புகழேந்தியின் உருவச் சிதைப்பு ஓவியங்கள்

சுந்தர்ஜி


பாலம், செப்டம்பர் 1988


இலக்கியம், இசை, ஓவியம், நடனம், சிற்பம் போன்ற பல கலைத்துறைகளிலும் தன் பங்கை விடாமல் செலுத்தி வருகிற தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்றொரு கலைஞனாய் ஓவியனாய் புகழேந்தி நுழைந்திருக்கிறார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு கலைத்துறை மாணவனாய் பயின்று வருகிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. லலித்கலா அகாடெமி உள்ளிட்ட பல ஸ்தாபன விருதுகள் பெற்றிருக்கிறார். 1987 இல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஓவியப் போட்டியில் 2 ஆம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட புகழேந்தி, கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தஞ்சாவூர் பெசன்ட் ஹாலில் One Man Show ஒன்றை நடத்தினார். அதுபற்றி சொல்வதற்கு முன்னால் நவீன ஓவியத்தின் ஆரம்பத்திற்குப் போகலாம்.  

எல்லாக் கலைத்துறைகளையும் போலவே வெவ்வேறு மாற்றங்கள் சம்பவித்ததாலே ஓவியத்துறையின் வளர்ச்சியும் நிர்ணயமானது. கற்கால மனிதர்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, ஓவியம் நிலைத்து நிற்க காலத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள என்னென்னவோ மாதிரியான மாற்றங்களை யெல்லாம் எதிர்கொள்ள வேண்டியேயிருந்தது. இருப்பதை இருப்பது மாதிரிக் காட்டும் ஓவியங்கள் பல ஆண்டுகளைச் சாப்பிட்டிருக்கின்றன. பல ராஜாக்களைத் திருப்திப்படுத்தும் உருவ
(Portraits) ஓவியங்களின் ஆக்கிரமிப்பு நிறைந்த வருஷங்கள் புதிய கற்பனைக்கும் புதிய சிந்தனைக்கும் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் அழிந்துபோன தலைமுறைகளை கொடுத்தது. பல கைகளை, பல தலைகளை உடைய கடவுள்கள், யானைத் தலை கொண்ட விநாயகன் என்று அறிந்தோ அறியாமலோ சர்ரியலிச ஓவியங்களின் காலங்கள். இந்த மண்ணில் ஓவியர்களின் கண்ணில் பட்டவை எல்லாம் அப்படியே தூரிகைகளால் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்திய ஓவியங்கள் சமதளத்திலேயே நீண்ட தூரங்களைக் காட்டமுடிந்த ஆரம்பங்கள், மினியேச்சர்கள்
(Miniature) மேற்கத்திய ஓவியர்களைப் பாதித்திருக்கின்றன. அதற்கு முன்பு மைக்கேல் லாஞ்சலோ, லியானார்டோ டாவின்சி, அதற்குமுன் பிரான்ஸிஸ் கோயா வின்சென்ட் வான்கா என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெயர்கள் முளைத்திருந்தன. வண்ணங்களின் தேர்ந்த பிரயோகம், புதிய சிருஷ்டி (Creativity) இவையெல்லாம் முழுஅளவில் வெளிப்படத் தயங்கி எங்கோ வெளியில் அலைந்து கொண்டிருந்தன. மைக்கேலாஞ்சலோ, டாவின்சியின்

