நாம் எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைவிட, நாம் எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்... என்கிறார் தமிழகத்தின் பிரபல ஓவியரும் ஈழத்தமிழர் அபிமானிகளில் ஒருவருமாகிய புகழேந்தி.
ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் அவலங்களையும் தனது ஓவியப்படைப்புகள் மூலம் ஆழமாகப் பதிவு செய்து வருபவர் புகழேந்தி.
அழுத்தங்கள் நெருக்குதல்களுக்கு அஞ்சாமல் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டே ஈழத் தமிழர்களுக்காகவும் அவர்களது தலைமைக்காகவும் நியாயத்தின் பக்கம் நின்று தனது ஓவிய மொழியில் ஓங்கிக் குரல் கொடுத்து வருபவர்.
தனது ஓவியப்படைப்புகளோடு ஈழ மண்ணில் காலடி பதித்திருக்கும் புகழேந்தி ஓவியக் கண்காட்சிகளையும் ஓவியப் பயிலரங்குகளையும் இங்கே நடத்தி வருகிறார்.
வன்னியில் தங்கியுள்ள அவரைச் சந்தித்தோம். அவர் எம்மோடு மிகவும் உணர்வு பூர்வமாக உரையாடினார்.
உதயனுக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வி இது.
தங்களை ஓவியங்களின் ஊடாகவே அறிந்திருக்கிறோம். அந்த வகையில் தங்களது இளமைக் காலத்தை அறிய விரும்புகின்றோம்...
என்னுடைய குழந்தைப் பருவம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தும்பத்திக் கோட்டை. இந்தக் கிராமத்தில் தான், எனது இளமைக் காலம் கழிந்தது. கிராமத்து வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமான வாழ்க்கை. வயல்வெளிகள் சார்ந்த விவசாய வாழ்க்கை. என்னுடைய பள்ளிப்பருவமும் அந்தச் சூழலில்தான் கழிந்தது. பள்ளிக் காலங்களில் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறேன். அப்போது, எதை ஓவியம் என நினைத்தேனோ அதையெல்லாம் வரைந்தேன். குறிப்பாக மலர்கள், செடிகள், இயற்கைக் காட்சிகள் இப்படி நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் அந்தக் காலத்தில் விளக்குக் கம்பங்கள், சுவர்கள், மணல்பரப்புகள் இவையே எனக்குக் களமாக அமைந்தன. கரிக்கோடுகளும் கரித்துண்டுகள். பச்சை இலைகளும் எனக்கு வரை பொருள்களாக அமைந்தன. இதுதான் எனது அடிப்படை. பள்ளிப்பருவம் எல்லாம் முடிந்த பிறகு கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் மாணவனாக என்னை இணைத்தேன்.
ஓவியத்தில் யாரை ஆதர்சமாகக் கருதுகிறீர்கள்?
எனக்கு ஆரம்ப நிலையில் ஓவியத்தில் ஆதர்சமாக யாரும் இல்லை. இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், அந்தக் காலங்களில் இதழ்களில் வந்த ஓவியங்கள் என்னை மிகவும் தூண்டின. கதைகளுக்கு, கவிதைகளுக்கு ஓவியங்கள் குறிப்பாகக் கதைகளுக்காக வந்த ஓவியங்களே என்னை மிகவும் ஈர்த்தன. அதைப்பார்த்து நிறைய ஓவியங்கள் வரைந்தேன். பிற்காலத்தில் அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆரம்பத்தில் என்னைத் தூண்டியதுதான். அதை நான் மறுக்கவில்லை. பிறகு ஓவியன் என்ற நிலையை நான் எட்டிய பின்பு, மிகவும் சாதாரண நிலையில் அதை நான் பார்க்க வேண்டியதாயிற்று. ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் வெளிவந்த ஓவியங்கள் ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் தூண்டுதலாக அமைந்தன. பிறகு படைப்பு ரீதியில் நான் சுயமாக ஒரு படைப்பை உருவாக்கிய நிலையில் யாருடைய தாக்கமும் இல்லாமல்தான் என்னுடைய ஆக்கங்கள் உருப்பெற்றன.
குறிப்பாக, ஈழப்போராட்டம் மிக முக்கியமானதொன்றாக இருந்தது. 83இல் ஓவியக் கல்லூரியில் மாணவனாக இணைகின்ற நேரத்தில் பெரியதொரு மாணவர் போராட்டம் அங்கே வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் வந்து கொண்டிருந்தார்கள். மரணஓலம் எங்கள் காதுகளில் கேட்டது. இந்த ஓலங்கள் எனது உறக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. பல இரவுகள் அந்த நிலையிலேயே இருந்தேன். அப்பொழுது அங்கு நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் என்னையும் ஒருவனாக இணைத்தேன். பிறகு ஓர் ஓவியனாக என்ன செய்ய முடியும் என்று நான் நினைத்தபோதுதான் போராட்டக் காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை, தமிழர்கள் சந்தித்த இன்னல்களை துயரங்களை ஓவியமாக வரைய வேண்டுமென்று நான் ஓவியப்படைப்புகளை ஆக்கத் தொடங்கினேன். அப்படித்தான் எனது படைப்பாக்கம் என்பது தொடங்கியது. அதற்கு முன்பு நான் இயற்கைக் காட்சிகளையும், மலர்களையும், செடிகளையும், கொடிகளையும் வரையத் தொடங்கினேன். அதன் பின்பு தான் மனிதத்தை மனித வெளிப்பாடுகளை, மனிதன் படுகின்ற இன்னல்களை, துயரங்களை, வெளிப்படுத்த வேண்டும் என்று என்னைத் தூண்டியது. உலகளவில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனடியாகத் துன்பப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற மனிதர்கள் பக்கம் ஆதரவுக் குரலாக எனது ஓவியம் அமைந்தது. அதற்கு ஈழப்போராட்டம்தான் முக்கிய காரணம். அது என்னை, ஒரு போராளி ஓவியனாக மாற்றியது.
