லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட குஜராத் நிலநடுக்கக் கொடூரத்தைச் 'சிதைந்த கூடு' எனும் ஓவியமாக உருவாக்கியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி.
150 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்ட நீளமான ஓவியம் இது. ஓவியர் புகழேந்தி, சமூகக் கொடூரங்களையும், இயற்கைச் சீற்ற அழிவுகளையும் தனது ஓவியங்களில் உடனுக்குடன் பதிவு செய்பவர். ஈழப்போராட்டம், சாதி மதக் கொடூரங்கள், தேசிய இனப் போராட்டம், ஒரிசா புயல், ஆர்மீனிய பூகம்பம் ஆகியவை தனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை அவ்வப்போது ஓவியங்களாக்கி, கண்காட்சிகளில் இடம்பெறச் செய்திருப்பவர். அந்த வரிசையில் இப்போது இடம்பெறுவது குஜராத் நிலநடுக்கக் கொடூரம்.
இந்த மிகநீள ஓவியத்தை கிரையான், கருப்புப் பவுடர் ஆகியவற்றைப் பயன்படுத்தி மூன்றே நாட்களில் வரைந்திருக்கிறார். "இதைச் சாதனை என்பதைவிட வேதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்படியொரு ஓவியம் வரைய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதே" என்று வருத்தப்படுகிறார்.
ஸ்பெயின் நாட்டில் குண்டுபோட்டு அழித்தபோது அதன் கொடூரத்தை அறிந்த ஓவியர் பிகாசோ 24 அடி நீளத்தில் ஓர் ஓவியத்தை வரைந்தார். அதுதான் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களில் முக்கியமானதாக இன்றளவும் பாராட்டப்படுகிற குவார்னிகா ஓவியம். அந்த ஓவியத்தின் சாயல் இந்தச் சிதைந்த கூட்டிலும் பிரதிபலிக்கிறது.
பொதுவாகவே புகழேந்தியின் ஓவியங்களில் உருவங்கள் சிதைக்கப்பட்டிருக்கும். சிதைக்கப்பட்ட உருவங்களின் மூலமாகத்தான் தன் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புபவர் அவர். சிதைந்த மக்களையும் சிதைந்த உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு இந்த ஓவியச் சிதைவு கைகூடி வந்திருக்கிறது.
தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டிய நிலநடுக்கக் கொடூரக் காட்சிகள் ஓர் ஓவியனின் அனுபவத்தினால் கலைத்தன்மைப் பெற்று பூகம்பத்தின் ஒட்டுமொத்தக் கொடூரத்தை அழுத்தமாய் நமக்குள் பதியவைக்கிறது.
பூமி எனும் கூடு நிலநடுக்கத்தினால் சிதைந்துவிட்டது என்ற பொருள் பொதிந்த "சிதைந்த கூடு" எனும் இந்த ஓவியம் அழிவுகளை நமக்குள் ஆழவிதைத்திருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதல்ல. அதன் குறிக்கோள் வேறு ஒரு தளத்துக்குச் செல்கிறது. 150 அடி நீள ஓவியத்துக்குள் நாம் பயணிக்கும்போது பல்வேறு நிலைகளை உணர முடிகிறது.
முதலில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
அடுத்தடுத்து, இடிபாடுகளில் சிக்கி அதிலிருந்து மீள முயற்சிப்பவர்கள், இடிபாடுகளில் சிக்குவதற்கு முன்பு குழந்தைகளுடன் தப்பிப் பிழைக்க அலறியபடி ஓடுபவர்கள். உயிர்பிழைத்து நடந்து முடிந்த சோகத்தை எண்ணி வருந்துபவர்கள்... இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பாற்ற உவும் கரங்கள்...
உதவிக்கு ஏங்கும் கரங்களும் உலகம் முழுவதிலிருந்து நீளும் உதவிகளும்...
என பூகம்பம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து வரையப்பட்டிருக்கிறது.
இறுதியாக, இவ்வளவு சோகங்களுக்குப் பிறும் துளிர்விடும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில் நிறைவுறுகிறது ஓவியம்.
இத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதே இந்த ஓவியம் வரையப்பட்டதற்கான காரணமாகக் கொள்ளலாம். இதுதான் ஒரு சமூகப் படைப்பாளியின் கடமையாக இருக்க முடியும்.
காசி ஆனந்தன், இன்குலாப், பா. செயப்பிரகாசம் கவிதை வரிகள் ஓவியமொழி பேசுகின்றன.
|