான் குஜராத் கலவரம் ஓவியம் ஆக்கப்பட்டது. சோமாலியாவின் வறுமையும் அப்படித்தான். விழுப்புரத்தில் நடந்த கண்காட்சியை பார்வையாளர் ஒருவர் பார்த்து விட்டு ‘குறிகளாய் விறைத்த சூலம்’ ஓவியத்தை கண்ணுற்ற அவர் இது ஆபாசமாக தெரியவில்லையா என்று கேட்டார். நான் கேட்டேன் அங்கு நடைபெற்ற நிகழ்வு குறித்து வெட்கப்படவில்லையா? வேதனைப்படவில்லையா? அருவருப்பாக இல்லையா? என்று கேட்டேன். என்ன இருந்தாலும் இது ஆபாசமாக தெரியவில்லையா? என கேட்டவரை மறித்து அந்த நிகழ்வு உனக்கு அசிங்கமாக தெரியவில்லையா? நீ வெளியே போ என்று சொல்லி வெளியேற்றினேன்.
உலகாவிய அங்கீகாரம் உங்கள் படைப்புகளுக்கு கிடைத்திருக்கிறதா?
1980 களில் கவிஞர் இன்குலாப் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். காஷ்மீரில் நடந்த படுகொலை, ஈழத்தில் நடந்த ஈழப்பெண்ணின் கருச்சிதைவு, குஜராத்தில் நடந்த கலவரத்தில் நடந்த கருச்சிதைவு, யாவும் தொடர்ந்து ஒடுக்குமுறை சார்ந்தவையாக இருப்பதால் மண் சார்ந்த நினைவு படுத்தல் அவசியமாகிறது. இதை பதிவு செய்திருப்பதால் உலகளாவிய பார்வை அங்கீகாரம் என்படைப்புக்கு கிடைத்துள்ளது. காட்சி மொழி பொது தன்மையோடு இயங்கி கொண்டிருக்கிறது.
போர் சார்ந்த எதிர் மனநிலை உருவாக்கியிருப்பதாக கருதுகிறீர்களா?
போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர் வேண்டுமானால் போராட்டம் முடிந்து விட்டது எனச் சொல்லலாம். எந்த போராட்டத்திலும் தொய்வு, தற்காலிக நிறுத்தம் ஏற்படுவது இயல்பு. ஆனால் எப்பொழுதும் போராட்டம் சாதி,மத,இன விடுதலையை கூர்மைப்படுத்தி முன்னை விட களம் விரிந்துள்ளது. உலகளாவிய சந்தையில் ஆயுதம் இல்லாமலே போராட்டம் கூர்மையடைந்துள்ளது. இதற்கு ஐநாவின் அறிக்கை சான்றாக நிற்கிறது. எல்லா ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டம் நடக்கும். அதன் இறுதி இலக்கு விடுதலை. அது நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
பெண்கள் படைப்பாளர்களாக மட்டுமல்லாமல் போராளிகளாக தம்மை உணர்கிறார்களா?
இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதி எழுதிய எழுத்து தாக்கம் போல அந்தந்த மண் சார்ந்த எழுத்தாளர்களால் எல்லா நாடுகளிலும் நடந்திருக்கிறது. ஈழத்திலும் அப்படியே. மிகக் குறிப்பாக பேசப்படும் எழுத்தாளர்கள் புதுவை இரத்தினதுரை, காசியானந்தன், பெண்களில் ஆழியான், ஆதிலட்சுமி, மலைமகள் (போராளி) மற்றும் புலம் பெயர்ந்த பெண் எழுத்தாளர்களும் நிறைய எழுச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எழுதும் பெண்ணிய வாதிகளின் எழுத்துக்களின் வரிசையில் ஈழப்பெண் கவிஞர்கள் ஒத்த அலை வரிசை சிந்தனையோடு பயணிக்கிறார்களா?