தமிழ்நாட்டில் பலருடைய ஓவியங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். தங்களது ஓவியங்கள் மனிதனது அக உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் பெரும்பாலும் மனிதர்களையே பயன்படுத்துகிறீர்கள். இதுபற்றி..
என்னுடைய ஓவியங்களில் நான் மனிதனை, மனிதத்தைப் பற்றிப் பேசுகிறேன். பேசுகின்றபொழுது உடல் மொழியாக மனிதன் இருக்கிறான். எனக்கு மொழியாக, பல்வேறு கூறுகளை நான் பயன்படுத்துகிறேன். ஓவியத்தில் கோடுகள் ஒரு மொழி, இடம் ஒரு மொழி, நிறம் ஒரு மொழி, இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழியாக இருக்கிறது. ஒரு குறியீடாக இருக்கிறது. அப்படிப் பயன்படுத்துகின்ற பொழுது நான் பேசுகின்ற உள்ளடக்கம் என்பது மனிதத்தைப் பற்றியது. அதற்கு நான் மனித வடிவங்களையே உகந்ததொரு மொழியாகப் பயன்படுத்துகின்றேன். அதுமட்டுமல்லாமல், உடல்கூறு மொழியாகவும், அது உடல் சார்ந்தும் பேசும். அந்த மொழி என்பது நிறங்களைத் தாண்டி வடிவங்களைத் தாண்டி, கோடுகளைத் தாண்டி உடல் மொழி பேசும். நான் கையாளுகின்ற உருவங்கள், அதனை உள்வாங்கிக் கொள்வதன் மூலமே என்ன சொல்ல வருகின்றேன் என்பதை ஆழமாக, அழுத்தமாகச் சொல்லுகின்ற ஒரு நிலையை இந்த ஓவியங்கள் உருவாக்குகின்றன. அதற்குத்தான் மனித உருவங்களை நான் பயன்படுத்துகின்றேன். அதுவே ஒரு மொழியாக எனக்கு இருக்கிறது. அப்படித்தான் தொடர்ந்து எனது ஓவியங்கள் இருந்தன.
தங்களது ஓவியங்கள் புரிதல் சிக்கலை ஏற்படுத்துவதில்லை. தமிழகத்தின் பல ஓவியர்களின் ஓவியங்கள் புரிவதில்லை என்ற கருத்து இங்குக் காணப்படுகிறது. இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இதை இரண்டு வகைகளில் பார்க்கலாம். என்னுடைய ஓவியங்களைப் பற்றிப் பேசுவது ஒரு வகை. பிறருடைய ஓவியங்களைப் பற்றிப் பேசுவது இன்னொரு வகை. இதைப்பற்றிப் பேசும்போது நாம் கவனமாகப் பேசவேண்டும். காரணம் என்னவென்றால் ஓவியங்களில் பல்வேறு வகைகள் உண்டு. பல்வேறு வகையான போக்குகளும் உண்டு. நம்முடைய போக்கு என்பது வேறு. நாம் மக்களுக்காக மக்களுடைய பிரச்சினைகளை மக்களுடைய மொழியில் பேச வேண்டும் என்று கருதுகின்றோம். அதுதான் நமக்கிருக்கும் தனித்தன்மையெனப் பார்க்கின்றோம். ஆனால், இன்னும் பல்வேறு வகை. அதுதான் இன்று அதிகபட்சமான ஒன்றாக இருக்கின்றது. அது அவர்களுடைய அகவுணர்வுகளை வெளிப்படுத்துகின்ற வெளிப்பாடாக ஓவியங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
அது ஓர் ஊடகமாக இருக்கின்றது. உருவங்களும் இருக்கின்றன. அதை ஓவிய மொழியால் சொல்ல வேண்டுமானால் உருவம் சார்ந்த அருவம், உருவத்தோடு அருவம். உருவ அருவம் என்று சொல்லலாம். அல்லது வெறும் அருவம். என்னுடைய ஓவியங்கள் வெறும் உருவம். அதில் உருவமும் உண்டு. அருவமும் உண்டு. உள்ளடக்கம் என்பது மனிதம். அரசியல் இப்படி இருக்கிறதென்றால், வடிவம் என்பது அருவமும், உருவமும் சார்ந்தது. உருவ அருவம் சார்ந்தது. இப்படி உருவத்தோடு தான் எனது ஓவியம் இருக்கிறது. அதுதான் என்னுடைய மொழி. மக்களுக்கு எளிதாகப் புரிகின்றது. மக்களுக்குப் புரிகின்ற மொழியாக இது இருக்கின்றது. அதனால்தான் அதை நாம் கையாளுகின்றோம். ஆனால் பல ஓவியர்களது ஓவிய வெளிப்பாடு அருவம் சார்ந்து வெளிப்படுகின்றது. அது ஒரு போக்கு. அதனைப் பல்வேறு மக்கள் புரிந்து கொள்வதில்லை என்ற குறைபாடு இருக்கிறது. அது