எஸ்.வி.ஆர். என்று தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் பரவலாக அறியப்பட்ட எஸ்.வி. ராஜதுரை தமிழ்நாட்டிலுள்ள புத்தஜீவிகளில் வித்தியாசமாகத் துலங்கும் ஒருவர். முன்பு தமிழ்நாட்டில் ஈழப்போராட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்தவர்களில் ஒருவர். தொடர்ச்சியாக உயிர்த்துடிப்போடு செயற்பட்டும் எழுதியும் வருகின்ற ஒரு தீவிர இடதுசாரி; தலித்தியவாதி. தமிழ்நாட்டிலுள்ள நிறுவனம் சார் பாரம்பரிய புத்திஜீவிகள் சாதித்தவற்றை விடவும் அதிகம் சாதித்தவர்.
கடந்த மாவீரர் நாள் அன்று ராஜதுரை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்திருந்தார். "இந்நாளில் இங்கே நான் எதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்" என்று கேட்டார். "துயிலும் இல்லத்திற்கு போவோம்" என்றேன். எமது வாகனம் துயிலுமில்லத்தை நோக்கிப் புறப்பட்டபோதே மாவீரர்நாள் உரையும் ஆரம்பமாகிவிட்டது. ஆளரவமற்ற தெருக்களின் வழியே மழைக்காகக் காத்திருந்த அந்தப் பின்மாலைப் பொழுதில் படுவேகமாக ஓடிய வாகனத்தில் இருந்தபடி மாவீரர்நாள் உரையை அவர் கேட்டார்.
மாவீரர் நாள் உரை முடியுமுன்பே நாம் துயிலுமில்லத்தை அடைந்துவிட்டோம். அங்குத் திரண்டிருந்த சனத்திரளுள் நுழைந்து நாங்கள் நடுகற்களை நெருங்கிச் செல்லவும் மணியோசை எழவும் சரியாக இருந்தது.
குளிர்ந்த காற்றில் தேங்கி நின்ற மணியோசையும் சோகப் பாடலும் தீச்சுடர் கருகும் வாசமும் நடுகற்களின் முன்னே தமது விழிகளில் தீச்சுடர் மினுங்க அழுதபடியிருந்த உறவினர்களுமாக அந்தச் சூழல் எஸ்.வி.ஆர். அவர்களுக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. எல்லாவற்றையும் அவர் பிரமிப்போடு பார்த்தார். மாவீரர் நாள் உரை மிகவும் சமநிலையாக இருக்கிறது. ஒரு வெளிநாட்டுப் பார்வையாளருக்கு அது விசயங்களைத் தொகுத்தும் சுருக்கியும் தருகிறது என்று அதை அவர் மிகவும் புகழ்ந்தார். அவருக்குள் இருந்த எளிதில் விட்டுக் கொடுக்காத எதற்கும் சரணடையாத இறுக்கமான ஒரு புத்தஜீவி மெல்லக்கரைந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட தமிழன் அவரிடத்தில் தோன்றினான்.
அந்த இடத்தில் அந்த நேரத்தில் அவர் ஒரு புத்தஜீவியாய் அல்ல மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு தமிழனாகவே தோன்றினார்.
ஆனால் எஸ்.வி.ஆர். முதலாவதாக ஒரு புத்திஜீவியும் செயற்பாட்டுக்காரரும், இரண்டாவதாகவே அவர் ஒரு கலைஞர் விமர்சகர்.
ஆனால் அண்மை நாட்களில் வன்னியில் வந்து நிற்கும் ஓவியர் புகழேந்தி ஒரு புத்திஜீவியல்ல. அவர் முதலாவதாக ஒரு படைப்பாளி. மிகவும் உணர்ச்சிவசப்படுகின்ற ஓர் ஓவியர். ஒரு உள்ளூர்ப் பத்திரிகைக்கு அவர் பேட்டி வழங்கிக்கொண்டிருந்தபோது தொடர்ச்சியாக இவ்வளவு காலமும் எப்படி ஈழப்போரோடு நிற்கமுடிகிறது என்று கேட்கப்பட்டபோது அவர் அழுதேவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அவரும் அவரையொத்த தமிழகத்து ஈழத்துப் படைப்பாளிகள் பலரும் கலையை ஒரு கருவியாகவே பார்க்கிறார்கள். அதாவது தமது அரசியல் கருத்துக்களை இலட்சியங்களை சனங்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு வாகனமாகவே அவர்கள் கலையைப் பயன்படுத்துகிறார்கள். இன்று இப்பத்தி புகழேந்தியின் ஓவியங்களின் கலைத்தரத்தை மதிப்பீடு செய்யப்போவதில்லை. பதிலாக அவருடைய ஓவியங்களின் பின்னால் இருக்கும் அரசியலைப்பற்றிக் கதைப்பதே இன்று இப்பத்தியின் நோக்கம்.
