எண்ணத்தின் வண்ணங்கள் நேர்காணல்: கணபதி கணேசன் செம்பருத்தி, மலேசியா, ஆக. 2000 ஈழமுரசு (பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா) செப்.2000
ஓவியர் புகழேந்தி தூரிகையைத் துப்பாக்கியாக்கியவர். மனித இதயங்களில் வண்ணங்களாய் நுழைபவர். கடந்த நூற்றாண்டு வரலாற்றை ஓவியமாக்கிக் கண்காட்சி வழி உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல எண்ணங் கொண்டுள்ளவர். அவரது "உறங்கா நிறங்கள்" ஓவியக் கண்காட்சி, தமிழகத்தைத் தாண்டி முதல் தடவையாகக் கோலாலம்பூரில் சென்ட்ரல் மார்க்கெட் வளாகத்தில் ஜூலை மாதம் 17 முதல் 21 வரை செம்பருத்தியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள மலையகம் வந்திருந்த ஓவியர் புகழேந்தியைச் சந்தித்தோம். அவரது கருத்தின் வண்ணச் சிதறல்கள் இவை. ஓவியத்திற்கும் சமூகத்திற்குமான உறவுகள் எப்படி இருக்கின்றன? சமூகம் ஓவியங்களை எப்படிப் புரிந்து கொள்கின்றது?
இன்றைய கலை இலக்கியச் சூழலில் சமூகம் ஓவியம் என்று எடுத்துக் கொண்டால் இரண்டும் ஒன்று இணையவில்லை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். அதற்குக் காரணம் சமூகப் பார்வைகொண்ட ஓவியர்கள் மிகக் குறைவானவர்களே சமூகத்தில் இருக்கிறார்கள். மக்களுடன் தொடர்புகொண்டு மக்களின் பிரச்சினைகளை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தும் பண்பு குறைந்து கொண்டு வருகின்றது. எந்த இலக்கிய வடிவமாக இருந்தாலும் மக்களுக்கும் கலைகளுக்குமான பிணைப்பு நெருக்கமாக இருக்க வேண்டும். அந்த நெருக்கம் நேற்று இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அந்த இலக்கை அது அடையவில்லை. தனது கலைப் படைப்புக்களை விற்பனை செய்யும் சந்தையாக மக்களைப் பார்க்கிற பண்பு இவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் படைப்பு புரியாவிட்டால் மக்களுக்குக் கலை மீதான ஞானம் குறைவாக இருக்கிறது என்று சொல்கிற கருத்தும் கவனிக்கத்தக்கது. என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
கடந்த நூற்றாண்டின் போராட்ட வாழ்வை மட்டும் படம் பிடிக்கின்ற போக்கு உங்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? காரணம் என்ன?
நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன். நானும் வயல், வயல் சார்ந்த மக்கள் பறவைகள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள் என்று ரசித்துக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவன்தான். ஆனால் முதன் முதலாக நான் ஓவியனாக அடையாளம் காணப்பட்டபோது அந்த உழைக்கும் பெண்கள், பயிர்கள், மரங்கள் என்பனவெல்லாம் என்னைப் பாதித்தன. உழைப்பாளிகளின் உடலசைவுகளை விடவும் மரங்கள், பயிர்கள் என் உணர்வுகளைக் கிளறிவிடவில்லை. உழைப்புதான் கூலிதரும் என்கிற போதிலும் உழைப்பின் பயனாகவே உணவு கிடைக்கும் என்ற போதிலும் அந்த வயதில் மனிதனின் உழைப்பு தருகின்ற வேதனை, உழைக்கும் மக்கள் மூட்டைகளைத் தனியாகச் சுமக்கின்றானே என்கிற சிந்தனை என்னை வாட்டியது உண்மை.
நான் கல்லூரியில் 1983ல் சேர்ந்தபோது தான் இலங்கையில் மிகக் கொடுமையான படுகொலைகள் நடைபெற்றன. அது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விடவும், உணர்வுபூர்வமாய் அப்போது தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுக்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்தத் தருணத்தில்தான் நான் கல்லூரிக்குள் நுழைந்தேன். அதற்கு முன்னாலும் இந்த இனப் படுகொலைகளை எதிர்த்து ஓவியங்கள் செய்வது, பேசுவது என்று இருந்த நான் இ¢த மாணவர் போராட்டத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டேன்.
கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கி ஒரு வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் கல்லூரிக்குள் நுழைந்தேன். எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் என் தந்தைக்கு இருந்தது. எனக்குள் கனவுகள் இருந்தன. எனக்குப் பிடித்தது ஓவியம்தான் என்ற முடிவுக்கு வந்துதான் நான் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
மத ஒடுக்குமுறை, ஜாதீய முறைகளுக்கு எதிரான ஒரு நிலையை நான் எடுப்பதற்கு இந்த ஈழப் போராட்டமே எனக்குக் கற்றுத் தந்தது. போராட்டங்களுக்கான உணர்வை வழங்கும் போக்கு அதனால்தான் ஏற்பட்டது என்று எண்ணுகிறேன்.
வண்ணங்களுக்குச் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
சில வண்ணங்களைப் பார்த்தால் நமக்குக் கண்ணை உறுத்தும். அது இயற்கையாகவே உள்ளது. ஆனால் பசுமையான புல்வெளியையும் பயிர்களையும் பார்க்கும்போது அது மனதுக்குத் தெம்பையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. நம் கண்ணால் எதைப் பார்க்கிறோமோ நாம் அதுவாகவே ஆகிவிடுகிறோம். நாம் நீர் வீழ்ச்சியைப் பார்க்கும்போது அல்லது பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கும்போது மண்பரப்பின் மீது மஞ்சள் வெயில் பட்டுத் தெறித்திருப்பதைப் பார்க்கும்போது வரும் எண்ணத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆனால் அது உண்மை. நமக்கு ஏற்றுக் கொள்ளவும் நம்ப முடியாமலும் போகலாம். ஆனால் அதுதான் உண்மை. வண்ணங்கள் மனநிலை சார்ந்துதான் வெளிப்படுகின்றன. அதுதான் ஓவியத்திலும் வெளிப்படுகின்றது. படுக்கை அறைகளில் வெளிர்நீலம், வரவேற்பு அறையில் வேறு வர்ணம். அது இயற்கையான வண்ணங்கள்தான். படுக்கை அறையில் குளிர்ச்சியும், வரவேற்பு அறையில் பார்ப்பவர்களைச் சாந்தப்படுத்தக் கூடிய வண்ணமுமே பயன்படுத்தப்பபடுகின்றன. அவை மருத்துவ ரீதியில் குணமளிக்ககூடியனவா என்பது பற்றிச் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவை இயற்கையானவை என்பதே உண்மை.
நீங்கள் உங்கள் ஓவியங்களில் வண்ணங்களை எப்படிக் கையாள்கின்றீர்கள்?
வண்ணங்களை நான் என்னுடைய மண்ணில் இருந்துதான் தேர்ந்தெடுக்கின்றேன். மண் என்பது நம் சொந்த நிறம். நம் மண்ணுக்கென்று ஒரு நிறம் இருக்கின்றது. பழுப்பு நிறம், நாம் எந்தச் சூழலில் வாழ்கின்றோமோ அந்தச் சூழலில் இருந்துதான் நான் ஓவியங்களுக்கான வண்ணங் களையும் தேர்ந்தெடுக்கின்றேன். ஒரு தமிழனை வரையும்போது வெள்ளைக்காரனின் உடல் அமைப்பையோ நிறத்தையோ கொண்டு வர முடியாது. அப்படிச் செய்தால் அது உண்மையாக இருக்காது. நகர வாழ்க்கை எப்படி வாழ்க்கையை அழித்ததோ அதேபோல் நிறத்தையும் மனத்தையும் ஏன் எல்லாவற்றையுமே அழித்துவிட்டது. மழை பெய்கின்றபோது மண்வாசனை என்கிறோம். ஆனால் நகர வாழ்வில் அது சாத்தியம் இல்லாது போயிற்று. நிறம் என்பது பூமியில் இருந்துதான் கிடைக்கின்றது. அதனால் மண்சார்ந்த வண்ணங்களைத்தான் இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
நவீன ஓவியங்களுக்கும் தங்கள் ஓவியங்களுக்கும் எத்தகைய வித்தியாசங்கள் இருக்கின்றன?
