"என் தனித்துவம் மனிதன்தான்" என்று கூறும் ஓவியப் போராளி திரு.புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் அனைத்தும், அவரது மனிதகுல நேசிப்பின் அழுத்தமான வெளிப்பாடுகளாகத்தான் உள்ளன.
ஓர் ஓவியக் கலைஞன் தான் பிறந்த மண்ணின் அழகினை, அவலங்களை, பெருமைகளை, சிதைவுகளைத் தனது ஓவியங்களில் வெளிப்படுத்துதல் இயல்பானது; சுலபமானது; சுயநலமும் கொண்டது. அவை எத்தனைச் சிறப்பான படைப்புகளாக இருந்தாலும் சரி, அவை அந்த ஒரு நாட்டின் கலாச்சாரப் பெருமைகளை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நிகழ்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டவைகளாகவே இருக்க முடியும். அதிலொன்றும் தவறு இருப்பதாகச் சொல்லமுடியாது. அத்தகைய கலைப்படைப்புகளின் உருவாக்கம் பெருமை பிரமிப்பூட்டுவதாகவும் இருக்கலாம்... உண்மையே... ஆனால் அவை எல்லாம் உலகத்தின் கண்களில் எத்தகைய நெகிழ்ச்சியை, நெருடலை, ஈரத்தைத் தோற்றுவிக்கிறது என்பதுவிடை சொல்லமுடியாத கேள்வி.
மோனாலிசாவின் புன்னகையால் நீங்கள் மானிடத்திற்குச் செல்லும் மகோன்னதமான உண்மை எது? இப்படி ஒவ்வொன்றாய்ப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு ஓவியர் புகழேந்தியின் படைப்புகளிடம் வருவோம். உதாரணத்திற்கு என்று தொடங்கி அவரது ஒவ்வொரு ஓவியத்தின் சிறப்பையும், தனித்துவத்தையும் விவரிக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு கண்காட்சி போலாகிவிடும். அவரது எல்லா ஓவியங்களுமே உலகம் முழுக்க நிகழ்ந்த, நிகழும் மனிதுகல வேதனைகளை கல்வெட்டில் பதிவு செய்கின்றன.
சோமாலிய நாட்டின் வறுமையில் மனிதச் சீரழிவு எத்தகையது என்பதை எலும்புகளாய்த் தெரியும் ஒரு சிசு தாயின் மார்பில் பால் கிடைக்காது பாதிமரணத்தில் பரிதவிக்கும் அவலத்தினைச் சித்தரிக்கிறார். கோவில் விக்ரகங்களுக்கு குடம் குடமாய்ப் பாலாபிஷேகம் பண்ணுகிற நம்மூர் பக்தர்கள் பற்றிய நினைவு, ஓவியம் பார்க்கும் எல்லா மக்களுக்குமே வரும். ஈழத் தமிழர் அனுபவிக்கும் வற்றாத சோகம் இவரது ஓவியங்களில் கண்ணீரால் வரையப்பட்டிருப்பதைக் காண்பவர்கள் கலங்காமல் இருக்க முடியாது. மொத்தத்தில் 20 ஆம் நூற்றாண்டில் மனித வர்க்கத்திற்குச் சமகால மனிதர்களாலேயே நேர்ந்துவிட்ட பன்னாட்டுச் சரித்திரச் சோகங்களை, மனித உரிமைகளும் நீதிகளும் மறுக்கப்பட்ட கோரத்தை அவை இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்ற ஆபத்தை ஓவியர் புகழேந்தி தூரிகையால் பதிவு செய்திருக்கும் உள் மன ஆவேசம் சூரியனின் உலகப் பார்வைக்கு ஒப்பானது என்றால் மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமாய்த் தோன்றினாலும், அதுவே உண்மை.
தமிழகத்தில் தஞ்சை மண்ணில் பிறந்த ஓர் ஓவியரின் மனத்தூரிகை வியட்நாமில் அழித்தொழிக்கப்பட்ட மனித உயிர்களைப் பற்றியும், நாஜிகளின் மூர்க்கத்தனமான மனிதவேட்டை பற்றியும், ஹிரோஷிமாவின் அழிவுக்கான காரணம் குறித்தும் இப்படி எல்லைகளைத் தாண்டிய தனது ஆவேசமான எண்ணங்களின் பிரதிபலிப்பைத் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். தஞ்சையில் பிறந்த இந்த ஓவியர் உலக மக்களின் துயரம் எல்லாம் தனது குடும்பத்துயராக நினைத்துக் கலங்குவது இவரது இதய வார்ப்பின் தனித்தன்மை. உலகின் பாவப்பட்ட பலதரப்பட்ட மனிதர்களுக்காகவும் தனது தூரிகையால் குரல் எழுப்பும் இவரது பாணி மகத்தானது. தாங்கள் சார்ந்த நாடுகளில் மனித உரிமைகள், வாழ்க்கை நியாயங்கள் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராய்ப் போர்க்குரல் எழுப்பிய புரட்சியாளர்களையும், மாமனிதர்களையும், கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும், மாமனிதர்கள் அனைவரையும் தனது ஓவியங்களில் நன்றியோடு பதிவு செய்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.
