தூரிகைப் போராளி - ஓவியர் புகழேந்தி

பூங்குழலி


கவிதாசரண், சனவரி - பிப்ரவரி 2004


கலை - மென்மையான உணர்வுகளை மீட்டும் கருவியாக மட்டும் அல்லாது ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகப் புரட்சிகளுக்குத் துணையாகவும் தூண்டுகோலாகவும் நின்றிருப்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

அவ்வகையில் ஓவியக்கலை, வெறும் அழகியல் சார்ந்ததாக நில்லாது சமூக அவலங்களை, நம் கண்முன் நடக்கும் பலவகையான அத்துமீறல்களைச் சாடவும், வெகு மக்களுக்கு அதைக் கொண்டு சேர்க்கவும் பயன்படுமாயின் அதுவே ஓர் ஓவியரின் உண்மையான சமூகப் பங்களிப்பாக இருக்க முடியும்.

உலகெங்கிலும் அத்தகைய சமூகப் பங்களிப்பைத் தொடர்ந்து உளப்பூர்வமாக அர்ப்பணிப்போடு வழங்கி வரும் மிகச் சில ஓவியர்களில் முக்கியமானவர் ஓவியர் புகழேந்தி. அவரே கூறுவதுபோல ஓவியங்களைச் சமூக அநீதிக்கு எதிரான ஓர் ஆயுதமாகவே அவர் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

"எரியும் வண்ணங்களில்" துவங்கி, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் பதிவாக 'உறங்கா நிறங்கள்', குஜராத் நில நடுக்கப் பேரழிவை 150 அடி நீள் ஓவியமாக்கிய 'சிதைந்த கூடு', பெரியாரின் பன்முகங்களைக் காட்டும் கோட்டோவியங்களோடு 'திசைமுகம்' என ஆண்டுதோறும் மக்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் தனது ஓவியங்களைக் காட்சியாக்கி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

புகை மூட்டம், மதம், சாதி, அரசியல் அதிகாரம் ஆகியவை நடத்திய, நடத்தும், அத்துமீறல்களை, ஒடுக்குமுறைகளை முகத்தில் அறையும் விதத்தில் அப்பட்டமாகவும் அழுத்தமாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது.
'குஜராத் - காந்தியின் கருவறையா கல்லறையா?'

ஒவ்வொரு மனதையும் உலுக்கி எழுப்பும் இந்தக் கேள்வியோடு துவங்கும் புகை மூட்டம், குஜராத்தில் மதம் தன் கோர நகங்களால் குத்திக் கிழித்த மனிதத்தைக் காண்போர் உள்ளம் பதைக்கும் வண்ணம் எடுத்துக்காட்டுகிறது.

அது பிறப்பா இறப்பா என்றே வேறுபடுத்திக் காண இயலாத வகையில் தாயின் வயிற்றைக் கிழத்துக் கருப்பையிலிருந்து குழந்தையை சூலத்தால் எடுத்த அந்தக் கொடூரக் கரங்களை, இடிக்கப்பட்ட மசூதியின் இடிபாடுகளுக்கிடையே சிதறிக் கிடக்கும் அன்பைப் போதிக்கும் குரான் தாள்களை, எரிக்கப்படும் முன்தானே விறகாய் அடுக்கப்பட்ட மனித உடல்களை, தொடர்புக்கானது இன்று கொலைக்கு வழிகாட்டியாய் ஆக்கப்பட்ட தொலைபேசி அட்டவணையை... இவற்றைக் காணும் நொடியில்... மதம் கற்றுத் தந்தது இதைத்தானா? என்ற பெரும் கேள்வி நம்முன் எழுந்து நிற்கிறது.

குஜராத் சார்ந்த ஓவியங்களில் இந்துத்துவாவின் வெறியாட்டம் அப்பட்டமாகத் தெரியும் வண்ணம் சூலம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஓவியரின் நுட்பத்தைக் காட்டுகிறது.

மதத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டிய கையோடு சாதியத்தின் கேவலத்தையும் சுட்டத் தவறவில்லை ஓவியர். நினைத்துப் பார்க்கவே கூசும், இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியும் வண்ணம் மனிதனுக்கு மனிதன் மலத்தைக் கொடுத்துத் தின்னவைத்த அவலத்தை நம் கண்முன் நிறுத்தியுள்ளார். விரும்பும் உணவை உண்ண மட்டுமே இயல்பாக, தானாக வெளிநீளும் நாக்கு, மலத்தை உண்ண வெளி நீண்டு தொங்குவதாகக் காட்டியிருப்பதன் மூலம் சாதிய அச்சுறுத்தலை, ஒடுக்குமுறையை மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

அடுத்து, அவரது தூரிகை பாய்வது அடக்குமுறைச் சட்டங்கள் மீது. அந்நியர் ஆட்சியில் புரட்சியாளர்களை, விடுதலை வீரர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது ரவுலட் சட்டம். அச்சட்டத்தின் மூலம் கைகள் மட்டும் கட்டப்பட்ட மனித உரிமை, இந்தியா விடுதலை பெற்றுவிட்டதாகச் சொல்லப்படும் காலத்திற்குப் பின் கொண்டுவரப்பட்ட மிசா, தடா, பொடா சட்டங்களினால் எத்தகு கொடூரமாக முடக்கப்பட்டுள்ளது என்பதை நான்கு தொடர் ஓவியங்கள் மூலம் மிக எளிதில் புரிய வைக்கிறார்.