உண்மைதான். அதில் எனக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பல்வேறு போக்குகளில் அவர்களுக்கு மக்கள் பற்றிய புரிதல் இல்லை. அவர்களுக்கு யாருக்காக ஓவியம் வரைகின்றோம் என்ற தெளிவில்லை. அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதைத்தான் படைப்பாக்கமாகக் கருதுகிறார்கள். அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவுதான். அது மக்களிடம் செல்லவேண்டும் என்று கருதுகிறவர்களுக்குத்தான் இந்தப் பிரச்சினையே ஒழிய, அதைப் பற்றிக் கருதாதவர்களுக்குப் பிரச்சினையும் இல்லை; கவலையும் இல்லை. ஆனால் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கலை இலக்கியங்களில் எப்பொழுதுமே பல்வேறு போக்குகள் இருக்கின்றன. எந்தப்போக்கை மக்கள் அங்கீகரிப்பார்கள். எந்தப் போக்கை மக்கள் நிராகரிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும்.
உங்களுடைய எல்லா ஓவியங்களிலும் மனிதனுடைய முகம் இருள் படர்ந்ததாக இருக்கிறது. நீங்கள் எப்படி ஈழப்போராட்டத்தினுடைய அவலங்களை உள்வாங்கி அதைத் தக்கவைத்துக் கொண்டு ஓவியங்களை வரைகிறீர்கள்?
(சிறிது நேர மௌனத்திற்குப் பின் கண்கள் கலங்கிப் பதிலளிக்கிறார்)
83 இல் இருந்து பல்வேறு தகவல்கள் செய்திகள், புகைப்படங்கள் வீடியோக் காட்சிகள் அகதிகளாகத் தமிழகம் வந்த மக்களது வாழ்க்கை இதெல்லாம் என்னை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மக்களையும் பாதித்தன. இது ரொம்ப நல்ல உச்சத்தை அடையவைத்தது. இந்தப் போராட்டம் என்பது எங்களுடைய சகோதரர்கள், சகோதரிகளுடைய விடுதலை சம்பந்தப்பட்டது என்ற உணர்வு எப்பொழுதுமே எமக்குண்டு. இங்கே அடி ஒன்று விழுந்தால் எங்களுக்கு வலிக்கும். அப்படித்தான் நாங்கள் பார்த்தோம். எனக்கும் அந்த உணர்வு அதிகமாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்வும் இங்கு நடைபெறும் பொழுது அதனை அங்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அதைப் பற்றியதான ஒருமுடிவை நோக்கி ஓர் ஏக்கம் எங்களுக்கு உண்டு. எங்களது உடல் அங்கிருக்கும் உணர்வுகள் எல்லாம் இங்கிருக்கும். இந்த மண்ணுக்கு நான் வந்ததில்லை. இந்த மக்களுடைய வாழ்க்கையோடு 23 வருடங்களாக நான் ஓர் ஒட்டுறவோடு வாழ்ந்தேன். அதனால் தான் எந்த ஒரு நிகழ்வினையும் 84, 85 அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள், செய்திகள், விடயங்கள் அதன் பிறகு இந்திய அமைதிப்படை இங்கு வந்து புரிந்த அட்டூழியங்கள் அந்த நேரங்களில் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தது. இப்படி அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பாதிப்புகள் எல்லாவற்றையும் நான் ஆழமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு வந்த ஓர் அழுத்தமான நம்பிக்கை என்னவென்றால், நிச்சயமாக இந்தத் தேசம் ஒரு நாள் விடுதலை பெறும் என்கிற நம்பிக்கை. அதற்கு நம்மாலான சிறு பங்களிப்பு; அது நமக்கு இயன்றதொன்று. அது நமக்குக் கிடைத்த ஆயுதமாக இருக்கக் கூடியதாக ஓவியத்தில் அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தொடர்ந்து நான் இந்தப் போராட்டத்தோடு மக்களோடு ஒன்றிணைந்ததால் எனக்குக் கொஞ்சம்கூட மாறுபட்டோ, துண்டித்துக் கொண்டோ போக முடியவில்லை. அதுதான் இந்தப் போராட்டத்தோடு, மக்களோடு, என்னை இணைத்துக் கொள்ள முடிந்தது. அதனால்தான் என்னுடைய உணர்வுகள் ஒன்றிப்போயின.