ஓவியங்களின் நுணுக்கமான விவரப்பதிவுகள் ஒரு புதிய வழிக்கு ஆதாரமாயிருக்கின்றன. ஓடும் குதிரைகளின் பௌருஷம். மனிதர்களின் உடற் கூற்றுப் பதிவுகள். இப்படி, இப்படி காலம் ஓடிக்கொண்டிருந்தது. திருப்பங்கள் தோன்றின பெருமளவில். சால்வர்டோர் டாலி தன் சர்ரியலிச ஓவியங்களால் நவீன சிந்தனையை ஓவியத்துறையில் ஏற்படுத்துகிறார். டாலியின் பாதிப்பு பல நவீன ஓவியர்களிடமும் காணப்படுகிறது. பிக்காசோ மற்றும் ப்ராஹ் என்ற இளைஞர்கள் இந்த வழியில் வரைந்து வரும் காலங்கள் இன்னொரு மாற்றத்திற்காகக் காத்திருக்கிறது. ஆக, பிக்காசோ பல விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தன் ஓவியங்கள் மக்களுக்கும் விமர்சகர்களுக்கும் புரிய வெகுகாலம் ஆகும் என்று ஒரு கலைஞனுக்குரிய கர்வத்தோடும் வருங்காலக் கலைத்துறையின் சரியான தேவை உணர்வோடும் உருவச் சிதைப்பு ஓவியங்களை அறிமுகப்படுத்துகிறார். அப்போது பிக்காசோவின் வயது இருபதுக்குள்தான் என்பதும் ஒரு செய்தி.

அவருடைய 'விபச்சாரக் காட்சி' ஓவியத்தில் பெண்களின் முலைகள் கண்கள் போலவும் கை கால்கள் மிகப் பெரிய அளவில் விரிவடைந்து அருகாமையிலும், மூக்கின் எலும்புகள் முதுகுத் தண்டுகள் போலவும் முலைகள் முதுகுப்புறத் தோள் எலும்புகள் போலவும் என பல்வேறு தோற்றங்களைத் தருகின்றன. இந்த ஓவியம் ஓவிய உலகையே அதிர்ச்சியால் பாதிக்கிறது. புதியவற்றை எப்போதும் மறுக்கிற விமர்சகர்கள் பிக்காசோவின் ஓவியத்தை வன்மையாக நிராகரிக்கிறார்கள். பிக்காசோவின் நண்பன் ஓவியன் ப்ராஹ் 'இது என்ன குழப்பம்' என்று ஒதுக்குகிறார். பிக்காஸோ தன் முயற்சியில் தீவிரமாயிருக்கிறார்.

எல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்ட கற்பனைகள்தானே. காலத்தை நாட்களாக அளப்பதும், சூரியனின் தூர அளவைகளும் இதுபோலத்தானே. எனக்கு ஒன்றாகத் தெரிவது, அடுத்தவனுக்கும் அப்படியே தெரியுமென்பது என்ன நிச்சயம்?


காலம் செல்லச் செல்ல பிக்காசோவின் ஓவிய மொழி புரிய ஆரம்பிக்கிறது. செசானேயின் பாதிப்புகளுடன் வரைந்து கொண்டிருக்கும் ப்ராஹ்கின் ஓவியங்களில் பிக்காசோவின் உருவச் சிதைப்பு ஓவியங்களின் பாதிப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இருவரும் ஒன்றே போல் வரைந்து செல்கிறார்கள். பிக்காசோவின் ஓவியங்களில் தெரியும் ஆஃப்பிரிக்க முகமூடிகள்
(Masks) மட்டுமே ப்ராஹ்கின் ஓவியத்தைப் பிரித்துக் காட்டுகிறது. சால்வடோர் டாலி மூலம் தெரிய வந்த நவீன ஓவியங்களில் உருவச் சிதைப்பு முறை ஓவியங்கள் இவ்வாறு பிக்காசோ மூலம் தொடங்கி உலகப் பிரபல்யம் அடைகின்றன.