புகழேந்தியின் ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவத்துக்கும், கவனிப்புக்கும் அவற்றின் அரசியல் உள்ளடக்கம் ஒரு முக்கிய காரணம் என்பதனாலும், அவருடைய ஓவியங்களின் அரசியலை கதைப்பது அதிகம் பொருத்தமானதாய் இருக்கும். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாகப் படிப்படியாகச் சிதைந்து வரும் தமிழக தமிழீழ உறவின் பின்னணியில் அவருடைய இந்த ஓவிய அரசியலைப் பற்றிக் கதைப்பது மேலும் முக்கியத்துவ முடையதாகிறது.
1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகிய காலத்திலிருந்து சிதையத் தொடங்கிய தமிழக தமிழீழ உறவு கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலவிவரும் யுத்த நிறுத்தச் சூழலிலும் பெருமளவுக்குச் சீர்செய்யப்படவில்லை.
கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளை நோக்கி குறிப்பாக ஐரோப்பாவை நோக்கி ஈழத்தமிழர்கள் சாய்ந்துவரும் வேகத்துடன் ஒப்பிடுகையில் தமிழக தமிழீழ உறவில் ஏற்பட்டிருக்கக் கூடிய புதிய மாற்றங்கள் எதுவும் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே.
தமிழ்நாட்டில் உள்ள பெரும் கட்சிகளும் பழமைபேண் இடதுசாரிக் கட்சிகளும் ஈழத்தமிழர்களை எப்பொழுதோ கைவிட்டுவிட்டன. அல்லது சிலசமயம் காட்டிக் கொடுத்துமிருக்கின்றன. தற்சமயம், ஈழத்தமிழர்களிடத்தில் அக்கறையோடும் ஆர்வத்தோடும் காணப்படுவது அரசியல் அதிகாரம் குறைந்த சிறிய கட்சிகளும், சிற்றியக்கங்களும், தலித்திய இயக்கங்களும்தான்.
இத்தகையதொரு பின்னணியில் தமிழ்நாடு இனியும் ஈழப்போரின் பின்தளமாக இல்லை என்று டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் திருப்திபடக்கூடும், சந்தோசப்படக்கூடும். ஆனால் கடந்த இரு தசாப்தகாலமாக ஈழத் தமிழர்கள் இந்தப் பிராந்தியத்தைக் கடந்து ஒரு அந்நியப் பிராந்தியத்தில் பதிவைக்கப்பட்டு வருவதும் அங்கெல்லாம் அவர்கள் ஏற்கெனவே ஒரு நிதிப் பின்தளமாக உருவாகிவிட்டிருப்பதையும் மேற்படி டில்லியிலிருக்கும் கொள்கை வகுப்பாளர்கள் ஏனோ கண்டுகொள்ளவேயில்லை.
இதுவொரு அசாதரண மாற்றம். நிச்சயமாக டில்லியிலிருப்பவர்கள் இப்படியொரு மாற்றத்தை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் அது நடந்துவிட்டது. ஈழத்தமிழர்கள் ஓர் அந்நியப் பிராந்தியத்தில் பதிவைக்கப்பட்டு விட்டார்கள். ஐரோப்பா அவர்களைத் தத்தெடுக்கத் துடிக்கிறது. உழைப்பார்வமும் படிப்பில் வெறியும் சேமிப்பில் வெறியுமுடைய விவேகமும் வீச்சுழியும் மிக்க ஒரு தனித்தினுசான புலம்பெயர் சனத்திரளைத் தன்வயப்படுத்தவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் தமக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகிவருவதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நம்புகின்றன. அந்த இலக்கைநோக்கி அடிகளை எடுத்துவைக்கத் தொடங்கியும்விட்டன.
அமெரிக்காவிலுள்ள செல்வாக்கு மிக்க ஐரிஸ் சமூகத்தைப் போலவோ அல்ல யூத சமூகத்தைப் போலவோ ஈழத் தமிழர்களும் ஒரு நாள் ஐரோப்பாவில் அரசியல் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல அல்லது, அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல ஒரு சனத்திரளாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய ஒரு பின்புலத்தில் தன்னிடமிருந்து தூரமாகிச் செல்லும்; தனது பிராந்தியத்தைச் சேர்ந்த, தனது உபகண்டப் பெருங்கலாச்சாரத்தின் 'ஒரு கூறாகக்' காணப்படுகின்ற; சிறிய ஆனால் புரிந்து கொள்ளக் கடினமான, வீரமிக்க ஒரு சனத்திரளைத் தொடர்ந்தும் வன்மத்தோடும் 'பெரிய இந்தியா' என்ற ஆணவத்தோடும் டில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் அணுக முயலும் ஓர் அரசியல் சூழலில் புகழேந்தி தனது ஓவியங்களையும் காவிக் கொண்டு ஒரு கலைப்பயணத்தை மேற்கொண்டு வன்னிக்கு வந்திருக்கிறார்.