உங்களுடன் உரையாடக் கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம். எங்களுக்காகத் தமிழகத்தில் இருந்து குரல் கிடைக்கும் போதெல்லாம் நாம் சந்தோசப்படுவோம். ஏனென்றால் நாம் தனித்து விடப்படவில்லை. ஈழப்போராட்டத்தைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வெறுமனே வணிக ரீதியாகவே கருதுகிறார்களே? (தெனாலி மாபெரும் மனிதத் துயரை நகைச்சுவையாக மலினப்படுத்தியது)
அதைத்தான் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஊடகங்கள், கலைவடிவங்கள் இந்தப் போராட்டத்தையும், மக்களையும் எந்த வடிவத்தில் கொச்சைப்படுத்துகின்றதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதில் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். யாரை நாம் அடையாளம் காண வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை வேண்டும். அதுதான் நம் தமிழரிடம் இல்லையென்ற வருத்தம் எனக்கு உண்டு. ஈழத்தமிழரைச் சொல்லவில்லை. என்னைப் பொறுத்தவரையில் தமிழர்களை நான் பிரித்துப் பார்க்கவில்லை. உலகத் தமிழர் பொதுவாக உணர்ந்து கொள்ள வேண்டியது. நாம் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைவிட, நாம் எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் போகுமிடமெல்லாம் சொல்வதுண்டு. நாம் ஏமாந்து கொண்டு போகிறோம். நம்மை எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள். நாம் ஏமாறக்கூடாது. ஏமாறுவதில் இருந்து விழிப்பாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய கையில் இருக்கிறது. இல்லையென்றால் நம்முடைய வாழ்க்கை வேறொருவர் கையில் இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதில் வருவது அல்ல. அவர்களுக்கு அரசியல் தெரியாது. அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு உள்ள ஊடகத்தை வைத்து அவர்கள் பிழைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
தமிழக ஆட்சிப்பீடம் ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே சாதகமாக இருப்பதில்லை. இப்படியான நிலையில் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகள் எப்படியிருக்கின்றன?
தமிழ்நாட்டில், வெளியில் பேசமுடியா விட்டாலும்கூட, உள்ளுக்குள் அழுகின்ற மக்களது நிலை நிறைய உண்டு. கண்ணீர் மிக வலிமையானது. அது ஒருநாள் வெடிக்கும். இந்த வெளிப்பாட்டில் தான் நான் இருக்கின்றேன்.
தமிழ்நாட்டில் பல கலைஞர்கள் இருக்கும்போது உங்களைப் போன்றவர்களால் மட்டுமே ஈழம் சார்ந்த படைப்புகளை, தடைச்சட்டங்கள் அழுத்தங்கள் மத்தியிலும் வெளிக்கொணர முடிகிறதே?
என்னைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளனுக்குச் சுதந்திரம் இருக்கிறது என நான் கருதுகிறேன். அந்தச் சுதந்திரத்தைத் தடுப்பதற்கு நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். இந்த ஓவியங்களை ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வைத்திருக்கின்றேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இன்று மட்டுமல்ல. 83 இல் இருந்து 2003 வரை வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தையுமே காட்சிப் படுத்தியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல; ஒரு படைப்புக்கான அங்கீகாரம் நிச்சயமாக இருக்கிறது. எந்தப் படைப்பையும் யாரும் நிச்சயமாக வெளிப்படுத்து வதைத் தடுக்க முடியாது. யாருடைய வாயையும் பூட்டுப் போடமுடியாது. குறிப்பிட்ட காலம் வரைக்கும் தடுத்து வைக்கலாம். ஆனால் தடுக்கத் தடுக்க அழுத்தம் அதிகமாகி ஒருநாள் வெடிக்கும். அதுதான் நடக்கும். தமிழ்நாட்டில் மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் எனப் பல்வேறு இடங்களில் இவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. நான் ஈழத்துடன் மட்டும் நின்று விடவில்லை. உலகத்தில் நடைபெறுகின்ற அத்தனை வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கவும் நாம் எல்லாவிதமான மனித விடுதலையையும் ஆதரிக்கிறோம். உலகத்தில் அடக்கப்படக்கூடிய அத்தனை மக்களும் விடுதலை பெறவேண்டும் என்றும் நாம் குரல் கொடுக்கின்றோம். நிறவெறி, மதவெறி, மொழித்திணிப்பு இப்படி எல்லாவற்றையும் எதிர்க்கின்றோம். எதிர்க்கும்போதுதான் கூடுதல் பலம் உருவாகும்.
நமக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியலில் உள்ள ஆழம், அழுத்தம் இதெல்லாம் பக்கபலமாக இருக்கிறது. பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவையெல்லாம் எனது ஓவிய செயல்பாடுகளுக்குத் துணை புரிகின்றன.