உள்ளதை உள்ளபடி சொல்லுதல் என்பது ஒன்று. உள்ளத்தை, மனத்தை சொல்லுதல் மற்றொன்று. என்னைப் பொறுத்தவரையில் நான் இரண்டையும் கடைப்பிடிக்கிறேன். படைப்பைச் செய்த பிறகு அதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் பிற ஓவியங்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றேன் என்றால் எனது ஓவியங்களின் உள்ளடக்கத்தை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். நவீனத்துவம் எந்த விதத்திலும் பார்வையாளனை மிரட்டிவிடக் கூடாது என்கிற கருத்தும் எனக்கு இருக்கிறது.
கலைகளின் மூத்த கலையாக ஓவியம் கருதப்படுகிறது. அதாவது கதை, கவிதை, பாடல்களுக்கு முன்பே ஓவியம் தோன்றிவிட்டது. ஆனால் மற்ற வகை இலக்கியங்களை ரசிப்பது போல் தற்போது ஓவியத்தை ரசிக்கும் நிலை இன்று இல்லை. இதற்குக் காரணம் என்ன?
இன்று இலக்கியத்தில் பல இஸங்கள் தோன்றியுள்ளன. இந்த இஸங்களுக்கு எல்லாம் மூல காரணம் எதுவென்றால் இந்த ஓவியம்தான். ஓவியமும் சிற்பமும் இன்று நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காலத்தால் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் எழுத்து வடிவம் கிடையாது. எல்லாம் ஓவியமாகத்தான் இருந்தன. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் ஓவியத்தைத்தான், பேசுவதற்குக் கூடப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஓவியம் ஒரு மொழியாகவே அன்று விளங்கி இருக்கின்றது. காட்டுவாசிகளாக அவர்கள் வாழ்ந்தபோது பேச்சு மொழி இல்லாதபோது விலங்குகளை ஓவியங்களாகப் படைத்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான விஷயங்களை ஓவியங்களைப் பேசாமல் போனதால் மக்களுக்கும் ஓவியத்துக்குமான இடைவெளி நீண்டு விட்டது. எந்தக் கலை வடிவத்திலும் மக்கள் தமது வரலாறு வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். ஓவியங்கள் இன்று சமுதாய வெளிப்பாடுகளாக இல்லாமல் தனிமனித வெளிப்பாடு களாகத்தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலக அளவிலேயே இது நடந்து கொண்டுள்ளது. இன்றுள்ள மக்கள் வாழ்வியலை நாளைய வரலாற்றுக்குச் சொல்லக் கூடிய மிகப்பெரிய கலை வடிவம் ஓவியமாகத்தான் இருக்க முடியும்.
இவ்வளவு உன்னதமான கலைவடிவம் இன்று பத்திரிகை சஞ்சிகைகளில் கதை, கட்டுரை, நாவல்களுக்கான காட்சி விளக்கப்படங்களாக மாறிவிட்ட நிகழ்வு குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? இதற்கு வணிக இதழ்கள்தான் காரணமா? அல்லது ஓவியர்களே இதற்குக் காரணமாக ஆகிவிடுகிறார்களா?
நான் இதழ்களை மட்டுமே குறை சொல்ல மாட்டேன். இரண்டுமே உண்டு 'உறங்கா நிறங்கள்' கண்காட்சி பற்றி, தமிழகத்தில் 40 இதழ்கள் எழுதியிருக்கின்றன. இது ஒன்றும் சாதாரணமானதல்ல. நானே இதழ்களை விமர்சனம் செய்கிறவன், குறை சொல்கிறவன். கடந்த 10 ஆண்டுகளாக எனக்கொரு குறை உண்டு. ஊடகங்கள் இந்தக் கலை வடிவத்தைச் சரியாகக் கையாள்வதில்லை. அதற்கு எதிர்மறையாகப் பத்திரிகையாளர்கள் கேட்பார்கள். "அவர்கள் எதைப் பற்றிச் சொல்கிறார்கள். நாம் அவர்களைப் பாராட்ட!" என்கிறார்கள். இன்று கலையை வளர்க்கக்கூடிய நிலையில் பத்திரிகை உட்பட எல்லா ஊடகங்களும் வளர்ந்திருக்கின்றன.
