காட்சிக் கலாச்சாரத்தின் வன்முறையும்
புகழேந்தியின் ஓவியங்களும்


பா. இரவிக்குமார்


தீராநதி - ஏப்ரல் 2005


வார்த்தைகளால் வருணிக்க இயலாத அளவிற்கு நாம் ஒரு கொடூரமான உலகத்தில் வாழ்கிறோம். தகவல் தொழில் நுட்பம் நமக்கு வசதிகளை மட்டும் தரவில்லை. கூடவே, வன்முறையையும் திணித்துள்ளது. காட்சிக் கலாச்சாரத்தின் தவிர்க்க இயலாத விபத்து இது. யதார்த்த உலகில் நிகழும் கொலைகளை, பேரழிவுகளை நம் மனம் ரசிக்கின்றது. வன்முறைகள் எங்கு நடந்தாலும், அதனைக் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்கிறோம். மனசாட்சியை ஆழ்மனதில் எங்கோ பூட்டிவிட்டு அதன் சாவியைத் தொலைத்துவிடுவதாய் அமைந்திருக்கிறது இன்றைய வாழ்க்கை.

கலைஞனின் மனம் தூங்குவதில்லை. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாகத் தன் ரத்தத்தை வண்ணங்களில் குழைத்துத் தந்த புகழேந்தி, அப்படி ஒரு கலைஞன்.

சமூகத்தின் உறங்காத மனசாட்சியாய், புகழேந்தியின் ஓவியங்கள் விளங்குகின்றன. 'சலக்குருத்தி' என்ற ஓவியம் உடனடியாய் நினைவுகளின் அடுக்குகளில் மிதக்கிறது. இந்த ஓவியத்தில், பொட்டுத் துணி கூட இல்லாத நிலையில் ஒரு பெண் கூனிக் குருகி நிற்கிறாள். ஆணாதிக்கத்தின் வலிய கரங்கள், கொடூரமாய் அவளை வதைக்கின்றன. இந்தக் கொடுமையைக் கண்ட அதிர்வில் ஒரு முகம் கண்மூடி நிற்கிறது. கண்கள் திறந்த நிலையில் கிடக்கும் மற்றொரு முகம் வாய்மூடி நிற்கிறது. இப்படி ஓர் அவலமா என்ற வேதனையோடு, திகைத்த நிலையில் மற்ற முகங்கள். ஓவியத்தின் பின்புலத்தில் 'ஷூ' அணிந்த கால்களை வரைவதுடன் ஓவியத்தை நிறுத்திக் கொள்கிறார் புகழேந்தி. மேல்தட்டுத் திமிர்த்தனத்துடன் உலவும் அந்தக் கால்களுக்கு, சமூகத்தில் நிலவும் அவலத்தைக் காண்பதற்குக்கூட முகங்கள் இல்லை.

நாளும் நாளும் வன்முறைகள் பெருகும் இந்த உலகில், சிலருக்கு மனசாட்சியும் செத்துவிடுகிறது. மனசாட்சி எஞ்சியுள்ள வெகுசிலரோ, வாய்மூடியும் கண்மூடியும் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில், கலைஞனின் பணி என்ன? என்ற கேள்வியைக் கேட்கும்போதுதான் புகழேந்தியை மேலும் மேலும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

எண்பதுகளுக்குப் பிறகு வரைய வந்த புகழேந்தி, வரலாற்றுப் புரிதலுடன் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. உலகத்தின் முக்கிய நிகழ்வுகளையெல்லாம் அவர்தன் ஓவியத்தில் தீட்டி இருந்தாலும், தமிழ்ச் சூழலின் பின்னணியில் அவரைப் புரிந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

காட்சிக் கலாச்சாரத்தின் வன்முறைக்குள் சிக்கிக் கொண்ட தமிழ்ப் பார்வையாளர்களை, ஓவியங்களில் பங்கேற்பாளர்களாக மாற்றியது புகழேந்தியின் மகத்தான சாதனை என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

'எரியும் வண்ணங்கள்' என்ற ஓவியத் தொகுப்பில், தமிழ் உடல்கள் சிதைந்து, துண்டு துண்டாகக் கிடக்கின்றன. கால்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும், மார்பகங்கள் சிதைக்கப்பட்டுப் பெண்களும், எந்தப் பார்வையாளனாலும், இதனை வெறுமனே ரசிக்க முடியாது. மேலோட்டமாக இதைப் பார்க்கும் பார்வையாளனும், தன்னை ஒரு சிதைந்த உடலாக உணர்வான். புகழேந்தியின் ஓவியத்தில் தன்னுடைய இடம் எது என்று தேடுவான்.

குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால், அதிலிருந்து வழிந்த குருதி இன்னும் உலர்ந்துவிடவில்லை. உலரவிடாமல் காப்பாற்றி நிற்பது, புகழேந்தியின் தூரிகை. நம் கண்களிலும் அதுபோல் ஒரு காயத்தை, ஒரு வெறுமையை உணர்கிறோம். வரலாற்றிலிருந்து தப்பிக்க நினைக்கும் பார்வையாளர்களை, இப்படித்தான் புகழேந்தியின் தூரிகை பிணைக்கிறது. கீழ்வெண்மணியில் நிகழ்ந்த கொடூரங்களையும் நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம். அந்தப் பிணங்களை நம் கண்முன் காட்சிப்படுத்துவதன் மூலம் ஊமையாய்க் கிடக்கும் நம் மனசாட்சிகளை உலுக்குகிறார் புகழேந்தி.

புகழேந்தியின் ஓவியங்களை 'முற்போக்கானவை' என்று முத்திரை குத்த மனம் கூசுகிறது. ஒட்டிய மார்புடனும், ஒடுங்கிய வயிறுடனும் பாலூட்டும் தாயைச் சித்திரிக்கும் ஓவியத்தை, 'வறுமையைச் சித்திரிக்கும் ஓவியம்' என்று வெறும் வார்த்தைகளால் எழுதினால், பிறகு அந்தக் கலைக்கு என்னதான் மதிப்பு?

புகழேந்தியின் ஓவியங்களில் பெரும்பாலானவை சிதைந்த உடல்களைச் சித்திரிப்பவை. துப்பாக்கி முனைகளில், தூக்குக் கயிறுகளில், கல்லறைகளுக்குக் கீழே என்று உடல்கள். உயிருடன் இருந்தாலும், வெறும் உடல்கள். மனித உயிர்களின் மதிப்பைத் தேடும் கலைப்பயணம்தான் புகழேந்தியுடையது. அரசியல் இல்லாமல் இது சாத்தியமில்லை.

அதனால்தான் தன்னைப் பாதித்த சமூகப் போராளிகளை வண்ணங்களில் வரலாற்றாக்கியுள்ளார். 'திசைமுகம்' புகழேந்தியின் கலைப்பயணத்தில் அற்புத சாதனை என்றே சொல்ல வேண்டும். இந்தத் தலைமுறை, பெரியாரை மறந்துவிட்டது அல்லது அறிந்திருக்கவேயில்லை. அறிவு ஜீவிகளோ பெரியாரின் கருத்துகளைத் திரித்தும், கொச்சைப்படுத்தியும் பேசுகிறார்கள். திசைகளே இல்லாத இளைய தலைமுறையினருக்கு, 'திசைமுகத்தை'க் காட்டியிருப்பதன் மற்றொரு வரலாற்றுக் கடமையை, புகழேந்தி செயல்படுத்தியுள்ளார்.

பெரியாரின் பன்முக ஆளுமைகளை உயிர்ப்புடன் இதைவிட அழகாகத் தீட்டிவிட முடியாது.

புகழேந்தியின் அழகியல் என்பது வெளிப்படையான அரசியல் தான். விதவிதமாக அழகியலைத் தேடும் நவீன ஓவிய உலகில், இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும் துணிச்சல் வேண்டும். கவிதை எழுதும் கவிஞர்கள் இத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுப்பது சுலபம். ஓவியங்களில் வீர.சந்தானம், மருது போன்ற வெகு சிலரே தங்கள் ஓவியங்களை அரசியல் மயப்படுத்தியுள்ளார்கள். இவர்களிடமிருந்து புகழேந்தி ஒரே ஒரு விஷயத்தில் மாறுபடுகிறார் என்று தோன்றுகிறது. மிகுதியான கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் நவீன ஓவியக் கலையை அவர் வெகுசனப்படுத்தியுள்ளார்.

எந்த ஒரு கலையையும் வெகுசனப்படுத்துவதில் ஓர் அபாயமும் உள்ளது. அந்தக் கலை விரைவில் நீர்த்துவிடும் அல்லது சிதைந்துவிடும். புகழேந்தியின் ஓவியங்களில் இதுவரை அப்படி நிகழவில்லை.

திரைப்படங்களைப் பார்த்து, விசில் அடிக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் வரைய வேண்டியுள்ளது. நடிகர்களின் பிம்பங்களே ஆழப்பதிந்துவிட்ட ஒரு சமூகத்திற்கு, பெரியாரையும், மார்க்ஸையும், நெல்சன் மண்டேலாவையும், காந்தியையும், லெனினையும் அவருடைய தூரிகை நினைவுபடுத்துகிறது.

'காட்சிக் கலாச்சாரத்தின் வன்முறை'யிலிருந்து பார்வையாளர்களை விடுதலை செய்யும் புகழேந்தியின் கலைப்பணியை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். மேலை சமூகத்தில், புகழேந்தி பிறந்திருந்தால் அவருடைய ஓவியம் வேறு திசையை நோக்கிப் பயணம் செய்திருக்கக்கூடும்.

புகழேந்தியின் ஓவியத்தை வெறும் அழகியலைச் சார்ந்து புரிந்துகொள்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவருடைய அழகியல் என்பது இந்த மண்ணை மீட்டெடுப்பதுதான்.

தமிழர்களிடமிருந்து, தமிழ் மண்ணை, தமிழ்ப் பண்பாட்டை
.