ஒரு படைப்பை மிக எளிதாக முடக்கிவிட வேண்டும் என நினைத்தால் முடியாது. அதற்கு முடங்குகின்றவன் நான் அல்லன். என்னை முடக்கிவிட முடியும் என்று நான் நம்பவில்லை. இன்றைக்கும் ஓவியக் கண்காட்சியை உலகம் முழுவதும் நடத்துகிறோம். நான் இலங்கைக்கு வந்து ஓவியக் கண்காட்சி நடத்துவது எல்லோருக்கும் தெரியும். ஆக, ஒரு படைப்பை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதற்கு ஒரு தடையும் இருக்க முடியாது. அதில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தப் படைப்பில் உண்மை, நேர்மை இருக்கிறது. இந்த உண்மையும் நேர்மையும் என்னை வழிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும்போதும் ஈழத்துக்கு வந்து இங்குள்ள மக்களோடு கதைக்கும்போதும் உங்களது உணர்வு நிலை எப்படி இருக்கிறது?
ஒரே உணர்வுதான் இருக்கிறது. எனக்கு இருவேறு உணர்வுகள் கிடையாது. இந்த மண் எனக்குப் புதியதாக இருக்கலாம். இந்த மக்கள் என்றைக்கும் பழையவர்கள். இந்த மக்கள் போராட்டத்தோடு 23 வருட கால உறவு இருக்கிறது. இங்கு வந்ததில் ஊடகங்களில் வெளிவராத சில தகவல்களைப் பெறமுடிந்தது.
கலைகளில் பல்வேறு வகைகளில் இருந்து மரபு ஓவியத்தில் இருந்து தங்களது ஓவியம் மாற்றமடைந்திருக்கிறது. இந்த ஓவியத்தின் வளர்ச்சி எது சார்ந்து நிகழ்ந்திருக்கிறது?
பொதுவாக சிறுகதை, கவிதை போன்றவற்றிற்கு ஊடக மொழிவேறு. ஓவியம் ஒரு காட்சி வழியான ஊடகமொழி. இதற்கென்று ஒரு மொழியில்லை. உலகத்தில் உள்ள பொதுமொழியாகத் தான் இதைப் பார்க்கிறோம். பாறை ஓவியங்கள் மூலம் கற்கால மனிதன் தனது வாழ்க்கை முறையைப் பிரதிபலித்தான். தன்னுடைய சகமனிதனிடம் பேசுவதற்கு இதைப் பயன்படுத்தினான். அவனிடம் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற வாழ்வு சார்ந்த ஓவியங்கள் தான் முதலில் இருந்தன. பின்பு அந்தச் சூழ்நிலையில் வாழ்ந்த வாழ்க்கைமுறை, குகை ஓவியங்களில் இருந்தது.
இன்று அஜந்தா, எல்லோரா ஓவியத்தில் எதைப் பார்க்கிறோம் என்றால் வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பதைத்தான். ஆக, அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஓவியங்களைப் பார்த்தால் அவர்களது தேவாலயங்களில் கிறிஸ்தவ மதவெளிப்பாடுகளை ஓவியப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம். அந்த நிலைதான் நவீன ஓவியத்திலும் தொடர்கின்றது. என்னைப் பொறுத்தவரை யில் நான் கையாளுகின்ற ஓவியத்தில் நம்முடைய வாழ்வு, போராட்டம், அரசியல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்கிற ஊடகமாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
ஐரோப்பிய போர்க்கால ஓவியங்களில் காணப்படுகின்ற உணர்வு வெளிப்பாட்டை உங்களுடைய ஓவியத்திலும் காணமுடிகிறது. இதுபற்றி..
உள்ளதை உள்ளபடியே சொல்லுகின்ற ஒரு நிலை இருந்தது. அதுதான் காட்சியாக வெளிப்படுத்தும் தன்மை. ஆனால் உள்ளத்து உணர்வுகளைச் சொல்லுகின்ற ஓவியங்களாக இந்த நவீன ஓவியங்கள் இருக்கின்றன என நான் கருதுகிறேன்.
ஆரம்ப காலத்தில் மனிதன் கையாண்ட ஓவிய உத்திகள், நவீன காலத்தில் மனிதன் கையாண்ட ஓவிய உத்திகள் பற்றி...