சென்னையில் நடக்கின்ற ஒரு விஷயம். அடுத்த சில வினாடிகளில் உலகம் முழுவதும் பரவிவிடக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படி வாழ்ந்திருக்கிற போதும் இந்தத் தகவல் ஊடகங்கள் அதிகமாக ஓவியத்துக்கு மதிப்புத் தருவதில்லை. ஒரு கவிதைக்கு வழங்குவது போல, சிறுகதைக்கு வழங்குவது போல, ஓவியத்துக்கு வழங்கப்படவில்லை என்பது உண்மைதான். இதற்குக் காரணம் ஓவியர்கள்தான். பரந்த உலகப் பார்வை ஓவியர்களுக்கு வரவேண்டும். அது மட்டும் இருந்துவிட்டால் ஓவியத்தைப் பல நிலைகளுக்கும் எடுத்துச் செல்லக் கூடிய நிலைக்கு நாம் வந்துவிடலாம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உங்களை அதிகம் பாதித்திருப்பது உங்கள் படங்களில் இருந்து உணர முடிகிறது. ஆனால் தமிழீழ அகதிகள் குறித்த உங்கள் பார்வை என்ன?
இந்தப் போராட்டக் களத்தின் போராளிகளையும் போராட்டத்தையும் பார்த்து நான் எவ்வளவு தூரம் வேதனையும், மகிழ்ச்சியும் அடைந்தேனோ அதைவிட அதிகமாக நான் தமிழீழ அகதிகளை நினைத்து வேதனை அடைந்திருக்கின்றேன். பல நாடுகளில் இருந்து இங்கு வருகை தருகின்ற அகதிகளிடம் நான் பேசியிருக்கின்றேன். இவர்களுடன் எனக்கு 15 ஆண்டுகளாகப் பழக்கம் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சொந்த மண்ணை இழந்து, இரவல் மண்ணில் எதை நோக்கிய பயணம் என்பது கூடப்புரியாமல் இன்று இந்தத் தமிழர்கள் உலகம் பூராவும் பரவி இறைந்து கிடக்கின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். திசையறியா மனநிலையில் கூட, பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
இன்று பல நாடுகளில் அவர்களில் சிலர் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிற போதிலும், என்று நாம் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழப் போகிறோம் என்ற நினைப்புடனே அவர்கள் உலகம் பூராவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொத்து சுகங்களை இழந்து சுயமரியாதையை இழந்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழமண்ணில் என்று வாழ்வோம் என்கிற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை சிதைக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு அவர்களின் குழந்தைகளைப் பிரித்து மனைவி - கணவன் பிரிந்து ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கண்ணீர் வடித்திருக் கின்றேன். ஒன்றிரண்டு நாள் எனது குடும்பத்தைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. ஆண்டுக்கணக்கில் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சோகமானது?
உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்நோக்குகின்றீர்கள்?
விமர்சனங்கள் கண்டிப்பாய் என்னை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும். என்மீது பல விமர்சனங்கள் உண்டு. அரசியல் பேசுகிறேன் என்கிறார்கள். வேண்டுமென்று பொறாமையினால் சொல்லப்படும் விமர்சனங்களை நான் ஒதுக்கி விடுவேன். எனக்குத் தெரியும் எது உண்மையான விமர்சனம் என்று! விமர்சனத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கு உண்டு. அதேநேரத்தில் சில விமர்சனங்கள் உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் என்னுடைய நோக்கம் என்னவோ, அதற்காகத்தான் நான் இருப்பேன். என்னுடைய நோக்கம் எது சம்பந்தப் பட்டதாக இருக்கின்றதோ அதற்காகத்தான் நான் முன்னிற்பேன். அதுதான் என் மீதே நான் வைத்திருக்கும் விமர்சனம்.