புகழேந்தியின் ஓவியங்களில் பெரும்பாலானவை உருவச் சிதைப்பு ஓவியங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஆரம்ப காலங்கள் எல்லோருடையதையும் போலவே புகழேந்திக்கும் அமைந்திருக்கின்றன. படிபோட்டுக் கொடுத்திருக்கின்றன. உருவப்படங்கள்
(Portraits)  லினோகட்கள் (Linocuts) என்றுதான் தொடங்குகிறது ஆரம்பம். தத்ரூபமாக வரைவில் ஆர்வம் கொண்டவையாக ஆரம்பகால ஓவியங்கள் தெரிகின்றன. இளவயது மனோநிலைக்குப் பல வடிகால்கள் உண்டல்லவா? புரியாத செக்ஸ், வறுமையின் கோர அறிமுகம், பசி, கனவுகள், சுரண்டலைக் கண்டு கோபம், பொய்யர்களின் புரட்டு, தப்பைக் கண்டு கோபத்தால் எரிவது, நோயின் பார்வை எனப் பல வகையாகப் பிரிந்து நிர்ணயம் கொள்கின்றது இளமை. இவை எல்லாவற்றிலும் சட்டென்று சிக்கிக் கொண்டுவிடாமல், பதிலை ஒவ்வொரு ஓவியமாகத் தேடி முயற்சித்திருக்கிறார்.

இலங்கைப் படுகொலையைச் சித்தரிக்கும் ஓவியம், நீரில் கோபுர நிழல் விழும் ஓவியம், கூட்ட நடுவில் மக்கள் முகங்கள், கொஞ்சம் அலட்சியமான வர்ணத் தேர்வுகள் என்று ஆரம்பம் கொள்கிறது இவரது பயணம்.

ஆனால் மிகக்குறுகிய காலத்தில் சட்டென்று விழித்துக் கொண்டு புதிதாக என்ன செய்ய முடியும் என்று யோசித்திருப்பது பல நல்ல ஓவியங்களைத் தந்திருக்கிறது. சில பகுப்புகளின் மூலம் சிதைத்து, ஓவியத்தின் சில பகுதிகளைப் பூதாகாரமாக நம் கண்முன் காட்டி, அவற்றில்

தன் நுண்மையான கவனத்தைச் செலுத்தி, சதைத் திரட்சிகளின் மூலம், தான் சொல்ல வருவதைக் காட்டிவிடுகிறார். தன் பசி, வறுமையைத் தவிர வேறு ஏதும் அறியாத மல்லாந்து கிடக்கும் மனிதன், தன்சுயத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனிதன், தன்னைப் பறிகொடுத்து நிற்கும் பெண், அடக்குமுறைகளால் அடையாளம் இழந்து போனவன் என்ற பல நிலைகளில் உருவங்களைச் சிதைத்துப் பார்த்திருக்கும் புகழேந்தியின் ஓவியங்கள் தமிழக ஓவியத்துறைக்குப் புதியவை. பல நவீன ஓவியங்களின் வறண்டுபோன கற்பனைகளுக்கிடையில், போலி ஈடுபாடுகளுக்கிடையில், ப்ளேஜியாரிசங்களுக்கு நடுவில் புகழேந்தியின் ஓவியச் சிந்தனை ஆரோக்கியம் தருகிறது. புகழேந்திக்குள் புதைந்திருக்கும் ஓவியச் சிந்தனை ஆரோக்கியம் தருகிறது. புகழேந்திக்குள் புதைந்திருக்கும் ஆளுமை, சிந்தனை முதலியவை குறித்து நம்பிக்கை கொள்ளச் செய்கின்றன இவரது வெளியட்டுத்திறன். வண்ணங்களில் இன்னும் அதிகமான கவனமும், புதிய புதிய புதியவைகளும் இன்னும் விசாலம் பெறுமென்றால் புகழேந்தியின் ஓவியங்கள் காலத்தின் பதிவுகளைத் தன் மீது கொள்ளும். சால்வடோர் டாலியின் சர்ரியலிச ஓவியங்களையும், பொதுவாக, தன் முன்னோர்களின் ஓவியங்களையும் ஓவிய சாதனைகளையும் தன் பார்வைக்குள்ளாகவே ஆட்படுத்திக் கொள்வதும் புகழேந்தியை மேலும் வளர்க்கும்.

பொதுவில் வறண்டு போன பார்வைகளுக்கு மூன்று நாட்கள் ஒரு நல்ல அனுபவமாக வாய்த்தது புகழேந்தியின் ஓவியக் காட்சி.