இரண்டு வகையான வளர்ச்சிகள் இருக்கின்றன. அந்தக் காலங்களில் மனிதன் மூலிகைகளின் துணைகொண்டு நிறங்களைத் தயாரித்தான். அதை வைத்து ஓவியங்களைச் செய்தான். அதேபோல இன்று அறிவியல் வளர்ச்சியின் விளைவாகப் பல்வேறு வகையான நிறங்கள் வந்திருக்கின்றன. எண்ணெய் வர்ணம், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணத்தையும் நீர் வண்ணத்தையும் கலந்த ஒருநிறம் வந்திருக்கிறது. இதுபோன்று பல்வேறு வகையான நிறங்கள் வந்திருக்கின்றன. இது மிகப்பெரிய வளர்ச்சி. அறிவியல் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. அதில் ஓவியத்துறையும் ஒன்று. பின்பு ஓவியத்தில் வெளிப்படுத்தல் என்ற ஒரு வளர்ச்சி இருக்கிறது. இதை வளர்ச்சி என்றே பார்க்கலாம். உலக அளவில் இதை நாம் பார்த்தோமேயானால் பல்வேறு வகையான நிலைகளில் வெளிப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் எமக்கு உடன்பாடும் இருக்கலாம். முரண்பாடும் இருக்கலாம். எப்பொழுதுமே நாம் எல்லாவற்றுடன் முரண்பட்டுவிடவும் முடியாது. உடன்பட்டு விடவும் முடியாது. ஏனென்றால், எமக்கு இன்று இருக்கக் கூடிய கலை இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் ஓவியங்கள்தான் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இது ஒரு வாயிலாக இருந்திருக்கின்றது. ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் ஓவியத்தில் தான் அது நிகழும். பல்வேறு இயல்கள் இதன் இயக்கங்களாக வந்தன. அதன் காரணம் என்னவென்றால் ஆரம்ப காலத்தில் உள்ளதை உள்ளபடியே வரைவதற்குத் தேவை இருந்தது. பின்பு மாற்றத்தை ஏற்படுத்தியது புகைப்படக் கருவிதான். இது வந்ததனால் உருவ ஓவியங்களை வரைவதற்கான தேவை ஓவியர்களுக்கு இல்லை. அவர்களுக்குப் புதியதொன்றைப் படைப்பதற்கான தேவை ஒன்று ஏற்பட்டது.
அதனால் புதியவற்றைப் படைப்பதற்குத் தங்களை அவர்கள் தயார்படுத்திக் கொண்டார்கள்.
அதனால்தான் இயக்கங்கள் தோன்றின. ஐரோப்பாவில் தான் இந்த மாற்றம் முதலில் நிகழ்ந்தது. அதன் பின்புதான் எழுத்துத்துறையில் மாற்றம் ஏற்பட்டு நவீனம் பின் நவீனத்துவம் என்று பல்வேறு "இசங்"கள் வந்து கொண்டிருக்கின்றன. ஓவியத்தில் உச்சமென்று பல்வேறு வகையைப் பார்த்திருக்கிறேன். இன்ஸ்ரோலேசன் (Installation) என்று ஒன்று இருக்கிறது. இது எனக்கு உடன்பாடற்றது. இதெல்லாம் எந்தளவுக்குப் பயன்படும் என்றதொரு கேள்வி எழுகின்றது. சிலவேளை அதைப்பற்றியதான புரிதல் எனக்கு இல்லையென்று சிலர் கருதலாம். நிஜங்களில் ஓர் அந்நியமான உணர்வொன்றை இவை ஏற்படுத்துகின்றன. மக்களுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லை என்றுதான் நான் கருதுகிறேன். ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இந்தவகை ஓவியங்களைப் பார்க்கின்றபோது அந்த நாடுகளிலேகூட அந்த வடிவங்களை உள்வாங்கிக் கொள்வதில்லை. அங்கிருக்கின்ற மக்கள் சிலபேர் அதைப்பற்றி விவாதிக்கிறார்கள். நவீனம், அதிநவீனம் என்று வந்து கொண்டிருந்த நிலையில், அருவம் சார்ந்து வெளிப்படுத்திய நிலையில் கூட மக்கள் அதை ஓரளவு ஏற்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கருத்துப் பரிமாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இந்த ஸ்தாபித்தால் தான் இன்று உலகளவில் பெரிய வடிவமாகி பல்வேறு பொருள்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒரு படைப்பை உருவாக்குகிறார்கள். அதற்கு ஒரு நிரந்தரத்தன்மை இல்லை. அதனைக் காட்சிப்படுத்துவார்கள். காட்சிப்படுத்திவிட்டு, அதனை அழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அதற்குமேல் அந்தப் படைப்பில் வேறொன்றும் இல்லை. அதில் ஒரு செய்தியை அவர்கள் சொல்கிறார்கள். எனக்கும் அது உணரக்கூடியதாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஓர் வடிவத்தைப் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்துகின்ற வகையில் அதனைக் கையாள்வது பயன்தருவதாகக் கருதுகின்றேன்.
அந்த அடிப்படையில்தான் முரண்பாடுகள் வலுக்கின்றனவே தவிர மற்றபடி அவர்கள் கையாளுகின்ற வடிவத்தில் அல்ல. ஆனால் மக்கள் அதைப் பார்க்கின்றபோது அதனை நான் உணர்ந்தேன். அதைப்பற்றி விவாதிக்கின்ற நிலையில்கூட இல்லை. இந்தியாவிலும் அந்தப்போக்கு வந்திருக்கின்றது. ஸ்தாபித்தல் என்று பல்வேறு இளைஞர்களும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்பாட்டில் எனக்குச் சில முரண்பாடுகள் உண்டு. காரணம் என்னவென்றால், அதனை கையாள்பவருக்கு இன்னும் பல்வேறு தளங்களைச் சென்றடைய வேண்டும் என்னும் சிந்தனை கிடையாது. அந்த அடிப்படையில்தான் எனக்கு முரண்பாடே தவிர வடிவத்தில் அல்ல. ஆனால் அந்த வளர்ச்சியை மாற்றம் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். அதன் வளர்ச்சியில் நமக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது எந்தளவுக்குப் பயன்படும் என்பதில் நமக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால் அது அடுத்த கட்ட நகர்வுக்கு இட்டுச் செல்கிறது என்பது உண்மை. நாம் அதனை அங்கீகரிக்க வேண்டும். அதன் பயன்பாடு பற்றி நமக்குக் கருத்து முரண்பாடு இருக்கிறது. இன்று தவறாகக்கூட அது இருக்கலாம். நாளை அது சரியான முறைப்படுத்தப்பட்ட தொன்றாகக் கூட ஆக்கலாம்.