மிசாவில் கையோடு வாயும் கட்டப்பட்டு, தடாவில் மடக்கப்பட்டு, பொடாவில் முதுகு எலும்போடு சேர்த்து  முடக்கப்பட்டது மனித உரிமை.

"உலக பயங்கரவாதம்" இதனைக் காரணம் காட்டி இந்தியா கொண்டு வந்தது பொடா என்றால் அமெரிக்காவோ ஆப்கன் என்ற ஒரு நாட்டையே அழித்தது. அதோடு தீரவில்லை அதன் கொலைவெறியாட்டம். ஒரு பின்லேடனுக்காக ஆப்கன் நாட்டை அழித்த அமெரிக்கா ஒரு சதாமுக்காக ஈராக் நாட்டை அழித்தது. ஒரு மனிதனுக்காக ஒரு நாட்டையே அழித்ததுதானே உண்மையான "உலக பயங்கரவாதி" என நிரூபித்த அமெரிக்காவின் அதிகார வெறியை, ஈவு இரக்கமில்லா இரத்தப் பசியை தனது ஓவியங்களின் மூலம் சிவக்கச் சிவக்கக் காட்டுகிறார் ஓவியர்.

பிணம் தின்னிக் கழுகுகள் இன்று உயிரோடு விழுங்கியது மனிதத்தை. நகங்களில் இரத்தம் சொட்ட, அடங்காத வெறியோடும், ஆர்ப்பரிக்கும் திமிரோடும் நிமிர்ந்து நிற்கும் அந்தக் கழுகில், அமெரிக்காவின் குணாதிசயத்தை முழுவதுமாகக் காட்டிவிடுகிறார். கடந்த தலைமுறையின் பெருமைகளைப் பறைசாற்றும் கலைச் செல்வங்களை நிர்மூலமாக்கி, வருங்காலத் தலைமுறையினரான ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தை அழித்தொழிக்க முற்பட்ட அமெரிக்காவின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் ஓவியர்.

ஏவுகணையின் மூலம், ஆயுதங்களின் மூலம் ஈராக்கையும் ஆப்கானையும் தாக்கியழித்த அமெரிக்கா, இங்கே நம் மண் மீது உலகமயமாக்கல் என்ற பெயரில் ஒரு பெரும் படையெடுப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கலாச்சாரச் சீரழிவை மட்டும் அது நிகழ்த்தவில்லை. மாறாக நம் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல எதுவும் இல்லாத வகையில் நம் அனைத்து வளங்களையும் சுரண்டி, அதை நம்மிடமே விற்றுக் கொழிக்கின்றது.

நாட்டிற்கே சோறு போட்ட தஞ்சை நிலம் இன்று வறண்டு, வெடித்து, காய்ந்து கிடப்பதற்குக் காரணம் கர்நாடகம் மட்டுமல்ல, உலகமயமாக்கலின் பெயரால் நடக்கும் நீர் சுரண்டலும்தான். இவற்றை மிக எளிமையாகத் தனது ஓவியத்தின் மூலம் காட்டியுள்ளார்.

வறண்டது நிலங்கள் மட்டுமா? மனித முகங்களும் தான். புகழேந்தியின் தூரிகையில் வெளிப்பட்ட அந்த உழவனின் முகத்தில் தென்படும் சோகம், இழப்பின் துயரம், ஏமாற்றம் 'எல்லாம் முடிந்துவிட்டது' போன்ற விரக்தி... இன்னும் ஏதேதோ உணர்வுகள் நம் நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தையே ஏற்றிவிடுகின்றன.

அந்தப் பாரத்தை இறக்கி வைக்க நாம் என்ன செய்யப்போகின்றோம்? வறண்ட நிலம் துளிர்க்க, மனிதம் மீண்டும் உயிர்க்க... நம் பங்களிப்பு என்னவாக இருக்கப்போகிறது?

வெறும் பரிதாபத்தைத் தூண்டி, படி தாண்டியவுடன் மறக்கச் செய்யும் ஓவியங்கள் அல்ல அவை. நிறைவரங்கத்தில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கூறியதைப்போல... அதிகமாகப் பரிதாபப்படுகிறவனே அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறான்... அதையும் விட, அதிகமாகப் பரிதாபப்படுகிறவன்... திருப்பி அடிக்கிறான்.

நாம் குறைந்தபட்சம் கேள்வியாவது கேட்போமா? அப்படிக் கேட்போமானால் அதுவே நாம் அந்த ஓவியருக்குச் செய்யும் கைமாறு:
அந்தக் கேள்வியே ஓவியரின் வெற்றி.

குளிர்ப்பதன அறைகளில் உயர்தட்டு மக்களுக்காக மட்டுமே என்று இருந்த ஓவியக்கலையை வெகு மக்களுக்கு எடுத்துச் சென்றிருக்கும் ஓவியர் புகழேந்தியின் சீரிய பணி தொடரட்டும்.