பெண் விடுதலை பற்றி எழுத்தாளர்கள் கவிஞர்கள் போராளிகள் என எல்லோரும் எழுதினாலும் ஈழ எழுத்து வீரியம் மிக்கது. ஆணுக்கு பெண் சமம் என்பது போர்க்களத்தில் சாத்தியப்பட்டிருக் கிறது. என் ஓவியத்தில் பெண் போராளிகளை ஏன் அதிகம் பதிவு செய்திருக்கிறேன் என்றால், ஆண் சாதித்ததை விட பெண் சாதிப்பு அதிகம், தன்னையும் பாதுகாத்து கொண்டு இனத்தையும் பாதுகாத்து கொள்பவர்கள் தான் உண்மையில் பெண்ணிய வாதிகள். அது ஈழத்தில் சாத்தியமாகி இருக்கிறது. அங்கே போராளிகள் குடும்ப மதிப்பீடுகளை தகர்த்து எளிய முறையில் பெண்விடுதலையை கூர்மைப்படுத்தும் பெண்ணிய வாதிகளாக உள்ளனர். கலைப்படைப்பு என்பது உறங்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப வேண்டும் பெண்ணியம் சார்ந்து பேசும் போது புத்தோவியங்களில் உள்ள நிர்வாணம், விரகம் சார்ந்ததல்ல, போராளிகளாக இருப்பவர்கள் கணவன் இறந்து போனால் அதே போராட்ட களத்தில் வேறு நபரை திருமணம் செய்து கொண்டு சுதந்திரமாக செயல்படுகிறார்கள். பெண்கள் தங்களுக்கான ஆணை தெரிவு செய்வததை அங்கே பார்க்க முடிகிறது. அனேகமாக இது தான் உண்மையான பெண்ணியமாக இருக்க முடியும். சடங்குகள் ஏதும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒன்று சேர்கிறார்கள். பெண்ணின் சுயத்தை அங்கிகரிக்கும் இயக்கமே உண்மையானதாகும். இது ஈழத்தில் நிகழ்ந்திருக் கிறது.
பெண்ணின் உளவியல், போர் முனையில் எப்படி இருக்கும் இதை பதிவு செய்திருக்கிறீர்களா?
தாயும் சகோதரியும் எப்படி சிங்களவர்களால் பாதிக்கப் பட்டிட்ருக்கிரார்களோ அதில் இருந்து நாம், போராளியாக மாற வேண்டும் என்ற முடிவு எடுக்கும் போதே பெண்களின் உளவியல் மாகிறது. தாயாக, சகோதரியாக இருக்கும் ஒரு போராளியின் மனத்தை உலக நாடுகளில் உள்ள பெண்களின் மனத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது ஈழப்பெண் போராளிகளின் பெண் விடுதலை சிந்தனை பெண்ணியத்தின் அடையாளத்துக்குச் சான்றாகும்.
பெண்ணியத்தின் அடுத்த கட்ட நகர்வை உங்கள் ஓவியங்கள் பேசுகின்றனவா?
பெண்/போர்/அடக்குமுறை விடுதலை எல்லாம் என் படைப்பில் பதிவாக்கி உள்ளளன. முதல் கட்ட பணியைத்தான் நான் செய்திருக்கிறேன். இன்னும் ஆளமாக கலையில் வெளிப்பட அவர்களே தூரிகை ஏந்த வேண்டும் பிரச்சனையை நான் உணர்ந்து வரைவது ஒரு புறம் சமூக விளிப்புணர்வுக்கு பயன்பட்டாலும் பெண் பிரச்சனையை பெண் பேசவேண்டும். தலித் பிரச்சனையை தலித் பதிவு செய்வதைப்போல எழுத்தில், ஓவியத்தில் அந்த வலி பதிவானால் தான் அது எதிர் மனநிலை சார்ந்த அசைவை உருவாக்கும்
ஒரு நல்ல படைப்பாளனாக இருக்கும் நீங்கள் உங்கள் கலையை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவீர்கள்?
சலிப்பில்லாமல் தொடர்ந்து இயங்க வேண்டும். குறைந்த பட்ச மாற்றத்தை கொடுக்க முடியும் என நான் வலிமையாக நம்புகிறேன். |