ஆரம்பத்தில், நவீன ஓவியங்களுக்கு எதிர்ப்பு இருந்தது. ஆனால் இன்று அதை நாம் தனதாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று அந்தச்சூழல் வந்திருக்கிறது. நான் கையாள்வது நவீனம் சார்ந்து தான். இது மக்களுக்குப் பழக்கப்படவில்லை. அதற்கான பயிற்சி அவர்களிடத்தில் இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற மக்கள்கூட, ஓவியத்தைப் பார்த்துவிட்டு மயக்கம் வருவதாகச் சொல்கிறார்கள். அவர்களும் அதை அந்நியத்தன்மையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் இன்னம் மோசமாகத்தான் பார்க்கிறார்கள். அந்த இடத்தில்கூட நவீன ஓவியங்களைக் கொண்டு சென்று மக்களிடத்தில் பரீட்சயப்படுத்தியிருக்கிறோம் என்றால், அது நமது இடைவிடாத முயற்சி. தொடர்ந்து 20 ஆண்டுகளாக இந்தப் படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்போது அவர்களுக்கும் ஒரு பயிற்சி ஏற்படுகிறது. ஓவியத்தைக் கொண்டு செல்வது ஒன்று. ஓவியத்தின் மூலம் கருத்தை வெளிப்படுத்துவது இன்னொன்று. நாம் கருத்தை முதன்மைப்படுத்தினாலும் ஓவியத்தையும் சேர்த்துக் கொண்டுதான் செல்கிறோம்.
ஓவியத்தைக் கொண்டு சென்றாலும் ஓவியத்தின் மூலம் கருத்தைக் கொண்டு செல்கிறோம். இரண்டையும் நாம் ஒரே நேரத்தில் கொண்டு செல்கின்றோம். மக்களை அதற்குப் பயிற்றுவிக்கிறோம். தமிழ்நாட்டில் 'புகைமூட்டம்' என்ற எனது ஓவியக் கண்காட்சியில் பல்வேறு வகையான கருத்துக்களை உள்ளடக்கிய 27 ஓவியங்கள் வைக்கப்பட்டன. குஜராத் படுகொலை, அமெரிக்கா ஈராக்கில் நிகழ்த்தும் போர், அடக்குமுறைச் சட்டங்கள் (ரௌலட், மிசா, தடை, பொடா) திண்ணியத்திலே தலித்துகளுக்கு எதிராகச் செய்யப்பட்ட கொடுமைகள். இப்படிப் பல கருத்துக் களைக் கொண்ட கண்காட்சி இது. இன்று மக்கள் சினிமாவோடு மட்டும் இருந்துவிடவில்லை. அதையும் தாண்டி அவர்கள் பலவற்றைப் பார்க்க இருக்கிறார்கள். நாம் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. நல்ல எழுத்தைப் படிக்க நினைக்கிறார்கள். நல்ல ஓவியத்தைப் பார்க்க நினைக்கிறார்கள். நல்ல சினிமாவைப் பார்க்க நினைக்கிறார்கள். ஆனால் கொடுப்பதற்குத்தான் அங்கு ஆள்கள் இல்லை. சினிமாக்காரர்கள் இதுதான் மக்களது ரசனை என்று கூறிக்கொண்டு தரமற்ற படங்களைப் பொய்சொல்லிக் கொடுக்கிறார்கள். நல்ல சினிமாவைக் கொடுத்தால் பார்க்க முடியாது என்று யாரும் சொல்லமுடியாது. காதல், ஆட்டோகிராப், அழகி என்று நல்ல படங்கள் உள்ளன. சரியானதொன்றைக் கொடுக்கும்போது மக்கள் சரியாகவே நடந்து கொள்வார்கள். அதுதான் என்னுடைய அனுபவம். நல்ல ஓவியத்தை அவர்களுடையது என்று கருதுவதில் அவர்கள் என்றும் விட்டுக்கொடுப்பதில்லை.
ஓவியக் கற்பித்தல் என்ற பொருள் பற்றி...