எந்த ஒரு கலைப்படைப்பும் எல்லா வகை மக்களுக்கும் எளிதில் புரியும்படி இருக்க வேண்டும். அதனை முற்றிலும் உணர்ந்தவராய்த் தனது நவீன ஓவியங்கள் கூட, பார்த்த மாத்திரத்தில் பொருள் விளங்கும்படிப் படைக்கப்பட்டிருப்பது இவரது அடிப்படை நோக்கத்தின் சிறப்பாகும்.
இவர் கால் பதிக்காத நாட்டு மக்களின் கண்ணீரும், சிந்துகிற இரத்தமும் கூட இந்தத் தமிழனின் ஓவியங்களாகயிருக்கின்றன. இவரது ஓவியங்களின் அழுத்தமான கோடுகள் யாவும் இவருடைய உலகளாவிய மனித அக்கறையை வெளிப்படுத்துகின்றன. மதம், மொழி, இனம், ஜாதி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து இவரது ஓவியங்கள் எல்லாம் மனித குலத்தின்பால் மாறாத வாஞ்சையுடன் தாயுள்ளத்தோடு பிரகாசிக்கின்றன.
தனக்குள்ள ஓவிய ஆற்றலைக் கொண்டு அழகுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தும் ஓவியங்களை வரைந்து பொருளாதார ரீதியில் இவர் மிகப்பெரிய உயரத்தில் சிம்மாசனம் போட்டு உட்காரமுடியும். ஆனால், தனது ஓவியங்கள் மக்களால் புரிந்துகொள்ளப்பட்டு, அவர்களைச் சிந்திக்க வைப்பதே தனது மிகப்பெரிய செல்வமாக நினைக்கின்ற இவரது மனிதநேய ஓவியக் கோடுகள் என்றென்றும் உலக மக்களுக்குப் பொதுவாக வெளிச்சக் கோடுகளாய்த் திகழும்.
மனிதச் சிதைவுகளில் மிகக் கொடுமையானவை, தாழ்த்தப்பட்டவர்களாகச் செயற்கையாய்ச் சித்தரிக்கப்படும் மனிதர்கள் நசுக்கி அழிக்கப்படும் கோரம், பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்த முயலும் நீசத்தனம், அகதிகளாய்ப் பிறநாடுகளில் தஞ்சம் அடைந்து முகவரி இல்லாமல் மூச்சுத்திணரும் பாவப்பட்ட மக்கள், பூகோள உருண்டையைத் தங்களது ஏதேச்சாதிகார கட்டப் பஞ்சாயத்துகளால் சின்னாபின்னப்படுத்தும் ஆதிக்கச்சக்திகள், இவற்றை எல்லாம் தனது ஓவியங்களில் வெளிப்படுத்துவதற்கு அசாத்தியமான மனோ தர்மமும், வைராக்கியம் கொண்ட துணிச்சலும் தேவை. இவை யாவும் பெற்றவர் ஓவியர் புகழேந்தி. இவரது நேர்மையான மனித ஓவியப் பணியை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற இவர்தம் ஓவியக் கண்காட்சிகள் மூலம் பிற நாட்டவரும், பிற நாட்டுத் தமிழரும் கண்டு மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்கள். நெகிழ்ந்திருக்கிறார்கள். இவரது முகம் பார்க்காதவர்கள்கூட இவரது ஓவியங்கள் மூலம் இவரது உள்மன வேட்கையைக் கண்டு இவரது அபிமானிகளாக மாறியிருக்கிறார்கள் என்பதை அறிந்து பெருமிதப்படுகிறேன்.
சென்னையில் நடைபெற்ற இவரது ஓவியக் கண்காட்சியை நான் நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோதும், இவரது ஓவியங்களைக் கொண்டு வெளிவந்துள்ள சிறப்புப் புத்தகங்களைப் படித்து உணர்ந்தபோதும்தான் என்னால் இப்படி மனம் வியந்து எழுதும் தெளிவு கிட்டியது.
ஒரு லட்சியக் கலைஞனுக்கு அவனது குடும்பத்தினரும் ஒத்திசைவாக இருந்துவிட்டால் அதைவிடப் பெரும்பேறு ஏதுமில்லை. ஓவியர் புகழேந்தி அவர்களின் மாறுபட்ட ஓவியப் பணிக்கு எவ்வித முணுமுணுப்பும் காட்டாதவர்களாய், ஆனால் அவருக்கு உற்சாகமூட்டும் உந்து சக்தியாக விளங்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும், உற்ற நண்பர்களும் உறுதுணையாய் இயங்குவது பெருமைக்குரியது.
மனித வாழ்வின் சிக்கல்களும் அவதிகளும் முடிவற்ற கதையாகவே உலகில் வியாபித்து நிற்கும் என்று சந்தேகமறச் சொல்லப்பட்டாலும், திரு.புகழேந்தி போன்ற ஓவியப் போராளிகளின் சளைக்காத படைப்புகளால் முடிவற்ற மனித அவலத்தின் தீவிரமும் தொடர்ச்சியும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றே நம்பலாம். இவரது ஓவியக் கோடுகளின் கூர்மையும், வலிமையும், மனிதநேயமும், மனித குலத்துக்கே பொதுவானவை; இதன் மூலம் இவரது ஓவியக் கோடுகளை எப்படி உச்சரிக்கலாம் என்பதை இவரது ஓவியங்களைப் புரிந்துகொண்ட அனைவரும் இந்நேரம் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்பதை உறுதிபட நம்புகிறேன்.
|