அவர் இதற்கு முன்பும் பலகலைப் பயணங்களைச் செய்திருக்கிறார். ஆனால் இது மிகவும் வித்தியாசமானதும், உணர்ச்சிகரமானதும் அவரைச் சிலசமயங்களில் அழவைப்பதாகவும் இருக்கிறது. நல்லூரில் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்திலும் ஏனைய சில பெரு மெடுப்பிலான படுகொலைகள் நிகழ்ந்த இடங்களிலும் பெரிய அளவிலான ஓவியங்களை வரைய விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து இராஜதந்திரிகளும் ஏனைய பிரதானிகளும் வன்னிக்கு வருதல் என்பதை ஒரு துடக்காகக்கருதும் ஒரு அரசியல் சூழலில் இந்தியாவிலிருந்து முதன்முதலாகப் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் வந்திருக்கும் ஒரு கலைத்தூதுவர் அவர்.
ஏற்கெனவே இலங்கைத் தீவிலிருந்து சுவாமி விபுலானந்தர், கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி, தனிநாயகம் அடிகள், நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை போன்ற சில கலைத்தூதுவர்கள் காலத்துக்குக் காலம் இந்தியாவுக்குப் போயிருக்கிறார்கள். இம்முறை புகழேந்தி இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்.
பொடாச் சட்டத்திற்கு எதிராக திரு.வை. கோபாலசாமி முன்னெடுத்த வீரம் மிகுந்த ஒரு சாத்வீகப் போராட்டத்தின் வெற்றிகளில் ஒன்றாகவும் இதை வியாக்கியானம் செய்யமுடியும்.
ஓர் ஆயுதமேந்திய இயக்கத்தை ஆதரித்ததாகக் கூறப்பட்டு பொடாவின் கீழ் வை.கோ. சிறைவைக்கப்பட்டார். ஆனால் அந்தச் சிறைவாழ்வை அதன் வலிகளோடு அமைதியாக ஏற்றுக்கொண்டு அதில் தன்னை வருத்தி அதையே ஒரு சாத்வீகப் போராட்டமாக முன்னெடுத்த வைகோ முடிவில் அதில் வெற்றியும் பெற்றார். அந்த வெற்றிகளின் விளைவாகத் தமிழ்நாட்டில் துளிர்த்துவரும் புதிய நம்பிக்கைகளின் தூதுவராக முதலில் அடியெடுத்து வைத்திருப்பவர் புகழேந்தி எனலாம்.
அவர் இதற்கு முன்பும் (சில மாதங்களுக்கு முன்பு) இலங்கைக்கு வந்து போனவர்தான். தங்கர்பச்சான், பேராசிரியர் அரசு, எஸ்.வி. ராஜதுரை, பாலுமகேந்திரா, சக்சபோன் கலைஞர் சியாம் சரண் போன்றோர் அதிகம் பரபரப்பின்றி வந்துபோன ஒரு பின்னணியில் பகிரங்கமாக ஒரு கலைத்தூதுவராக முதலில் வரத்துணிந்தவர் புகழேந்தி எனலாம்.
தமிழக தமிழீழ உறவில் இன்னமும் அறுந்துவிடாதிருக்கும் நுண்ணிய மெல்லிழைகளில் அவரும் ஒருவர். அவர் கொண்டு வந்திருக்கும் கலைத்தூதைப் பின்பற்றி மேலும் மேலும் இந்தியர்கள் இங்கே வரவேண்டும்.
புதுடில்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் புலிகளை மட்டும் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாகக் கருதவில்லை. மாறாக, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழர்களையும் கூட, தடைசெய்யப்பட்ட மக்களாகவே பார்ப்பது தெரிகிறது.
ஆனால் அது விசயத்தில் ஈழத்தமிழர்கள் வித்தியாசமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது புதுடெல்லியிலுள்ள கொள்கை வகுப்பாளர்களையும், இந்தியப் பெருமக்களையும் ஒரே தராசில் போட்டு நிறுத்தக்கூடாது. ஈழப்போரின் நிர்ணயகரமான தருணங்களில், ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களைப்போலவே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒரு தீர்மானிக்கும் பெரும் சக்தியாக அமையமுடியும் என்பதை மறந்துவிடாதிருக்க வேண்டும்.
|