ஓவியத்தைக் கற்பிக்க முடியாது. கவிதை, சிறுகதை எழுதக் கற்பிக்க முடியுமா? ஆனால் இருக்கின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வழிகாட்டியாக நாம் இருக்கலாம். நாம் கோட்பாடு இயல்களைக் கற்பிக்கலாம். ஒரு செய்முறை என்ற நிலையில் அதற்குரிய வழியைத்தான் காட்டமுடியும். மாணவன் ஓவியத்தை வரையும்போது அவனது குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் அந்த மாணவன் தன்னை வளர்த்துக் கொள்ளலாம். அதிகபட்சமான பயிலரங்குகளே ஓவியத்தில் மாணவருடைய வளர்ச்சிக்கு உதவும். ஓவியம் வரைவது மட்டும் வேலையல்ல. ஓவியத்தைப் பற்றிப் பேசவேண்டும்; எழுத வேண்டும். இந்தத்தன்மை ஓவியனிடம் வேண்டும். ஓவியத்தைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். வரைவதற்கு ஓவியத்தைப் பற்றிய வரலாறும் முக்கியம். அதைப்பற்றியதான அறிவும் முக்கியம்.
சமகாலத்தில் ஓவியத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கிறது?
பல்வேறு போக்குகள் உண்டு. கலை கலைக்காகவே என்ற நிலையும் உண்டு. கலை சமூகத்தைப் பற்றிப்பேசவேண்டும் என்ற நிலையும் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் கலை மக்களுடைய பிரச்சினையைப் பேச வேண்டும் என்று கருதுகின்றவன்.
நான் ஓர் ஓவியனாக, படைப்பாளனாக பிறருடைய ஓவியங்களைப் பார்க்கிறேன். இன்று ஓவியம் பற்றி சமூகத்தில் பல்வேறு பார்வைகள் இருக்கின்றன. ஓர் ஓவியம் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கின்றது என்றுதான் பார்க்கின்றார்கள். நான் எதைப் பார்க்கிறேன் என்றால், எத்தனை ஆயிரம் மக்கள் பார்த்தார்கள் என்றுதான் ஒரு ஓவியக் காட்சியினுடைய வெற்றியைப் பார்க்கிறேன்.
தங்களுக்கு ஈழத்து ஓவியங்களைப் பற்றி பரீட்சயம் உண்டா?
எனக்கு ஈழத்து ஓவியங்கள் பற்றி அதிகப் பரீட்சயம் இல்லை. மாற்கு என்ற ஓவியரின் பெயர் அறிமுகம். அவருடைய ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். ஈழத்து ஓவியங்களைப் பற்றி அதிகமாகப் பேசுவது இயலாத ஒன்று.
இங்கு பயிலரங்கு நடத்துவது பற்றி...
பயிலரங்குப் பயிற்சி சம்பந்தப்பட்டதொன்று. ஆற்றல் உள்ள மாணவர்களை வளர்த்து விடுவதற்கான ஓர் உத்தியாக இந்தப் பயிலரங்கை நாம் நடத்துகிறோம். ஆக, இங்குள்ள மாணவர்கள் அதிகப் பயிற்சி இல்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள். சரியாகப் பயிற்றுவிப்பதற் கான ஆசிரியர்கள் இங்கு இல்லாததும் ஒரு குறையாகக் காணப்படுகின்றது. மாணவர்களுக்கு மட்டுமல்ல. இதை ஆசிரியர்களுக்குமான பயிலரங்காகவே நடத்துகின்றோம். எனக்கு ஓவியத்தை வரைவதில் உள்ள ஆர்வத்தைப் போன்ற ஆற்றல் உள்ள மாணவர்களை வளர்த்து விடுவதிலும் மிகுந்த விருப்பம் உண்டு. இப்பொழுது இந்த மண்ணில் பயிலரங்கை நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஓவியர்கள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அதை நான் இரண்டு நாள்களாகப் பார்க்கின்றேன். ஆனால் படிக்கின்றவர்கள் எல்லோரும் ஓவியர்களாக உருவாகிவிட முடியாது. ஆனால் ஒரு சிலர் நல்ல ஓவியர்களாக வருவார்கள். மற்றவர்கள் பெற்றுக்கொண்டதை வைத்து நல்லதொரு வாழ்க்கையை உருவாக்கலாம். அதுதான் இந்தப் பயிலரங்கு செய்யும் என்று நம்புகின்றேன். ஆற்றலுள்ளவர்கள் தென்படுகிறார்கள். தொடர்ந்து நாம் நல்ல பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை நல்ல ஓவியர்களாக உருவாக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் கண்காட்சி, பயிலரங்கு நடத்துவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டா?
அதற்குரிய வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யாழ் பல்கலைக்கழகம் மற்றும் வெளி இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்கின்றோம். பயிலரங்கு பற்றி இன்னும் எப்படி என்று தெரியவில்லை.
ஓவியத்தின் மூலமாகச் சொல்லமுடியாது என எதையாவது கருதியதுண்டா?
ஓவியத்தின் மூலம் சொல்லமுடியாது என எதையுமே கருதியதில்லை. எல்லாவற்றையும் சொல்ல முடியும் என நினைக்கிறேன். ஏனென்றால் ஓவியத்தை அந்தளவுக்குத் தன்வயப்படுத்தி யிருக்கிறேன். ஏனென்றால் அதை நான் மக்கள் மயப்படுத்தியிருக்கிறேன். வடிவத்திற்காக நாமல்ல. எமக்கான வடிவத்தை மாற்றியிருக்கிறேன்.
|